சொற்களின் விளைவுகள் என்ற தலைப்பில், நாம் பேசும் சொற்கள் நம்மிடையேயும், நம்மைச் சார்ந்த சுற்றுப்புறத்திடையேயும் என்ன விளைவுகளை உண்டாக்குகின்றன என்பதையே பார்க்கப் போகிறோம்.
எலும்பில்லாத நாக்கு மிகப்பெரிய ஆயுதம்.
நாக்கிலிருந்து வெளிப்படும் நல்ல சொற்கள் மிகப்பெரிய நன்மையையும், கொடுஞ்சொற்கள் மிகப்பெரிய தீமையையும் உருவாக்கி இருக்கின்றன.
மிகப்பெரிய நன்மை
ஒளவையார் சங்ககால பெண்புலவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஒரு பெரும்போரைத் தன் பேச்சாற்றலால் தடுத்து நிறுத்தியவர் ஒளவையார்.
ஒருமுறை கடையேழு வள்ளல்களில் ஒருவராகக் கருதப்படும் அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் தொண்டைமானுக்கும் இடையே முற்பகை காரணமாகப் போர் நிகழவிருந்தது.
அதியமான் தகடூரை தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னன்.
அவனுடைய அண்டைநாட்டு மன்னன் தொண்டைமான்.
தொண்டைமான் அதியமானுடன் கொண்ட முற்பகை காரணமாகப் போர் புரிய எண்ணினான்.
எந்நேரமும் போர் மூளலாம் என்ற சூழலில் ஒளவையாருக்கு போர் பற்றிய செய்தி தெரிய வந்தது.
போர் மூண்டால் இருதரப்பிலும் பெரும் சேதம் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்த ஒளவையார் தொண்டைமானிடம் தூது சென்றார்.
ஒளவையாரை வரவேற்ற தொண்டைமான், தன்னுடைய போர்க்கருவிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று படைபலத்தை காட்டினான்.
தொண்டைமானின் படைபலத்தைக் கண்டதும் ஒளவையார் திகைத்தார்.
தொண்டைமானிடம் ஒளவையார் ஒரு பாடலைப் பாடியதும், தொண்டைமான் போர் எண்ணத்தைக் கைவிட்டான்.
ஒளவையார் பாடிய அப்பாடல் எட்டுத்தொகை நூலான புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
‘இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து
கடியுடை வியனகர் அவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்
உண்டாயிற் பதங்கொடுத்து
இல்லாயின் உடனுண்ணும்
இல்லோர் ஒக்கல் றலைவன்
அண்ணல் எம்கோமான் வைந்நுதி வேலே”
என்பதே அப்பாடல். இப்பாடலின் பொருள்
‘தொண்டைமானே, உன் படைக்கருவிகள் மயில்தோகை அணிந்து பூமாலை சூடி, புதிது மாறாமல் திருத்தமாக, காவலையுடைய பெரிய நகரத்தில் பாதுகாப்பாக இருக்கின்றன.
அங்கே, எளியோர்களின் உறவினனும் எங்கள் தலைவனுமாகிய அதியமானின் கூர்மையான நுனியுடைய வேல்கள், பகைவர்களைக் குத்தியதால் நுனிகள் சிதைந்து எப்போதும் கொல்லனின் இருப்பிடமாகிய பட்டறைக்குள் கிடக்கின்றன’ என்பதாகும்.
‘தொடர்ந்து போரில் இருப்பவனிடம் போரிடச் சென்றால், தோற்றுப் போவாய்!’ என்பதை,
அதியமானின் படைக்கருவிகள் தொடர்ந்து போரில் பயன்படுத்தப்பட்டுச் சாணை பிடிக்கப்படக் காத்திருக்கின்றன!
உன் கருவிகளோ போரினை அறியாமல் புதியவையாய் இருக்கின்றன!
என ஔவையார் குறிப்பால் உணர்த்தினார்.
ஒளவையாரின் பேச்சாற்றல் பெரும் போரைத் தவிர்த்ததுடன் இருநாட்டு மக்களின் உறவுகளையும் அவர்களின் மகிழ்ச்சியான சுற்றுப்புறத்தையும் காப்பாற்றியது.
மிகப்பெரிய தீமை
மகாபாரதத்தில் குருசேத்திரப்போர் முடிந்திருந்த வேளை.
திரௌபதி அஸ்தினாபுரத்தின் அரண்மனையில் இருந்து நகரை உற்று நோக்கினாள்.
அங்கு கைம்பெண்கள் அதிகமாகவும், ஆண்கள் குறைவாகவும் இருப்பதைக் கண்டாள். ஆதரவற்ற பிள்ளைகள் பலர் வீதிகளில் சுற்றித் திரிவதைக் கண்டாள்.
கண்களில் நீர் வழிய அறையினுள் சென்று முடங்கினாள். அப்போது கிருஷ்ணர் அங்கு வந்தார்.
கிருஷ்ணரைக் கண்ட திரௌபதி மிகவும் வாடிய முகத்துடன் அவரை வணங்கினாள்.
திரௌபதியின் கண்களில் கண்ணீர் திரையைக் கண்டதும் கிருஷ்ணர் அவளிடம்,
“நீ கௌரவர்களைப் பழிவாங்க நினைத்தாய். அதில் நீ வெற்றியும் பெற்று விட்டாய்.
இன்னும் ஏன் சோகத்துடன் காணப்படுகிறாய்?
உன்னுடைய சபதம் நிறைவேறி விட்டதை எண்ணி மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டார்.
கிருஷ்ணனர் கூறியதைக் கேட்டதும்,
“அண்ணா! அஸ்தினாபுரத்து நகரில் பெண்களும் குழந்தைகளும் ஆதரவின்றி தனியாகத் தவிக்கின்றனர்.
போர் காரணமாக ஆண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.
மக்களின் நிலையையும் அவர்களின் சுற்றுப்புறத்தையும் காண்கையில் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது!” என்றபடி அழுதாள்.
“உன்னுடைய வார்த்தைகளின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பேசியதன் விளைவே இது!” என்றார் கிருஷ்ணர்.
“நடந்த எல்லாவற்றிற்கும் நான்தான் பொறுப்பு என்கிறீர்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் திரௌபதி.
“நீ நினைத்திருந்தால் இவ்வளவு துன்பங்கள் உனக்கும் உன்நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டிருக்காது!” என்றார் கிருஷ்ணர்.
“என்னால் என்ன செய்திருக்க முடியும்?” என்றாள் ஏமாற்றத்துடன் திரௌபதி.
“விளக்கமாகக் கூறுகிறேன் கேள்!
உனது சுயம்வரத்தில் கர்ணனை அவமானப்படுத்தாமல், அவன் அதில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கலாம்.
இந்திரப்பிரஸ்த அரண்மனையில், நீ துரியோதனனை ‘பார்வையற்றவனின் மகன்; குருடன்!’ என அவமானப்படுத்தாமல் இருந்திருந்தால், அஸ்தினாபுரத்து அரசவையில் நீ அவமானப்படாமல், குருசேத்திரப் போர் நடைபெறாமல் போயிருக்கலாம்.
நம் வார்த்தைகள்கூட பின்னால் நடக்கும் விளைவுகளுக்குப் பொறுப்புதான் திரௌபதி.
பேசுவதற்கு முன் ஒவ்வொரு வார்த்தையையும் எடை போடுவது மிகவும் அவசியமானது.
இல்லையெனில் அதன் தீயவிளைவுகள் நம்மை மட்டுமல்ல; நம்முடைய சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியற்றதாக்கி விடும்.
பேசும் வார்த்தைகளில் விஷத்தைக் கக்கும் ஒரே இனம் மனித இனம்தான்.
ஆதலால் கொடுஞ்சொற்கள் போர்க்களத்தையும் உருவாக்கிவிடும் என்பது புரிகிறதா திரௌபதி!” என்று விளக்கினார் கிருஷ்ணர்.
நல்ல சொற்களைப் பேசி, நாமும் மகிழ்ச்சியடைந்து, நம்முடைய சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருப்போம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!