சேனைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

சேனைக்கிழங்கு வறுவல் அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான சேனைக்கிழங்கு செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையானபொருட்கள்

சேனைக் கிழங்கு – 1 (மீடியம் சைஸ்)

உப்பு – தேவையான அளவு

 

மசால் தயார் செய்ய

மல்லிப் பொடி – 1 ½ ஸ்பூன்

சீரகப் பொடி – 1 ஸ்பூன்

வத்தல் பொடி – 1 ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1ஸ்பூன்

 

தாளிக்க

கடுகு – 1 ஸ்பூன்

கருவேப்பிலை – ஒருகொத்து

நல்லஎண்ணெய் – 75 மில்லிலிட்டர்

 

செய்முறை

 

சேனைக்கிழங்கு
சேனைக்கிழங்கு

 

முதலில் சேனைக் கிழங்கின் தோலைச் சீவிக் கொள்ளவும். பின் சேனைக் கிழங்கை நான்கு அல்லது ஐந்து துண்டுகளாக்கவும். பின் நீரில் இட்டு சேனைக்கிழங்கு துண்டுகளை வேகவைக்கவும். சேனைக்கிழங்கு முக்கால் பாகம் வெந்தவுடன் நீரில் இருந்து எடுத்து விடவும்.

 

சேனைக்கிழங்கு துண்டுகள்
சேனைக்கிழங்கு துண்டுகள்

 

பின் சேனைக்கிழங்கினை சிறு சிறு சதுர துண்டுகளாக்கிக் கொள்ளவும். அதனுடன் மல்லிப் பொடி,சீரகப் பொடி,வத்தல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஒருசேர கலந்து வைத்துக் கொள்ளவும்.

 

மசாலா சேர்த்த சேனைக்கிழங்கு துண்டுகள்
மசாலா சேர்த்த சேனைக்கிழங்கு துண்டுகள்

 

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் மசால் சேர்த்த சேனைக்கிழங்கு கலவை எண்ணெயில் சேர்க்கவும். நன்கு கிளறி விடவும்.

அடுப்பை சிம்மில் வைக்கவும். அவ்வப்போது கிளறி விடவும். கிழங்கு நன்கு வெந்ததும் சுருளத் துவங்கும். மேலும் எண்ணெய் முழுவதும் கிழங்கால் உறிஞ்சப்பட்டிருக்கும்.

இப்போது கிழங்கை எடுத்து நசுக்கிப் பார்த்தால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். இதுவே அடுப்பிலிருந்து கிழங்கை இறக்குவதற்கான பதம் ஆகும்.அடுப்பிலிருந்து கிழங்கை இறக்கி விடவும். சுவையான சேனைக்கிழங்கு வறுவல் தயார்.

 

சுவையான சேனைக்கிழங்கு வறுவல்
சுவையான சேனைக்கிழங்கு வறுவல்

 

இவ்வறுவலை சாம்பார் சாதம்,தயிர் சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய கலவை சாதங்களுடனும், ரசம் சாதம் மற்றும் எல்லா வகையான குழம்பு சாதங்களுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து  மசாலா தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் கரம் மசாலா சேர்த்தும் மசாலா தயார் செய்யலாம்.

எண்ணெயில் வேகவைக்க கிழங்கினை மீடியம் சைஸ் சதுர துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.