பாரதியை இச்சமூகம் ஒரு மாபெரும் புரட்சியாளனாகக் கொண்டாடி மகிழ்கிறது.
இன்று பல்வேறு அரங்குகளிலும் பாரதியை கொண்டாடுகின்ற அளவிற்கு அவரது மனைவி செல்லம்மாள் நினைவு கூறப்படவில்லை.
அவனோடு இருபத்து ஐந்து ஆண்டுகள் வெறுமை நிறைந்த வறுமை வாழ்க்கை வாழ்ந்த அந்த செல்லம்மாள் தியாக தீபமாய் ஒளிர்கிறாள்.
ஐந்து வயதில் தாயின் இறப்பு,
தனது மகனை மேலைநாட்டு கல்வி படிக்க வைக்க நினைத்த தந்தை சின்னசாமி,
அவரது ஆசைக்கு எதிரான ஆங்கிலக் கல்வியின் மீதும் கணித பாடத்தின் மீதும் வெறுப்பு நிறைந்த பள்ளிக் கல்வி,
14 வயதில் திருமணம்,
15 வயதில் தந்தையின் மறைவு மற்றும்
அதைத் தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் வறுமை என்று பல ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக பாரதியின் வாழ்க்கை செல்கிறது.
பாரதியோடு செல்லம்மாளின் பாடுகள்
கையில் இருக்கும் கொஞ்சம் பணத்திலும் வாழைப்பழம் வாங்கி வந்து, அருகில் இருந்த அனைவரின் பசியையும் போக்குவாராம் பாரதி. செல்லமாளிடமோ நமக்கு கொஞ்சம் பால் போதும்; குடித்துவிட்டு நாம் இருவரும் பசியாறுவோம் என்பாராம்.
கொஞ்சம் சேர்த்து வைத்த தானியங்களையும் பறவைகளை சாப்பிட விட்டு அழகு பார்த்து ரசித்தவரை, பல சமயங்களில் செல்லம்மாள் ரசிக்க இயலாமல் சிரமப்பட்ட காலங்களும் உண்டு.
காசியில் இருந்து திரும்பி வந்த பாரதி, எட்டயபுரம் மகாராஜா உடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தும் அதை பணம் ஈட்டுவதற்குப் பயன்படுத்தவில்லை.
ஒருமுறை மகாராஜா கொடுத்த பணத்தில் சில பொருட்களை வாங்கி ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்தார். ஆனால் அதை பிரித்துப் பார்த்தால் அத்தனையும் புத்தகங்கள்.
சுதேசமித்திரன், இந்தியா என்று பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் சிறந்த ஆசிரியராக பணியாற்றிய அவர், அதை பணம் ஈட்டுவதற்கு உண்டான வழியாக மாற்ற நினைக்கவே இல்லை.
அன்றைய காலத்தில் ஒரு நாளிதழோ, ஒரு மாத இதழோ நடத்தியவர்கள் இன்று இந்திய பணக்காரர்கள் வரிசையில் இருக்கிறார்கள்.
ஆனால் பாரதி எழுத்துக்களை மெழுகின் மீது தீபமாய் எரிய விட்டாரே தவிர, அதிலிருந்து ஊதியம் பார்க்கும் எந்த ஒரு காரியத்தையும் செய்யவில்லை.
இதைத்தான் செல்லம்மாள் அகில இந்திய வானொலியில் ‘பாரதி அறியாத கலை‘ என்று குறிப்பிடுகிறார்.
பாரதி பற்றிய அவரது பேட்டியைப் படித்துப் பாருங்கள்
மகாகவியுடன் எனது 7 வயது முதல் 32 வயது வரை வாழும் பாக்கியம் பெற்று இருந்தேன்.
சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்.
அதாவது, “பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசித்ததோடும் நாட்டில் பரப்புவதோடும் நிறுத்திக் கொண்டாரா அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா?” என்று கேட்கிறார்கள்.
“ஆம். தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார்” என்று சந்தோஷமாக சொல்கிறேன்.
“அன்று ஒரு சம்பவம். அதை என்னால் மறக்க முடியாது.
மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன்.
என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. “இனி மிஞ்ச விடலாமோ?” என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன.
அருகில் போய் ‘என்னவென்று கேட்க மனம் துடித்தது.’ ஆனால் பயமும் ஏற்பட்டது.
ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் ஒழிய அவர் கண்களிலிருந்து நீர் வராது.
“என்ன விஷயம்?” என்று திகிலுடன் கேட்டேன்.
என் கணவர் நிமிர்ந்து பார்த்தார்.
“செல்லம்மா இங்கே வா” என்றார்.
சென்று கீழிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார்.
“நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்” என்றார்.
‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம்.
இன்று மகா கவிஞனாய் கொண்டாடப்படும் எனது கணவனோடு வாழ்ந்த காலங்கள் மிகவும் சிரமமானது. ஆனால் உயர்வானது” என்கிறார்.
அகில இந்திய வானொலியின் கடமை
செல்லம்மாள் தனது பேட்டியை திருச்சி அகில இந்திய வானொலியில் பதிவு செய்துள்ளார்.
அகில இந்திய வானொலியில் செல்லம்மாள் பேசிய பேச்சு இன்றும் ஒலி வடிவமாக உள்ளது. அதை எழுத்து வடிவமாக பெயர்க்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவள் பேசிய பேச்சின் தொகுப்பை அகில இந்திய வானொலி நிலையம் தேடி கண்டுபிடித்து, இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் மூலம் மீட்டெடுத்து புதிய ஒலி நாடாவாக மறு ஆக்கம் செய்யப்பட வேண்டும். அது காலத்தின் கடமை.
பாரதி என்ற பெயரோடு தியாக தீபமாக எரிகிறாள் செல்லம்மாள்.
அவ்வளவு வறுமையில் வாடினாலும் பாரதிக்கு எழுதுகோலை எடுத்து வைத்ததை தனது முதல் கடமையாகக் கொண்டிருந்தாள் செல்லம்மாள்.
பாரதி மறைவிற்குப் பின்பு பாரதியின் கவிதைகளை இந்த உலகிற்கு எடுத்துத் தந்தவள் செல்லம்மாள்.
பாரதியோ முற்போக்கு சிந்தனையோடு தன் வாழ்வியலை அமைத்தவன்.
ஆனால் செல்லம்மாள் மிகவும் சம்பிரதாயமான குடும்பத்தில் பிறந்து பாரதியின் வாழ்க்கையைத் தன்னோடு ஏற்றுக் கொண்டாள்.
ஆதலால் பாரதி என்ற பெயரோடு என்றும் நினைவு கூறப்பட வேண்டியவள் செல்லம்மாள்.
முனைவர் ஜி.சத்தியபாலன்
உதவி பேராசிரியர்
மதுரை மருத்துவக் கல்லூரி
மதுரை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!