அடுத்து இரண்டு நாட்கள் கடந்தன. சிலசமயங்களில் வாக்டெய்ல் கண்விழித்துப் பார்த்தது; பின்னர் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தது. எனினும், கனலியின் அறிவுரைப்படி மருந்துகளை சீரான இடைவெளியில் வாக்டெய்லுக்கு கொடுத்து வந்தது ஆடலரசு.
நான்காம் நாள்…. வாக்டெய்லின் உடல்நிலை தேறியது.
கண்விழித்து ஆடலரசுவை நோக்கி தெளிவாக பார்த்தது வாக்டெய்ல். ஆடலரசுவிற்கு எல்லையற்ற மகிழ்ச்சி.
இன்முகத்துடன் அது வாக்டெய்லை நோக்கி பார்த்தது.
“நீங்க?”
“என்னோட பேரு ஆடலரசு”
“உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு?”
“பரவாயில்ல…. நல்லா இருக்கு… ஆனா… என்னால எழுந்திருக்க முடியல….”
“உங்களுக்கு இறகுகள்ல அடிபட்டிருக்கு…. அனா கொஞ்ச நாள்ல சரியாகிடும்னு கனலி ஐயா சொல்லியிருக்காரு”
வாக்டெய்ல் எதுவும் பதில் சொல்லாமல் ஆடலரசுவையே பார்த்துக் கொண்டிருந்தது.
“உங்க பேரு?”
“வாக்டெய்ல்”
“உங்கள மாதிரி பறவைகள, நான் பார்த்ததில்ல”
“ஆமா… நாங்க பூமியின் வடமுனைப் பகுதியில இருந்து வந்தோம்… இந்த இடத்துக்கு நான் புதுசு தான்.”
“அப்படியா?”
ஆடலரசுவுக்கு வாக்டெய்ல் சொன்ன இடம் பற்றி எதுவும் தெரியாது. ’அனுபவம் வாய்ந்த கனலி ஐயாவிற்கு இது பற்றிய செய்திகள் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கலாம்’ என்று அது நம்பியது.
எனவே, கனலி ஐயாவை அழைத்து வந்து ’வாக்டெய்லுடன் பேச சொன்னால் சரியாக இருக்கும்’ என்று அது நம்பியது.
“வாக்டெய்ல்…. நான் போய் எங்க கனலி ஐயாவ இங்க கூட்டிட்டு வந்துடுரேன்…அவருதான் உங்களுக்கு வைத்தியம் பார்த்தாரு. இங்க பல பறவைகளுக்கும் அவரு வைத்தியம் பார்ப்பாரு. அதோட அவரு பெரிய படிப்பாளி.
“அவர பார்க்க நான் ஆவலோடு இருக்கேன்”
கனலி ஐயாவை அழைத்துவர அங்கிருந்து புறப்பட முற்பட்டது ஆடலரசு.
“ஆடலரசு….. ஆடலரசு….”
உடனே திரும்பி வாக்டெய்லை பார்த்து, “சொல்லுங்க வாக்டெய்ல்” என்று கூறியது ஆடலரசு.
“இம்ம்ம்ம் இந்த எடத்தோட பேரு என்ன?”
“சொர்க்க வனம்”
வாக்டெய்லின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. காரணம், எப்படியும் தன்னுடைய கூட்டத்தோடு மீண்டும் சேர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்ததே.
“சரீங்க… நான் போயிட்டு சீக்கிரமா வந்துடுரேன்…”என்று சொல்லி புறப்பட்டது ஆடலரசு
“சரி” என்று தலை அசைத்தது வாக்டெய்ல்.
கனலி ஐயாவின் கூட்டிற்குச் சென்று, வாக்டெய்ல் கண்விழித்து பேசியது பற்றி கூறியது ஆடலரசு.
கனலி ஐயாவும் மகிழ்ந்தது.
பின்னர் “ஐயா நீங்க வந்து வாக்டெய்ல பார்த்தா நல்லா இருக்கும்” என்று சொன்னது ஆடலரசு.
“நிச்சயமா வரேன்” என்று சொல்லி ஆடலரசுவுடன் அங்கிருந்து புறப்பட்டது கனலி.
சில நிமிடங்களுக்கு பிறகு…
ஆடலரசும் கனலியும் அங்கு வந்தன. அவைகளை கண்டவுடன் வாக்டெய்லின் உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்டது.
நேரே வாக்டெய்லின் அருகில் சென்றது கனலி.
அப்பொழுது…
“என்னோட பேரு கனலி”
“வணக்கங்க… என் பெயர்…”
“வாக்டெய்ல் தானே! ஆடலரசு தம்பி சொல்லிச்சு”
“ஆமாங்க. உங்களுக்கு ரொம்ப நன்றி”
“பரவாயில்ல தம்பி… இப்ப எப்படி இருக்கு?”
“நல்லா இருக்கு ஐயா, ஆனா…. இறகுல தான் வலி இருக்கு.”
“உங்களோட இறகுள காயம் பலமா இருக்கு. அது சரியாக இன்னும் சில வாரங்கள் ஆகும்.”
“உங்களுக்கும் ஆடலரசுக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல”
“எங்களால முடிஞ்ச உதவிய செஞ்சோம்… அத செய்யாம இருந்தா தான் தப்பு”
நன்றியோடு பார்த்தது வாக்டெய்ல்.
“நீங்க எப்படி இங்க வந்தீங்க?”
அப்பொழுது தனது தாயகம், தாய் தந்தை, மற்றும் தலைவர் இருன்டினிடே பற்றிய தகவல்களை கூறியது வாக்டெய்ல்.
மேலும் குருவிக் கூட்டத்தின் இயல்பான நெடும்பயணம் பற்றியும், இந்த வருடம் அவை சொர்க்க வனம் நோக்கி வந்தது பற்றிய தகவல்களையும் விளக்கமாக அது கூறியது.
ஆடலரசு ஆச்சரியம் அடைந்தது. கனலி ஐயாவும் வாக்டெய்லின் கூட்டத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தது.
“நல்லது தம்பி… உடல்நிலை சரியாகட்டும்…. நிச்சயமா உங்க கூட்டத்தோட நீங்க சேரத்தான் போரீங்க… நல்லதே நடக்கும்” என்று நம்பிக்கை விதைகளை விதைத்தது கனலி.
மகிழ்ச்சியுடன் “நன்றி ஐயா” என்று வாக்டெய்ல் கூறியது.
“நீங்க எப்படி இங்க விழுந்தீங்கன்ணு நினைவு இருக்கா?” என்று கனலி கேட்டது.
“இப்ப நினைவுக்கு வருது ஐயா… நாங்க கடற்கரைக்கு வந்து தங்கிட்டு, சாயங்காலம் புறப்பட்டோம். அப்போதுல இருந்து கொஞ்சமா வயித்துல வலி இருந்துச்சு. அப்புறம் தொடர்ந்து பயணிச்சு அதிகாலைல இங்க வரும்போது திடீர்ன்னு வயித்து வலி அதிகமாச்சு. அப்புறம் என்ன நடந்துச்சுன்னே தெரியல” என்று கூரியது வாக்டெய்ல்.
“அப்படியா…. கடற்கரையில எதாவது சாப்பிட்டியா?”
சிறிது யோசனைக்கு பின், “ஆமாங்க… அங்க கடல்பாசி இருந்துச்சு. அத சாப்பிட்டேன்” என்று கூறியது வாக்டெய்ல்.
“ஓஓ… ஒருவேளை நீ சாப்பிட்ட உணவுகூட உன்னோட வயித்துவலிக்கு காரணமா இருக்கலாம்”
“ஐயா, என்ன சொல்றீங்க”
“ஆமாம்… கடல்ல மிதக்கும் நெகிழிகள் சிதைஞ்சு நுண்துகளா மாறுது. இது கடற்பாசியில சுலபமா படியிது. அப்படி நெகிழிதுகள் படிஞ்ச கடற்பாசிய நீ சாப்பிட்டதுனால வயித்து வலி வந்திருக்கலாம்” என்று கூறியது கனலி.
“ஆமாங்க… எனக்கும் அதோட சுவை பிடிக்கல… அப்ப நீங்க சொன்ன மாதிரி, நான் சாப்பிட்ட கடற்பாசியில நெகிழி நுண்துகள் இருந்திருக்கும்” என்று வாக்டெய்ல் சொன்னது.
அதைக்கேட்டு ஆடலரசு அதிர்ச்சி அடைந்தது.
“நீ மட்டுமா கடற்பாசிய சாப்பிட்ட?” என்று கேட்டது கனலி.
“ஆமாங்க…. நா மட்டும்தான் அத சாப்பிட்டேன், நண்பர்கள் யாரும் அத சாப்பிடல” என்று பதில் கூறியது வாக்டெய்ல்
“எல்லாம் நல்லதுக்கேன்னு நினைச்சுக்கோ தம்பி” என்று கனலி கூறியது.
அப்போது அருகில் வசித்துவரும் கிளி, மைனா உள்ளிட்ட நண்பர்களும் ஊதாச்சிட்டு நண்பர்களும் அங்கு வந்துவிட்டன. அவற்றை கண்டு தயங்கியது வாக்டெய்ல்.
அவை எல்லாம் வாக்டெய்லை பார்த்து நலம் விசாரிக்க, ’பாதுகாப்பான சூழ்நிலையில் தான் இருப்பதாக’ உணர்ந்தது வாக்டெய்ல்.
பின்னர், “சகோதரர்களே, வாக்டெய்ல் ஓய்வு எடுக்கட்டும்… நாம அப்புறம் பேசிக்கலாம்” என்று கனலி கூற, அவை கனலியின் வார்த்தைக்கு மதிப்பளித்து அங்கிருந்து நகர்ந்தன.
“தம்பி, நானும் புறப்படுரேன்” என்று கூறி அங்கிருந்து சென்றது கனலி.
அதன் பின்னர், “வாக்டெய்ல் நீங்க ஓய்வு எடுத்துகுங்க. நான் போய் உணவு எடுத்துகிட்டு வர்றேன்.” என்று சொல்லி புறப்பட்டது ஆடலரசு.
கனலி ஐயா மற்றும் ஆடலரசுவின் உதவியினை நன்றியோடு நினைத்தது வாக்டெய்ல்.
அதற்கிடையில், ’ஏதோ ஒரு நம்பிக்கையில்’ தினந்தோறும் இருன்டினிடே மற்றும் வாக்டெய்லின் தந்தை உள்ளடங்கிய ஸ்வாலோ குருவிகள் வாக்டெய்லை தேடிக் கொண்டிருந்தன.
(பயணம் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com
இதைப் படித்து விட்டீர்களா?
மறுமொழி இடவும்