சோமாசி மாற நாயனார் – சோம வேள்வி செய்து சுந்தரரால் சிவப்பேறு கிடைக்கப் பெற்றவர்

சோமாசி மாற நாயனார் உலக நன்மைக்காக சோம வேள்வி செய்து சுந்தரரால் இறையருள் கிடைக்கப் பெற்ற மறையவர்.

இவர் நடத்திய வேள்வியில் இறைவனே நேரில் வந்து தன்னுடைய அவிர்பாகத்தைப் பெற்றுக் கொண்ட நிகழ்ச்சியை போற்றும்விதமாக இன்றும் அம்பர் மாகாளத்தில் திருவிழா நடைபெறுகிறது.

பண்டைய சோழ நாட்டில் திருவம்பர் என்னும் பழமையான தலத்தில் வசித்த வேதியர் ஒருவர் சிவபெருமானிடம் பேரன்பு கொண்டிருந்தார். அவருடைய பெயர் மாறனார் என்பதாகும்.

திருவம்பர் தற்போது அம்பர் மாகாளம் என்றழைக்கப்படுகிறது. அம்பர் மாகாளம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ளது.

சிவனாரிடம் அன்பு உடையோர் எக்குணத்திரானாலும், எந்நிலையில் இருந்தாலும் அவர்கள் தம்மை ஆளுடையும் தன்மை உடையவர்கள் என்று உறுதிப்பாடுடன் வாழ்ந்து வந்தார் மாறனார்.

ஆதலால் சிவனடியார்களிடம் பேரன்பு கொண்டு அவர்களுக்கு தகுந்த முறையில் திருவமுதூட்டி மகிழ்ந்தார். ‘நமசிவாய’ என்ற திருவைந்தெழுத்தை இடைவிடாது உச்சரித்து வாழ்ந்தார்.

இறைவனை போற்றி உலக உயிர்களின் நன்மைக்காக சோம யாகத்தினை அதிகளவு நடத்தி வந்தார்.

ஆதலால் அவ்வேதியரை எல்லோரும் ‘சோமயாஜி’ என்றே அழைக்கலாயினர். ‘சோமாசி மாற நாயனார்’ என்றே சிவனடியார்கள் வழங்குவர்.

சிவபெருமான் உறையும் தலங்களுக்கு சென்று வழிபடும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். அவ்வாறே வீதிவிடங்கரை வழிபட திருவாரூக்குச் சென்றபோது, சுந்தர மூர்த்தி நாயனார் பரவை நாச்சியாருடன் திருவாரூரில் இருப்பதை அறிந்தார்.

இறைவனின் தோழர் என்றழைக்கப்படும் வன்றொண்டர் சிறப்பினை பற்றி சோமாசி மாற நாயனார் ஏற்கனவே அறிந்திருந்ததால், ஆரூராரை தொழுது வழிபட்டார்.

சிவனடியாரிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்த சோமாசி மாற நாயனாரிடம் சுந்தரருக்கு பேரன்பு உண்டானது. கருத்தொத்த அவ்விருவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.

இறைவன்மீதும் அவர்தம் அடியார்களிடத்தும் மாறாத அன்பு கொண்டிருந்த சோமாசி மாற நாயனார் தொண்டுகள் பல புரிந்து இறுதியில் நீங்காத இன்பமான வீடுபேற்றினை அடைந்தார்.

சோமாசி மாற நாயனார் குருபூஜை வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது.

உலக நன்மைக்காக சோம வேள்விகள் செய்து சுந்தரரால் சிவனருள் கிடைக்கப் பெற்ற சோமாசி மாற நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்’ என்று புகழ்கிறார்.

அம்பர் மாகாளத் திருவிழா

அம்பர் மாகாளத்தில் ஆண்டுதோறும் வைகாசி ஆயில்யத்தில், சிவனார் உமையம்மையுடன் சோமாசி மாற நாயனாரிடம் நேரில் அவிர்பாகம் பெறும் சோமயாக திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சோம வேள்விகள் பல செய்து வந்த சோமாசி மாற நாயனாருக்கு, தாம் நடத்தும் வேள்வியில் சிவனாரே நேரில் வந்து அவிர்பாகத்தை பெற வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.

அவர் தம்முடைய விருப்பத்தை திருவாரூரில் தங்கியிருந்த தன் நண்பரான சுந்தரரிடம் தெரிவித்தார்.

இறைவனின் தோழரான சுந்தரர் சோமாசியாரின் விருப்பத்தை தியாகேசரிடம் முறையிட்டார்.

இறைவனார் உலக நன்மைக்காக வேள்விகள் செய்யும் தம்முடைய பக்தரான சோமாசியாரின் விருப்பதை நிறைவேற்ற சம்மதித்தார்.

ஆனால் நிபந்தனை ஒன்றையும் இறைவனார் விதித்தார். அதாவது சோம யாகத்திற்கு தாம் எந்த ரூபத்திலும் வரலாம். மாறனாரே இறைவனை உணர்ந்து அவருக்கு அவிர்பாகம் அளிக்க வேண்டும் என்பதே அது.

வன்தொண்டரும் இறையாணை பற்றி சோமாசியாரிடம் தெரிவித்தார். இறைவனின் சம்மதம் கிடைத்ததை எண்ணி ஆனந்தக் கூத்தாடினார் சோமாசியார்.

சோமயாகத்திற்காக மிகவும் பிரம்மாண்டமான வேள்விச் சாலையை உண்டாக்கினார் சோமாசியார். ஆயிரக்கணக்கான வேதியர்கள் அமர்ந்து வேள்வியைத் தொடங்கினர். இறைவன் வரப்போகிறார் என்றறிந்த மக்கள் ஆயிரக்கணக்கில் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.

வேள்வி நடந்து கொண்டிருந்தபோது பறையொலியும் எக்காள சத்தமும் விண்ணதிரக் கேட்டது.

அப்போது திடகாத்திரமான இளைஞன் ஒருவன் இறந்த கன்றினை தோளில் சுமந்து கொண்டு, இடுப்பில் பறையை அணிந்து, இடக்கையில் நான்கு நாய்களை பிணைந்த கயிற்றினைப் பிடித்துக் கொண்டு, வலக்கையில் குச்சியால் பறையை அறைந்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.

அவன் அருகில் அவனுடைய இருகுழந்தைகளும், கள் பானையைச் சுமந்தபடி மனைவியும் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்டதும் வேள்விகள் செய்து கொண்டிருந்தோர் மற்றும் அங்கிருந்த மக்கள் தெறித்து ஓடினர்.

அப்போது சோமாசி மாற நாயனார் வேள்வி தடைப்படாமல் காக்குமாறு விநாயகப் பெருமானை வேண்டினார். விநாயகரும் வந்திருப்பது ‘பரம்பொருள்’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.

உடனே சோமாசி மாற நாயனார் வந்து கொண்டிருந்த புலையனின் காலில் விழுந்து வணங்கி, வேள்விச் சாலைக்கு அழைத்துச் சென்று அவிர்பாகத்தை வழங்கினார்.

அவற்றைப் பெற்றுக் கொண்டதும் இளைஞன், அவனுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் நாய்கள் மறைந்தனர். நான்கு நாய்களும் நான்கு வேதங்களாக மாறின. சிவனார் உமையம்மையுடன் இடப வாகனத்தில் காட்சி அளித்தார்.

இறைவனை குறிப்பால் உணர்த்திய விநாயகர் அச்சந்தீர்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

அம்பர் மாகாளத்திற்கும் அம்பர் பெருந்திருக்கோவில் ஆகிய இரண்டு கோவில்களுக்கும் இடையில் சாலையோரமாக சோமாசி மாற நாயனார் நடத்திய வேள்வி குண்டம் உள்ளது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று இங்கு யாக உற்சவம் நடைபெறுகிறது.