சைவ மீன் குழம்பு செய்வது எப்படி?

சைவ மீன் குழம்பு என்பது அசைவ மீன் குழம்பைப் போன்ற செய்முறையை உடையது. ருசியான சுவையையும் கொண்டது. சைவ மீன் குழம்பு சைவப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

சைவ மீன் குழம்பு செய்வதற்கு இந்த பதிவில் வாழைக்காயைப் பயன்படுத்தியுள்ளேன்.

மற்றபடி வழக்கமான மீன் குழம்பு செய்வதற்கு பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம், புளி உள்ளிட்ட பொருட்களே இதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

இனி சுவையான சைவ மீன் குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

சின்ன வெங்காயம் – 15 எண்ணம்

புளி – சிறிய எலுமிச்சை அளவு

தக்காளி – 1 எண்ணம் (நடுத்தர அளவு)

கறிவேப்பிலை – 1 கீற்று

கொத்தமல்லி இலை – 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 எண்ணம்

வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)

மசாலா பொடி – 2 ஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

வாழைக்காய்க்கு தேவையான மசாலுக்கு

கொத்தமல்லி பொடி – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 2 ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கீற்று

சைவ மீன் குழம்பு செய்முறை

வாழைக்காயை தோல் நீக்கி நீள்வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

நீள்வட்டத்தில் குறுகலான பகுதியில் சிறுபகுதியை நீக்கிக் கொள்ளவும். இப்போது வாழைக்காயானது பார்ப்பதற்கு நறுக்கி சுத்தம் செய்த மீன் துண்டினைப் போன்றே இருக்கும்.

ஒருபாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வாழைக்காய் துண்டுகளைச் சேர்க்கவும். இவ்வாறு செய்வதால் வாழைக்காய் துண்டுகள் நிறம் மாறுவதில்லை.

நறுக்கிய வாழைக்காய் துண்டினை தண்ணீரில் சேர்த்ததும்
நறுக்கிய வாழைக்காய் துண்டினை தண்ணீரில் சேர்த்ததும்

ஒருவாயகன்ற பாத்திரத்தில் வாழைக்காய் மீது தடவுவதற்குத் தேவையான மசாலாப் பொருட்களான கொத்தமல்லிப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

பொடி வகைகளைச் சேர்த்ததும்
பொடி வகைகளைச் சேர்த்ததும்

இதனுடன் எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுதாக்கிக் கொள்ளவும்.

விழுதாக்கியதும்
விழுதாக்கியதும்

கெட்டியான மசாலா விழுதினை நறுக்கிய வாழைக்காய் துண்டுகளின் மீது முழுப்பகுதியிலும் படுமாறு தடவிக் கொள்ளவும்.

மசாலா தடவி ஊறவைத்திருக்கும் போது
மசாலா தடவி ஊற வைத்திருக்கும் போது

1/4 மணி நேரம் மசாலா தேய்த்த வாழைக்காய் துண்டுகளை ஊற விடவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத்துண்டுகளாக வெட்டவும்.

தக்காளியை கழுவி விழுதாக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை கழுவி உருவிக் கொள்ளவும்.

புளியை பிய்த்துப் போட்டு ஒரு டம்ளர் தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவிடவும்.

பின்னர் அதில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வடித்துக் கொள்ளவும்.

வெள்ளைப்பூண்டினை தோல் நீக்கி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

அடிப்பாகம் தட்டையாக உள்ள வாணலியை எடுத்துக் கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், ஊற வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து அடுப்பினை மிதமான தீயில் வைத்து, நான்கு நிமிடங்கள் இருபறமும் வேகுமாறு வேக வைத்து எடுக்கவும்.

வாழைக்காய் 80 சதவீதம் வெந்தால் போதுமானது.

வாழைக்காய் துண்டுகள் வேகும்போது
வாழைக்காய் துண்டுகள் வேகும்போது
வேகவைத்த வாழைக்காய் துண்டுகள்
வேகவைத்த வாழைக்காய் துண்டுகள்

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்ததும்
தாளிதம் செய்ததும்

அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வெள்ளைப்பூண்டு சேர்த்து வதக்கவும்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வெள்ளைப்பூண்டு சேர்த்ததும்
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் வெள்ளைப்பூண்டு சேர்த்ததும்

வெங்காயம் கண்ணாடிப் பதம் வெந்ததும் அதில் விழுதாக்கிய தக்காளி சேர்த்து 30 விநாடிகள் வதக்கி அதனுடன் மசாலாப் பொடி மற்றும் கரம் மசாலாப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி விழுது சேர்த்ததும்
தக்காளி விழுது சேர்த்ததும்
மசாலா பொடி, கரம் மசாலா பொடி சேர்த்ததும்
மசாலா பொடி மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்ததும்

2 நிமிடங்கள் கழித்து நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து வதக்கவும்.

மசாலாவில் எண்ணெய் பிரிந்ததும் அதனுடன் புளி தண்ணீர் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொத்த மல்லி இலை சேர்த்து வதக்கும்போது
கொத்த மல்லி இலை சேர்த்து வதக்கும்போது
புளித்தண்ணீர் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்ததும்
புளித்தண்ணீர் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்ததும்

குழம்பு கொதித்ததும் அடுப்பினை சிம்மிற்கும் சற்று கூடுதலாக வைத்து வாணலியை மூடி ஐந்து நிமிடங்கள் வைக்கவும்.

5 நிமிடங்கள் கழித்துப் பார்த்தால் குழம்பு எண்ணெய் பிரிந்து கெட்டியாக இருக்கும்.

எண்ணெய் பிரிந்ததும்
எண்ணெய் பிரிந்ததும்

இப்போது குழம்பில் வதக்கிய வாழைக்காயைச் சேர்த்து 3 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.

வதக்கிய வாழைக்காய் சேர்க்கும்போது
வதக்கிய வாழைக்காய் சேர்க்கும்போது

பின்னர் அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலையைச் சேர்த்து கிளறி இறக்கவும்.

கறிவேப்பிலை சேர்த்ததும்
கறிவேப்பிலை சேர்த்ததும்

சுவையான சைவ மீன் குழம்பு தயார்.

சுவையான சைவ மீன் குழம்பு
சுவையான சைவ மீன் குழம்பு

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் வாழைக்காயினை வேக வைத்து பின்னர் நீள்வட்டமாக நறுக்கி கொதிக்கும் குழம்பில் சேர்த்தும் குழம்பு தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.