வாக்டெய்லின் மகிழ்ச்சி

சொர்க்க வனம் 23 – ‍வாக்டெய்லின் மகிழ்ச்சி

சில நாட்களுக்கு பிறகு,

தனியாக மரக்கிளையில் அமர்ந்து கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருந்தது வாக்டெய்ல்.

அப்பொழுது அங்கு ஆடலரசு வந்தது.

“வாக்டெய்ல், என்ன பண்ற?”

“குறிப்பு எழுதிக்கிட்டு இருகேன் நண்பா”

“என்ன குறிப்பு?”

“சொர்க்க வனத்துல, எனக்கு கிடைச்ச அனுபவங்கள குறிச்சி வச்சிருக்கேன். அதோட உன்ன பத்தியும், நம்ம கனலி ஐயா பத்தியும் குறிச்சி வச்சிருக்கேன். நம்ம நண்பர்கள் பற்றிய குறிப்புகளும் இதுல இருக்கு.”

“ஊம்ம்ம். உன்னோட இந்த பழக்கம் சிறப்பானது வாக்டெய்ல், வாழ்த்துகள்.”

“நன்றி ஆடலரசு. தெரியுமா? எங்க நெடும் பயணம் குறித்த எல்லா முக்கிய செய்திகளும் இதுல குறிச்சி வச்சிருக்கேன். வழித் தடங்களும் வரஞ்சு வச்சுருக்கேன்.”

“நல்லது நண்பா, நேரம் இருக்கும் போது எனக்கு உன்னோட பயண அனுபவத்தை சொல்றியா?”

“நிச்சயமா சொல்றேன். நண்பா.”

“நன்றி நண்பா”

“நன்றி எதுக்கு? என்னோட அனுபவத்தை உனக்கு சொல்றதுல எனக்கு மகிழ்ச்சி தான்.”

“சரி, உன்னோட இறகளால புத்தகத்துல எழுதிக்கிட்டு இருக்கியே. உனக்கு இறகுகள்ல வலி இல்ல?”

“இல்லப்பா, எனக்கு எந்த வலியும் தெரியல. குணமாயிட்டேன்னு தான் நினைக்கிறேன்.”

“மகிழ்ச்சி தான். இன்னிக்கு சாயங்காலம் ஐயா இங்க வராரு. அப்ப கனலி ஐயாவிடமே கேட்டிடுவோம்.”

“ஊம்ம். ஆடலரசு, நாம இப்பவே கனலி ஐயாவோட கூட்டுக்கு போய் அவர சந்திக்கலாமா?”

“ஊம்ம். தாராள‌மா போகலாம். ஆனா உன்னால அவ்வளவு தூரம் பறக்க முடியுமா? உன்னோடு இறகுள்ல வலி வந்துடிச்சுன்னா, என்ன பண்றது?”

“அத‌லாம் ஒன்னும் ஆகாது நண்பா. எனக்கு இப்ப எந்த வலியும் இல்ல.”

“அப்ப சரி, வா போகலாம்.”

உடனே, வாக்டெய்லும் ஆடலரசுவும் அங்கிருந்து பறந்தன. அடுத்த ஒரு மணி நேரத்தில் அவை இரண்டும் கனலியின் கூடு வந்து சேர்ந்தன.

அவைகளைக் கண்டதும் உள்ளே வரும்படி அழைத்தது கனலி. வாக்டெய்லும் வந்திருப்பதை குறித்து கனலி ஆச்சரியம் அடைந்தது.

“தம்பி, உனக்கு இறகுகள்ல வலி இல்லையா?” என்று வாக்டெய்லைப் பார்த்து கேட்டது கனலி.

“இல்லை ஐயா.” என்று கூறி தனது இறகுகளை கனலியிடம் காட்ட, கனலி பரிசோதித்தது. காயங்கள் எதுவும் இல்லை.

“ஆமாம் வாக்டெய்ல். நீ பூரண குணமயிட்டே” என்று கனலி கூறியது.

அதைக் கேட்டதும் ஆடலரசுவும் வாக்டெய்லும் மகிழ்ந்தன.

அப்பொழுது, வாக்டெய்லை நோக்கி “சரிப்பா, இயல்பா உன்னால எவ்வளவு உயரம் பறக்க முடியுமோ அவ்வளவு உயரம் பறந்து காட்டு” என்று கூறியது கனலி.

வாக்டெய்லும் “சரி ஐயா” என்று சொல்ல, அவை மூன்றும் மரத்தின் உச்சிக்கு வந்தன.

முதலில் வாக்டெய்ல் சற்று தயங்கியது. பின்னர் வழக்கம் போல் மேலெழும்பி பறந்தது. தான் வழக்கமாக பறக்கும் உயரத்தை அது அடைந்தது.

வெகுநாட்களுக்கு பிறகு இப்பொழுது தான் அது உயரத்தில் பறக்கிறது. அதனால் அது மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.

அத்தோடு அவ்வுயரத்தில் இருந்து சொர்க்க வனத்தை நோக்க, எங்கும் பச்சைபசேல் என இருந்தக் காட்சியைக் கண்டும் அது மகிழ்ச்சி அடைந்தது.

பின்னர், அந்தப் பகுதியை வட்டமிட்டும், குட்டிகரணம் போட்டும் பறந்தது காட்டியது வாக்டெய்ல்.

சட்டெனெ அதன் தாய் தந்தை நியாபகத்திற்கு வரவே, எங்காவது ஸ்வாலோ குருவிகள் தென்படுகின்றனவா என்று உற்று நோக்கியது.

தனது கூட்டத்திற்கான பிரத்யேக சமிக்ஞையையும் வாக்டெய்ல் எழுப்பியது. ஆனால் வாக்டெய்லின் கண்களுக்கு ஸ்வாலோ குருவிகள் தென்படவில்லை.அவற்றிடம் இருந்து பதில் சமிக்ஞையும் வரவில்லை.

எனினும், தன்னால் இயல்பாக பறக்க முடிவதை எண்ணி வாக்டெய்ல் பெருமகிழ்ச்சி அடைந்தது. உடனே, மீண்டும் கீழறங்கி மர உச்சியை வந்தடைந்தது.

அப்பொழுது, “அப்பாடி, எவ்வளவு உயரம்? பார்க்கவே ரொம்ப அருமையா இருந்துச்சு வாக்ய்டெல். என்னால இவ்வளவு உயரம் நிச்சயமா பற‌க்க முடியாதுப்பா” என்று கூறி வாக்டெய்லை கொண்டாடியது ஆடலரசு.

கனலியும் மகிழ்ந்து வாக்டெய்லை பாராட்டியது.

“இதுக்கெல்லாம் இயற்கைக்கு தான் முதல்ல நன்றி சொல்லனும். இயற்கையிலேயே என்னோட உடலமைப்பு உயரமாகவும், நீண்ட நேரமும் பயணிக்கும்படி அமைஞ்சிருக்கு. இரண்டாவது உங்களுக்கு தான் நன்றி சொல்லனும், உங்களோட மருத்துவமும், அன்பும் தான் காயப்பட்ட என்னோட இறகுகள குணமாக்கியிருக்கு.” என்று தன்னடகத்துடன் வாக்டெய்ல் கூறியது.

அதைக் கேட்டதும் “நல்லது தம்பி.” என்று கனலி கூறியது.

அப்பொழுது, “ஐயா, இப்ப என்னால வழக்கம்போல பறக்க முடியுது. அதனால எங்க கூட்டம் தங்கியிருக்கும் இடத்த நானே தேடிக் கண்டுபிடிக்கலாமுன்னு நினைக்கிறேன். நாளைக்கே இங்க இருந்து புறப்படட்டும்மா” என்றது வாக்டெய்ல்.

அதைக் கேட்டதும் ஆடலரசு மவுனமாகியது.

பின்னர், “வாக்டெய்ல், இன்னும் இரண்டு நாட்கள் இங்க தங்கிட்டு அப்புறம் புறப்படேன். இங்க சுற்றிப் பார்க்க பல இடங்கள் இருக்கு. அதோட இரண்டு நாட்களுக்குள்ள உங்க கூட்டம் தங்கியிருக்கும் இடம் பற்றிய தகவல் நண்பர்கள் மூலமா தெரிஞ்சதுன்னா, நீ சுலபமா உங்க அம்மா அப்பாவோட சேரலாம் இல்லையா? நீயே தனியா போய் தேடுரது சுலபமா இருக்குமா” என்றது ஆடலரசு.

வாக்டெய்லும் ஆடலரசுவின் யோசனையை அன்புடன் ஏற்றுக் கொண்டது.

கனலியும் “ஆமா தம்பி. ஆடலரசு சொல்றதும் சரிதான்” என்றது.

சிறிது நேரம் கழித்து, ஆடலரசுவும் வாக்டெய்லும் புறப்பட்டு முதலில் ஒரு குளம் இருந்த பகுதிக்கு வந்தன. அந்த இடம் மிகவும் அழகுடன் காட்சியளித்தது.

குளத்தில் தாமரைக் கொடி படர்ந்து இருந்தது. குளம் முழுவதும் தாமரை இலைகளும், ஆங்காங்கே பூக்களும் மொட்டுக்களும் தெரிந்தன.

வாக்டெய்லுக்கு இது வித்தியாசமாக இருந்தது. அதனால் குளக்கரையை ஒட்டி இருந்த தாமரை இலையின் அருகில் சென்று பார்த்தது வாக்டெய்ல்.

நீர் தாமரை இலையில் ஒட்டாமல் திவலைகளாக உருண்டு கொண்டிருந்தன.

“இது என்னப்பா? தண்ணி இலையில ஒட்டாம இப்படி உருண்டுக்கிட்டு இருக்கு” என்று ஆடலரசுவை பார்த்து வாக்டெய்ல் கேட்டது.

“அதுவா? எனக்கும் இதே சந்தேகம் வந்தப்ப, கனலி ஐயாவிடம் கேட்டேன். அவரு என்ன சொன்னாருன்னா, இந்த தாமரை இலையோட மேற்பரப்புல மெழுகு நுண் அமைப்புகள் இருக்குதாம். இந்த மெழுகு அமைப்புகளுக்கு நீர்துளிகள விலக்கும் பண்பு இருப்பதால, இலைல நீர் ஒட்டாம இருக்குதாம். அத்தோட இந்த இலையில அழுக்கும் இல்ல பாத்தியா?” என்றது ஆடலரசு.

“ஆமாம் நண்பா. இப்பதான் நானும் கவனிக்கிறேன்” என்று ஆச்சரியமுடன் சொன்னது வாக்டெய்ல்.

“இதுக்கு காரணம், தூசி துகள் நீர் திவலையோட ஒட்டிக்கொள்வது தான். அதனால நீர் இலையில இருந்து போகும் போது தூசி துகளும் சேர்ந்து போயிடுது. இதனால இலை சுத்தமாயிடுது” என்று ஆடரலசு கூறியது.

“சிறப்பான செய்தி சொன்ன நண்பா.” என்று ஆடலரசுவை வாக்ய்டெல் பாராட்டியது.

சில நிமிடங்களுக்கு பிறகு, வாக்டெய்லை மற்றொரு இடத்திற்கு அழைத்துச் சென்றது ஆடலரசு.

அங்கு சில சிறுகுன்று போன்ற அமைப்புகள் இருந்தன. அவற்றைக் கண்டதும், “இது என்ன நண்பா?” என்று வாக்டெய்ல் கேட்டது.

உடனே, “இதுக்கு பேரு கரையான் புற்று. இது கரையான் எனப்படும் சிறு பூச்சிகளால கட்டப்படுது” என்று கூறியது ஆடலரசு.

“என்னது? சின்ன பூச்சிகள் சேர்ந்து இவ்வளவு பெரிய அமைப்பு கட்டப்படுதா?” என்று ஆச்சரியம் அடைந்தது வாக்டெய்ல்.

உடனே, “நண்பா, இந்த அமைப்பு மேல மட்டும் இல்ல, பூமிக்கு அடியிலும் சில மீட்டர் ஆழத்துக்கு நீண்டுச் செல்லும். நல்ல காற்றோட்ட வசதியோட, வெப்பநிலையும் இதுல சீரா இருக்கும்.” என்று பெருமிதத்துடன் கூறியது ஆடலரசு.

வாக்டெய்ல் மேலும் பிரமிப்பு அடைந்தது.

“சரிப்பா நாம போவோமா?” என்று ஆடலரசு கேட்க, அவை இரண்டும் அங்கிருந்து புறப்பட்டு ஒரு மரத்தின் மீது வந்து அமர்ந்தன.

சில நொடிகளில் ஏதோ குளிர்ச்சி அதிகமானது போன்றதொரு உணர்வு வாக்டெய்லுக்கு ஏற்பட்டது.

“நண்பா, இங்க நல்லா குளிர்ச்சியா இருக்குல?” என்றது வாக்டெய்ல்.

“ஆமா. அதனால் தான், உன்ன இங்க அழைச்சிட்டு வந்தேன். ஆனா இந்த குளிர்ச்சியெல்லாம் உங்க நாட்டுல இருக்குற அளவுக்கு இருக்காதுல்ல” என்றது ஆடலரசு.

“ஆமாம், ஆமாம். ஆன ஏன் இங்க மட்டும் அதிக குளிர்ச்சியா இருக்கு?” என்று கேட்டது வாக்டெய்ல்.

“இந்த மரம் தான் காரணம்” என்றது ஆடலரசு.

“என்ன குளிர்ச்சிக்கு காரணம் ஒரு மரமா?” என்று வியந்தது வாக்டெய்ல்.

“ஆமாம் வாக்டெய்ல். இந்த மரத்துக்கு பேரு புங்க மரம். இதோட அமைப்பு தான் குளிர்ச்சியும் காற்றோட்டமும் இங்க இருப்பதற்கு காரணமுன்னு சொல்றாங்க. அதோட இந்த மரம் ஆக்சிஜன அதிகமா உற்பத்தி செய்யுமுன்னும் சொல்றாங்க” என்று ஆடலரசு தெரிவித்தது.

அப்பொழுது கீழே இரண்டு மயில்கள் திரிந்துக் கொண்டிருந்தன. ஒரு மயில் தோகையை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது. அதன் உடல் நீலம் கலந்த பச்சை நிறத்தில் பளபளப்பாக இருந்தது.

தோகையில் வரிசையாகக் வண்ணங்களுடன் கண் போன்ற வடிவங்கள் மிகவும் அழகாக இருந்தன. மற்றொரு மயில் அருகில் திரிந்து கொண்டிருந்தது. திரிந்துக் கொண்டிருந்த மயிலுக்கு நீண்ட தோகை இல்லை.

அப்பொழுது “நண்பா அவங்க யாரு?” என்று வாக்டெய்ல் கேட்க, “அவங்கள‌ மயில்னு சொல்லுவோம். தோகையோட இருப்பது ஆண் மயில். பெரிய தோகை இல்லாதது பெண் மயில்” என்று பதில் சொன்னது ஆடலரசு.

மயில்களை சிறிது நேரம் வாக்டெய்ல் பார்த்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு அவ்விரு மயில்களும் அருகில் இருந்த மற்றொரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டன. மயில்கள் வாக்டெய்லையும் ஆடலாசுவையும் கவனிக்கவில்லை.

சற்று நேரத்தில் ஆடலரசுவும் வாக்டெய்லும் அங்கிருந்து புறப்பட்டு தங்களது கூட்டிற்கு வந்தன. மதிய உணவை சற்று தாமதமாகவே அவை உண்டன.

வாக்டெய்ல் பூரண குணமடைந்த செய்தி பக்கத்தில் இருந்த பறவைகளுக்கு எல்லாம் பரவியது.

அவை எல்லாம் மகிழ்ச்சியுடன் நேரில் வந்து வாக்டெய்லை வாழ்த்தின. கூடவே, ஆடலரசுவையும் உதவியதற்காக பாராட்டின. அதனைக் கண்டு வாக்டெய்லும் மகிழ்ச்சி அடைந்தது.

அன்று இரவு, தனது நெடும்பயண அனுபவங்களை ஆடலரசுவுக்கு விரிவாக எடுத்துக் கூறியது வாக்டெய்ல்.

மறுநாள், மீண்டும் வாக்டெய்லை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தது ஆடலரசு.

மாலையில் அவை கூடு திரும்பின. இரவு உணவு உண்டபின் அவை வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து பின்னர் உறங்கின.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 22 ‍- கனலியின் உபதேசம்

சொர்க்க வனம் 24 – வாக்டெய்லை இருன்டினிடே நெருங்கியது


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.