சோள இடியாப்பம் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த உணவு ஆகும். வெள்ளைச் சோளம் சிறுதானிய வகைகளுள் ஒன்று.
இன்றைய காலத்தில் சிறுதானியங்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். வெள்ளை சோளத்தில் அடை, தோசை, குழிபணியாரம், கூழ் உள்ளிட்ட உணவுகளை செய்து உண்ணலாம்.
அதே நேரத்தில் வெள்ளை சோளத்தில் இடியாப்பம் செய்வது, எண்ணெய் இல்லாத ஆரோக்கியமான உணவாகும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
இனி சுவையான வெள்ளை சோள இடியாப்பம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளைச் சோள மாவு – 1 கப்
தண்ணீர் – 1/2 கப்
கல் உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
சோள இடியாப்பம் செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.
வாணலி சூடேறியதும் வெள்ளைச் சோள மாவை அதில் போட்டு, 5 நிமிடங்கள் வாசனை வரும் வரை கைவிடாமல் வறுக்கவும். அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.
வறுத்த வெள்ளை சோள மாவை நன்கு ஆற விடவும்.
தேவையான கல் உப்பினை 1/2 கப் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் இறக்கி வறுத்து ஆறிய வெள்ளைச் சோள மாவில் சிறிது சிறிதாகச் சேர்த்து பிசையவும்.
அதாவது கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
மாவை திரட்டி இறுதியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து ஒன்றாகத் திரட்டவும்.
திரட்டிய மாவில் தேவையான அளவு மாவை எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்பங்களாக பிழியவும்.
பிழிந்த இடியாப்பங்களை இட்டிப் பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான வெள்ளைச் சோள இடியாப்பம் தயார்.
இந்த இடியாப்பத்துடன் தேங்காய் பால், தேங்காய் பூ, சாம்பார், வெள்ளை குருமா ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் வெள்ளைச் சோளத்தை முதலில் வறுத்துப், பின் அதனை அரைத்து மாவாக்கி இடியாப்பம் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதனுடன் சோள இடியாப்பம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கார இடியாப்பம் தயார் செய்யலாம்.