சேமிப்பு

நாம் ஏன் சேமிக்க வேண்டும்?

நம் பணத்தேவை அதிகமாக இருக்கும் போதும் நம் வருமானத்தைவிட செலவு அதிகமாக இருக்கும் போதும் பயன்படுத்துவதற்காக நாம் தவறாமல் சேமித்து வர வேண்டும்.

பிறப்பு, கல்வி, திருமணம், விவசாய விதை வாங்குதல், சொந்த வீடு முதலியவற்றிற்காக உண்டாகும் அதிகச் செலவுகளைச் சமாளிக்க பணம் தேவைப்படுகிறது.

நோய், விபத்து, மரணம், இயற்கை சீற்றம் போன்றவற்றால் ஏற்படும் திடீர் செலவுகளை சமாளிக்க அவசரக் காலத்தில் சேமிப்பு நம்மை காப்பாற்றும்

நாம் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கும் காலத்திற்காக பணம் தேவைப்படுகிறது.

வயதான காலத்தில் பணம் தேவைப்படுகிறது.

வழக்கமான வருமானத்திலிருந்து வாங்க முடியாத சிலவற்றை வாங்கப் பணம் தேவைப்படுகிறது.

சுருக்கமாக சொன்னால் நாம் சம்பாதிப்பதை விட அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது. நம்மிடம் போதுமான சேமிப்பு இருந்தால் தான் நம் சொந்த பணத்திலிருந்து இந்த செலவுகளை சமாளிக்க முடியும்.

 

எப்படி சேமிப்பது?

செலவைக் குறைத்தோ அல்லது வருமானத்தை பெருக்கியோ நாம் சேமிக்கலாம்.

வருமானம் மாறாதிருக்கும் நிலையில் நாம் அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற பொருட்களை வாங்கப் பணத்தை செலவு செய்கிறோம்.

உணவு, உடை, வீடு, விதை, விவசாயக் கருவிகள், கொள்முதல், குழந்தைகளுக்கு கல்வி மற்றும் உடல்நலம் ஆகியவற்றுக்கான செலவு அத்தியாவசிய செலவாகும். நாம் உயிர் வாழ மேற்கண்டவை தினமும் தேவை.

ஆனால் செலவுகளை நாம் குறைக்கலாம், தவிர்க்கலாம் அல்லது தள்ளிப் போடலாம். (எ.கா.) மதுபானம், குட்கா, கஞ்சா, சூதாட்டம் ஆகியவை தவிர்க்க வேண்டியவை.

திருமணம், விழாக்கள், புனித யாத்திரை ஆகியவற்றிற்கான ஆடம்பர அதிகச் செலவுகள் குறைக்க வேண்டியவை. இரு சக்கர வாகனம், கார், நகை முதலியவற்றை வாங்குவதை தள்ளிப் போடலாம்.

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான செலவை குறைத்தால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சேமிக்க முடியும்.

 

நம் அன்றாட செலவுக்கே பணம் இல்லாத போது எப்படிச் சேமிக்க முடியும்?

போதுமான அளவு வருமானம் இல்லாததால் சேமிக்க முடியவில்லை. இது பொதுவான கருத்து.

உண்மையில் ஒவ்வொருவரும் சேமிக்க வேண்டும். சேமிக்க முடியும்! நாம் சம்பாதிக்க ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே, நம் வருமானத்தின் ஒரு பகுதியை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

நாம் சேமிப்பை விரைவாக தொடங்க வேண்டும். வாழ் நாள் முழுவுதும் தொடர்ந்து சேமிக்க வேண்டும். இது முக்கியம்.

சேமிக்கும் தொகை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. நமக்கு எதிர்பாராத லாபமோ, வருமானமோ கிடைத்தால் இதை முழுமையாகவோ அல்லது பெரும் பகுதியையோ சேமிக்க வேண்டும். இது நம் எதிர்காலத் தேவைக்களுக்கான கவலையை குறைக்கும். அத்துடன் எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க உதவும்.

நாம் ரூ.100 சம்பாதித்தால் ரூ.20 சேமிக்க முடியும். ரூ.10 சம்பாதித்தால் ரூ.2 சேமிக்க முடியும். நாம் சம்பாதிக்கும் ரூ.100ல் ரூ.20ஐ தனியாக வைத்திருந்தால் ஐந்து நாட்களில் நாம் ஒரு நாள் வருமானத்தை சேமிக்க முடியும்.

100 நாளில் சேமிப்பு 20 நாள் வருமானம் மற்றும் வட்டிக்கு சமமாகும். இது அதிசயம் அல்லவா.

ஒரு நாள் வருமானம் ரூ.100

ஒரு நாள் செலவு ரூ. 80

ஒரு நாள் சேமிப்பு ரூ.20

ஒரு மாத சேமிப்பு ரூ.20 X 30 = ரூ.600

ஒரு வருட சேமிப்பு ரூ.600 X 12 = ரூ.7200

ஒரு வருடத்திற்கு 8% வட்டி ரூ.318

ஒரு வருட இறுதியில் சேமித்த தொகை ரூ.7518

இந்த தொகை 75 நாட்களின் வருமானத்திற்கு சமம்

 

எவ்வளவு காலம் சேமிக்க வேண்டும்?

அதிக காலம் சேமித்தால் நம்சேமிப்பு அதிகம் வளரும். அதிகம் சேமிக்க சேமிக்க அவசரத் தேவைகளைச் சமாளிக்கலாம். வருமானமற்ற முதுமைக் காலத்தை சமாளிக்கவும் நாம் தயாராகிவிடுவோம்.

நம் தேவைகளுக்கு நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டாம். நம்மிடம் சேமிப்பு வைத்திருந்தால் நம் தேவைகளுக்காக நாம் கடன் வாங்க வேண்டியதில்லை.

நாம் நீண்ட காலம் சேமிக்க வேண்டும். நம் சேமிப்பு, வட்டி வருமானத்தால் பல மடங்காக பெருகும்.

ஒவ்வொரு வருடமும் சேமித்த தொகை (ரூபாய்) ரூ.1000 ரூ.1000 ரூ.1000
சேமித்த வருடங்கள் 40 30 20
மொத்தம் நாம் சேமித்த தொகை (ரூபாய்) ரூ.40000 ரூ.30000 ரூ.20000
10% வருட வட்டி விகிதத்தில் கிடைத்த வட்டி (ரூபாய்) ரூ.422878 ரூ.142033 ரூ.39900
மொத்தம் சேமித்த தொகை 65வது வயதில் (ரூபாய்) ரூ.462878 ரூ.172033 ரூ.59900

நாட்கள் அதிகமாக ஆக நமது சேமிப்பு நமக்கு அதிகமான வட்டியைப் பெற்றுத்தரும் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது நாம் இளமையிலேயே சேமிக்க ஆரம்பித்தால் செல்வச் செழிப்பு அடைவது சுலபம்.

 

 

One Reply to “சேமிப்பு”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: