சொர்க்க வனம் 1 – பயணத் திட்டம்

பூமியின் வடதுருவப் பகுதியில் குளிர் காலம் தொடங்கிற்று. இன்னும் ஓரிரண்டு நாட்களில் பனிப்பொழிவு கடுமையாக அதிகரிப்பதற்கான எல்லா அறிகுறிகளும் தெளிவாகத் தென்பட்டன.

எவ்வித செயற்கை கருவிகளும் இன்றி அதனை உணர்ந்து கொண்டன, அங்கிருந்த ஜீவராசிகள்.

அங்கு, குளிர்காலத்தில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸுக்கும் கீழாகச் சென்று விடும். நீர்நிலைகளின் மேற்புறம் உறைந்து பனித்தரையாகக் காட்சியளிக்கும்.

நிலப்பகுதியிலோ பலஅடி உயரத்திற்குப் பனிப் படலம் சேர்ந்துவிடும். மரங்கள் பனியால் போர்த்தப்படும். அதனால், விலங்குகளுக்கு உணவு கிடைப்பதே அரிதாகிவிடும். அவை உயிர் வாழ்வதும் கேள்விக்குறியாகி கடினமாகிவிடும்.

இச்சூழ்நிலையை முன்னறிந்த விலங்குகள், தங்களையும் தங்களுடைய‌ சந்ததிகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டன.

அப்படியொரு முன்னேற்பாட்டை செய்து வைத்திருந்தது அங்கு வசித்து வந்த ஸ்வாலோ இனக் குருவிக் கூட்டம் ஒன்று.

இந்த வருடம் குளிர்காலம் முன்னரே தொடங்க இருப்பதை அறிந்துக் கொண்டு, உடலில் ஆற்றலை சேமித்து வைப்பதற்காக சிலநாட்களாகவே கூடுதலாக உணவை உட்கொண்டு வந்தன. அத்தோடு குழுவாக பறந்து செல்வதற்கான ஒத்திகைகளையும் நிகழ்த்தியிருந்தன.

 

அது முற்பகல் நேரம்….

வெளிச்சம் இல்லை….

மேகத்திலிருந்து பனித்திவலைகள் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தன. காற்றும் மிதமான வேகத்தில் வீசிக் கொண்டிருந்தது.

ஒருமரத்தடியில் அந்த ஸ்வாலோ குருவிகள் கூட்டம் நின்றுக் கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் சுமார் எண்பது குருவிகள் இருந்தன. எல்லாம் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தன.

சொர்க்க வனம் செல்ல‌ பயணத் திட்டம் வகுப்பதற்காக அவை கூடி இருந்தன.

அப்பொழுது வயதான குருவி ஒன்று அக்கூட்டத்தின் மையத்தில் இருந்த உயரமான பகுதியில் பறந்து வந்து நின்றது. அதுதான் அந்தக் குருவிக் கூட்டத்தின் தலைவன்; பெயர் ’இருன்டினிடே’.

உடனே, எல்லா குருவிகளும் தங்களது பேச்சை நிறுத்தின. தலைவனை நோக்கி முகத்தை திருப்பின. அப்பொழுது இருன்டினிடே வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு தனது பேச்சை தொடங்கியது.

 

“நண்பர்களே, திட்டமிட்டபடி இன்று இரவு நாம் நெடும் பயணத்தை தொடங்க இருக்கிறோம். எல்லோரும் தயாரா?”

குருவிகள் எல்லாம் “தயார், தயார்” என்று சிறகுகளை உயர்த்தியவாறு கீச்சிட்டன.

“நல்லது நண்பர்களே” நமது பயணம் சாதாரணமானது அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது மூதாதையர்கள் இது போன்ற பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.  ஆதலால் இது வரலாற்று சிறப்பு மிக்க பயணம். அத்தோடு மனித அறிவியலுக்கும் சவால் விடும் பயணம். வழியில் சமவெளிகளையும், பாலைநிலத்தையும், மலைகளையும், சமுத்திரத்தையும் நாம் கடந்து செல்ல இருக்கிறோம். உற்சாகமாக இருங்கள். பயணத்தை மகிழ்ச்சியாக மேற்கொள்ளுங்கள்” என்றது இருன்டினிடே.

“சரி சரி” என்றன அங்கிருந்த மற்ற எல்லா குருவிகளும்.

“உம்ம்… அன்பு நண்பர்களே, நமது நெடும் பயணம் பூமியின் கிழக்கு பகுதில் இருக்கும் ’சொர்க்க வனம்’ எனும் அழகிய காட்டை நோக்கி இருக்கப் போகிறது. இந்த அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அங்கு தான் தங்க இருக்கிறோம்.

ஏறத்தாழ ஆறுமாத காலத்திற்கு பின்பு தான் நமது தாயகத்திற்கு திரும்ப இருக்கிறோம். சொர்க்க வனத்தை அடைய சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து செல்ல வேண்டும்.

கண்டங்களை கடந்து செல்லவிருக்கிற இந்த பயணம் நமது வாழ்வில் ஒரு அங்கம். நமது வாழ்விற்காகவும், சந்ததிகளுக்காவும், இப்பயணத்தை நாம் மேற்கொள்ள இருக்கிறோம்” என்று உணர்ச்சி பொங்க கூறியது இருன்டினிடே.

“ஆம், பயணத்தை சிறப்பாக மேற்கொள்வோம்… சிறப்பாக மேற்கொள்வோம்…” என்று இளம் குருவிகள் ஆர்வமிகுதியால் கத்தின.

“நல்லது, நல்லது” என்றது இருன்டினிடே. மீண்டும் கூட்டத்தில் அமைதி நிலவியது.

 

“நண்பர்களே, பயணத்தை மகிழ்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். அதேசமயத்தில் எதிர்வரும் தீங்கையும் நாம் மனதில் கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்குத் தான். இழப்பு நமது உயிராகவும் இருக்கலாம்” என்றது இருன்டினிடே.

அதுவரையிலும், பயணத்தில் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும் என்று நினைத்திருந்த இளம் குருவிகளுக்கு சற்றே அச்ச உணர்வு மேலெழுந்தது.

அதனை உணர்ந்த இருன்டினிடே குருவி, “அச்சம் வேண்டாம் நண்பர்களே, எச்சரிக்கையுடனும், குழுவாகவும் செயல்பட்டால், நமக்கு எவ்வித தீங்கும் நேராது. என்ன சரியா?” என்றது.

இளம் குருவிகள் எல்லாம் “சரி ஐயா” என்றன.

அப்போது கூட்டத்திலிருந்து, “ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்” என்ற குரல் ஒலித்தது. எல்லா குருவிகளும் குரல் ஒலித்த இடத்தை நோக்கி திரும்பின. தலைவர் இருன்டினிடே உட்பட…

அந்தக் குரல் ’வாக்டெய்லிடம்’ இருந்த வந்தது. குருவிக் கூட்டத்திலேயே வயது குறைந்த குருவி, வாக்டெய்ல் தான். அது செய்யும் சுட்டித்தனம் எல்லா குருவிகளுக்கும் பிடிக்கும்.

அத்தோடு துணிச்சலுடனும், பண்புடனும் செயல்படும். அதனால் அந்தக் குருவிக் கூட்டத்தின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றிருந்தது வாக்டெய்ல்.

உடனே இருன்டினிடே குருவி கேட்டது, “யாரு வாக்டெய்லா?”.

“ஆமாம் ஐயா…” என்றது வாக்டெய்ல்.

“சொல்கிறேன். அப்பொழுது தான் நீங்களும் சமயோசிதமாக செயல்பட முடியும்” என்று சொல்லி மேலும் தொடர்ந்தது இருன்டினிடே.

 

“நண்பர்களே, நம்மால் வெகுதொலைவு பறக்க முடியும். ஆனால் தொடர்ந்து இலக்கை நோக்கி பறக்க முடியாது. அத்தோட இரவு நேரத்தில் மட்டுமே நமது பயணத்தை மேற்கொள்ள போகிறோம்.

பகலில் எங்காவது தங்கியிருந்து மீண்டும் இரவில் பயணத்தை மேற்கொள்வோம். இப்படி தங்கும் இடங்களில் நம்மை பற்பல ஆபத்துகள் அணுகலாம்.

ஆபத்துகள், அங்கு வாழும் பிராந்திய விலங்குகளாலோ அல்லது மற்ற பறவைகளாலோ கூட நிகழலாம். சில இடங்களில் வேட்டைக்காரர்களாலும் தீங்கு உண்டாகலாம்.

தவிர, காலநிலையே கூட நமக்கு எதிராக இருக்கலாம். சில இடங்களில் உணவு கிடைத்தாலும் அது உண்ண தகாதவையாக இருக்கலாம்.

ஆனாலும் கவலை வேண்டாம், எங்கு எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை உங்களுக்கு சொல்லுவேன். அதன்படி நீங்கள் நடந்தால் போதும்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே, வீண் சண்டைகளை தவிர்த்து ஒற்றுமையுடனும் விழிப்புடனும் நாம் செயல்பட்டாக வேண்டும்.

சரி, இனி உங்களுக்கு ஏதோனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றது இருன்டினிடே.

குருவிகள் எல்லாம் “நீங்கள் சொல்கிறபடியே செய்வோம்” என்று ஒருமித்த குரலில் கூறின.

 

வாக்டெய்ல் குருவிக்கோ சில சந்தேகங்கள் இருந்தன.

உடனே, “ஐயா நாம் ஏன் இரவு நேரத்துல மட்டும் பறக்கனும்? பகல் நேரத்துலையையும் பறந்தா சீக்கிரத்துல சொர்க்க வனத்தை போய் சேந்துடலாமே” என்றது.

“வாக்டெய்ல் குட்டி, நாம கடக்கப்போகிற ஊரெல்லாம் நம்ம ஊரு மாதிரி இருக்காது பகல்ல சூரியக் கதிர்களின் தாக்கம் அதிகமா இருக்கும். அதனால் சீக்கிரமா நாம சோர்ந்து போயிடுவோம்.

சோர்வு வந்துடுச்சினா நம்ம கவனமும் எச்சரிக்கை உணர்வும் சிதறிடும். அதனால எளிதா வேட்டைகாரர்களுக்கு நாம் இரையாகும் வாய்ப்பு அதிகம்.

அதனால தான் நாம இரவுல மட்டும் பயணத்தை வச்சிருக்கோம். பகல்ல தேவையான உணவோட ஓய்வையும் எடுத்துக்கிட்டு, இலக்கை நோக்கி பயணிக்கலாம்.

அத்தோட புது இடங்களை கண்டு மகிழவும், புதிய நண்பர்களை நீங்க சந்திக்கவும் இது ஒரு வாய்ப்பா இருக்கும். என்ன புரிஞ்சுதா” என்றது இருன்டினிடே.

“ஆ..ங் புரிஞ்சுது ஐயா, எனக்கு இன்னும் இரண்டு சந்தேகம் இருக்கு. கேட்கட்டுமா” என்றது வாக்டெய்ல்.

“உம்ம்… கேளு வாக்டெய்ல்” என்றது இருன்டினிடே.

 

“ஐயா உலகிலேயே நாம தான் வெகுதூரம் பறந்து பயணிக்கிறோமா? அப்புறம் சொர்க்க வனம் எப்படி இருக்கும்? கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றது வாக்டெய்ல்.

“வாக்டெய்ல், நம்மல விட அதிக தூரம் பயணம் செய்யும் பறவைகள் இருக்காங்க. அவங்கதான் ’ஆர்க்டிக் டெர்ன்’ (Arctic Tern) இனத்தை சேர்ந்த பறவைகள்.

வடதுருவ பகுதியான ஆர்க்டிக்கிலிருந்து தென்துருவப் பகுதியான அண்டார்க்டிக் வரைக்கும் பயணம் போயிட்டு வருவாங்க.

ஒருவருடத்துல சுமார் எழுபதாயிரம் கிலோ மீட்டர் தொலைவு இவங்க பயணிப்பாங்க.

இன்னும் ஒரு பெருமை இவங்களுக்கு இருக்கு தெரியுமா?

எங்கேயும் தங்காம, சுமார் நான்காயிரம் கிலோ மீட்டர் தூரம் கூட இவங்க பறந்து செல்வாங்க. அதுவும் சாப்புடாமலேயே” என்றது இருன்டினிடே.

 

மேலும் தொடர்ந்த இருன்டினிடே, “ஆ… வாக்டெய்ல் உண்மையில சொர்க்க வனத்தை பற்றி எனக்கு பெரிசா தெரியாது” என்றது.

“அப்படியா…” என்றபடி எல்லா குருவிகளும் தலைவர் இருன்டினிடேவை பார்த்தன.

“ஆனா சொர்க்க வனம் அருகில் இருக்கும் ஒருசதுப்பு நிலம் வரை நான் போயிருக்கேன். இரண்டு வருடத்திற்கு முன்பு அங்கு தான் போயிட்டு வந்தோம்.

அங்கு தான் ஒரு வாத்து நண்பர சந்திச்சேன். அவரு தான் சொர்க்கவனமுன்னு ஒரு அழகிய காடு இருக்கு. நம்மல மாதிரி ஜீவராசிகள் எல்லாம் வாழ்வதற்கு அது மிகச்சிறந்த இடமா இருக்குன்னும் சொன்னாரு.

அந்த சதுப்பு நிலபரப்புல இருந்து சிலநூறு கிலோ மீட்டர் தொலவுல தான் சொர்க்க வனம் இருக்காம். அங்கு போவதற்கான வழிய‌கூட சொன்னாரு.

அது எனக்கு இன்னும் நினைவுல இருக்கு. ஏனோ தெரியல இரண்டு வருடமா அங்கு போக முடியாம போயிடிச்சி. ஆனா இந்த வருடம் நிச்சயம் சொர்க்க வனத்துக்கு போவோம்” என்று உற்சாகமாக கூறியது இருன்டினிடே.

எல்லா குருவிகளும் “ஆம்… ஆம்…” என்று உற்சாகமாய் ஒருமித்து குரல் எழுப்பின.

சொர்க்க வனம் செல்ல‌ பயணத் திட்டம் தயாரானது.

“சரி நண்பர்களே, இத்தோடு கூட்டம் நிறைவடைகிறது. நாம் கலைந்து செல்வோம். நன்றாக ஓய்வு எடுங்கள். இன்று இரவு சரியாக எட்டு மணிக்கு, இதே இடத்தில் அனைவரும் இருக்க வேண்டும். ஒன்பது மணிக்கெல்லாம் இங்கிருந்து புறப்படுவோம். சரியா?” என்றது இருன்டினிடே.

“சரி ஐயா” என்று கூறி எல்லா குருவிகளும் அங்கிருந்து கலைந்து சென்றன.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 2 – பயணம் ஆரம்பம்

 

One Reply to “சொர்க்க வனம் 1 – பயணத் திட்டம்”

Comments are closed.