சொர்க்க வனம் 26 – குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது

குருவிக்கூட்டம் தாயகம் திரும்பியது

ஐந்து மாதங்களுக்கு பிறகு,

இருன்டினிடேவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு மரக்கன்று முளைத்து வளர்ந்தது.

இருன்டினிடேவின் உடல் உரமாகி, சொர்க்கவனத்துப் பறவைகளால், விதைக்கப்பட்ட பற்பல விதைகள் ஒன்றாகி, முளைத்து வளர்ந்து வரும் அந்த மரத்திற்கு ‘இருன்டினிடே மரம்‘ என சொர்க்க வனத்துப் பறவைகள் பெயர் சூட்டியிருந்தன.

இருன்டினிடே மரத்தின் இலை அமைப்பு, வளரும் திறன் முதலியவற்றில் மற்ற மரங்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கடந்த ஐந்து மாதங்களிலேயே பலஅடி உயரத்திற்கு மரம் வளர்ந்திருக்கிறது. அந்த மரத்தில் வித்தியாசனமான பூக்கள் நறுமணத்துடன் பூத்துக் குலுங்கின.

ஸ்வாலோ குருவிகளும் இருன்டினிடே இறந்த துக்கத்தில் இருந்து முழுவதும் மீண்டு வந்திருந்தன.

அவை வழக்கம் போல் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபட்டிருந்தன. இளம் குருவிகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தன. சில குருவிகள் அருகில் இருந்த சொர்க்க வனத்துப் பறவை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தன. மூத்த குருவிகள் மரக்கிளையில் அமர்ந்து கொண்டு விவாதித்துக் கொண்டிருந்தன.

வாக்டெய்ல் தனது புத்தகத்தை எடுத்துக் கொண்டு இருன்டினிடே மரத்திற்கு வந்தது. ஒருகிளையில் அமர்ந்துக் கொண்டு தனது நோட்டு புத்தகத்தை புரட்டியது. வடமுனையில் தொடங்கி சொர்க்க வனம் வரை, ஸ்வாலோ குருவிக் கூட்டம் பயணித்த வழித்தடங்கள் பற்றிய தகவல்களை அது வாசித்தது.

ஆங்காங்கே, தலைவர் இருன்டினிடேவுடன் நடந்த உரையாடல்கள் பற்றிய குறிப்புகளையும் அது ஆர்வமுடன் வாசித்தது.

பின்னர், தனது சுகவீனம் பற்றியும், ஆடலரசு, கனலி மற்றும் சொர்க்க வனத்துப் பறவைகள் செய்த நன்மைகள் பற்றியும் வாக்டெய்ல் எண்ணியது. சொர்க்க வனத்தில் கண்ட காட்சிகளைக் குறித்தும் அது நினைவுக் கூர்ந்தது.

கனலி ஐயாவின் உபதேசங்களையும், இருன்டினிடேவின் வாழ்வினையும் ஒப்பிட்டு பார்த்தது வாக்ய்டெய்ல். இரண்டும் ஒன்றாகவே இருந்தது அதற்கு ஆச்சரியத்தை அளித்தது. இறுதியாக தலைவர் இருன்டினிடேவின் உயிர்த் தியாகம் வாக்டெய்லின் நினைவிற்கு வந்தது.

அக்கணம், வாக்டெய்ல் கண்களின் ஓரத்திலிருந்து தானாக கண்ணீர் வழிந்தது. அப்பொழுது இருன்டினிடே மரம் காற்றில் அசைந்தது. அதன் கிளையிலிருந்து பூக்களும் இலைகளும் வாக்டெய்லின் மீது உதிர்ந்தன. அதனால் வாக்டெய்ல் மேல்நோக்கிப் பார்த்தது.

மரக்கிளைகளின் வழியே ஊடுருவி வந்த சூரிய ஒளிக்கதிர் வாக்டெய்லின் முகத்தில் பளிச்சிட்டது. வழக்கத்தைவிட சூரிய ஒளியின் வெப்பம் தற்போது அதிகமாக இருப்பதாக வாக்டெய்ல் உணர்ந்தது.

தாயகம் திரும்புவதற்கான பருவகாலநிலைக் குறித்து இருன்டினிடே கூறிய செய்திகள் வாக்டெய்லின் நினைவிற்கு வந்தன.

‘இப்பொழுது தாயகம் திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது’ என்பதை வாக்டெய்ல் அறிந்துக் கொண்டது. தனது புத்தகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து பறந்தது.

மூத்த குருவிகள் அமர்ந்திருக்கும் மரக்கிளைக்கு வந்தது வாக்டெய்ல்.

“என்ன வாக்டெய்ல்?, ஏதாவது சொல்லனுமா?” எனக் கேட்டது அங்கிருந்த ஒரு மூத்த குருவி.

“ஐயா, நம்ம தலைவர் ஐயா சொன்ன பருவநிலை இப்ப வந்துட்டா மாதிரி தெரியுது. நாம வடமுனைக்கு எப்ப போகணும்?” என்றுக் கேட்டது வாக்டெய்ல்.

அப்பொழுது, மூத்த குருவிகளும் அதை உணர்ந்தன. அடுத்த சிலநிமிடங்கள் அவை ஆலோசனை நடத்தின. ‘இது தாயகம் திரும்ப வேண்டிய காலம் தான்’ என்பதை அவை உறுதி செய்தன.

அன்று மதியம் ஸ்வாலோ குருவிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மதிய நேரம் வந்தது. ஸ்வாலோ குருவிகள் எல்லாம் இருன்டினிடே மரத்தடியில் ஒன்று கூடின. மூத்த குருவிகளில் ஒன்று பேசத் துவங்கியது.

“அருமை நண்பர்களே, வடமுனையிலிருந்து நம்ம எல்லோரையும், தலைவர் இருன்டினிடே தான் சொர்க்க வனத்துக்கு வெற்றிகரமாக அழைத்து வந்தார். அவரு இறக்கும் பொழுது சொன்ன காலநிலை இப்ப வந்துடுச்சி.

நாம் நமது தாயகம் திரும்பவேண்டிய நேரம் வந்துடுச்சி. இன்னிக்கு இத சரியா வாக்டெய்லும் நமக்கு நினைவு படுத்தியிருக்கு. இதுக்காக வாக்டெய்லுக்கு வாழ்த்துக்கள சொல்லிக்கிறேன்.

நம்ம மூத்த குருவிகளோட நிகழ்ந்த ஆலோசனையில எடுத்த முடிவ நான் உங்களுக்கு இப்ப சொல்றேன். நாம எல்லோரும் இன்னும் ஒரு வாரம் கழிச்சு இங்க இருந்து வடமுனைக்கு புறப்படுறோம்.

அதற்குள்ள உங்க உடல்ல தேவையான சக்திய சேமிச்சு வச்சுக்குங்க. இரண்டு நாட்களில், பயணத்திற்கான ஒத்திகையும் நடைபெறும். சரியா? தயாராவீங்களா? எனது அருமை நண்பர்களே.”

“சரி ஐயா, நாங்க தயாராகிறோம்” என்று உற்சாகத்துடன் குருவிகள் எல்லாம் கூறின.

அந்த ஒருவாரத்தில், நெடும்பயணத்திற்கான ஒத்திகைகள் நடைபெற்றன. அதிகமான உணவை அவை எடுத்துக் கொண்டன. தங்களது நெடும்பயணம் குறித்து அருகில் இருந்த சொர்க்க வனத்துப் பறவை நண்பர்களுக்கு அவை தெரிவித்தன.

ஸ்வாலோ குருவிகள் புறப்பட இருக்கும் செய்தி, ஒருவகையில் அவற்றிற்கு வருத்தத்தை தந்தது. காரணம் ஸ்வாலோ குருவிகளின் அன்பான அணுகுமுறையும், செலுத்திய ஆழமான நட்பும் தான். எனினும், மீண்டும் அவை அவற்றின் தாயகம் செல்ல இருப்பதை எண்ணி சொர்க்க வனத்துப் பறவைகள் மகிழ்ச்சியும் அடைந்தன.

ஒருவாரம் கடந்தது.

அன்று மாலை இருன்டினிடே மரத்தடியில் ஸ்வாலோ குருவிகள் எல்லாம் ஒன்றுக் கூடின. மூத்த குருவி, “அருமை நண்பர்களே, நமது தாயகம் திரும்ப தயாரா இருக்கீங்களா?” என்று கேட்டது.

“தயாரா இருக்கோம் ஐயா, தயாரா இருக்கோம்” என்று எல்லா குருவிகளும் பதில் தந்தன.

“நல்லது நண்பர்களே, நாளை காலை இங்க இருந்து புறப்படுறோம். வாக்டெய்ல் கேட்டுக் கொண்டதற்காகவும், நமது நன்றிகளை நேர்ல சொல்வதற்காகவும், கொக்கு தலைவன், கனலி ஐயா மற்றும் ஆடலரசு தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்லப் போகிறோம். அங்க அவங்களுக்கு நன்றிகள தெரிவிச்சிட்டு, நாளை இரவு, தாயகம் நோக்கிய நமது நெடும் பயணத்த தொடங்கலாம். எல்லோரும் நாளை காலை இங்க தயாரா வந்துடுங்க” என்று அந்த மூத்தக் குருவி கூறியது.

பின்னர் அவை எல்லாம் கலைந்து சென்றன.

நேரம் நகர்ந்தது. சொர்க்க வனத்தில் அன்றைய இரவை அவை எல்லாம் மகிழ்ச்சியாக கழித்தன. திட்டமிட்டபடி, மறுநாள் காலை, இருன்டினிடே மரத்தடியில் அவை எல்லாம் ஒன்றுக் கூடின.

எல்லோரும் வந்திருப்பதை குழுக்கண்காணிப்பாள குருவிகள் உறுதி செய்ய, மூத்த குருவி அங்கிருந்து புறப்படுவதற்கான குரல் சமிக்ஞை தந்தது.

எல்லா குருவிகளும், ‘மகிழ்ச்சி’ ‘வருத்தம்’ என வித்தியாசமான மனநிலையில் அங்கிருந்து மேலெழும்பின. அவை எல்லாம் ஒருசேர இருன்டினிடே மரத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தன.இருன்டினிடே மரக்கிளைகள் “பத்திரமாக சென்று வாருங்கள்” என்று சொல்வது போல் காற்றில் அசைந்தது.

குருவிக்கூட்டம் தொடர்ந்து வேகமாக பயணித்தது. முதலில் கொக்கு தலைவன் இருந்த இடத்திற்கு அவை சென்றன. ஸ்வாலோ குருவிகளை கண்டதும், கொக்குகள் மகிழ்ந்தன.அவை குருவிக் கூட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு அளித்தன.

கொக்கு தலைவனிடம் சென்று தாங்கள் தாயகம் திரும்புவதாக வாக்டெய்லும் மூத்த குருவிகளும் தெரிவித்தன. அதற்கு தனது வாழ்த்துகளை கொக்கு தலைவன் மகிழ்ச்சியுடன் கூறியது. சிறிது நேரம் அவை எல்லாம் கலந்துரையாடிக் கொண்டிருந்தன.

மதிய உணவு உண்டபின், அங்கிருந்து விடைபெற்று, நேராக ஆடலரசு கூட்டிற்கு ஸ்வாலோ குருவிக் கூட்டம் வந்தது. அதற்கு முன்பே கனலியும் அங்கு வந்திருந்தது.

ஸ்வாலோ குருவிகளின் வருகையால் ஆடலரசும், கனலியும் உற்சாகம் அடைந்தன. மரத்தில் இருந்த பறவைகளும் ஒன்றுச் சேர்ந்து குருவிகளை இன்முகத்தோடு வரவேற்றன.

அங்கிருந்த சொர்க்க வனத்துப் பறவைகளுடன் ஸ்வாலோ குருவிகள் ஒன்று சேர்ந்து விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தன. அங்கு மகிழ்ச்சியின் ஆராவாரம் எழுந்தது. உண்மையில் அந்த இடமே, விழாக் கோலம் பூண்டது.

மாலைப் பொழுது மங்கி இரவு மலர துவங்கிற்று. அப்பொழுது விதவிதமான மின்மினிப் பூச்சிக்கள் அவ்விடத்தை சூழ்ந்தன. அவை எல்லாம் பச்சை, மஞ்சள் மற்றும் வெளிர் சிவப்பு நிறங்களில் ஒளியை உமிழ்ந்தன. அவற்றைக் கண்டதும், வாக்டெய்லுக்கு ஆச்சிரியம் பொங்கியது.

உடனே, ஆடலரசுவிடம், “நண்பா இந்தப் பூச்சிகள் எப்படி ஒளிய கொடுக்குது?” என்று கேட்டது வாக்டெய்ல்.

“எனக்கு தெரியல நண்பா, வேணும்னா அந்த பூச்சிகளிடமே போய் கேக்கலாமா?” என்றது ஆடலரசு.

“சரிப்பா போவோம்” என்று வாக்டெய்ல் சொல்ல, “கிளம்பலாம்” என்று கூறி, வாக்டெய்லை அழைத்துக் கொண்டு பறந்தது ஆடலரசு.

அங்கு திரிந்துக் கொண்டிருந்த ஒரு மின்மினிப் பூச்சியை அவை அணுகின.

“உங்க வயித்துல இருந்து எப்படி ஒளி வருது?” என ஆடலரசு அந்த பூச்சியை பார்த்துக் கேட்டது.

அதற்கு அந்தப் பூச்சி, “எங்க வயித்துல லூசிஃபெரேன் அப்படீங்கற உயிர் வேதிப்பொருள் இருக்கு. அத்தோட, வயித்துல இருக்கும் லூசிஃபெரேஸ் நொதி மற்றும் மெக்னீசியம் அயனிகளின் உதவியால, இந்த லூசிஃபெரேன் வேதிப்பொருள் ஆக்ஸிலூசிஃபெரேன் சேர்மமா மாறுது. அப்பத்தான் ஒளியும் கூடவே வெளிய வருது” என்றுக் கூறியது.

அதற்கு, தங்களது நன்றிகளை தெரிவித்துவிட்டு ஆடலரசும் வாக்டெய்லும் மரத்திற்கு திரும்பின.

அங்கு பறந்துக் கொண்டிருந்த மின்மினிப் பூச்சிகள் உமிழ்ந்த ஒளியால் அந்த இடமே செயற்கை ஒளி-உமிழ் இருமுனையம் விளக்குகளால் அலங்கரித்தது போன்று தேற்றமளித்தது. அதைக் கண்டு ஸ்வாலோ குருவிகள் பூரிப்பு அடைந்தன.

அதற்கிடையில், இரவு உணவை இங்கதான் உண்ண வேண்டும் என்று சொர்க்க வனத்துப் பறவைகள் கட்டாயப்படுத்தவே, ஸ்வாலோ குருவிகள் இரவு உணவை எடுத்துக் கொண்டன. அவை எல்லாம் திருப்தியாக உணவு உண்டன. சிறிது நேரம் அவை எல்லாம் ஓய்வு எடுத்தன.

இரவு நேரம் ஆயிற்று. குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. முழுநிலவு தனது பிரகாசமான ஒளியை தந்துக் கொண்டிருந்தது.

சொர்க்க வனத்திலிருந்து ஸ்வாலோ குருவிக் கூட்டம் புறப்படும் நேரம் வந்தது.

வாக்டெய்லும் மூத்த குருவிகளும் கனலியிடம் சென்று தாங்கள் தாயகம் புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டதை கூறின.கனலி தனது வாழ்த்துகளை குருவிக் கூட்டத்திற்குத் தெரிவித்தது.

அடுத்து, ஆடலரசுவின் அருகில் சென்றது வாக்டெய்ல். நட்பின் வெளிப்பாடாய் அது ஆடலரசுவை தழுவிக் கொண்டது. அவற்றின் கண்களில் கண்ணீர் ததும்பியது. பின்னர் புன்னகையுடன் ஆடலரசு வாக்டெய்லுக்கு வாழ்த்து கூறியது.

“நல்லபடியா தாய்நாடு போயிட்டு வாங்க” என்று அப்பகுதி சொர்க்க வனத்துப் பறவைகள் எல்லாம் ஸ்வாலோ குருவிகளிடம் புன்னகையுடன் கூறின.

அடுத்து சில நிமிடங்களில், ஸ்வாலோ குருவிகள் எல்லாம் அந்த மரத்தின் உச்சிக்கு வந்தன. கனலியும் ஆடலரசுவும் கூட அங்கு வந்து நின்றன.

வடமுனை நோக்கிய நெடும் பயணம் அங்கிருந்து தொடங்க இருக்கிறது. வழக்கப்படி, ஸ்வாலோ குருவிக் கூட்டத்தின் தலைவர் தான் முதலில் பறக்க வேண்டும். அதன் மூத்தக் குருவிகளுள் ஒன்று தான் முதலில் மேலெழும்ப வேண்டும். ஆனால் மூத்த குருவிகள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. அதனால் கூட்டத்தில் சிறு சலசலப்பு எழும்பியது.

அப்பொழுது ஒரு மூத்த குருவி, “நண்பர்களே, அமைதி அமைதி, இந்த நெடும்பயணத்த வழி நடத்தப்போவது நம்ம வாக்டெய்ல் தான்” என்று அறிவித்தது. உடனே எல்லா குருவிகளும் வாக்டெய்லை நோக்கின.

வாக்டெய்லுக்கே பேரதிர்ச்சி. “என்ன நானா?” என்று ஆச்சரியத்துடன் அது கேட்டது.

“ஆமாம் வாக்டெய்ல், நாங்க பலமுற ஆலோசிச்ச பிறகு தான் இந்த முடிவுக்கு வந்தோம். உன்னால முடியும்” என்று அந்த மூத்த குருவி கூறியது.

உடனே, “வாக்டெய்ல் உன்னால முடியும்” என்று எல்லா குருவிகளும் ஒருமித்து கூறின. அந்த தலைமைப் பொறுப்பை சிறகை விரித்து தலை வணங்கி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது வாக்ட்யெல்.

வாக்டெய்லின் அம்மா அப்பாவோடு, கனலியும் ஆடலரசுவும் பெருமகிழ்ச்சி அடைந்தன.

மீண்டும் ஒருமுறை கனலியையும் ஆடலரசுவையும் பார்த்து தனது இறகுகளை அசைத்தது வாக்டெய்ல். அவை புன்னகையுடன் வாக்டெய்லுக்கு விடை கொடுத்தன.

அடுத்த சில நொடிகளில் புறப்படுவதற்கான சமிக்ஞையை தந்தது வாக்டெய்ல். ஸ்வாலோ குருவிகள் எல்லாம் புறப்படத் தயாராகின.

தனது சிறகை விரித்து பிரம்மாண்டமாய் மேலெழுந்தது வாக்டெய்ல். இருன்டினிடேவிடம் இருந்த அதே கம்பீரம் வாக்டெய்லிடமும் தெரிந்தது. அதனையடுத்து, எல்லா ஸ்வாலோ குருவிகளும் மேலெழும்பின. சிலநிமிடங்களில் அவை அதிக உயரத்திற்குச் சென்று விட்டன.

கனலி, ஆடலரசுவை அழைத்துக் கொண்டு தனது கூட்டிற்குச் சென்றது.

சில வாரப் பயணத்திற்குப் பிறகு, வாக்டெய்லின் தலைமையில், ஸ்வாலோ குருவிகள் எல்லாம் தங்களது தாயகமான வடமுனைப் பகுதிக்கு பத்திரமாய் வந்து சேர்ந்தன. அந்த நெடும்பயணத்தை அவை வெற்றிகரமாக முடித்தன.

தெற்கிலே, ஸ்வாலோ குருவிகளை மீண்டும் வரவேற்க எப்பொழுதும் தயாராகவே இருக்கிறது சொர்க்க வனம்.

(பயணம் நிறைவுற்றது)

வணக்கம்,

கடந்த ஆறு மாதங்களாக, வாராவாரம் நான் எழுதிவந்த சொர்க்க வனம் குறுநாவல் இத்துடன் நிறைவடைகிறது. இதனை ஊக்கப்படுத்தி வெளியிட்டு வந்த இனிது ஆசிரியர் திரு வ. முனீஸ்வரன் அவர்களுக்கும், இனிது வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 25 – இருன்டினிடேவின் உயிர்த் தியாகம்

Visited 1 times, 1 visit(s) today