இந்திய நாட்டின் வீரப் பெண்மணி என்றவுடன் நம் எல்லோர் நினைவிலும் முதல் இடம் பிடிப்பவர் ஜான்சி ராணி லட்சுமிபாய் ஆவார்.
தனது வீரம், துணிச்சல், தன்னம்பிக்கையுடன் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு இந்திய வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த வீராங்கனை.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட 1857-ல் நடைபெற்ற இந்திய கிளர்ச்சியில் ஈடுபட்ட புரட்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜான்சி ராணி லட்சுமிபாய். இத்தகு வீரமிகு பெண்மணியைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஜான்சி ராணி லட்சுமிபாய் இந்தியாவின் புனிதத் தலம் எனப் போற்றப்படும் வாரணாசி என்ற காசியில் மராட்டிய குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் மௌரியபந்தர் – பகீரதி பாய் ஆவார். மணிகர்ணிகா என்பது இவரது இயற்பெயர் ஆகும்.
இவர் நான்கு வயதில் தாயை இழந்ததால் தனது தந்தையாரின் பராமரிப்பில் வளர்ந்தார். இவர் சிறு வயதிலேயே பள்ளிக் கல்வியுடன் குதிரை ஏற்றம், வாட்பயிற்சி போன்றவற்றை கற்று போர் கலைகளில் சிறந்து விளங்கினார்.
1842ல் வட மத்திய இந்தியாவில் உள்ள ஜான்சி நாட்டை ஆண்ட கங்காதரராவ் நெவல்கர் என்ற மன்னருக்கும் மணிகர்ணிகாவும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் மணிகர்ணிகா இலட்சுமிபாய் என்று அழைக்கப்பட்டு ஜான்சியின் ராணியாகவும் பதவியேற்றார்.
1851ல் லட்சுமிபாய்க்கு தாமோதரராவ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. நான்கு மாதங்களில் இறந்து விட்டது. 1853ல் கங்காதரராவின் உடல்நிலை மோசமடைந்ததால் தனது உறவினர் குழந்தை ஆனந்த்ராவை தத்தெடுக்க முடிவு செய்தனர். பின் அக்குழந்தைக்கு தாமோதரராவ் எனப் பெயரிட்டு தத்தெடுத்தனர்.
இத்தத்தெடுப்பில் பிரச்சினை ஏற்படாதிருக்க உள்ளுர் ஆங்கிலேயேப் பிரதிநிதிகளை சாட்சியாகக் கொண்டு தத்தெடுப்பை நடத்தினர். பின் 1853ம் ஆண்டு அரசர் கங்காதரராவ் மரணமடைந்தார். மன்னரின் மறைவுக்குப்பின் வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் ஜான்சிராணி.
அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் டல்கௌசி, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அவகாசியிலிக் கொள்கையின்படி வாரிசுகள் அற்ற மன்னர்களின் நாட்டை அவர்களின் மறைவுக்குப்பின் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும். எனவே ஜான்சிராணியின் முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
1854ல் ஜான்சி நாட்டை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், ஜான்சி ராணியை அரண்மனையை விட்டு வெளியேற்றி ஜான்சியில் உள்ள ராணி மகாலில் தங்க வைத்தனர்.
ராணியை அரண்மனையை விட்டு வெளியேறச் சொல்லியது ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. அவர் தனது ஆதரவாளர்களைக் கொண்டு தொண்டர் படையை உருவாக்கினார். அப்படையில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பங்கேற்றனர்.
1857ல் முதல் இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியின் மூடியில் பசுவினதும் பன்றியினதும் கொழுப்பு பூசப்பட்டு இருந்தது. வீரர்கள் மூடியினை வாயினால் கடித்து மூடியை அகற்ற வேண்டி இருந்ததால் இந்து மற்றும் முஸ்லீம் வீரர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். எனவே, ஆங்கிலேயர் கவனம் முழுவதும் கிளர்ச்சியை அடக்குவதில் இருந்தது.
இச்சமயத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாய் அவரது அண்டை நாடுகளான குர்ச்சா மற்றும் டாடியாவை கைப்பற்றி ஜான்சியுடன் இணைத்து ஜான்சியின் பாதுகாப்பை அதிகரித்தார். 1857ல் ஏற்பட்ட கிளர்ச்சியில் ஜோக்கன் பாக்கில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளைக் கொலை செய்ததில் ஜான்சி ராணிக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறினர்.
இதன் காரணமாக 1858ல் ஹீரோஸ் தலைமையில் ஆங்கியேப் படை ஜான்சியை முற்றுகையிட்டது. 1857ல் நடைபெற்ற இந்திய கிளர்ச்சியில் ஈடுபட்ட மாவீரனான தாந்தியா தோபேயினால் 20000 வீரர்கள் மற்றும் ஆயுதங்கள் ஜான்சிராணிக்கு உதவும் பொருட்டு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால் அப்படையை ஆங்கியேர்கள் தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றியதுடன் படையில் இருந்த சுமார் 1500 வீரர்களை கொன்றுவிட்டனர். எனவே தாந்தியா தோபேயினால் ஜான்சிராணிக்கு உதவ முடியவில்லை. ஆனாலும் ஜான்சி ராணி ஆங்கிலேயருக்கு அடி பணிய மறுத்துத் தானே தனது படைகளை முன்னின்று நடத்தி துணிச்சலுடன் கடுமையாகப் போரிட்டார்.
இறுதியில் ஆங்கிலேயர்கள் நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி ஜான்சிக் கோட்டையை கைப்பற்றினர். பின் ராணி தனது வளர்ப்பு மகனுடன், கோட்டை மதிற் சுவரிலிருந்து தாவி குதிரையில் ஏறி தப்பித்தார்.
அதிகம் பெண்களைக் கொண்ட பாதுகாப்புப் படை மற்றும் மகனுடன் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும், ராவ் சாஹிப் பேஷ்வா படையுடனும் ஏனைய புரட்சி படைகளுடனும் இணைந்து கொண்டார். இவர்கள் குவாலியருக்குச் சென்று குவாலியர் மகாராஜா ஜியாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து குவாலியரின் கோட்டை ஒன்றைக் கைப்பற்றினர்.
ஆங்கிலேயப் படை குவாலியரை முற்றுகையிட்டது. 1858 சூன் 17ம் தேதி ஜான்சி ராணி ஆங்கிலேயரை எதிர்த்து வீரத்துடன் போரிட்டார். எனினும் படுகாயமடைந்து வீரமரணம் அடைந்தார்.
ராணி லட்சுமிபாயின் வீரம், விடாமுயற்சி, தைரியம், போராடும் குணம் ஆகியவை ஆங்கிலேயரை மிரளச் செய்தன. மேலும் 1857ல் ஏற்பட்ட புரட்சிக்கு பின் இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்து இருந்தது.
ஜான்சி ராணி லட்சுமிபாயின் வீரதீர மிக்க செயல்கள் அவருக்கு வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுத் தந்துவிட்டது என்பது வெளிப்படையான உண்மை.