சோள ரொட்டி சத்துக்கள் நிறைந்தது. மேலும் எண்ணெயை விரும்பாதவர்களுக்கும் ஏற்ற உணவு இது. ஏனெனில் இது எண்ணெய் சேர்க்காமல் செய்யப்படுகிறது.
இது உண்பதற்கு மெதுவாகவும், சுவையாகவும் இருக்கும். ஏந்த வகையான குழம்பும் இதற்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.
சிறுதானிய வகைகளுள் ஒன்றான சோளத்தை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். சோளத்தில் இடியாப்பம், புட்டு, இட்லி, தோசை, குழிப்பணியாரம் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் செய்யப்படுகின்றன.
இனி சுவையான சோள ரொட்டி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சோள மாவு – 1 கப் (1 பங்கு)
தண்ணீர் – 1 கப் (1 பங்கு)
கல் உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை
வாயகன்ற பாத்திரத்தில் ஒரு கப் சோள மாவை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் எடுத்து, அதனுடன் தேவையான கல் உப்பைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
கொதித்த தண்ணீரைச் சோள மாவில் சேர்க்கவும்.
அதனை கரண்டியால் வரமாவு இல்லாமல் நன்கு கிளறவும்.
பாத்திரத்தை மூடியால் மூடி விடவும்.
மாவானது கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் போது மூடியைத் திறக்கவும்.
மாவினை நன்கு கைகளால் அழுத்திப் பிசைந்து, சப்பாத்தி மாவு பதத்திற்குத் திரட்டவும்.
திரட்டிய பின்பு மேற்புறத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு சேரத் திரட்டவும்.
பின்னர் ஒரு சேர திரட்டிய மாவினை, ஆரஞ்சு பழ அளவிற்கு தனித்தனி உருண்டைகளாக ஒருசேரத் திரட்டவும்.
சோள மாவு இணைக்கும் ஓரங்களில் கீறல் விடும். ஆதலால் அழுத்தி ஒருசேரத் திரட்டவும்.
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு சோள மாவினை எடுத்துக் கொள்ளவும்.
ஆரஞ்சுப்பழ அளவு உருட்டிய மாவு உருண்டையில் ஒன்றினை எடுத்து லேசாக வடை போல் தட்டி, கிண்ணத்தில் உள்ள சோள மாவில் எல்லாப் பக்கங்களும் படும்படி தோய்க்கவும்.
அதாவது வடைபோல் தட்டிய மாவின் இரண்டு பக்கங்கள் மற்றும் வெளிப்புற வளையப் பகுதி. இவ்வாறு செய்வதால் வளைத்தில் தேய்க்கும் போது கீறல்கள் விழாது.
மாவில் தோய்த்த வட்டவடிவ உருண்டையை சப்பாத்திக் கட்டையில் வைத்து சீராக சற்று கனமாக விரிக்கவும்.
மெல்லிதாக விரித்தால் விரித்த மாவினை எடுக்கும் போது உடையும். இவ்வாறு எல்லாவற்றையும் சற்று கனமாக விரித்துக் கொள்ளவும்.
தோசை கல்லினை அடுப்பில் வைத்து விரித்த மாவினைப் போடவும்.
1 நிமிடம் கழித்து ஒருசிறு துணியை தண்ணீரில் முக்கிப் பிழிந்து விட்டு, விரித்த மாவின் மேற்பகுதி முழுவதும் ஒத்தி எடுக்கவும்.
ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போடவும்.
இப்பொழுது கல்லில் இருக்கும் சப்பாத்தி பூரி போல் புசுபுசுவென மேற்புறம் முழுவதும் எழும்பும்.
வெந்ததும் எடுத்து விடவும். சுவையான சோள ரொட்டி தயார்.
சூடான சோள ரொட்டியில் காரமான ஊறுகாயைத் தடவியும் உண்ணலாம்.
குறிப்பு
கோதுமை சப்பாத்திக்கு மாற்றாக சோள ரொட்டியை செய்து உண்ணலாம்.
ரொட்டியைத் திரட்டும்போது வளையத்தில் கீறல் விழாமல் ஒருசேரத் திரட்டவும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!