ஜாங்கிரி பெரும்பாலோர் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் இனிப்பு ஆகும்.
இனிப்பினை விரும்புவர்களின் முதல் தேர்வு ஜாங்கிரி ஆகும்.
எளிமையான முறையில் சுவையான ஜாங்கரி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
இந்த தீபாவளிக்கு ஜாங்கிரி செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு – 100 கிராம் (1 பங்கு)
பச்சரிசி – 25 கிராம் ( ¼ பங்கு)
தண்ணீர் – ¾ பங்கிலிருந்து 1பங்கு வரை
உணவுக் கலர் பொடி – சிறிதளவு
பாகு தயார் செய்ய
சர்க்கரை – 150 கிராம் (1½ பங்கு)
தண்ணீர் – 100 கிராம் (1 பங்கு)
ஏலக்காய்த் தூள் – ½ டீஸ்பூன்
உணவுக் கலர் பொடி – சிறிதளவு
எலுமிச்சை சாறு – இரண்டு கரண்டி
ஜாங்கிரி செய்முறை
உளுந்தம் பருப்பு மற்றும் பச்சரிசி ஆகியவற்றை தனித்தனியே கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் உளுந்தம் பருப்பையும், பச்சரிசியையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியிலோ, கிரைண்டரிலோ ¾ பங்கிலிருந்து 1 பங்கு வரை தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து மையாக அரைக்கவும்.
மாவினை எடுத்து சிறிதளவு தண்ணீரில் விட்டால் ஒட்டாமல் பந்து போல திரண்டு தண்ணீரில் மிதக்கும். இதுவே மாவினை வெளியே எடுக்க சரியான பதம் ஆகும்.
மாவினை தோண்டி அதனுடன் சிறிதளவு உணவுக் கலர் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் மாவினை அடர்த்தியான பாலித்தீன் கவரில் போட்டு மேலே ரப்பர் பேண்ட் போடவும்.
பாலீதீன் கவரின் ஏதேனும் ஒருமுனையை சிறிதாக வெட்டவும்.
பாகு செய்ய
பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பினை சிம்மில் வைக்கவும்.
கரண்டியால் அவ்வப்போது கலவையைக் கிளறி விடவும்.
பத்து நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.
பாகு கம்பிப் பதம் தேவையில்லை. கையில் பிசுபிசுப்பாக ஒட்டினால் போதும்.
சிறிதளவு உணவுக் கலர்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி விடவும்.
ஜாங்கிரியாகச் சுட
வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் சூடானதும் பாலிதீன் கவரில் உள்ள மாவினை ஜாங்கிரியாகச் சுடவும்.
அடுப்பினை மிதமான தீக்கும், சிம்மிற்கும் இடையில் வைக்கவும்.
முதலில் இரண்டு வட்டங்களும், அதன்மேல் குட்டிக்குட்டி வட்டங்களாக ஜாங்கிரியைப் பிழியவும்.
ஜாங்கிரியின் ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிடவும். ஜாங்கிரி எண்ணெயில் 1 நிமிடம் வெந்தால் போதுமானது.
வெந்த ஜாங்கிரிகள்
ஜாங்கிரியை முறுவலாக வேகவிடக் கூடாது.
பின்னர் ஜாங்கிரியின் எண்ணெயை வடித்துவிட்டு சூட்டுடன் சர்க்கரை பாகுகில் சேர்த்து இருபுறமும் திருப்பிவிடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து ஜாங்கிரியை சர்க்கரை பாகுலிருந்து எடுத்து விடவும்.
சுவையான ஜாங்கிரி தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் முந்திரி மற்றும் பாதாம் பருப்பை சீவி ஜாங்கிரியின் மீது தூவலாம்.
ஜாங்கிரிக்கான மாவினை தயார் செய்த பின்பு பாகு தயார் செய்யவும்.
பாலிதீன் கவரின் துவாரம் மிகமெல்லியதாக இருக்குமாறு வெட்டவும்.