சேமியா பால் ஐஸ் கோடை காலத்துக்கு ஏற்ற உணவு ஆகும். இதனை வீட்டில் செய்து அசத்தலாம். வீட்டில் செய்யும்போது இதனுடைய சுவை கூடுவதோடு, தூய்மையான பொருட்களைப் பயன்படுத்துவதால் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.
சிறுவயதில் சேமியா ஐஸை தெருவில் விற்க வரும் ஐஸ்காரரிடம் வாங்கி உண்டுள்ளேன். இப்பொழுது சேமியா ஐஸை, நினைத்தவுடன் வீட்டிலேயே நாமே தயார் செய்து உண்ணும் பொழுது இன்னும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
நான் பயன்படுத்தியுள்ள பொருட்களைக் கொண்டு நீங்களும் சேமியா பால் ஐஸை செய்து அசத்துங்கள். சேமியா பால் ஐஸ் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் – 500 மில்லி லிட்டர்
வெள்ளைச் சர்க்கரை – 8 ஸ்பூன்
சேமியா – 30 கிராம்
ஏலக்காய் – 2 எண்ணம் (சிறியது)
சேமியா பால் ஐஸ் செய்முறை
சேமியாவை வெறும் வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
ஏலக்காயை நன்கு தூளாக்கிக் கொள்ளவும். பாலைத் தண்ணீர் சேர்க்காமல் வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றிக் காய்ச்சவும்.
பால் பொங்கி கொதிக்க ஆரம்பித்ததும் சிம்மிற்கும் சற்று கூடுதலாக வைத்து சூடேற்றவும். பாலில் ஆடை படர்ந்தால் அதனை எடுத்து பாலிலேயே போடவும்.
பாலினைச் சூடேற்றும் போது கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். இல்லையெனில் பால் அடியில் பிடித்து விடும்.
பாலில் மூன்றில் ஒரு பகுதி வற்றியதும் வறுத்து ஆற வைத்த சேமியாவைச் சேர்க்கவும்.
பாலினைக் கிளறிக் கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் சேமியாவை எடுத்து நசுக்கிப் பார்க்கவும்.
சேமியா வெந்து பால் லேசாக கெட்டியாகும் போது வெள்ளைச் சர்க்கரையை அதனுடன் சேர்த்து கரண்டியால் கலக்கவும்.
வெள்ளைச் சர்க்கரை முழுவதும் கரைந்ததும் பாலினை அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பால் நன்கு ஆறிய பின் ஐஸ் அச்சில் அல்லது சிறிய டம்ளரில் ஊற்றி வாயினை மூடி விடவும். டம்ளரைப் பயன்படுத்தும் போது ஐஸ் குச்சியை நடுவில் வைத்து அதன் வாயினை சிறிய கவரால் மூடி இரப்பர் போட்டு சுற்றவும்.
பால் ஊற்றிய அச்சு அல்லது டம்ளரை ப்ரீசரில் சுமார் 8 மணி நேரம் வைக்கவும்.
8 மணி நேரம் கழித்து பால் உறைந்து உள்ள அச்சு அல்லது டம்ளரை, படத்தில் உள்ளபடி தண்ணீர் உள்ள பாத்திரத்தில் ஒரு நிமிடம் வைத்துவிட்டு அச்சிலிருந்து வெளியே எடுக்கவும்.
சுவையான சேமியா பால் ஐஸ் தயார்.
குறிப்பு
சேமியா பால் ஐஸ் தயார் செய்ய வெண்ணை நீக்காத பாலைப் பயன்படுத்தவும்.
விருப்பமுள்ளவர்கள் ஏலக்காய்க்குப் பதிலாக வெண்ணிலா எசன்ஸ் ஊற்றியும் ஐஸ் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக தேவiயான அளவு கருப்பட்டி சேர்த்து ஐஸ் தயார் செய்யலாம்.