சொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்

காலை மணி ஏழு இருக்கும்.

அந்த மரத்தின் மையப் பகுதியில் வந்து நின்றது கனலி.

கனலியை கண்டதும், ஆடலரசு கூட்டிலிருந்து வெளியே வந்தது. கனலியிடம் சென்று அது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டது.

“ஆடலரசு, எல்லோரையும் அழைச்சிட்டு வாப்பா” என்று கனலி சொன்னது.

உடனே ஆடலரசு பறந்து சென்று, அந்த பெரிய மரத்தில் வாழ்ந்து வந்த எல்லா வகைப் பறவையினங்களுக்கும் அழைப்பு விடுத்து விட்டு வந்தது.

அப்பொழுது, வாக்டெய்ல் கூட்டில் அரைத்தூக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில், எல்லா பறவையினங்களும் கனலி முன்பாக வந்து நின்றன.

பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே, அங்கு சத்தம் அதிகரித்தது. அதனால், விழித்துக் கொண்ட வாக்டெய்ல் வெளியே உற்றுப் பார்த்தது.

மரத்தின் மையப் பகுதியில் கனலி ஐயாவின் முன்பு பறவைகள் நின்றுக் கொண்டிருந்தன.

கனலி ஐயா ஏதோ சொல்லப்போகிறார் என்பதை வாக்டெய்ல் புரிந்து கொண்டது. என்றாலும், கனலி ஐயா என்ன சொல்லப் போகிறார் என்று அதனால் ஊகிக்க முடியவில்லை.

அடுத்த சில நொடிகளில் பறவைகளின் சத்தம் முற்றிலும் அடங்கியது. கனலி பேசத் தொடங்கியது. வாக்டெய்லும் கனலியின் பேச்சை கேட்க தயாரானது.

“என் அன்புக்குரியவர்களே, ஆடலரசு மூலமா நான் விடுத்த அழைப்பை ஏற்று நீங்க வந்திருக்கீங்க. உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நாம இங்க கூடியிருப்பதற்கான நோக்கம் வாக்டெய்லுக்கு உதவி செய்யத்தான் ” என்று கனலி கூறியது.

“சொல்லுங்க ஐயா, நாங்க எங்களால முடிஞ்சத செய்யறோம்” என்று காகம், கிளி முதலிய பறவைகள் கூறின.

“சொல்றேன், வாக்டெய்ல் உடல் நலம் தேறி வருது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள்ல‌ அந்த தம்பி முழுமையா குணமாயிடும்.” என்றது கனலி.

பறவைகள் எல்லாம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தன.

“நல்லது! நல்லது! வாக்டெய்ல் குணமடைவதுல நமக்கு மகிழ்ச்சியே. ஆன அதுக்கு அடுத்து செய்ய வேண்டிய முக்கியமான செயல் ஒன்னு இருக்கு. அது தான் வாக்டெய்லுக்கு நாம செய்யப்போற உதவியா இருக்கும்” என்றது கனலி.

“ஐயா, நீங்க சொல்றத, செய்ய நாங்க தயாரா இருக்கோம்” என்று பறவைகள் மீண்டும் கூறின.

“உம்ம்ம்.. வாக்டெய்ல அதோட கூட்டத்தோட சேர்க்கணும். அதுக்கு நீங்க உதவி செய்யணும்” என்று கூறி மேலும் தொடர்ந்தது கனலி.

“நம்ம எல்லைய தாண்டி இருக்கிற உங்க நண்பர்களிடம் வாக்டெய்ல் பற்றி சொல்லுங்க. அதாவது, வடமுனைப் பகுதியில இருந்து ஸ்வாலோ இனக் குருவிக் கூட்டம் நமது சொர்க்க வனம் வந்திருக்கணும். அதுல வாக்டெய்ல் என்ற குருவி சுகவீனம் அடைஞ்சு நம்ம பகுதியியில தங்கியிருப்பதையும் சொல்லுங்க. அதோட வாக்டெய்லோட அங்க அடையாளங்களையும் தெளிவா சொல்லி வைங்க. உங்க நண்பர்கள் யாராச்சும் வாக்டெய்லோட அங்க அடையாளம் ஒத்த பறவைகள பார்த்தா உடனே அவங்ககிட்ட தயக்கமின்றி வாக்டெய்ல் பற்றிய தகவல கொடுக்க சொல்லுங்க” என்று கூறியது கனலி.

“சரிங்க ஐயா, நாங்க உடனே எங்க நண்பர்களிடம் வாக்டெய்ல் குறித்து சொல்றோம். எப்படியாவது ஸ்வாலோ குருவிக் கூட்டம் இருக்கும் இடத்த கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்” என்று பறவைகள் ஒருமனதாய் கூறின.

“நல்லது அன்பர்களே, ஸ்வாலோ குருவிக் கூட்டத்தோட தலைவர் இருன்டினிடேவும் வாக்டெய்ல தேடுவதற்கு முயற்சிப்பாருன்னு நான் நம்புறேன். அதனால, அவரு பேரு சொல்லியும் உங்க நண்பர்களிடம் தகவல பகிர்ந்துக்கோங்க.” என்று கனலி சொன்னது.

“ஐயா, அவங்க தலைவர் பேர மறுபடியும் ஒருமுற சொல்லுங்களேன்” என்று பறவைகள் கேட்டன.

“அவர் பேரு இருன்டினிடே” என்று உரக்க சொன்னது கனலி.

உடனே, இருன்டினிடே என்ற பெயரை பறவைகள் எல்லாம் தம் மனதில் திரும்பத் திரும்பச் சொல்லி பதிய வைத்துக் கொண்டன.

“நன்றி அன்பர்களே. உங்களுக்கு தகவல் தெரிஞ்சா உடனே எனக்கு சொல்லுங்க. எல்லோருக்கும் நல்லதே நடக்கும். நாம கலைந்து செல்லலாம்” என்றது கனலி.

ஆண் பறவைகள் எல்லாம் உடனே, தமது நண்பர்களைக் காணப் புறப்பட்டன.

இந்த உரையாடலை கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த வாக்டெய்ல் கண்களின் ஓரத்திலிருந்து கண்ணீர் வழிந்தது.

தனக்காக ஆடலரசு, கனலி மற்றும் அவர்களது நண்பர்கள் எடுக்கும் பெரும் முயற்சிகளை எண்ணி அது மேலும் உணர்ச்சி வயப்பட்டது.

அப்பொழுது கனலியும் ஆடலரசும் வாக்டெய்ல் தங்கியிருந்த கூட்டிற்குள் வந்தன. அவர்களை கண்டதும் வாக்டெய்ல் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தது.

கனிவோடு வாக்டெய்லை நோக்கிய கனலி, “தம்பி, உன்ன உங்க கூட்டத்தோட சேர்க்கிற முயற்சிய தொடங்கிட்டோம். நீ கவலைப்படாம இரு. சீக்கிரமே உன்னோட அம்மா அப்பாவை நீ பார்க்கத்தான் போற‌.” என்று கனலி கூறியது.

“ஆமா வாக்டெய்ல், நம்ம ஐயா சொல்ற மாதிரி நீ உன் பெற்றோரோட சேரத்தான் போற. ஐயா சொன்ன அது நிச்சயம் நடக்கும்” என்று ஆடலரசும் கூறியது.

“நன்றி ஆடலரசு. ஐயா, சொல்லிகிட்டு இருந்தத நானும் கேட்டேன். உங்களுக்கு நான் எப்படி கைமாறு செய்யப்போறேன்னு தெரியல” என்றது வாக்டெய்ல்.

“தம்பி கைமாறு கருதாம பிறருக்கு செய்யற நல்லது தான் உதவி. நீ நல்லதே நினைக்கிற அதனால் உனக்கும் நல்லதே நடக்கும் நம்பிக்கையோடு இரு” என்றது கனலி.

“மிக்க நன்றி ஐயா, உங்க மருத்துவம் மட்டும் இல்ல. உங்க நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளும் என்ன சீக்கிரமா குணாமாக்கிடும்.” என்று உறுதியாக கூறியது வாக்டெய்ல்.

அதைக் கேட்டதும் ஆடலரசு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தது.

“சரிப்பா நானும் என்னோட பழைய கொக்கு நண்பன பார்க்க போறேன்.” என்று சொல்லி கனலி புறப்பட முற்பட்டது.

உடனே, “ஐயா நானும் கூட வரேன்” என்று ஆடலரசு கூற, “இல்ல ஆடலரசு, நா ரொம்ப தூரம் பயணம் செய்யணும். திரும்பி வர இரவு கூட ஆகலாம். நீ வாக்டெய்ல பார்த்துக்கோ.” என்று கூறி அங்கிருந்து புறப்பட்டது கனலி.

கனலியின் பேச்சை எதிர்த்து ஆடலரசுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கனலியோ கொக்கு நண்பனை பார்க்க விரைந்து பயணித்துக் கொண்டிருந்தது. வழக்கமாக பயணிக்கும் தொலைவைவிட பல மடங்கு தூரம் அது சென்றது. கிட்டத்தட்ட காலையில் தொடங்கிய பயணம் மதியம் வரை நீடித்தது.

கனலிக்கோ உடல் களைப்பு ஏற்பட, சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு மீண்டும் பயணத்தை தொடர்ந்தது.

ஒருவழியாக தனது கொக்கு நண்பன் தங்கியிருக்கும் இடத்தை வந்தடைந்தது. சிறிது நேரத்தில் நண்பனையும் அது சந்தித்தது.ண்டதும் கொக்கு நண்பன் சந்தோஷம் அடைந்தது.

“வா, நண்பா எவ்வளவு நாட்கள் ஆயிடுச்சு, நாம சந்திச்சு” என்று கூறி கனலியை இன்முகத்துடன் வரவேற்றது. உடனே, உண்பதற்கு பழங்களையும் கொடுத்தது.

கனலியும் கொக்கு நண்பனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தது. சிறிது நேரம் தங்களது பழைய நினைவுகளை அவை அசைபோட்டன. பிறகு பயணத்தின் நோக்கத்தை, கொக்கு நண்பனிடம் கனலி எடுத்துரைத்தது.

அது வாக்டெய்ல் பற்றி எல்லா தகவல்களையும் கொக்கு நண்பனிடம் கூறியதோடு, விரைவில் ஸ்வாலோ குருவிக் கூட்டம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டது.

அப்பொழுது, “நண்பா, நீ சொல்லி நா செய்யாம இருப்பேனா, உடனே இந்த தகவல நம்ம கூட்டத்துல சொல்றேன். நீ கவலைய விடு. எவ்வளவு தூரம் ஆனாலும் தேடிப் போய் ஸ்வாலோ குருவி கூட்டம் தங்கியிருக்கும் இடத்த நாங்க கண்டுபிடிக்கிறோம்” என்று உறுதி அளித்தது கொக்கு நண்பன்.

பின்னர்”சரிப்பா நீ சாப்பிடு. இங்க ஒருவாரம் தங்கிட்டு அப்புறம் போகலாம்” என்று கொக்கு கூற, “நண்பா நா இன்னிக்கே போகணும்” என்று கனலி கூறியது.

அதனைக் கேட்டு அதிர்ந்த கொக்கு “நண்பா நீ எவ்வளவு தூரம் பயணிச்சு வந்திருக்கே. உடனே கிளம்புறேங்கற நம்ம வயசுக்கு இதெல்லாம் ஆகுமா?” என்று கொக்கு நண்பன் உரிமையுடன் கனலியைப் பார்த்துக் கேட்டது.

“இல்ல நண்பா, சில பறவை நண்பர்களுக்கு மருந்து கொடுக்கணும். நான் இன்னிக்கு போனாதான் வேல‌ முடியும். அதான் சொல்றேன்” என்றது கனலி.

வேறு வழியின்றி, சரி என்று கனலியின் முடிவை ஏற்றுக் கொண்டது கொக்கு நண்பன்.

பின்னர், சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் புறப்பட தயாரானது கனலி.

எதையோ சிந்தித்த கொக்கு நண்பன், உடனே “நண்பா நானும் உங்கூட வரேன். நீ ஏன் தனியா போகணும்?” என்று கனலியிடம் கூறியது.

“உனக்கு ஏன் நண்பா கஷ்டம்?” என்று கனலி கூற “நண்பா என்னால வெகுதூரம் பயணம் செய்ய முடியும். அதனால் எனக்கு கஷ்டம் இல்ல. அதேட வாக்டெய்ல நா நேர்ல பார்த்துட்டேன்னா ஸ்வாலோ குருவிகள கண்டுபிடிக்க ஏதுவா இருக்கும்லே” என்றது கொக்கு நண்பன்.

கனலிக்கும் அது சரி என்றே பட்டது. பின்னர் அவை இரண்டும் அங்கிருந்து புறப்பட்டன. வெகுநேரம் அவை பயணித்தன.

நள்ளிரவு நேரம் ஆயிற்று. கனலியும் கொக்கு நண்பனும், ஆடலரசுவின் கூட்டிற்கு வந்து சேர்ந்தன.

கொக்கு நண்பரையும், கனலியையும் இன்முகத்துடன் ஆடலரசும் வாக்டெய்லும் வரவேற்றன. அப்பொழுது, கொக்கு நண்பனை அவற்றிற்கு அறிமுகம் செய்து வைக்க, ஆடலரசுவையும், வாக்டெய்லையும் கொக்கு நண்பன் நலம் விசாரித்தது.

குறிப்பாக வாக்டெய்லுக்கு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள அது சொன்னதோடு, ஸ்வாலோ குருவிக் கூட்டம் தங்கிருக்கும் இடத்தை விரைவில் கண்டுபிடிப்பதாகவும் உறுதியளித்தது. வாக்டெய்ல் மகிழ்ந்தது.

பலமணி நேரத் தொடர் பயணத்தால் கனலி மிகவும் களைப்புற்று இருந்தது. அதனை வாக்டெய்லும் ஆடலரசும் உணர்ந்துக் கொண்டன.

உடனே உணவுக்கான ஏற்பாடுகளை ஆடலரசு செய்தது. சிறிது நேரத்தில் கொக்கு நண்பனும் கனலியும் பசியாற உண்டன. அங்கே இருந்த ஒரு மரக்கிளையில் அவை ஓய்வு எடுக்க சென்றன.

பின்னர் ஆடலரசும் உறங்க சென்றுவிட, வாக்டெய்லுக்கோ தூக்கம் வரவில்லை. தன்னை பெற்றோரிடம் சேர்ப்பதற்காக, கனலியும் ஆடலரசும் அதன் நண்பர்களும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மேற்கொள்ளும் பெரும் முயற்சிகளை எண்ணிப் பார்த்து பெருமிதம் அடைந்தது வாக்டெய்ல்.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 19 – ‍இருன்டினிடே எடுத்த முடிவு

Comments are closed.