‘சைக்கிள் வாங்குவது’ என்பது அருணகிரியின் குழந்தைகள் ஒவ்வொருத்தருடைய பல வருட கனவு.
ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் எல்லோரும் படித்தார்கள்.
முதலாவதாக அந்த பள்ளியில் போய் சேர்ந்தது மூத்த மகன் இசக்கி. அடுத்து இரண்டு ஆண்டுகள் சென்று இரண்டாவது மகன் வேலன்.
இவ்வாறு இரண்டு இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் பிள்ளைகள் ஒவ்வொருத்தரும் போய் அந்த பள்ளியில் சேர்ந்தார்கள். கடைசியாக கடைக்குட்டி கல்யாணியும் வந்து சேர்ந்தாள்.
அருணகிரி, புனிதா தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள். இருவருக்கும் அவர்களது பெயரைகூட எழுதவோ படிக்கவோ தெரியாது.
அருணகிரி ஒரு விவசாய கூலி தொழிலாளி. அவர் வேலை செய்து வந்த இடங்களில் சம்பள கணக்கு வழக்குகளில் ஏமாற்றியவர்கள் பலர்.
புனிதா படிக்கவில்லை என்றாலும்கூட எவ்வளவு வாங்கினோம், எவ்வளவு தர வேண்டும் என்பதை எழுதி வைத்ததை போல தேதி வாரியாக கணக்கு சொல்லி விடுவார். அருணகிரியின் பலமே அவரது மனைவி புனிதாதான்.
பல முதலாளிகள் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில்கூட அருணகிரியை ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.
பிற்காலத்தில் அவர்கள் சட்டத்திடம் மாட்டிக்கொள்ளும் போதுதான் அவர்கள் செய்து வந்த தொழில் சட்டத்திற்கு புறம்பானது என்பது அருணகிரிக்கே தெரிய வந்தது.
அதனால் அருணகிரி தன்னை போல தனது பிள்ளைகளும் கல்வியறிவற்று இருந்து விடக்கூடாது என்பதற்காக பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துக் கொண்டிருந்தார்.
விவசாய கூலிகளான அருணகிரியும் புனிதாவும் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்குகூட கஷ்டபட்டுக் கொண்டிருந்த போதிலும் கூட, பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் ஊறுதியாகவும் தெளிவாகவும் இருந்தனர்.
அருணகிரியின் ஊர் மொத்தமே நாற்பது குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்த ஒரு குக்கிராமம். அங்கே ஆரம்ப பள்ளிக்கூடம்கூட கிடையாது.
ஆரம்ப பள்ளிக்கூடம் அந்த ஊரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இன்னொரு கிராமத்தில் இருந்தது. பிள்ளைகள் தினமும் அந்த பள்ளிக்கு நடந்து சென்றே கல்விக் கற்று வந்தார்கள்.
அப்போதெல்லாம் அவர்கள் சைக்கிளை பற்றி நினைத்துகூட பார்த்தது கிடையாது.
மேல்நிலைப் பள்ளியில் போய் என்று சேர்ந்தார்களோ! அன்று முதல் இந்த ஆசையும் அவர்களுக்குள் முளைவிட தொடங்கியது. அந்த ஆசை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொடி வீசிக்கொண்டிருந்தது.
அதற்கு காரணம் அவர்களோடு நடந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அந்த நட்பு கால்கள் இல்லாது போனதே.
அந்த ஊரில் இரு தரப்பு மக்களுக்கு இடையில் ஏற்பட்ட சாதிப் பிரச்சனையினால், ஒரு தரப்பு மக்கள் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த தொகுதி ஆளும் கட்சி சட்ட மன்ற உறுப்பினரின் உதவியோடு ஊரைவிட்டு சென்று நல்ல இடமாக பார்த்து குடியேறி விட்டனர்.
நாற்பது வீடுகளாக இருந்த ஊர் பத்து வீடுகளானது. அந்த பத்து வீடுகளில் அப்போதைய சூழ்நிலையில் படித்துக் கொண்டிருந்தவர்கள் அருணகிரியின் குழந்தைகள் நால்வர் மட்டுமே.
அருணகிரியின் மூத்த மகன் இசக்கி தினமும் நடப்பது அலுப்பை ஏற்படுத்தவே, அரசு விடுதியில் போய் சேர்ந்து கொண்டான்.
அவனை தொடர்ந்து இரண்டாவது மகன் வேலனும் விடுதியில் போய் சேர்ந்துக் கொண்டான்.
அவர்கள் இருவருக்கும் அரசு விடுதியில் இருந்த சுகாதாரயின்மை காரணமாக அடிக்கடி சொறி, சிரங்கு வந்து பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
நோய் அதிகமானதும் ஊருக்கு வந்து விடுவர்கள். அவர்கள் சில நேரங்களில் அரிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் சொறிந்து கொள்ளும் போது பார்ப்பதற்கு அடிப்பிடித்த பாத்திரத்தை கரண்டியால் சுரண்டி எடுப்பது போல் இருக்கும்.
புனிதா, குப்பைமேனி இலையோடு சிறுவெங்காயத்தையும் உப்பையும் சேர்த்து அரைத்து புண்ணின் மீது நன்றாக தேய்து குளிப்பாட்டி விடுவார்.
அவ்வாறு தேய்கும் போது அவர்கள் வலி தாங்க முடியாமல் கதறுவதை பார்த்துக்கொண்டிருந்த கல்யாணியும் கதறி விடுவாள்.
இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் செய்த பின்னரே அந்த சொறி சிரங்கு மறைந்து போகும்.
அதை பார்க்கும் போது மூன்றாவது மகன் முத்து நடந்து நடந்து கால்கள் தேய்ந்து போனாலும் பரவாயில்லை, விடுதிக்கு மட்டும் செல்வதில்லை என உறுதிமொழி எடுத்து கொண்டிருந்தான்.
ஆனால் காலம் வேறு மாதிரியாக முடிவு செய்திருந்தது. பின் நாட்களில் அவனும் விடுதிக்கு சென்றான் என்பதுதான் உண்மை.
காலம் இன்னொன்றும் செய்தது.
விவசாய கூலியாக இருந்த அருணகிரியை விவசாயி ஆக்கியது. அந்த ஊர் நிலக்கிழார் ஒருவர் அரசு வேலையில் இருந்தார்.
அரசு மேல்நிலைப் பள்ளி இருந்த அதே டவுனில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார்.
வேலை நேரம் போக மீதி நேரத்தில் விவசாயத்தையும் கவனித்து வந்தார். திடீரென கிடைத்த வேலை மாறுதலால் விவசாயத்தை கவனித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
அருணகிரிக்கு விவசாயத்தில் இருந்த நேர்த்திப் பற்றி அவருக்கு தெரியும். அருணகிரி உழவு செய்யும் போதும், வரப்புகள் கீறும் போதும், பயிருக்கு தகுந்தபடி பாத்திகள் அமைக்கும் போதும், அவ்வளவு நேர்த்தி இருக்கும்.
ஒரு கைதேர்ந்த பொறியாளன் மாளிகையை கட்டமைப்பதை போல பாத்திகளை அவ்வளவு நேர்த்தியாக அமைப்பார்.
நிலக்கிழாருக்கு தனது மண்ணை நல்ல முறையில் கவனித்து கொள்வார் என்ற நம்பிக்கை அருணகிரியின் மீது ஏற்படவே அவரது நிலத்தில் விவசாயம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தினார்.
அதோடு கிடைக்கிற லாபத்தில் மூன்றில் ஒரு பங்கும் கேட்டார். அவருடைய நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்து அருணகிரி அவருடைய நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.
பயிருக்கு களை எடுக்கும் பணிகளை புனிதாவே கவனித்து கொண்டார். பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் வேலனும் முத்துவும் களை எடுக்கும் பணிக்கு புனிதாவோடு இணைந்து கொள்வார்கள்.
இந்த தகவல் இசக்கிக்கு தெரிந்ததாலோ என்னவோ, இசக்கி விடுமுறை நாட்களில்கூட வீட்டுக்கு வந்து செல்வதே இல்லை.
அருணகிரிக்கு விவசாயத்தில் பெரிய இலாபம் இல்லாவிட்டாலும் ஒரு முறை ஒரு ஆயிரத்தி ஐநூறு மிச்சம் வந்தது. அதற்கு ஆயிரம் செலவுகள் இருந்தாலும், அந்த பணத்தில் ஒரு புது சைக்கிள் வாங்கி கொடுத்து தனது பிள்ளைகளின் கனவை நினைவாக்கினார் அருணகிரி.
இன்னொரு முறையும் ஒரு ஆயிரத்தி ஐநூறு மிச்சத்திற்கு வந்தது. அதில் புனிதாவிற்கு ஒரு அரை சவரனில் கம்மல் வாங்கி கொடுத்தார். அந்த கம்மல் புனிதாவின் காதில் இருந்த நாட்களை விட அடகு கடையில் இருந்த நாட்களே அதிகம்.
சைக்கிள் வாங்கியதிலிருந்து வேலன் விடுதிக்கு செல்வதை நிறுத்திக்கொண்டான். கல்யாணியும் ஆரம்ப பள்ளிக்கூட படிப்பை முடித்துவிட்டு மேல்நிலை பள்ளியில் வந்து சேர்ந்துக்கொண்டாள்.
வேலன், முத்து, கல்யாணி மூவரும் அந்த சைக்கிளில் பள்ளிக்கு சென்று வந்தார்கள்.
வேலன் சீட்டில் இருந்து சைக்கிளை ஓட்டுவான். முத்து பின்னால் இருந்து கொண்டு வேலனோடு சேர்ந்து ஓட்டுவான். கல்யாணி முன்னால் இருந்து கொள்வாள். இவ்வாறு நாட்கள் நகர்ந்தது.
சாதித் தகராறில் பிரிந்து சென்ற மக்கள் வேறு ஊருக்கு சென்று குடியேறிய பின்னர், மீதமிருந்த பத்து குடும்பத்திலும் இரண்டு வெவ்வேறு சாதியினர் இருந்தார்கள்.
ஒரு சாதியினர் ஐந்து குடும்பங்களும் அருணகிரியின் சாதியினர் ஐந்து குடும்பங்களும் இருந்தார்கள்.
அந்த சாதியை சேர்ந்தவர்கள் செல்வந்தர்கள் பெரும் நிலக்கிழார்கள். அருணகிரியின் சாதியினர் அவர்களை சார்ந்தே பிழைப்பு நடத்தி வந்தார்கள்.
ஊரைவிட்டு சென்றவர்களும் அந்த ஐந்து குடும்பத்தினருக்காக உழைத்தவர்களே. அந்த நன்றி விசுவாசம்கூட இல்லாமல் ஏதோ ஒரு குடும்பத்தினர் அவர்களை மதிக்கவில்லை என குற்றம் சுமத்தி ஊரைவிட்டு போக சொன்னார்கள்.
ஆனால், அந்த சாதியினர் தங்களுக்கு இருக்கும் ஒற்றுமையை காட்ட ஊரை விட்டு மொத்தமாக வெளியேறினர்.
எதிர் காலத்தில் அந்த சாதியினருக்கு ஏற்பட்ட நிலைமை அருணகிரியின் சாதியினருக்கும் வரும் என்பதால் அருணகிரி சாதியில் மூன்று குடும்பத்தினர் மட்டும் மூன்று வெவ்வேறு ஊர்களுக்கு சென்று குடியேறினார்கள்.
அருணகிரி குடும்பத்தோடு ஊரை விட்டு சென்றாலும் அவனது பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்த பள்ளியை மாற்றவில்லை. அங்கிருந்தே சைக்கிளில் சென்று அவர்களது படிப்பை தொடர்ந்தார்கள். நாட்களும் நகர்ந்தன.
அருணகிரியின் பழைய ஊரில் இருந்த நபர் ஒருவர் அவரது மகனுக்கு திருமணம் என்று சொல்லி அழைப்பிதழ் தந்துவிட்டு சென்றார்.
அவர்கள் புதியதாய் குடியேறிய அந்த ஊரில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
அருணகிரி குடும்பத்தோடு சென்று புதியதாக குடியேறிய ஊர் அருணகிரியின் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை. அவ்வளவு எளியதாக மனசு ஒரு இடத்தை ஏற்றுக்கொண்டு விடும்மா என்ன?
பழைய ஊரின் மண் வாசனைக்காக அவர்களது மனம் ஏங்கி தவித்தது. அந்த ஊரின் புழுதியில் அவர்களின் உடம்பை தோய்க்காமல் தூக்கம் வராது என்பது போலிருந்தது.
புதிய ஊரின் மண் மணம் ஏனோ நெடி வீசுவதை போல் இருந்தது. அதனால், முத்துவும் தனது உறுதிமொழியை மறந்துவிட்டு அவனது பெரிய அண்ணன் இசக்கியோடு விடுதியில் போய் சேர்ந்து கொண்டான்.
சைக்கிளில் வேலனும் கல்யாணியும் மட்டுமே பள்ளிக்கு சென்று வந்தனர். முத்து விடுதிக்கு சென்றதால் இசக்கி அடிக்கடி வீட்டுக்கு வந்து போவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.
இசக்கி ஊரில் இருந்த சமயத்தில் திருமண நாள் வர அந்த திருமணத்திற்கு இசக்கி, வேலன், கல்யாணி மூவருமாய் சைக்கிளில் சென்றனர்.
காலையில் திருமணம் முடிந்து மாலையிலும்கூட வீடு திரும்பவில்லை. அங்கேயே இரவு தங்கினார்கள்.
அப்போதெல்லாம் ஒரு தொலைக்காட்சி பெட்டியையும் பிளேயரையும் வாங்கி வைத்து கொண்டு அதை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்போரும் இருந்தனர்.
மக்களும் திருமணம், மஞ்சள் நீராட்டுவிழா, காது குத்து, திருவிழா என்று எந்த நிகழ்வாக இருந்தாலும் தொலைக்காட்சி பெட்டி வைத்திருப்போரை அழைத்து வந்து சினிமா படம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அதை ஒரு கௌரவமாக கூடக் கருதினர். அந்த திருமண வீட்டிலும் அவ்வாறான சினிமா காட்சிக்கு எற்பாடு செய்திருந்தனர்.
ஊர் மந்தையில் வைத்து காட்சி நடந்து கொண்டிருந்தது. ஊரே அங்கேதான் கூடியிருந்தது. பொண்ணு, மாப்பிள்ளை இருவர் மட்டும் வீட்டில் இருந்தனர்.
அந்த இரவு அமாவாசைக்கு அடுத்த நாளின் இரவு. நிலவின் ஒளி குறைவாகவே இருந்தது. மக்கள் அனைவரும் காட்சியோடு ஒன்றிப் போய் இருந்தனர். திடீரென்று இரவே பகலாக மாறியது. காட்சியின் ஒளி மங்கலாகியது.
திடீர் பகலுக்கான காரணம் தெரியாமல் மக்கள் அதிர்ந்து போனவர்களாய் சுற்று முற்றும் பார்த்தார்கள்.
மேல் நோக்கி சென்று கொண்டிருந்த கரும் புகையை கவனித்த மக்கள் தீ பற்றி எறிவதை பார்த்துவிட்டு ஓடி வந்தனர்.
கல்யாண வீடும் பந்தலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பொண்ணு மாப்பிள்ளை மட்டும் எந்த சேதாரமும் இல்லாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை பார்த்து ‘மலங்க மலங்க’ விழித்து கொண்டு நின்றனர்.
ஊர்க்காரர்கள் அனைவரும் வீட்டின் அருகே வரும்போது வீடு முழுவதுமாக பற்றியிருந்தது. அந்த பந்தலில் நிறுத்தி வைத்திருந்த அருணகிரியின் சைக்கிளும் எரிந்து கொண்டிருந்தது.
நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பொழுது புலர்ந்தது. வீடும் பந்தலும் முற்றிலும் எரிந்து சாம்பலாகியிருந்தது. வேலன் தினமும் காலையில் ஒருமுறை மாலை ஒருமுறையென தவறாது துடைத்து வைத்த பொக்கிஷ வாகனம் கருகிய நிலையில் எலும்பு கூடாய் மாறி அந்த பந்தல் இருந்த இடத்தில் நின்றது.
திருமண வீட்டாரை நினைத்து ஊரே கலங்கிப் போய் நின்றது. இசக்கி, வேலன், கல்யாணி மூவரும் சைக்கிள் இல்லாமல் வீட்டுக்கு திரும்பி செல்ல மனமில்லாது கலங்கி போய் நின்று கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்து அங்கே வந்த அருணகிரி சமாதானம் சொல்லி பிள்ளைகள் மூவரையும் அழைத்து சென்றார்.
தீ எப்படி பற்றிக்கொண்டது என்பது பற்றி பல்வேறு பட்ட பேச்சு நிலவியது.
அதில் ஒன்று மணப்பெண்ணை ஒருதலையாக காதலித்த இளைஞன் ஒருவன் தனக்கு பெண் கிடைக்காத விரக்தியில் இந்த கொடுமையை செய்து விட்டதாகவும்
மற்றொன்று அந்த பெண் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவள். அதை மறைத்து திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்றும்,
சிலர் மைக் செட்டில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றிக்கொண்டதாகவும் பேசிக்கொண்டனர்.
இந்த தீயின் கோரத்தாண்டவத்திற்கு மைக் செட்டும் பலியாகி இருந்தது. அந்த மைக் செட் மைக்செட்காரரின் மனைவி நகைகளை விற்ற பணத்தில் வாங்கியது.
ஆனால், என்ன நடந்தது என்பது அந்த வளர்பிறை நிலவுக்கு மட்டுமே தெரியும். அது உண்மையை தனக்குள்ளே மறைத்துக் கொண்டது.
ரக்சன் கிருத்திக்
கைபேசி: 8122404791