சொர்க்க வனம் 12 ‍- கடற்பயணம்

தொடர்ந்து ஏழு மணி நேரமாக குருவிக் கூட்டம் கடல் வழியே பயணித்துக் கொண்டிருந்தது.

நள்ளிரவு ஒரு மணியிருக்கும்…

அங்கு ஒரு ’கடல்மலை’ இருந்தது.

அதனைக் கண்டவுடன், “நண்பர்களே, அங்க பாருங்க! கடல்மலை அங்க கொஞ்ச நேரம் தங்கி ஓய்வு எடுத்துக்கிட்டு, பிறகு பயணத்தை தொடரலாம்” என்று இருன்டினிடே கூறியது.

அப்பொழுது, “ஐயா, நாம தான் சோர்வா இல்லையே, அதனால தொடர்ந்து பயணிக்கலாமா?” என்று சில குருவிகள் கேட்டன.

“இல்ல நண்பர்களே, இதுக்கப்புறம் வேறு எங்கேயும் நிலப்பகுதி இருக்காது. இன்னும் நெடுந்தூரம்  கடல் வழியா கடற்பயணம் தான் பயணிக்கணும். அதனால தான் சொல்றேன்” என்றது இருன்டினிடே.

“சரி ஐயா, அப்ப இங்க தங்கிட்டு போவோம்” என்று குருவிகள் கூறின.

அதனை தொடர்ந்து, சில நிமிடங்களில் குருவிக் கூட்டம் அந்த கடல்மலையை வந்தடைந்தது.

 

கடல்மலையின் உச்சி கூம்பு வடிவில் இருந்ததுடன் பரப்பளவும் குறைவாகத் தான் இருந்தது. எனினும், அங்கு, அதிக அளவிலான சிறுதாவரங்கள், பாசிகள் இருந்தன.

குருவிகள் எல்லாம் அங்கு ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தன. முழுநிலவின் வெளிச்சம் அந்த கடல் பகுதி, முழுவதும் நிரம்பியிருந்தது. அலைகள் அந்த கடல்மலையை வந்து மோதி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.

வாக்டெய்ல் அந்த அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தது. அப்பொழுது சில ஹெர்மிட் நண்டுகள் மலையின் மீது ஒன்றாக ஏறிக் கொண்டிருந்தன.

திடீரென ஒரு ’வினோத சத்தம்’ கேட்டது.

’அந்த ஒலியால்’ குருவிகள் திடுக்கிட்டன. அவை மிகவும் பயந்து திரும்பி பார்க்க, ஒரு பெரிய கப்பல் அந்த வழியே ஒலி எழுபியவாறே நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தது.

“நண்பர்களே, அது மனிதர்களின் கப்பல் தான்…. பயப்படாதீங்க” என்று கூறியது இருன்டினிடே.

குருவிகளின் பயம் தணிந்தது.

அதன் பின்னர் அந்த கப்பலின் அழகை கண்டு ரசித்தபடியே குருவிகள் இருந்தன. ஒலி எழுப்பியவாறே அந்தக் கப்பல் நெடுந்துரம் சென்றுவிட்டது.

 

வாக்டெய்லுக்கு நண்டுகளின் ஞாபகம் வரவே, மீண்டும் மலையின் அடிவாரத்தில் உற்றுப் பார்த்தது. கூட்டமாக ஏறிக் கொண்டிருந்த நண்டுகள் இப்போது சிதறிச் சென்றிருந்தன. ஆம், அவை எல்லாம் தனித்தனியே விலகி வெவ்வேறு பாதைகளில் சென்று கொண்டிருந்தன.

நண்டுகள் பிரிந்து சென்றதற்கான காரணம் புரியாமல் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தது வாக்டெய்ல்.

“சரி நண்பர்களே, பயணத்தை தொடரலாமா? யாருக்கும் பிரச்சனை இல்லையே?” என்று இருன்டினிடே கேட்க, “புறப்படலாம் ஐயா” என்று எல்லா குருவிகளும் கூறின.

கடற்பயணம் தொடர்ந்தது. விடிய விடிய அவை பறந்து கொண்டிருந்தன.

மெல்ல சூரியன் அடிவானத்தில் இருந்து மேலெழுந்து தனது ஒளிக்கதிர்களை வெளிவிட ஆரம்பித்தது.

வாக்டெய்ல் உட்பட சில குருவிகளுக்கு இதுதான் முதல் கடற்பயணம். பகல் வெளிச்சத்தில் நடுக்க‌டல் பகுதியை இப்பொழுதுதான் அவை காண்கின்றன.

கண்ணுக்கு எட்டியவரை எங்கும் நீர் மட்டுமே இருந்தது. கடலில் பெரும் அலைகள் எதுவும் இல்லை. கடல் நீர் ததும்பிக் கொண்டு ஒருவித அமைதியுடன் இருந்தது.

பரந்து விரிந்திருக்கும் அந்தக் கடலின் பிரம்மாண்டத்தை கண்டு அவை வியந்தபடி பயணித்தன.

மேலும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவை தொடர்ந்து பயணித்தன.

 

அக்கரை தென்பட்டது. ஆம்… அக்கரையில் உயர்ந்த மரங்கள் இருந்தன. அவற்றை குருவிகளால் எளிதாக காண முடிந்தது.

உடனே, “நண்பர்களே, நாம் கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். என்ன மகிழ்ச்சியா?” என்று கேட்டது இருன்டினிடே.

“மகிழ்ச்சி தான் ஐயா”

“நன்றி ஐயா, உங்களால் தான் இவ்வளவு தூரத்தை கடந்திருக்கிறோம்” என குருவிகள் இருன்டினிடேவிற்கு பதில்களை தந்தன.

குருவிக் கூட்டம் உற்சாகம் அடைந்ததால், அவற்றின் பறக்கும் வேகமும் வெகுவாக கூடியது.

ஏறக்குறைய ஒரு மணிநேரம் சென்றிருக்கும்.

குருவிக் கூட்டம் கடற்கரை மணற்பரப்பில் தரையிற‌ங்கியது. கடற்பயணம் நிறைவுற்றது.

அச்சூழல் குருவிகளுக்கு முற்றிலும் புதியதாக இருந்தது. வியப்புடன் சிறிது நேரம் அவை கரையில் சுற்றித் திரிந்தன.

மனித நடமாட்டம் அங்கு இல்லை. மணற்பரப்பில் சிலவகை பூச்சிகள் இருந்தன. ஆங்காங்கே பறவைகள் பறந்து கொண்டிருந்தன.

காகங்கள் கூட்டமாக நின்று கொண்டு கரைந்தன. நண்டுகள் கடற்கரை மணலில் நகர்ந்து சென்றன. மணலில் சிப்பி ஓடுகள் பற்பல வடிவங்களிலும், நிறங்களிலும் இருந்தன.

கரையிலிருந்து சற்று தொலைவில் எண்ணற்ற மரங்கள் அடர்ந்து இருந்தன. அவற்றைத் தாண்டி நெடுஞ்சாலை ஒன்றும் இருந்தது. அதில் அவ்வப்பொழுது வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன.

இவற்றை எல்லாம் பார்த்து இரசித்தபடி சிறிது நேரத்தை குருவிகள் கழித்தன.

 

மதிய வேளை வந்துவிட்டது. பத்திரமாக இருக்கும்படி அறிவுறுத்தியப்பின் இருன்டினிடேவும் சில மூத்த குருவிகளும் உணவு சேகரித்து கொண்டுவர அங்கிருந்து புறப்பட்டன.

மற்ற குருவிகள் எல்லாம் மீண்டும் கடற்கரையில் சுற்றித் திரியத் தொடங்கின. வாக்டெய்லும் அதன் நண்பர்களும் கரையில் நடந்து சென்றுக் கொண்டிருக்க, ஒருவித வாசனை அவற்றை ஈர்த்தது.

வாசனைக்கு காரணம் அலைகளால் அடித்துவரப்பட்டு கரையோரத்தில் விடப்பட்டிருந்த ’கடற்பாசி’ தான்.

“அங்க பாருங்க, ஏதோ இருக்கு” என்று வாக்டெய்ல் கூறி, அதன் நண்பர்களை அங்கு அழைத்துச் சென்றது.

“இது என்னன்னு தெரியலையே! ஆனோ ஏதோ சாப்பிடக்கூடிய வாசனையாதான் இருக்கு” என்று குருவிகள் கூறின.

“சரி நண்பா, நான் முதல்ல சாப்பிட்டுப் பாத்து சொல்றேன். நல்லா இருந்தா நீங்க எல்லோரும் சாப்பிடுங்க” என்று வாக்டெய்ல் கூற, அதன் நண்பர்களோ “வேண்டாம் வாக்டெய்ல், என்னன்னு தெரியாம, இத சாப்பிடனுமா?” எனக் கேட்டன.

“ஆமாம்ப்பா… நீங்க சொல்றது சரிதான். ஆனா கொஞ்சமா சாப்பிட்டா, தெரிஞ்சுடும்ல” என்று கூறி, சிறு துண்டு கடற்பாசியை வாக்டெய்ல் உண்டு முடித்தது.

வாக்டெய்லுக்கு, முதலில் கடற்பாசியை உண்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. எனினும் அடுத்த சில மணித்துளிகளில், கடற்பசியின் சுவையை அது விரும்பவில்லை.

அதனால் “நண்பர்களே, இத சாப்பிட வேண்டாம்னு நினைக்கிறேன்” என்று கூறியது.

“என்ன ஆச்சு நண்பா? நல்லா இல்லையா?” என்று ஒரு குருவி நண்பன் கேட்டது.

“ஆமாம்ப்பா… எனக்கு இதன் சுவை புடிக்கல… ஒருமாதிரியா இருக்கு” என்று கூறியது வாக்டெய்ல்.

“வாக்டெய்ல், உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று மற்றொரு குருவி நண்பன் கேட்டது.

“இல்ல நண்பா, உடம்புக்கு ஒன்னும் இல்ல, சுவைதான் ஒருமாதிரியா இருக்கு.” என்று சொன்னது வாக்டெய்ல்.

அதற்குள், மூத்த குருவி ஒன்று வாக்டெய்லையும் அதன் நண்பர்களையும் அழைத்தது. உடனே, அவை அங்கு சென்றன.

எனினும் வாக்டெய்ல் கடற்பாசியை உண்டது குறித்து அவை யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை.

சிறிது நேரத்தில் இருன்டினிடேவும், மூத்த குருவிகளும் அங்கு வந்தன. குருவிக் கூட்டத்தை ஒன்று கூட்டின.

 

“நண்பர்களே, நாம இப்ப சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்கலாம். மாலை புறப்பட்டா நள்ளிரவுக்குள்ள‌ பக்கத்துல இருக்கிற சதுப்பு நிலத்துக்கு போயிடலாம். அங்கு நாளை பகல் முழுக்க ஓய்வு எடுத்துட்டு, சாயங்காலம் சொர்க்க வனம் புறப்படலாம். என்ன சரியா?” என்று கேட்டது இருன்டினிடே.

எல்லா குருவிகளும் சொர்க்க வனம் செல்வதற்கு ஆவலுடன் இருந்தன.

அதனால், “ஐயா நாம நேரடியா சொர்க்க வனம் போகலாம்” என்றுக் கூறின.

பெரும்பாலான குருவிகள் இக்கருத்தை கூறியதால் இருன்டினிடே சற்று சிந்தித்தது.

பின்னர் “சரி நண்பர்களே, இன்று பிற்பகலில் இங்கிருந்து புறப்படலாம். அப்பதான் நாளை அதிகாலை சொர்க்க வனத்துக்கு போக முடியும்” என்று சொன்னது இருன்டினிடே.

குருவிகள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தன. உற்சாகத்தில் ஆர்பரித்தன.

“சரி சரி… இப்ப எல்லாம் சாப்பிடலாம்” என்று சொன்னது இருன்டினிடே. அதனை தொடர்ந்து குருவிகள் மதிய உணவை உண்டு முடித்தன.

பின்னர் மரம் ஒன்றில் குருவிக் கூட்டம் சென்று ஓய்வெடுக்க தொங்கியது.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 11 – வேட்டை ஆபத்து

 

Comments are closed.