சோதனைகளை தாங்கு! நன்மையே கிடைக்கும்!

அன்று ஒருநாள் மனது மிகவும் பாரமாக இருந்தது. ‘எனக்கு மட்டும் ஏன் எப்போதும் சோதனையாக இருக்கிறது?’ என்ற எண்ணம் என்னை அழுத்திக் கொண்டே இருந்தது.

அப்போது நான் தற்செயலாக வாசித்த கட்டுரை மனதிற்கு சற்று ஆறுதலளித்தது. அதன் விவரம் பின்வருமாறு

ஒருதுறவி காட்டு வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதன், அங்கிருந்த மரம் ஒன்றில் கயிறு ஒன்றை மாட்டி சுருக்கு போட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு சில வினாடிகளில், அவன் கழுத்தை அதனுள்ளே நுழைத்து துாக்கில் தொங்க தயாரான போது, “நில்!” என்று கம்பீரமாக உத்தரவிட்டார் துறவி!

அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

“என்ன காரணத்தால் இந்த மாதிரி தவறான முயற்சியில் ஈடுபடுகிறாய்?” என்று கேட்டார் துறவி.

“சுவாமி, என் வாழ்க்கை முழுவதும் கண்ணீர். பிறந்ததிலிருந்து துன்பம், துயரம், வறுமை. எனக்கு இவ்வுலகில் வாழ தெரியவில்லை. நான் நேர்மையானவன்; உண்மையானவன்.

எனக்கு பணம் சம்பாதிக்க தெரியவில்லை. எனவே, அவ்வப்போது பட்டினி. வேலை செய்யும் இடங்களில் என் உழைப்புச் சுரண்டப்படுகிறது. என் கூலி குறைக்கப்படுகிறது.

எனக்குரிய கூலியை காலம் தாழ்த்தி தருகின்றனர் அல்லது அலைய விட்டுத் தருகின்றனர். கூலி வாங்க நான் அலையும் போது செலவாகும் தொகை, என் குடும்பத்தின் மூன்று நாட்கள் சாப்பாட்டுச் செலவு. இப்படி எத்தனை எத்தனையோ சொல்லலாம்.

நான் ஏழையாகவே உள்ளேன். ஏழையாக இருப்பதைக் குற்றமாக எண்ணவில்லை.

வாழ்நாள் முழுவதும் இந்த துன்பங்களையும், துயரங்களையும் என் கடின உழைப்பால் போக்க முடியவில்லை. எனவே தான் சாக முயற்சித்தேன்; நீங்கள் தடுத்து விட்டீர்கள்!” என்று கதறினான்.

“மகனே நான் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொல்.

உலோகங்களிலேயே மதிப்பானது என்று தங்கம். அது பாமர மக்களால் மதிக்கப்படுகிறது. அதன் விலை அதிகம்.

அதை ஆபரணமாக்க மனிதர்கள் முயலும் போது என்ன செய்கின்றனர்?

நெருப்பில் போட்டு உருக்கி, சுத்தியால் தட்டி, நீட்டி, வளைத்து, பின் சிறு உளியினால் செதுக்குகின்றனர்.

மீண்டும் நெருப்பில் இட்டுக் காய்ச்சுகின்றனர்!

தங்கம் மற்ற உலோகங்களை எல்லாம்விட விலை உயர்ந்தது; துாய்மையானது என தெரிந்திருந்தாலும் அதை எவ்வாறெல்லாம் பாடுபடுத்துகின்றனர்.

பயிர்களில் இனிமையானது கரும்பு என்பது உண்மைதான்! அதைத்தான் நசுக்கி, கசக்கி, பிழிந்து, சாறு எடுத்து, பின் வடிகட்டுகின்றனர்.

ஆகவே, நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடிய படிப்பினை என்ன?

நல்லவற்றுக்கு இப்படிப்பட்ட துக்கமான, கவலை தரக்கூடிய அனுபவங்கள் எல்லாம் உண்டாவது சகஜமான விஷயமே. இதனால் விளைவது இறுதியில் நன்மையே தவிர வேறு எதுவுமில்லை.

பசுவின் பாலில் இருந்து பெறப்படுவது என்ன?

தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவை.

இவை எப்படி கிடைக்கின்றன?

பசுவிலிருந்து பாலைக் கறந்தவுடன், அது ஒருபாத்திரத்தில் ஊற்றப்பட்டு அடுப்பின் மேல் ஏற்றப்பட்டு எவ்வளவு சூடாக்க முடியுமோ அவ்வளவு சூடாகும் வரை காய்ச்சப்படுகிறது.

அதன்பின், அதில் ஒரு துளி பழைய தயிர் அல்லது மோர் விடப்பட்டு புரையிடப்படுகிறது. அது நொதித்து தயிராக மாறுகிறது.

அந்தத் தயிரையும் ஒரு மத்துப் போட்டுக் ‘கடை கடை’ என்று கடைந்து அதிலிருந்து வெண்ணெய் எடுக்கப்படுகிறது.

மேலே திரண்டு வரும் வெண்ணெய் எடுக்கப்பட்டவுடன், சிறிதளவு நீர் ஊற்றி, அது மோர் ஆக்கப்படுகிறது. வெண்ணெய் அதன் பின் மீண்டும் அக்னிப் பரீட்சைக்கு உள்ளாகிறது. இப்போது அதிலிருந்து நெய் பெறப்படுகிறது.

இவ்வளவும் ஏன்? அது பாலாக இருப்பதால்தான்!

ஆக, நல்லவர்கள், நாணயம் மிக்கவர்கள், நேர்மையானவர்கள், உண்மையை பேசுபவர்களுக்கெல்லாம் இவ்வாறு சோதனைகள் நேரிடுவது சகஜம்.

அறிவாளிகள் இதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

ஆகவே, இந்த சோதனைகளை தாங்கு.

முடிவில் நன்மையே கிடைக்கும்!

வீட்டுக்குப் போ!

உன் கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே.

அந்தப் பலன் வித்தியாசமான வடிவத்துடன், நீ எதிர்பாராத நாளில், எதிர்பாராத மனிதர் வடிவத்தில் வந்து உன்னைக் காக்கும்!” என்று அவனை ஆசிர்வதித்து அனுப்பினார்.

தெளிந்த மனதுடன் வீடு திரும்பினான் அந்த மனிதன்.

சோதனைகளை தாங்கு!

நன்மையே கிடைக்கும்!

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.