சௌ சௌ உருண்டை குழம்பு செய்வது எப்படி?

இன்றைய சூழ்நிலையில் இயற்கை உணவுப் பொருளான சௌ சௌ காயின் மூலம் உடலில் உள்ள தேவையற்ற சதையினைக் குறைக்கவும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

இக்காய் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஒரு கப் வேக வைத்த இக்காயில் வெறும் 38 கலோரிகளே உள்ளன. இக்காயைப் பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோயையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

சௌ சௌ காயிலிருந்து பொதுவாக பொரியல், சாம்பார் போன்ற உணவு வகைகளே தயார் செய்கிறோம். சௌ சௌ உருண்டை குழம்பு தயார் செய்யும் முறையை பற்றி விளக்கியுள்ளேன். விருந்தினர் வருகையின் போதும், பார்டிகளிலும் இதனை நீங்கள் செய்து அசத்தலாம்.

 

தேவையான பொருட்கள்

சௌ சௌ – 1 கப் (துருவியது)

உருளைக் கிழங்கு – ¼ கப் (துருவியது)

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 2

தக்காளி – 2

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

சீரகத்தூள் – ½ டீஸ்பூன்

கரம் மசாலா பொடி – ½ டீஸ்பூன்

மைதா மாவு – 4 டீஸ்பூன்

சோள மாவு – 2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கொத்த மல்லி தழை – சிறிதளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

 

அரைக்க

முந்திரி பருப்பு – 4 எண்ணம்

பூண்டு – 3 பற்கள்

இஞ்சி – ஒரு துண்டு

 

செய்முறை

முதலில் சௌ சௌ, உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சிறிதளவு விட்டு சௌ சௌ, உருளைக் கிழங்கு ஆகியவற்றை நன்கு சுருள வதக்கி ஆற விடவும்.

 

சுருளாக வதங்கிய நிலையில் சௌ சௌ மற்றும் உருளைக்கிழங்கு
சுருளாக வதங்கிய நிலையில் சௌ சௌ மற்றும் உருளைக்கிழங்கு

 

பின் அதனுடன் மஞ்சள் பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், சோள மாவு, மைதா மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்து பெரிய நெல்லிக் காய் அளவிற்கு உருட்டிக் கொள்ளவும்.

 

எண்ணெயில் பொறிப்பதற்கு முன் சௌ சௌ உருண்டைகள்
எண்ணெயில் பொறிப்பதற்கு முன் சௌ சௌ உருண்டைகள்

 

எண்ணெயில் உருண்டைகளை பொரித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை மிகவும் பொடிதாக அரிந்து கொள்ளவும். தக்காளியை மிக்ஸியில் அடித்து கூழாக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றாகவும், முந்திரிப் பருப்பை தனியாகவும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

 

வெங்காயத்தை வதக்கும் போது
வெங்காயத்தை வதக்கும் போது

 

வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக அரிந்த சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வதங்கிய பின் அதனுடன் தக்காளிக் கூழ், இஞ்சி பூண்டு விழுது, அரைத்த முந்திரி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மல்லி தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலாத் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

 

கொதிக்கும் குழம்பு
கொதிக்கும் குழம்பு

 

கொதித்ததும் பொரித்த கோப்தாக்களைப் போட்டு மல்லி இழை சேர்த்து இறக்கவும். சுவையான சௌ சௌ உருண்டை குழம்பு தயார்.

 

சௌ சௌ உருண்டை குழம்பு
சௌ சௌ உருண்டை குழம்பு

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்க்கலாம்.

சௌ சௌ இளம் பச்சை நிறத்துடன் இளசாக இருக்கும்படி தேர்வு செய்யவும்.

கிரேவி தயார் செய்யும் போது சின்ன வெங்காயத்தை அரைத்து விழுதாகவும் சேர்க்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் பிரஷ் கிரீமை மல்லி இழைகளை சேர்த்த பின் சேர்த்து சௌ சௌ உருண்டை குழம்பு தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.