சோள குழிப்பணியாரம் அருமையான சிற்றுண்டி ஆகும். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாக கொடுத்து அனுப்பலாம்.
இது உண்பதற்கு மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். சிறுதானிய வகையான சோளத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
என்னுடைய சிறுவயதில் எங்கள் ஊரில் கடைகளிலும், தெருக்களிலும் சோள குழிபணியாரத்தை விற்பனை செய்வார்கள்.
குழிப்பணியாரம் எண்ணெயை குறைவாக பயன்படுத்தி தயார் செய்யப்படுவதால் இது ஆரோக்கியமானதும் கூட.
இனி சுவையான சோளக் குழிப்பணியாரம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளைச் சோளம் – 200 கிராம் (1 பங்கு)
இட்லி அரிசி – 200 கிராம் (1 பங்கு)
உளுந்தம் பருப்பு – 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் – 1/2 மேஜைக்கரண்டி
மண்டை வெல்லம் – 200 கிராம் (1 பங்கு)
நல்ல எண்ணெய் – சிறிதளவு
சோள குழிப்பணியாரம் செய்முறை
சோளம், இட்லி அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் அதனை மையாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவினை ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.
மண்டை வெல்லத்தை நன்கு கட்டியில்லாமல் தட்டிக் கொள்ளவும்.

புளித்த மாவில் தட்டிய மண்டை வெல்லத்தைச் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

மண்டை வெல்லம் சேர்த்து கரைத்ததும் பணியார மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
ஆதலால் மாவினை மிகவும் கெட்டியாக ஆட்டித் தோண்டவும்.

பணியாரக் கல்லினை அடுப்பில் வைத்து சூடானதும், நல்ல எண்ணெய் தடவி அதில் முக்கால் குழிக்கு மாவினை ஊற்றவும்.


இனிப்பு சேர்த்து பணியாரம் தயார் செய்யப்படுவதால் அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.
பணியாரம் ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேக விடவும்.

சுவையான சோள குழிப்பணியாரம் தயார்.

குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மண்டை வெல்லத்திற்குப் பதிலாக கருப்பட்டி சேர்த்து பணியாரம் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் தேங்காய் துருவலைச் சேர்த்து பணியாரம் தயார் செய்யலாம்.
பணியாரத்திற்கு நாட்டு சோளத்தைப் பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!