சொர்க்க வனம் 24 – வாக்டெய்லை இருன்டினிடே நெருங்கியது

மறுநாள்.அதிகாலை நேரம்.இன்னமும் விடியவில்லை.மிதமான அளவில் பனி பொழிந்துக் கொண்டிருந்தது.

கனலியின் நண்பனான கொக்கு கூட்டத்தின் தலைவனுக்கு உறக்கம் கலைந்தது. கூட்டில் இருந்து நகர்ந்து மரத்தின் உச்சிக்கிளைக்கு வந்து நின்று கொண்டு, ஆகாயத்தை உற்று நோக்கியது. கருப்பு வானத்தில் ஜொலிக்கும் விண்மீன்கள் விரவிக் கிடந்தன.

குளிர்ந்த சூழலில் இரவு வானத்தை காண்பதிலே அது மகிழ்ச்சி அடைந்தது. அப்பொழுது வாக்டெய்ல் குருவியை அதன் கூட்டத்தோடு சேர்க்க வேண்டும் என்று கனலி சொன்னது அதன் நினைவிற்கு வந்து.

ஏற்கனவே, வாக்டெய்ல் விஷயம் குறித்து கொக்குத் தலைவன் தனது நட்பு வட்டாரத்தில் சொல்லி வைத்திருந்தது. எனினும் அது இதுவரையிலும் ஸ்வாலோ குருவிகளை தேடி பயணம் மேற்கொள்ளவில்லை. ஆதலால், இன்றைக்கு ஸ்வாலோ குருவிகள் தங்கியிருக்கும் இடத்தை தேடிச் செல்லாம் என்று அது எண்ணியது.

சிறிது நேரம் கழிந்தது.

அதற்குள் மெல்லிய வெளிச்சம் பரவத் துவங்கியது. காகங்கள் உள்ளிட்ட பறவைகள் வேகமாய் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. பல பறவைகள் கூட்டிலிருந்து வெளிவரத் துவங்கின. ஆந்தை, வெள‌வ்வால் போன்றவை தத்தம் கூட்டிற்கு திரும்பின.

பின்னர், மரத்திலிருந்து புறப்பட்டு அருகில் இருந்த ஒரு ஓடைக்கு கொக்கு தலைவன் வந்தது. அங்கு கொக்கு தலைவனைக் கடந்து சென்று கொண்டிருந்த மூன்று நாரைகள் “இருன்டினிடே தேடிக்கிட்டு இருக்காராமே?” என்று கூறியபடியே சென்றன.

‘இருன்டினிடே’ என்ற பெயரின் உச்சரிப்பு கொக்கு தலைவனின் காதில் விழுந்தது. உடனே, “தம்பிங்களா, கொஞ்சம் நில்லுங்கப்பா” என்று கூறியபடியே நாரைகளை நோக்கி அது நகர்ந்தது.

கொக்குவின் குரலை கேட்டவுடன் நாரைகள் நின்றன. கொக்கு தலைவனைப் பார்த்து, “சொல்லுங்க ஐயா” என்று அவை கேட்டன.

“நீங்க இருன்டினிடேன்னு சொன்னீங்களா?” என்று கொக்கு கேட்டது.

“ஆமாங்க, அவர உங்களுக்கு தெரியுமா?” என்று ஒரு நாரை கேட்டது.

“இருன்டினிடேவ தெரியாது, ஆனா வாக்டெய்ல் எங்க இருக்குன்னு தெரியும். நீங்க இருன்டினிடே எங்க இருக்காருன்னு சொல்லுங்களேன்.” என்றது கொக்கு தலைவன்.

“அப்படியா! நல்லதா போச்சு, ஸ்வாலோ குருவிக் கூட்டத்தோட தலைவர் இருன்டினிடேவும் வாக்டெய்ல தான் தேடிக்கிட்டு இருக்காராம்” என்று ஒரு நாரை கூறியது.

“ஆமாம்பா, அதான் கேக்கிறேன். நீங்க இருன்டினிடே எங்க இருக்காருன்னு சொல்லுங்க” என்றது கொக்கு தலைவன்.

“ஐயா, உண்மையில இருன்டினிடே எங்க இருக்காருன்னு எங்களுக்கு தெரியாது. ஆலா பறவை நண்பர் மூலமா தான் இந்த விஷயம் எங்களுக்கு தெரிஞ்சுது. அதனால், அவருக்கிட்ட கேட்டா, இருன்டினிடே எங்க இருப்பாருன்னு சொல்லுவாரு” என்று நாரை கூறியது.

“அந்த ஆலா நண்பர் எங்க இருக்காரு? இப்ப அவர பார்க்க போக‌லாமா?” என்றுக் கேட்டது கொக்கு தலைவன்.

“சரிங்க போகலாம். பக்க‌த்துல இருக்கிற குளத்தாண்ட தான் அவரு இருக்காரு” என்று நாரை கூற, உடனே “போகலாம்ப்பா” என்று கொக்கு தலைவன் கூறியது.

அடுத்த பதினைந்து நிமிடங்களில், நாரைகளும் கொக்கு தலைவனும் ஆலா நண்பரின் கூட்டிற்கு வந்துச் சேர்ந்தன. அவைகளை ஆலா பறவைக் கண்டதும், “வாங்க, வாங்க என்ன காலையிலேயே வந்திருக்கீங்க?” என்று குழப்பத்துடன் கேட்டது.

“நண்பா, கொக்கு ஐயாவுக்கு வாக்டெய்ல் எங்கு இருக்குன்னு தெரியுமா. நீ தான் இருன்டினிடே வாக்டெய்ல தேடுராருன்னு சொன்னல. அதான் இவர உங்கிட்ட அழைச்சிட்டு வந்தேன். ஸ்வாலோ குருவிக் கூட்டம் எங்க இருக்குன்னு சொன்ன நல்லா இருக்கும்” என்றது நாரை.

“அப்படியா, நல்ல செய்திதான். ஆனா எனக்கும் ஸ்வாலோ குருவிக் கூட்டம் எங்க இருக்குன்னு தெரியாது. இந்த தகவல எங்க கூட்டத்தோட தலைவர் ஐயா தான் எங்களுக்கு சொன்னாரு. அவருக்கிட்ட கேட்ட தகவல் தெரியும்.” என்றது அந்த ஆலா பறவை.

“அப்படியா, உங்க தலைவரை பார்க்க முடியுமா?” என்றுக் கேட்டது கொக்கு தலைவன்.

“ஆம், பார்க்கலாம்” என்று ஆலா பறவை கூற, உடனே நாரைகளும் கொக்கு தலைவனும் ஆலாவுடன் சேர்ந்து புறப்பட்டன.

சுமார் பத்து நிமிடங்களில், ஆலா தலைவன் இருந்து கூட்டிற்கு அவை வந்துச் சேர்ந்தன. “ஐயா, ஐயா” என்று ஆலா பறவை அழைத்தது.

அப்பொழுது அங்கிருந்த பறவை ஒன்று “தலைவர் ஐயாவுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்ல. யாருன்னா ஒருத்தரு உள்ள போய் பாருங்க” என்றது.

ஆலா பறவையும் கொக்கு தலைவனும் உள்ளே சென்று ஆலா கூட்டத்து தலைவனை சந்தித்தன. உடல் சுகவீனம் இருந்தாலும், அவற்றை அன்போடு அது வரவேற்றது.

அப்பொழுது, அந்த ஆலா பறவை வந்த காரணம் குறித்துக்கூற, ஆலா தலைவன் மகிழ்ச்சி அடைந்தது.

கொக்கு தலைவனை நோக்கி, “ஐயா, எனக்கு உடம்பு சரியில்ல. இப்போதைக்கு நீண்ட பயணம் போக முடியாது. அதனால இடத்த சொல்றேன். நீங்க போய் பார்க்க முடியுமா? என்று கேட்டது ஆலா கூட்டத்து தலைவன்.

“ஒன்னும் பிரச்சனையில்லப்பா, நான் தேடிப் போறேன்” என்றது கூறியது கொக்கு தலைவன்.

உடனே, ஸ்வாலோ குருவிக் கூட்டம் தங்கியிருக்கும் இடம் பற்றி இருன்டினிடே சொன்ன தகவல்களை, ஆலா கூட்டத்து தலைவன் எடுத்துரைத்தது. அதனைக் கவனமாக கேட்டுக் கொண்டது கொக்கு தலைவன்.

இறுதியில், ஸ்வாலோ குருவிக் கூட்டம் தங்கியிருக்கும் இடத்தைச் சென்றடைய வேண்டுமானால் பலமணி நேரம் ஆகும் என்பதை கொக்கு தலைவன் ஊகித்தது.

பின்னர் நன்றி கூறி அவை அங்கிருந்து புறப்பட்டன. மீண்டும் அவை எல்லாம் ஓடைக்கு வந்தன. “அப்ப நாங்களும் புறப்படுகிறோம் ஐயா” என்று சொல்லி நாரைகள் அங்கிருந்து புறப்பட்டன.

கொக்கு தலைவன் தனது கூட்டிற்குச் சென்று, பயணம் பற்றிய தகவலை கூட்டத்தாரிடம் தெரிவித்துவிட்டு, உடனே அங்கிருந்து புறப்பட முற்பட்டது. கூட சில நண்பர்களும் வருவதாக சொல்லவே, இரண்டு நண்பர்களை மட்டும் உடன் அழைத்துக் கொண்டது அது புறப்பட்டது.

மூன்று கொக்குகளும் ஒரு மணி நேரம் பறந்து ஆலா கூட்டத்து தலைவன் சொன்ன அந்த நதிக்கு வந்தன. சிறு ஓய்விற்கு பின் தெற்கு நோக்கி அவை புறப்பட்டன.

வழியில் இரண்டு குன்றுகளை கடந்து வெகுநேரம் அவை பயணம் செய்தன. ஆங்காங்கே காகம், கிளி, புறா உள்ளிட்ட பறவைகளிடம் விசாரித்து, ஸ்வாலோ குருவிகள் தங்கியிருக்கும் இடத்தின் அடையாளங்களை கொக்குகள் உறுதிபடுத்திக் கொண்டன.

மதிய நேரம் வந்தது. வழியில் பறவைகள் சொன்ன தகவலை வைத்துப் பார்த்தால் இன்னும் வெகுதூரம் பயணப்பட வேண்டியிருக்கும் என்பதை கொக்குகள் உணர்ந்தன.

நீண்ட பயணம் மற்றும் வயது மூப்பின் காரணமாக கொக்கு தலைவனால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. எனவே சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் பயணிக்கலாம் என்று அவை தீர்மானித்தன.

அங்கிருந்த ஒரு மாமரத்தில் அவை மூன்றும் வந்து அமர்ந்தன. இரண்டு கொக்கு நண்பர்களும் உணவு எடுத்துக் கொண்டு வருவதாக செல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.

கொக்கு தலைவன் மட்டும் அங்கு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. எதிரில் இருந்த மரத்தையே அது அமைதியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. தீடீரென எதிரில் இருந்த அம்மரத்தின் கிளை அசைந்தது. ‘எதனால் மரக்கிளை அசைகிறது?’ என்று எண்ணிய‌வாரே, சற்று எச்சரிகையுடன் எழுந்து முன்னோக்கி அது நகர்ந்தது.

சில நொடிகளில் மரக்கிளையின் நுனியில் வந்து நின்றது அந்த உருவம்.

கொக்கு தலைவன் திகைப்பு அடைந்தது. அந்த உருவம் ஒரு பறவை தான். அதுவும் அந்தப் பறவை, வாக்டெய்லைப் போன்ற, ஸ்வாலோ குருவிகளின் தேற்றத்தை ஒத்து இருந்தது. அதனால் ஆச்சரியம், மகிழ்ச்சி மற்றும் எச்சரிக்கை என பலவித உணர்வுகளுடன் அந்த பறவையை கொக்கு தலைவன் அணுகியது.

அந்த பறவையும் எச்சரிக்கையுடன் தான் இருந்தது, எனினும் அன்புடனும் பண்புடனும் கொக்கு தலைவனை அது எதிர் கொண்டது.

அப்பொழுது, அந்தப் பறவைப் பார்த்து “நீங்க ஸ்வாலோ குருவியா? வடமுனைப் பகுதியில இருந்து வறீங்களா?” என்றுக் கொக்கு தலைவன் கேட்டது.

“ஆமாங்க, உங்களுக்கு எப்படி தெரியும்? நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று பதில் கேள்வி கேட்டது அந்தப் பறவை.

“ஊம்ம், வாக்டெய்ல்னு ஒரு ஸ்வாலோ குருவிய, தலைவர் இருன்டினிடே தேடுராருன்னு எனக்கு தெரியும் அதான் கேட்டேன்” என்று எச்சரிக்கை உணர்வுடன் கொக்கு தலைவன் கூறியது.

உடனே, “ஆமாங்க, நான் தான் இருன்டினிடே, வாக்டெய்ல் எங்க கூட்டத்த சேர்ந்த குட்டிப் பறவை தான். சொர்க்க வனத்துக்கு வரும்போது எங்க வாக்டெய்ல தொலைச்சிட்டோம். அதத் தேடிகிட்டு தான் நான் இங்க வந்திருக்கேன். உங்களுக்கு வாக்டெய்ல் இருக்கும் இடம்பற்றி ஏதாச்சும் தகவல் தெரியுமா?” என்று ஆர்வமுடன் இருன்டினிடே கேட்டது.

இருன்டினிடேவின் பேச்சிலும், உடல் மொழியிலும் உண்மை இருப்பதை கொக்கு தலைவன் உணர்ந்துக் கொண்டது.

“உங்கள பர்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷங்க. உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, வாக்டெய்ல் இருக்கும் இடம் எனக்கு தெரியும்.” என்று கொக்கு தலைவன் கூறியது.

இருன்டினிடே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. “எனக்கு தெரியும், வாக்டெய்ல் ஒரு புத்திசாலி. எது எப்படியும் தன்ன காப்பாத்திக்கிட்டிருக்கும். சரிங்க ஐயா, வாக்டெய்ல் இப்ப எப்படி இருக்கு? எங்க இருக்கு? இப்ப அங்க போக‌லாமா?” என்று அடுத்தடுத்த கேள்விகளை இருன்டினிடே கேட்டுக் கொண்டே இருந்தது.

“ஐயா, ஒன்னும் கவலப்படாதீங்க. நீங்க என்ன முழுசா நம்பலாம். என்னோட ஊதாச்சிட்டுக் குருவி நண்பன் பேரு கனலி. அவன் தான் வாக்டெய்ல் பத்தியும், அந்த தம்பிய, ஸ்வாலோ குருவிக் கூட்டத்தோட எப்படியாவது சேர்க்கனும்னு சொன்னான். உங்க பேரையும் என்கிட்ட சொல்லியிருக்கான்.” என்றது கொக்கு தலைவன்.

மகிழ்ச்சியில், “அப்படியா! ரொம்ப நன்றிங்க, இப்ப வாக்டெய்ல் எப்படி இருக்கு?” என்று இருன்டினிடே கேட்டது.

“வாக்டெய்ல், ஆரோக்கியத்தோட இருக்கு. இறகுகள்ல மட்டும் கொஞ்சமா காயம் இருக்கு. அதனால் தான வாக்டெய்லால இயல்பா பறக்க முடியல. நல்லவேள, கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி தான் நேர்ல போய் வாக்டெய்ல பார்த்தேன். அதான் உங்கள பார்த்தப்போ, நீங்க ஸ்வாலோ குருவியா இருக்கலாமுன்னு நினைச்சு உங்கள நோக்கி வந்தேன்” என்றது கொக்கு தலைவன்.

அப்பொழுது உணவு தேடிச் சென்ற அந்த இரண்டு கொக்குகளும் அங்கு வந்தன. இருன்டினிடேவைக் கண்டு ஒன்றும் புரியாமல் அவை அமைதியாக நின்றன. உடனே கொக்கு தலைவன், தனது நண்பர்களுக்கு இருன்டினிடேவை அறிமுகம் செய்துவைத்தது. அவை மகிழ்ந்தன.

உடனே, இருன்டினிடேவைப் பார்த்து, “ஐயா உங்கள தேடித்தான் வந்தோம், நல்ல வேளையா வழியிலேயே உங்கள பார்த்துட்டோம்” என்று ஒரு கொக்கு கூறியது.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல, ரொம்ப நன்றி நண்பர்களே” என்று இருன்டினிடே கூறியது.

“வந்த வழியில விசாரிச்சப்ப, நீங்க தங்கியிருக்கும் இடம் ரொம்ப தொலைவுல இருக்கும்னு தெரிஞ்சிக்கிட்டோம்” என்றது கொக்கு தலைவன்.

“ஆமாங்க, உண்மை தான். ஆனா நான் மட்டும் வாக்டெய்ல தேடி வந்துட்டேன்.” என்றுக் கூறியது இருன்டினிடே.

அன்புடன், “ஐயா கவலைய விடுங்க, நாம உடனே புறப்படலாம். ஆனா எங்க வேகத்துக்கு பறந்தா, வாக்டெய்ல் இருக்கும் இடத்துக்கு போக இன்னிக்கு இரவு ஆயிடும்” என்றது கொக்கு தலைவன்.

“பரவாயில்லங்க, புறப்படலாம்” என்று இருன்டினிடே கூறியது.

“சரிங்க தலைவர்களே, முதல்ல சாப்பிடுவோமா” என்று ஒரு கொக்கு கேட்க, அவை எல்லாம் புன்னகையுடன் “சரி” என்று கூறி மகிழ்ச்சியுடன் பழங்களை உண்டன.

சிறிது நேரத்தில் மீண்டும் பயணத்தை அவை துவங்கின. வழியில் ஆங்காங்கே எடுத்தக் கொண்ட சிறு ஓய்வின்பொழுது, தனக்கும் கனலிக்கும் இடையிலான நட்பு பற்றியும், கனலியின் நற்பண்புகள் பற்றியும் இருன்டினிடேவிடம் தெரிவித்தது கொக்கு தலைவன். அவற்றைக் கேட்டு, இருன்டினிடேவும் மகிழ்ச்சி அடைந்தது.

மாலை நேரம், கொக்கு தங்கியிருந்த இடத்தை அவை வந்துச் சேர்ந்தன. தனது கூட்டத்தாரிடம் இருன்டினிடேவை அறிமுகம் செய்து வைத்தது கொக்கு தலைவன். அவை அன்புடனும், மரியாதையுடனும் இருன்டினிடேவை நடத்தின. வாக்டெய்ல் தன் கூட்டத்தோடு சேர இருப்பதைக் குறித்து அவை தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டின.

கொக்கு கூட்டத்தின் அன்பில் இருன்டினிடே திகைத்தது. பின்னர், உடன் வந்த கொக்கு நண்பர்களுக்கு நன்றி கூறி, அவற்றை அனுப்பி வைத்தது கொக்கு தலைவன்.

சிறிது நேர ஓய்விற்குப் பின் இருன்டினிடேவை அழைத்துக் கொண்டு கனலியின் கூட்டிற்கு அது புறப்பட்டது. பயணம் தொடர்ந்தது. ஒரு மணிநேரத்திற்கு பின்பு, கொக்கு தலைவனுக்கு உடற்சோர்வு அதிகரித்தது. அதனால் அதன் பறக்கும் வேகம் வெகுவாக குறைந்தது. அதனை உணர்ந்த இருன்டினிடே, “ஐயா, உங்களால முடியலையா? நாம ஓய்வு எடுத்துக்கலாம்” என்று கூறியது.

“சரி” என்றுக் கொக்கு தலைவனும் கூறவே, சிறிதுநேரம் அவை இரண்டும் ஒரு மரத்தில் தங்கின. கொக்கு தலைவனின் உடல்நிலையை இருன்டினிடே சோதித்தது. தொடர் பயணக் களைப்பே அதன் சோர்விற்கு காரணம் என்பதை அது புறிந்துக் கொண்டது. பின்பு சத்தான பழங்களை எடுத்துவந்து கொக்கு தலைவனுக்கு கொடுத்து உண்ணவைத்தது இருன்டினிடே.

பின்னர் மீண்டும் அவை புறப்பட்டன. சூரியஒளி முழுவதும் நீங்கியது. இரவு மலர்ந்தது. “ஐயா, கனலியோட கூட்டை நெருங்கிட்டோம்” என்று கொக்கு தலைவன் கூறியது. அதைக் கேட்டதும், தான் வாக்டெய்லை காணப்போவதை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்தது இருன்டினிடே.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 23 – ‍வாக்டெய்லின் மகிழ்ச்சி

சொர்க்க வனம் 25 – இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்