செர்ரிப் பழம் பார்ப்பதற்கு அழகாகவும், உண்பதற்கு சுவைமிக்கதாயும் எல்லோரையும் கவர்ந்திழுப்பதாகவும் உள்ளது.
இப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையினை உடையதாக இருசுவைகளில் காணப்படுகிறது.
மென்மை, காதல், நட்பு போன்றவற்றின் அடையாளமாக இப்பழம் கருதப்படுகிறது.
செர்ரிப் பழம் பாடல்கள், வாழ்த்து அட்டைகள், கதைகள் ஆகியவற்றில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும்.
பிறந்தநாள் கொண்டாட்டம், திருமணம், வாழ்க்கையின் திருப்புமுனைத் தருணங்கள் போன்றவற்றிற்கு செர்ரியின் பூக்களை ஒப்பிடுவது மேலை நாட்டு பராம்பரிய வழக்கங்களில் ஒன்றாகும்.
இப்பழத்தின் தாயகம் ஐரோப்பா மற்றும் ஆசிய மைனர் பகுதி என்று கருதப்படுகிறது. இப்பழம் பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகங்களில் பயன்படுத்தபட்டது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா என பரவி தற்போது உலக நாடுகள் எல்லாவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
செர்ரிப் பழம் சிறு மரவகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இத்தாவரம் பயிர் செய்த ஐந்தாவது ஆண்டு முதல் பலன் அளிக்கத் தொடங்குகிறது.
பின் அதனுடைய 15 முதல் 20 ஆண்டுகளில் முழுப்பலனை அளிக்கத் தொடங்குகிறது. பொதுவாக ஒரு செர்ரி மரத்திலிருந்து 7000 செர்ரிப் பழங்கள் கிடைக்கின்றன.
இப்பழம் ட்ரூப் பழவகையைச் சார்ந்தது. இப்பழம் 2செமீ விட்ட அளவில் வட்ட வடிவிலோ, இதய வடிவிலோ காணப்படுகிறது. பழத்தின் நடுவில் கடினமான விதைப்பகுதியையும் அதைச் சுற்றிலும் சதைப்பகுதியையும் கொண்டுள்ளது.
இப்பழத்தின் வெளிப்புறத் தோலானது சிவப்பு, அடர் ஊதா வண்ணங்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் செர்ரி என்றால் சிவப்பு என்றே அறியப்படுகிறது.
உண்ண விரும்பத்தக்க சுவையுடன் அதிக மருத்துவ குணங்களையும் இப்பழம் கொண்டுள்ளதால் சூப்பர் பழம் என்று இது அழைக்கப்படுகிறது.
செர்ரியில் உள்ள சத்துக்கள்
இப்பழத்தில் விட்டமின் ஏ, சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுக்கள், கால்சியம், காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும், பீட்டா கரோடீன், ஆல்பா கரோடீன், லுடீன்-ஸீக்ஸாக்தைன் போன்ற பைட்டோ நியூட்ரியன்களும், கார்போஹைட்ரேட்டுக்கள், புரோடீன்கள், நார்சத்துக்கள் போன்றவைகளும் காணப்படுகின்றன.
செர்ரியின் மருத்துவப் பண்புகள்
வயது முதிர்வைத் தள்ளிப்போட
இப்பழத்தில் விட்டமின் சி, ஃபிளவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் அதிகம் உள்ளன. ஆன்டிஆக்ஸிஜென்டுகள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் ப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்தி உடலினை வயது முதிர்வு, இதயம் மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்பு, பார்வைக்குறைபாடு, சருமச்சுருக்கம், புற்று நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றன.
மேலும் இவை தூக்கமின்மை, நரம்பு கோளாறுகள், மனக்குழப்பங்கள் ஆகியவற்றையும் இப்பழம் சரிசெய்கிறது.
தொற்று நோய்களைச் சரிசெய்ய, நோய் எதிர்ப்பு சக்தி பெற
இப்பழத்தில் காணப்படும் கரோடினாய்டுகள், ஃப்ளவனாய்டுகள், விட்டமின் சி போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
குடல், கழிவுறுப்பு பகுதிகள் உள்ளிட்ட உடலின் பாகங்களை பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் போன்ற நோய் தொற்றுக்களிலிருந்தும், இருமல், சளி போன்றவற்றிலிருந்தும் நம்மை இப்பழம் பாதுகாக்கிறது.
புற்றுநோய் பாதுகாப்பு
இப்பழத்தில் காணப்படும் ஃபிளவனாய்டுகள், கரோடினாய்டுகள், விட்டமின் ஏ, சி போன்றவை நம்மை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன.
இவை புற்றுச்செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு புதிதாக புற்றுசெல்கள் உருவாவதையும் தடுக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
கண்கள் பாதுகாப்பிற்கு
இப்பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ, விட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் கண்களை ப்ரீ ரேடிக்கல்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன.
பார்வைக்குறைபாடு, வயதுமுதிர்வினால் ஏற்படும் கண்கள் வறட்சி, தசை அழற்சி நோய், கண்களின் வீக்கம், கண் தொற்று நோய்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் கண்ணின் விழித்திரையில் அழுத்தத்தை சீராக வைக்கிறது.
மூளை மற்றும் நரம்புமண்டலத்தின் பாதுகாப்பிற்கு
இப்பழத்தில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வதோடு மூளையின் நினைவாற்றலை அதிகப்படுத்துகின்றன.
வயதோதிகத்தினால் ஏற்படும் குறைந்த மூளைச் செயல்பாடு, ஞாபக மறதி போன்றவற்றிற்கு இப்பழத்தினை தொடர்ந்து உண்ணும்போது மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு ஞாபகசக்தியும் மேம்பாடு அடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நரம்பு மண்டல குறைபாடுகளால் ஏற்படும் நோய்களான அல்சைமர், பார்க்கின்சன் நோய் போன்றவற்றிற்கு இப்பழம் வரப்பிரசாதமாகும். நாள்பட்ட மனஅழுத்தம், பதட்டம், மிதமிஞ்சிய கவலை, ஏமாற்றம் போன்றவற்றிற்கும் இப்பழம் நிவாரணியாகும்.
செரிமானம் மற்றும் மலச்சிக்கலுக்கு
இப்பழத்தில் காணப்படும் நார்சத்து நம்மை மலச்சிக்கலிருந்து பாதுகாக்கிறது. இப்பழத்தில் உள்ள அமிலங்கள் செரிமானம் நன்கு நடைபெற உதவுகின்றன.
இப்பழத்தில் காணப்படும் ஃபிளவனாய்டுகள் செரிமானத்தை தூண்டுகின்றன. இப்பழத்தில் காணப்படும் விட்டமின்கள் உடலானது ஊட்டச்சத்துகளை உட்கிரகிப்பதை ஊக்குவிக்கிறன.
இதய நலத்திற்கு
இப்பழத்தில் உள்ள விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் (ஃபிளவனாய்டுகள், கரோடினாய்டுகள்), பொட்டாசியம் போன்ற தாதுஉப்புக்கள் இதய நலத்தைப் பாதுகாக்கின்றன.
இவைகள் இரத்தத்தில் கொழுப்பினைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை செம்மையாக செயல்பட செய்கின்றன. இதனால் மாரடைப்பு இதய நோய்கள் ஆகியவை வராமல் இப்பழம் பாதுகாக்கிறது. மேலும் இப்பழம் இதய தசைகளை வலுவாக்கி இதயத்தை சீராக இயங்கச் செய்கிறது.
நல்ல தூக்கத்திற்கு
மனஅழுத்தம், சமநிலையற்ற ஹார்மோன்களின் சுரப்பு ஆகியவை நம்மில் பலரிடையே தூக்கமின்மையை ஏற்படுத்திவிடுக்கின்றன. இதனால் உடலானது பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இப்பழத்தில் உள்ள மெலாடானின் இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கும் காரணியாகும். எனவே இப்பழத்தினையோ, பழச்சாற்றினையோ தூங்குவதற்கு சற்றுமுன் உண்ணும்போது அது நமக்கு நல்ல தூக்கத்தை வரவழைத்து உடல் நலத்தைக் காக்கிறது.
செர்ரியை தேர்வு செய்யும் முறை
இப்பழம் பொதுவாக மே முதல் ஆகஸ்ட் வரை மட்டுமே கிடைக்கும். இப்பழத்தினை தேர்வு செய்யும் போது பளப்பளப்பான தோலுடன் கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் மேல் புறத்தில் பச்சை நிறக்காம்புடன் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.
இப்பழத்தினை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம். இதனை உண்ணும்போது பழத்தினை நன்கு கழுவி துணியால் துடைத்து உண்ண வேண்டும்.
இப்பழமானது அப்படியேவோ, பழச்சாறாகவோ, பழக்கலவையாகவோ உண்ணப்படுகிறது. கேக்குகள், இனிப்புகள், ரொட்டிகள், குக்கீஸ் ஆகியவற்றிலும் இப்பழம் பயன்படுத்தப்படுகிறது.
சாலட்டுகள், சாஸ், ஜாம் ஆகியவை தயாரிக்க இப்பழம் பயன்படுகிறது. புளிப்பு சுவையுடை செர்ரி பழத்தின் பழச்சாறு விளையாட்டு வீரர்களுக்கு புத்துணர்வு பானமாக வழங்கப்படுகிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்னுடை வண்ணம் மற்றும் சுவையினால் கவர்ந்திழுக்கும் செர்ரி பழத்தினை உண்டு நலமோடு வாழ்வோம்.
மறுமொழி இடவும்