சோள இட்லி சிறுதானிய வகைளில் ஒன்றான சோளத்திலிருந்து தயார் செய்யப்படும் சிற்றுண்டி ஆகும். பழங்காலத்தில் இது மக்களால் அடிக்கடி செய்து உண்ணப்பட்டதாக என் பாட்டி சொல்லுவார்.
சோளம் சத்து மிக்க ஆரோக்கியமான உணவு தானியம் ஆகும்.
கிராமங்களில் சோளத்தில் கூழ், குழிப் பணியாரம் செய்து உண்பர்.
நவராத்திரி கொலு வழிபாட்டின் போது சோள சுண்டல் செய்து வழிபாட்டில் படைத்து வருபவர்களுக்கு உண்ணக் கொடுப்பர்.
அரிசி இட்லிக்கு மாற்றாக இதனை செய்து உண்ணலாம்.
இனி நாம் சுவையான சோள இட்லி செய்முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சோளம் – 400 கிராம் (1 பங்கு)
இட்லி அரிசி – 400 கிராம் (1 பங்கு)
உளுந்தம் பருப்பு – 200 கிராம் (½ பங்கு)
கல் உப்பு – தேவையான அளவு
சோள இட்லி செய்முறை
சோளத்தை கழுவி, சோளம் முழுவதும் தண்ணீரில் மூழ்குமாறு சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் அதனுடன் இட்லி அரிசியைக் கலந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்தம் பருப்பை அலசி தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த சோளத்தையும், அரிசியையும் ஒன்றாக கிரைண்டரில் போட்டு ஊற வைத்த தண்ணீரை வைத்து அரைத்துக் கொள்ளவும்.
உளுந்தம் பருப்பை ஊற வைத்த தண்ணீரைப் பயன்படுத்தி தனியே அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
சோள அரிசி மாவு, உளுந்தம் மாவு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கல் உப்பு சேர்த்து ஒருசேர பிசைந்து கொள்ளவும்.
இம்மாவினை ஆறு அல்லது ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
புளித்த மாவினை ஒருசேரக் கிளறி இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி பானையில் வைத்து அவித்து எடுக்கவும்.
சுவையான சோள இட்லி தயார்.
இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் போன்றவை பொருத்தமாக இருக்கும்.
ஆரோக்கியமான இதனை சிறுகுழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
குறிப்பு
இந்த இட்லிக்கு நாட்டு வெள்ளை சோளத்தை பயன்படுத்தினால் சுவை மிகும்.
சோளம் ஊறியதைக் காண வாயில் போட்டு மென்றால் எளிதாக மெல்ல வரும்.