குருவிகள் எல்லாம் வந்த வழியே மீண்டும் பயணித்துக் கொண்டிருந்தன.
சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்பு மீண்டும் அந்த மனித குடியிருப்புகள் தென்பட்ட பகுதியினை வந்தடைந்தது குருவிக் கூட்டம்.
“அந்த ஏரி எங்காவது தென்படுகிறதா?” என இருன்டினிடே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. மற்ற குருவிகளும் அவ்வாறே ஏரியை தேடிக் கொண்டிருந்தன.
ஆனால் அந்த ஏரியை குருவிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி தொடர்ந்து தெற்கு நோக்கிப் பயணத்தை தொடர்ந்தது குருவிக் கூட்டம்.
மேலும் ஒரு மணி நேரம் சென்றது. குருவிகளின் வேகம் குறைந்தது. பகல் பொழுதில் தொடர்ந்து பயணித்ததால் குருவிகள் சோர்வடையத் தொடங்கின.
நிலைமையை உணர்ந்த இருன்டினிடே, “நண்பர்களே இன்று இரவு எங்காவது தங்கிவிட்டு நாளை இரவு பயணத்தைத் தொடர்வோம். சோர்வு வேண்டாம்” என்றது.
இருன்டினிடேவின் முடிவில் குருவிகள் உற்சாகம் அடைந்தன. தங்குவதற்கான இடத்தை பறந்து கொண்டே அவை தேடின.
தென்கிழக்குப் பகுதியில் ஒரு நீர்நிலை இருப்பதை வாக்டெய்ல் பார்த்த்து.
உடனே, “அங்க பாருங்க ஒரு நீர்நிலை. அந்த இடம் சரியா இருக்குமா தங்குறதுக்கு?” எனக் கேட்டது வாக்டெய்ல்.
தகவல் இருண்டினிடேவிற்குச் சென்றது.
உடனே “சரி, அந்த இடத்திற்குச் சென்றுப் பார்ப்போம்” என்று கூறி கூட்டத்தை அழைத்துச் சென்றது இருன்டினிடே.
அது ஒரு இயற்கை குளம். மிகவும் பெரியதாக இருந்தது. குளக்கரையை சுற்றி ஆங்காங்கே மரங்கள் இருந்தன. அத்தோடு நெட்டைப் புற்களும் குட்டைச் செடிகளும் நிறைந்திருந்தன.
குளத்தில் ஒரு பகுதியில் விரவியிருந்த மிதக்கும் தாவரங்கள் பூத்துக் குலுங்கின. அந்தக் குளத்தின் அழகு குருவிகளின் மனதைக் கொள்ளை கொண்டது.
குருவிகள் இருன்டினிடேவை நோக்கிப் பார்த்தன. “இன்று இங்கேயே தங்கலாம்” என்றது இருன்டினிடே.
உடனே “சரி ஐயா” என்று உற்சாகமாய் எல்லா குருவிகளும் கூறின.
அப்பொழுது அந்தி நேரம் என்பதால், “நண்பர்களே, முதலில் தங்குமிடத்தை தேர்வு செய்வோம். பிறகு குளத்தை சுற்றிப் பார்க்கலாம்” என்று கூறி கூட்டத்தை அங்கிருந்து அழைத்துச் சென்றது இருன்டினிடே.
குளக்கரையில் இருந்த ஒரு பெரிய மரத்தை இருன்டினிடே தேர்வு செய்தது.
குருவிகள் தங்குவதற்கான இடத்தையும் ஒதுக்கீடு செய்தது கொடுத்துவிட்டு, “நீங்க இந்த பகுதிய சுற்றிப் பார்க்கும்போது எச்சரிக்கையா இருங்க. இருட்டுறதற்கு முன்னாடி இங்க வந்துடுங்க” எனக் கேட்டுக்கொண்டது இருன்டினிடே.
“சரி ஐயா” என்று சொல்லி குருவிகள் கலைந்துச் சென்றன.
இன்னும் இரவு மலரவில்லை.
சில குருவிகள் குளத்தை சுற்றிப் பார்க்க சென்றன.
வாக்டெய்லிற்கும் அந்த பகுதியை கண்டு மகிழ ஆசை எழுந்தது. “அம்மா நா இந்த இடத்தை சுற்றிப் பார்த்துட்டு வரட்டுமா?” எனக் கேட்டது.
“வேண்டாம் வாக்டெய்ல். இப்ப ஓய்வு எடுத்துக்கோ. அப்பதான் காலைல புறப்படறதற்கு சரியா இருக்கும். அடுத்து பயணம் ரொம்ப தூரம் இருக்கலாம்” என்றது அம்மா.
“இல்லம்மா… நா சோர்ந்து போகமாட்டேன். எவ்வளவு தூரம் வேணும்னாலும் பறப்பேன். இப்ப மட்டும் கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரட்டுமா…” என்று கெஞ்சியது வாக்டெய்ல்.
“சரி போயிட்டுதான் வரட்டுமே” என்றது வாக்டெய்லின் அப்பா.
“பாத்தியா அப்பாவும் சொல்லிட்டாரு… நான் போயிட்டு வந்துடுரேன்” என்று உற்சாகமாய் கூறியது வாக்டெய்ல்.
“சரி ரொம்ப தூரம் போகக் கூடாது. நான் கூப்பிட்டா உடனே வந்துடனும் புரியுதா?” என்றது அம்மா.
“சரிம்மா… சரிப்பா… சீக்கிரம் வந்துடரேன்” என்று கூறி அங்கிருந்து பறந்தது வாக்டெய்ல்.
உணவு சேகரிப்பதற்காக, சில குருவிகளுடன் வாக்டெயிலின் அப்பாவும் அங்கிருந்து புறப்பட்டது.
புறப்பட்டு நேரே ஒரு மரக்கிளையில் வந்து அமர்ந்தது வாக்டெய்ல்.
சூரியனின் செங்கதிர்கள் மரத்தின் உச்சியை வருடிக் கொண்டிருந்தன. மரத்திலிருந்த பூக்கள் உதிர்ந்தும், நெட்டைப் புற்கள் அசைந்தும் வாக்டெய்லை வரவேற்றன.
தூய்மையான காற்றில் பூக்களின் நறுமணம் கலந்து வீசிக் கொண்டிருந்தது. “எவ்வளவு அழகான இடம்” என்று வாக்டெய்ல் இரசித்துக் கொண்டிருக்கும் பொழுது தூரத்தில் இருந்து ஒரு பாட்டுக் குரல்… அது மிகவும் இனிமையாக இருந்தது.
ஆர்வ மிகுதியால், அந்த குரல் ஒலிக்கும் இடத்தை நோக்கி பறந்துச் சென்றது வாக்டெய்ல்.
வாக்டெய்லுக்கு ஆச்சரியம்… ஆம் தன்னைவிட அளவில் சிறியதாக இருந்த ஒரு பறவை தான் அந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரன்.
அந்தப் பறவையின் மார்பு செந்நிறத்திலும், முகத்தில் சாம்பல் நிறக் கோடுகளும் இருந்தன. அதன் வயிற்றுப்பகுதி வெள்ளை நிறத்திலும், முதுகுப் பகுதி மண்ணிறமாகவும் இருந்தது. அந்தப் பறவை தரையை மூடியிருந்த தழைகளின் மீது நின்று பாடிக்கொண்டிருந்த்து.
அதன் கண்ணில் படாமல் இருக்க அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளைகளின் மத்தியில் நின்று கொண்டு அந்த பறவையின் பாடலை கேட்டு மகிழ்ந்துக் கொண்டிருந்தது வாக்டெய்ல்.
திடீரென அந்தப் பறவை மயங்கி விழுந்தது. வாக்டெய்லுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எப்படியோ நிதானத்தை வரவழைத்துக் கொண்டு, உடனே அப்பறவையின் அருகில் சென்று பார்த்தது.
அப்பறவை மயக்கத்தில் இருந்தது. அருகில் இருந்த குளத்திற்குச் சென்று நீர் எடுத்து வந்து அப்பறவையின் முகத்தில் தெளித்தது வாக்டெய்ல்.
சற்று நேரத்தில் அப்பறவை கண்விழிக்க அதற்கு நீரை பருகக் கொடுத்தது வாக்டெய்ல். சில நிமிடங்களில் எழுந்து நின்றது அப்பறவை.
அப்பொழுது….
“ரொம்ப நன்றீங்க… தக்க நேரத்துல வந்து உதவி செஞ்சீங்க…”
“பரவாயில்லங்க… உங்களுக்கு என்ன ஆச்சு?”
“தெரியல, தீடீர்ன்னு மயக்கம் வந்துடுச்சு…”
“இப்ப பரவாயில்லையா..”
“பரவாயில்ல… நல்லா தான் இருக்கேன்… ஆஆம்ம்ம் உங்க பேரு என்ன? இதுவரைக்கும் உங்கள இங்க நான் பார்த்த்தேயில்லையே?”
“என் பேரு வாக்டெய்ல். நாங்க பூமியோட வடமுனைப் பகுதியில் இருந்து வர்றோம்.”
“அப்படியா… எவ்வளவு நாளு இங்க இருப்பீங்க?”
“நாளைக்கு கிளம்பிடுவோம்… தெற்கு முனையில இருக்கிற சொர்க்க வனத்துக்கு போறோம்.”
“அப்ப, பல நாடுகள கடந்து போறீங்களா?”
“ஆமாம்… உங்க பேரு என்ன?”
“என் பேரு ராபின்.”
“பேரு நல்லா இருக்கு. நீங்க பாடியது அருமையா இருந்துச்சு”
“மிக்க நன்றி வாக்டெய்ல்”
“ராபின்… நான் உண்மையாத்தான் சொன்னேன்”
“அதற்காகவும் தான் வாக்டெய்ல்”
“நீங்க எங்க இருக்கீங்க ராபின்?”
“இன்னும் அதிக தூரம் போகணும். அங்க ஒரு பூங்கா இருக்கு. அங்கதான் எங்க வீடும் இருக்கு.”
“பூங்காவா?”
“ஆமாம். மனிசங்க இருக்கிற இடத்துல ஒரு பெரிய பூங்கா இருக்கு. அங்க மரம் செடின்னு நிறைய இருக்கும். உணவும் அதிகமா கிடைக்கும். அங்க தான் இருக்கோம். சும்மா சுற்றிப் பார்க்கலாமேன்னு இங்க வந்தேன்.”
“அப்படியா, அப்பா அம்மா ஒன்னும் சொல்லலையா?”
“நான் சொல்லிட்டு தான் வந்தேன். அடிக்கடி இங்க வருவோம். அதனால் பயம் இல்ல”
“சரி நீங்க எத்தனைப் பேரு?”
“எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பையன். எங்க கூட்டத்துல மொத்தம் எண்பது பேரு இருக்காங்க.”
“நல்லது வாடெய்ல். இப்ப எங்க தங்கி இருக்கீங்க வாக்டெய்ல்?”
“இங்க இருந்து கொஞ்சம் தூரத்துலதான் தங்கியிருக்கோம்.”
“சரி வாக்டெய்ல். உங்கள பார்த்துல மகிழ்ச்சி மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நன்றி.”
“பரவாயில்ல ராபின். எனக்கும் உங்கள் சந்திச்சதுல மிக்க மகிழ்ச்சி”
“வாக்டெய்ல், இருட்டுற நேரமாயிடுச்சு. நான் கிளம்புறேன். வாய்ப்பிருந்தா மீண்டும் சந்திப்போம்” என்றுக் கூறி பறக்க தயாரானது ராபின்.
“சரி, ராபின் நானும் கிளம்புரேன். அம்மா தேடுவாங்க” என்றுக் கூறி வாக்டெய்லும் புறப்பட்டு, சிறிது நேரத்தில் தங்களது இருப்பிடத்தை வந்தடைந்தது.
அதற்கிடையே, வாக்டெய்லின் அப்பாவும் மற்ற சில குருவிகளும் கூட்டத்திற்கு தேவையான உணவை கொண்டு வந்திருந்தன.
சிறிது நேரத்தில் எல்லா குருவிகளுக்கும் உணவு பகிர்ந்தளிக்கப்பட்டது. திருப்திகரமாக உணவு உண்டு உறங்கச் சென்றன எல்லா குருவிகளும்.
தனது இடத்தில் படுத்துக் கொண்டிருந்த வாக்டெய்லின் நினைவில் ராபினின் இனிமையான குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதனால் மெல்ல ஆழ்ந்த உறக்கத்தை தழுவியது வாக்டெய்ல்.
(பயணம் தொடரும்)
கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com
இதைப் படித்து விட்டீர்களா?