ஜீவமரணப் போராட்டம் – விளையாட்டுக்கள்

ஆகாய வெளியில் ஓர் அற்புதமான காட்சி.

ஆவேசமாக சிறகுகளை விரித்துக் கொண்டு, ஆர்ப்பரித்தவாறு பறக்கின்றது கழுகுக் கூட்டம். இரைச்சலை உண்டாக்கி அவைகளிடையே பாய்ச்சலை ஏற்படுத்தியது எது?

ஒர் இறைச்சித் துண்டு.

அழகாக, அந்நியோன்னியமாக, ஆனந்தமாக, ஒன்று பட்டக் கூட்டம் போல ஒற்றுமையாகப் பறந்து வந்த அந்தக் கழுகுகள், ஏன் இப்படி காட்டுத் தனமாக ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன? கடித்துக் கொள்கின்றன?

அந்த இறைச்சித் துண்டுதான் காரணம்.

தனக்குத்தான் வேண்டும் என்று ஆசையுடன் ஒரு கழுகு கவ்விக்கொண்டு பறக்க, அது தங்களுக்குத்தான் வேண்டும் என்ற மற்ற கழுகுகள் சேர்ந்து கொண்டு தாக்குகின்றன.

தாக்குதலை பொருட்படுத்தாது முதலில் பறந்த அந்தக் கழுகு, கொத்தலையும், மோதலையும் தாங்க முடியாமல் தத்தளித்துப்போய் இறைச்சித் துண்டைக் கீழே போட்டுவிட, அதற்கு விடுதலை கிடைத்து விடுகிறது.

கீழே விழுந்த இறைச்சித்துண்டை இன்னொரு கழுகு கவ்விக் கொள்ள, அதற்கும் அதே தாக்குதல், அலறிப் புடைத்துக்கொண்டு அது அந்த இறைச்சித் துண்டை கீழேபோட, மற்றொன்று எடுத்துக்கொள்கிறது. அங்கே ஜீவமரணப் போராட்டம்.

ஆசையோடு உண்ண வேண்டும் என்று துண்டினைப் பெறுகின்ற கழுகுக்கு அவதி. அப்படி தனக்குக் கிடைக்கவில்லையே என்று இழந்துபோன கழுகுகள், இராட்சச வெறி கொண்டு திரிகின்றன.

சேர்ந்து திரிந்த சோதரப்பறவை தானே அது என்று எதுவும் எண்ணிப் பார்க்கவில்லை. எதிரியாகப் பாவிக்கத்தான் முயன்றன. முனைந்து தாக்கின.

இறந்து போனாலும் பரவாயில்லை என்று கறித்துண்டை இழந்து நின்ற கழுகுகள் அத்தனையும் தாக்கின. தகர்த்தன.
இதிலிருந்து ஒன்றை நாம் உணர முடிகிறது.

இருப்பார்க்கும் இல்லார்க்கும் இடையே மண்ணுலகில் நடைபெறுகின்ற ‘பொருள் உரிமைப் போராட்டம்’ தான் வானவெளியிலும், வாயில்லா ஜீவராசிகளிடையே நடைபெறுகின்றன.

மனிதர்களின் ஜீவமரணப் போராட்டம்

அறிவு இருக்கிறதோ இல்லையோ, ஆலையாய் எரியும் அனல் வயிற்றுக்கு அன்றாடம் எழுகின்ற அகோரப் பசிதான் அத்தனை இயக்கங்களுக்கும் காரணமாய் அமைந்து விடுகிறது.

பறவைகள் பாய்ச்சலைப் போல்தான், பகுத்தறிவு படைத்த மனிதக் கூட்டத்திலும் பதுக்கலும் பிதுக்கலும், பாய்ச்சலும் பறித்தலுமாய் நிகழ்கின்றன.

இருப்பவரை நோக்கி இல்லாதவர்கள் கூட்டம் பாய்கின்றன. ஏதோ ஒரு கொள்கை என்ற பெயரால், இலட்சியம் என்ற குரலால், எல்லாமே வேகவெறியுடன் நடைபெறுகின்றன.

இருப்பவர்கள் ஒரு கூட்டமாக இணைந்து கொள்கின்றார்கள். இல்லாதவர்கள் எல்லோரும் ஒரு கும்பலாகக் குமைந்து கொள்கின்றார்கள்.

இங்கே நடப்பதுவும் ஜீவமரணப் போராட்டம்; புலியாட்டம். அத்துடன் கிலி ஓட்டமும் நடக்கிறது. இதைத்தான் விளையாட்டுக்கள் எல்லாமே பிரதிபலிக்கின்றன.

இரண்டாகப் பிரிந்து கொண்டு தாக்கிக் கொள்கின்ற பறவைகள் போல ஒருவரை ஒருவர் தாக்கித் தாழ்த்திக் கொண்டு உரிமையைப் பெற்று முன்னேற முயல்வது போலவே, விளையாட்டுலகிலும் இருக்கிறது.

ஆமாம்! அது மனித வாழ்க்கையைத் தானே நிலைக் கண்ணாடியாக நின்று பிரதிபலித்துக் காட்டுகிறது.

எல்லா விளையாட்டுக்களிலும் இருக்கின்ற பந்து தான் இதற்கு உதாரணம்.

எஸ்.நவராஜ் செல்லையா

 

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.