அது முற்பகல் நேரம். கூட்டிற்கு திரும்பியது ஆடலரசு. அங்கு வாக்டெய்ல் இல்லை.
அந்த மரத்தின் மற்றொரு பகுதியில் வாக்டெய்ல் நின்றுக் கொண்டிருந்தது. அதனை கண்டு பிடித்தது ஆடலரசு.
ஆடலரசுவை கண்டதும், “என்ன நண்பா, ஏதாச்சும் முக்கியமான செய்தியா?” என்றுக் கேட்டது வாக்டெய்ல்.
“ஆமா, வாக்டெய்ல். இன்னிக்கு சாயங்காலம், கூட்டம் இருக்கு. அதான்… உங்கிட்ட சொல்ல வந்தேன்”
“கூட்டமா…? என்ன கூட்டம்?”
“கனலி ஐயாவோட கூட்டம்.”
“கனலி ஐயாவோட கூட்டமா? எனக்கு புரியலையே!”
“வாக்டெய்ல், வாழ்கையில செய்ய வேண்டிய நன்மைகள பத்தி கனலி ஐயா நமக்கு சொல்லித் தருவாரு. எப்பொழுதெல்லாம் அவருக்கு தோனுதோ கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வாரு. கொஞ்ச நாட்களுக்கு பிறகு இப்பத்தான் ஐயா கூட்டத்தை கூட்டுராரு.”
“அப்படியா! மகிழ்ச்சியான செய்திதான். இது எனக்கு புது அனுபவத்தையும் படிப்பினைகளையும் தருமுன்னு நம்புறேன்”
“நிச்சயமா வாக்டெய்ல். நல்ல கருத்துகள தெரிஞ்சிக்கலாம். சரி, உனக்கு ஏதாச்சும் கேள்வியோ சந்தேகமோ இருந்துச்சுன்னா, கூட்டம் நடக்கும்போது கனலி ஐயாவிடம் கேட்கலாம். அவரு பதில் சொல்லுவாரு.”
“அப்படியா! ரொம்ப நல்லது. நான் கேள்விய தயார் பண்ணிக்கிறேன்.”
“சரி வாக்டெய்ல், நான் இந்த தகவல எல்லோரிடமும் சொல்லணும். போயிட்டு வந்துடுறேன்”
“ஆடலரசு, நான் பக்கத்துல இருக்குற நண்பர்களுக்கு இந்த தகவல சொல்லிடுறேன். தொலைவுல இருக்குறவங்களுக்கு நீ சொல்லிடு”
“சரி வாக்டெய்ல், நாம மதிய உணவுக்கு கூட்டுல சந்திப்போம்”
“சரிப்பா, பாத்து போயிட்டு வா”
மரத்தில் இருக்கும் பறவைகளுக்கு ‘கனலியின் உபதேச கூட்டம்’ குறித்த தகவலை வாக்டெய்ல் பரப்பியது.
அப்பகுதியில் இருந்த மற்ற பறவைகளுக்கு கனலியின் கூட்டம் குறித்த தகவலை ஆடலரசு சொன்னது.
அன்று மாலை.
அந்த மரத்தின் மையப் பகுதியில் ஆடலரசு, வாக்டெய்ல் உட்பட எல்லாப் பறவைகளும் கூடியிருந்தன.
சற்று உயரமான மரக்கிளையில் கனலி வந்து அமர்ந்தது.
எல்லாப் பறவைகளும் கனலியை வணங்க, கனலியும் அவைகளுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டது.
சில நிமிடங்கள் அமைதி காத்து பின்னர், “முதல்ல உங்க கேள்விக்கு பதில் சொல்றேன். யாருக்காச்சும் கேள்வி இருக்கா?” என்றது கேட்டது கனலி.
உடனே “ஐயா, நான் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றது வாக்டெய்ல்.
எல்லா பறவைகளும் வாக்டெய்லை நோக்கின.
“கேள், வாக்டெய்ல்” என்று கனலி கூறியது.
“ஐயா, இந்த பகுதியில நான் கண்ட காட்சிகள் தான், எனக்குள்ள ஒரு கேள்விய எழுப்பியிருக்கு” என்றது வாக்ய்டெல்.
“நல்லது, சொல்லு தம்பி” என்றது கனலி.
“ஐயா, அழகிய மான், சுறுசுறுப்பான எறும்பு, உயர வளர்ந்து நிற்கும் மரம், வித்தியாசமான கூடு கட்டும் தூக்கணாங் குருவி, உருவத்தில் பெரிய யானை, வலிமையான சிங்கம், என நிறைய சிறப்புமிக்க உயிரினங்கள இங்க பார்த்தேன். நான் பார்த்தது கொஞ்சமாத்தான் இருக்கணும். சொர்க்க வனத்துல இன்னும் சிறப்புகள் இருக்கலாம். இதுல யாரு அதிக சிறப்பு வாய்ந்தவங்க? யாரு புகழ்ச்சிக்கு உரியவங்க?” என்று தனது வினாவை கேட்டது வாக்டெய்ல்.
அதற்கு, “உன்னோட அனுபவத்துல இருந்த நீ கேட்ட கேள்விக்கு வாழ்த்துகள் வாக்டெய்ல்”, என்று கூறி மேலும் தொடர்ந்தது கனலி.
“வாக்டெய்ல், நீ சொன்னது எல்லாமே உண்மை தான். சிங்கம் வலிமையானது; மான் அழகுமிக்கது; எறும்பு சுறுசுறுப்பா இயங்குது; மரம் பல நன்மைகள தருது; தூக்கணாங் குருவியோட கூடு வித்தியாசமா இருக்குது. இவற்றுல இருந்து என்ன தெரியுது?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கு தானே? அதனால் இவங்க தான் எல்லோரையும்விட பெருமைக்கு உரியவங்கன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது.
உதாரணத்துக்கு வலிமையான சிங்கத்த எடுத்துப்போம். யாரும் சிங்கத்துக்கிட்ட போக முடியாது; போகவும் மாட்டாங்க. ஆனா,வலிமையில்லாத ஈ சிங்கத்துமேல சர்வசாதாரணமா போய் உட்காருதே. சிங்கத்தோட இரத்தத்தையே உறிஞ்சுதே. ஆக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயல் எளிதா இருக்கு. அதனால் நாம மற்றவர்கள மதிச்சு நடக்கணும்” என்றது கனலி.
‘இப்ப புரியுது ஐயா, இன்னொரு கேள்வி, நம்ம பெருமைகள சொல்லிக்க கூடாதா?” என்று கேட்டது வாக்டெய்ல்.
“ஒருத்தரோட பெருமைகள மற்றவங்க புகழ்ந்து பேசலாம்… தவறில்ல சொல்லப்போனா, நமக்கு பிறரோட பெருமைகள குறைவின்றி பாராட்டவும், போற்றவும் தெரியனும். அப்பதான் அத்தகைய பெருமைகள அடைய எல்லோரும் முயற்சி பண்ணுவாங்க. அப்படிபட்ட சமுதாயம் தான் உயர்வு அடையும்.
அதேசமயத்துல தற்பெருமை கூடாது. உதாரணத்துக்கு, எனக்கு சில பெருமைகள் இருக்குன்னா, அவற்ற மற்றவங்க தான் சொல்லனும்; நானே சொல்லிக்க கூடாது. புரிஞ்சுதா?’ என்றது கனலி.
“ஐயா ஏன் தற்பெருமை கூடாதுன்னு சொல்றீங்க?” என்றுக் கேட்டது வாக்ய்டெல்.
“வாக்ட்யெல், மற்றவங்க நம்மள பற்றி புகழ்ந்து பேசும்போது, நமக்குள்ள தற்பெருமை வந்துடிச்சுன்னா நம்மளோட செயல் வேகம் குறையும்.
ஏன்னா, புகழ்ச்சி என்பது ஒருவித மயக்கம் தான்.
இப்ப நமக்கு திடீர்னு மயக்கம் வந்துச்சுன்னா, நம்மால எதையுமே செய்ய முடியாதுல. என்ன நடந்ததுன்னுனே தெரியாது. அப்படிதான், புகழ் மயக்கத்துல மூழ்கிட்டா, நம்மால அடுத்த நற்காரியங்கள செய்ய முடியாது; தடுமாறுவோம்.
அதோட, தற்பெருமை தற்புகழ்ச்சியா மாறிடும். அது அவங்களுக்கு சிறுமையைத் தான் தரும். சொர்க்க வனத்துல தற்புகழ்ச்சிய யாரும் ஏத்துக்க மாட்டாங்க.
தற்புகழ்ச்சி கர்வமாகவும் மாறி, அவங்களோட பெருமைகள சுத்தமா அது அழிக்கவும் செஞ்சிடும். அதனால் நாம நினைவுல வச்சுக்க வேண்டியது இதுதான், பெருமைக்கும் புகழ்ச்சிக்குமான செயல்கள எப்போதும் செய்யனும். ஆனா நமக்குள்ள தற்பெருமையோ தற்புகழ்ச்சியோ வந்துடக்கூடாது.” என்று எல்லோரையும் பார்த்து கனலி கூறியது.
“மிக்க நன்றி ஐயா, வாழ்க்கைக்கு தேவையான நற்கருத்துகளை தெரிஞ்சுக்கிட்டேன்.” என்று வாக்டெய்ல் கூறியது.
அப்பொழுது முதல் அனுபவத்திலிருந்து வாழ்க்கை பாடங்களை தானே உணரவும் அது கற்றுக் கொள்ள தொடங்கியது.
பிறகு, பல்வேறு நற்குணங்களையும் கனலி போதித்தது. பிற பறவைகள் கேட்ட கேள்விகளுக்கும் உவமைகளுடன் விளக்கங்களை கனலி அளித்தது.
அங்கிருந்த எல்லாப் பறவைகளும் கனலியின் உபதேசத்தை கேட்டு மகிழ்ந்தன. அவற்றை கைக்கொண்டு வாழவும் அவை உறுதி எடுத்துக் கொண்டன.
(பயணம் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com
இதைப் படித்து விட்டீர்களா?
Comments
“சொர்க்க வனம் 22 - கனலியின் உபதேசம்” மீது ஒரு மறுமொழி