சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம் என்ற இக்கதை சோம்பேறி சிறுவனான சோமு சுறுசுறுப்பானவனாக மாறியதைப் பற்றியது.
“சோமு, டேய் சோமு, எழுந்திரிடா. பள்ளிக்கூடத்துக்கு மணி ஆயிடுச்சு. தினமும் இப்படி ரொம்ப நேரம் தூங்குனா, உடம்பு என்னத்துக்கு ஆகுறது. நீ சாப்புடறதுக்கு வேற நேரம் ஆகும்” என்று சத்தம் போட்டார் அம்மா.
எதையும் காதில் வாங்காமல் நன்றாக இழுத்துப் போர்த்தி தூங்கினான்.
சோமு சோம்பேறித்தனம் உடையவன்; பல் தேய்ப்பதைக்கூட பெரிய வேலையாக நினைப்பவன்.
“ஆடு மாடெல்லாம் பல்லா தேய்க்குது” என்று வசனம் பேசுபவன்.
ஒரு காக்கா குளியல் போட்டான்.
அம்மா சுட்ட அருமையான வெங்காய தோசை நான்கும் சாம்பார் சட்னியோடு சோமுவின் வயிற்றில் தஞ்சம் புகுந்தன. சாப்பிடுவதில் மட்டும் சோமு சோம்பேறித்தனம் படுவதில்லை.
பள்ளிக்குச் சென்று வழக்கம்போல் சோர்ந்து அரை தூக்கத்தில் பாடங்களைக் கவனித்தான். மாலை வீட்டிற்கு வந்தான்.
வழக்கம்போல் புத்தகப்பையை மூலையில் போட்டுவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தான்.
சோமுவை திருத்த வேண்டும் என அம்மா முடிவு எடுத்தார்.
பள்ளி தலைமையாசிரியரிடம் சோமுவை பற்றி கூறினார். தான் சோமுவை மாற்றுவதாக உறுதியளித்தார் தலைமையாசிரியர்.
அடுத்தநாள் பள்ளியில் “தூங்கும்போது வருவது கனவல்ல. உன்னை தூங்கவிடாமல் செய்வதே கனவு” என மாணவர்களிடம் இலட்சியகனவை விதைத்த ‘ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா.
அதனை முன்னிட்டு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலைமையாசிரியர் மரக்கன்று கொடுத்து பள்ளி வளாகத்தில் நடுமாறு கூறினார்.
சோமுவிற்கும் கொடுத்தார். நடுவதற்கு கடப்பாறையால் குழியைத் தோண்ட சொன்னார். சோமுவிற்கு கடப்பாறையைத் தூக்கவே முடியாத அளவிற்கு சோம்பேறித்தனம், அவனைக் கட்டிப்போட்டிருந்தது.
அங்கு நின்றிருந்த மாணவர்கள் அனைவரும் சோமுவைப் பார்த்து சிரித்தனர். சோமுவிற்கு மிகவும் அவமானமாக இருந்தது. வருந்தினான்.
சோமுவின் மாற்றம்
தலைமையாசிரியர் சோமுவை தனியாக அழைத்துப் பேசினார்.
“அறிவு குறைவாக உடைய சேவல் நமக்கு முன் எழுந்து நம்மை எழுப்புகிறது. குதிரை எவ்வளவு வேகமாக ஓடுகிறது. அது தூங்குவதேயில்லை. அறிவு குறைந்த உயிரினங்கள் சோம்பேறியாக இருப்பதில்லை.
மனிதன் உயிரினத்தில் உயர்ந்தவன். அவன் சோம்பல் படலாமா? காலையில் சீக்கிரம் எழுந்தாலே அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
தினந்தோறும் சீக்கிரம் எழுந்தால் எல்லா நாளும் வெற்றியின் நாளாகும்.
ஒருமுறை முயற்சி செய்து பார் சோமு. உனக்கே புரியும்!” எனக் கூறி வீட்டிற்கு அனுப்பினார்.
அன்று இரவு போலீஸ் தொப்பி போல் தட்டில் அடுக்கி வைத்திருந்த சப்பாத்திகளை அம்மா சோமுவிற்கு கொடுக்க, இரண்டு மட்டும் சாப்பிட்டுவிட்டு “போதும்” என கையை கழுவினான் சோமு.
அம்மாவிடம் சீக்கிரம் எழுப்பிவிடுமாறு கூறிப் படுத்தான். அம்மா மனம் மகிழ்ந்தார். காலையில் சோமு சீக்கிரம் எழுந்தான். அன்றைய வேலைகளை சுறுசுறுப்புடன் செய்தான். பள்ளிக்கு விரைந்து சென்றான்.
தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்ததும், வளாகத்தில் நடந்த நிகழ்வைப் பார்த்து மகிழ்ந்தார்.
அங்கே சோமு கடப்பாறையை எடுத்து குழி போட்டு மரக்கன்றை நட்டான்.
அனைத்து மாணவர்களையும் அழைத்து தலைமையாசிரியர் சோமுவை பாராட்டினார்.
உடலின் நலத்தையும் உள்ளத்தின் நலத்தையும்
உயர்வையும் கெடுக்கும் முதல் எதிரி சோம்பல்.
சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!