ஜோசியக்கிளி – சிறுகதை

சியாமளாவும், ஷீலாவும் முன்னால் நடந்து செல்ல, அவர்கள் பின்னாலேயே கோபிநாத் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

ஷீலா அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்தவாறே வந்து கொண்டிருந்தாள்.

அன்று வெள்ளிக்கிழமையாதலால் கடைவீதி முழுக்க சாம்பிராணியின் நறுமணம் மூக்கை துளைத்தது.

யானை ஒன்று, மணியோசையுடன் ஆடி அசைந்து வந்து ஒவ்வொரு கடைவாசலிலும் நின்று துதிக்கையை நீட்டியது.

கல்லாப்பெட்டியிலிருந்து கையில் கிடைத்த பணத்தை எடுத்து வந்து யானையின் துதிக்கையில் போட்டு குனிந்து நிற்க, அது தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்த அழகை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் மற்றவர்கள்.

விநாயகப்பெருமானே நேரில் வந்து ஆசீர்வதிக்கிறாற்போல் அவர்களுக்கு ஓர் திருப்தி. உள்ளத்தில் இனம் புரியாத நிம்மதி.

இவைகளையெல்லாம் நோட்டமிட்டவாறே வந்து கொண்டிருந்த கோபிநாத் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

“சியாமளா உங்கப்பாவிடம் ஸ்கூட்டருக்குப் பதிலாய் யானை ஒன்றை வாங்கித்தரச் சொல்லியிருக்கலாம். ராஜா மாதிரி யானை மேல் உட்கார்ந்து கொண்டு சம்பாதிக்கிறான் பாரு.

ஒவ்வொரு கடைவீதியிலும் குறைந்தபட்சம் ஆயிரம், இரண்டாயிரம்கூட கிடைக்கலாம். வாரம் ரெண்டுநாள் இப்படி வந்துட்டுப்போனா மாசம் ஐந்தாயிரம், ஆறாயிரம் சுளையாய் கிடைக்கும் போலிருக்கு. எப்படியெல்லாம் பிழைக்கிறாங்க பாரேன்.”

“ஐயோ, உங்க புத்தி மாறவே மாறாதா. கொஞ்சம் வாயை மூடிக்கிட்டுத்தான் வாங்களேன்.”

இப்போது யானை வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தவர்களிடமும் துதிக்கையை நீட்ட ஆரம்பித்தது.

ஆவலின் உச்சகட்டத்திற்கு போயிருந்த ஷீலா, சியாமளாவிடம் தொண தொணக்க ஆரம்பித்தாள். “அம்மா, அம்மா, ஐஞ்சு ரூபாய் தாயேன்.”

சியாமளா ஹேண்ட் பேக்கைத் திறந்த போது “ஏய், ஷீலா, பேசாம வரமாட்டே?” எனச் சீறினான் கோபிநாத்.

அதே வேகத்தில் சியாமளாவைப் பார்த்து “நீ இப்படிச் செல்லம் கொடுத்து கொடுத்துத்தான் இவளைக் கெடுத்து வச்சிருக்கே. எதைப் பார்த்தாலும் உடனே வேணும்னு… அது என்ன கெட்ட பழக்கம்?” என்றான்.

“என்ன இப்போ பெரிசா கேட்டுட்டா? இதுக்குப் போய் இப்படிச் சீறி விழுறீங்க? நீங்களும் குழந்தையாய் இருக்குறப்ப இப்படித்தான் இருந்திருப்பீங்க. குழந்தைங்கன்னா அப்படித்தான்.”

“ஆமாண்டி எனக்கே புத்தி சொல்லு. கண்டதையெல்லாம் பார்த்து ஆசைப்படற மாதிரி படிப்பிலும் ஆர்வம் இருக்கணும்.”

“சரி, சரி உங்க ஆர்ப்பாட்டத்தை எல்லாம் இங்கே பப்ளிக்ல காட்டாதீங்க.”

ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்ததும், கை கால்களை சுத்தம் செய்து கொண்டு சாப்பிட அமர்ந்தனர் எல்லோரும். ஷீலா தூங்கி விழுந்து கொண்டிருந்தாள்.

சியாமளா அவளிடம் “இந்தாம்மா, இந்த பாலைக் குடிச்சிட்டுப் போய் தூங்கு. சாப்பிடலேன்னா பரவாயில்லை.”என்றாள்.

“வெளியே போனால், போனமா, வேலையை முடிச்சோமா, வந்தோமான்னு இருக்கணும். ஹோட்டலைப் பார்த்தால் உடனே உள்ளே நுழைய வேண்டியது. ஒரு பிடி பிடிச்சிட்டு வீட்டுக்கு வந்து பசியில்லைன்னு சொல்லிட்டுப் படுக்கையிலே விழ வேண்டியது.

வீட்ல எல்லாம் செஞ்சு வச்சுட்டு அது என்ன வெளியில சாப்பிடற பழக்கம்? இப்படி சாப்பாட்டை வேஸ்ட் செய்யறது எனக்கு கொஞ்சம்கூடப் பிடிக்கலே.

பஸ்ஸைவிட்டு இறங்கினால், வீட்டுக்கு நடந்து வந்தால் பரவாயில்லை. குழந்தையால் நடக்க முடியாதுன்னு ஆட்டோ பிடிச்சு வந்தா எப்படி பசி எடுக்கும்?”

சியாமளா கோபிநாத்தை முறைத்துப் பார்த்தாள். “இப்போ என்ன செய்யணுங்கிறீங்க?”

கோபிநாத் வழக்கம்போல் கத்த ஆரம்பித்தான். சியாமளா சொல்வது எதையும் அவள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

பெயருக்கு வாயில் கொஞ்சம் அள்ளிப் போட்டுக் கொண்டு, கை கழுவினாள். போட்டது போட்டபடி கிடக்க, புடவைத் தலைப்பில் கையைத் துடைத்துக் கொண்டு பெட்ரூம் சென்று விட்டாள்.

ஷீலாவுக்கு ஏழு வயது. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் அப்படி ஒன்றும் மோசம் எனச் சொல்லிவிட முடியாது. முதலிடம் வராவிட்டாலும், முதல் ஐந்து ராங்க்கிற்குள் வருபவள்.

ஷீலா டி.வி. முன் அமர்ந்ததால் கோபிநாத்திற்கு பிடிக்காது.

பெயருக்காக கொஞ்ச நேரம் மாலை நேரத்தில் விளையாடிவிட்டு வரலாம் என்றால் அவ்வளவுதான்.

எந்நேரமும் புத்தகமும், கையுமாக இருக்க வேண்டும் எனக் கெடுபிடியுடன் இருப்பான் கோபிநாத்.

எப்போதும் அதட்டல், உருட்டல், மிரட்டல்தான். சியாமளா இவனுக்கு நேர் எதிர். அதனால் கோபிநாத்தைவிட சியாமளாவிடம்தான் ஷீலாவுக்கு ரொம்ப ஒட்டுதல்.

வாழ்க்கையை ரசித்து வாழத் தெரியாத ஓர் மனித ஜென்மமாக கோபிநாத் அவதரித்திருப்பதாக சியாமளா நினைப்பாள்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் அலுவலகம் செயல்படக்கூடாதா என ஏங்குவாள். ‘சண்டே’ வந்துவி ட்டால் சண்டைதான் இருக்கும் வீட்டில்.

மறுநாள் காலை. அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த சமயம் அழைப்பு மணி ஒலிக்க, கோபிநாத் சென்று கதவைத் திறந்தபோது அவனது அப்பாவும், அம்மாவும் சூட்கேஸ் சகிதம் நின்றிருந்தார்கள்.

முகம் மலர அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான் கோபிநாத். வழக்கமான நல விசாரிப்புகள். பேத்தி ஷீலாவுடன் கொஞ்சல் எல்லாம் முடிந்தன.

குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுத்துக் கொள்ள சொல்லி அப்பா அம்மாவிடம் கூறியவன், அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

ஷீலாவுக்குப் பள்ளி கோடை விடுமுறை. தாத்தா, பாட்டி வேறு வந்திருந்ததால் ஒரே குஷி மூடில் இருந்தாள்.

தாத்தா, பாட்டி வாங்கி வந்திருந்த டிரெஸ், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை ஆசை ஆசையாய் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போனாள். பாட்டியுடன் வெளியே கிளம்பிப் போய் விரும்பியவற்றை கேட்டு வாங்கிக் கொண்டாள்.

மாலை கோபிநாத் வந்தான். வீட்டுக்குள் நுழையும் போதே பாட்டியுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த ஷீலாவிடம் “ஷீலாக்குட்டி, கணக்குப் போட்டுப் பார்த்தியா? காலையில் போகும்போது என்ன சொல்லிட்டுப் போனேன்? என்ன விளையாட்டு எப்போதும்? போ, புத்தகத்தை எடுத்துப் படி” என கர்ஜிக்க ஆரம்பித்தான்.

“டேய், என்னடா இது? குழந்தையைப் போய் எப்போதும் படி படின்னு? அவ என்ன மண்டுவா? இல்லை படிக்காம இருக்காளா? தாத்தா, பாட்டி வந்திருக்காங்களேன்னு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கா. அது பொறுக்கலியா உனக்கு?” என அம்மா கோபிநாத்தை கண்டித்தாள்.

கோபிநாத் எதுவும் பேசாமல் சென்று விட்டான். உடை மாற்றி, ஹாலில் வந்து அமர்ந்தான். நிதானமாக அனைவரும் பேச ஆரம்பித்தார்கள்.

“லீவுக்கு எப்போதுமே குழந்தையை அனுப்பறது இல்லை. இந்த தடவையாவது சியாமளாவும், ஷீலாவும் எங்களோட வந்து ஒரு மாசம் இருக்கட்டும்” அப்பா சொன்னார்.

உடனே கோபிநாத் “இல்லப்பா, ஷீலாவை டான்ஸ் கிளாசில் சேர்த்திருக்கிறேன். அதுமட்டுமில்லே, டியூசன் கிளாஸ் வேறு அவ போகணும். நான் ஆபீஸ் போயிடுவேன். சியாமளாதான் அவளைக் கூட்டிப்போகணும். இன்னொருமுறை பார்க்கலாம்பா” என்றான்.

“என்னடா? உன் மனசுல நீ என்னதான் நினைச்சிட்டிருக்கே? அவனவன் குழந்தையில்லைன்னு தவம் கிடந்து, கோயில் குளம்னு சுத்திக்கிட்டு அலைகிறான். ஆசை ஆசையாய் ஒரே ஒரு பெண் உனக்கு.

குழந்தையை எப்படி வளர்க்கணும்னு உனக்குத் தெரியலையே. இளம் குருத்துடா அந்தக் குழந்தை. வருஷம் முழுக்க ஸ்கூல், கிளாஸ், படிப்புன்னா எப்படி?

குழந்தைகளுக்கு ரெண்டு மாசமாவது ரெஸ்ட் வேணுன்னுதான் லீவே விடறாங்க. அந்த லீவுலகூட அவங்களை சுதந்திரமா, சந்தோஷமா இருக்கவிடாம, நம்ம கட்டுப்பாட்டுக்குள்ளேயே வச்சிக்கிட்டிருந்தா அவங்க மனநிலை நிச்சயமா பாதிக்கும்.

பலூனை வாயால் ஊதி ஓரளவு பெரிசாக்கி விளையாடிக்கிட்டிருந்தா, பலூனுக்கும் நல்லது விளையாடவும் நல்லது. எல்லை மீறி ஊதிக்கிட்டே போனா பலூன் வெடிச்சிடும்.

அதமாதிரிதான் குழந்தைகளை வளர்க்கிறதும். அவங்களைப் பேணிக் காப்பது என்பது ஒரு கலை. அவங்க போக்கிலேயே போய், மிதமாய், இதமாய் பேசி ரொம்ப சாதுர்யமாய் நம்ம வழிக்குக் கொண்டு வரணும்.

கண்டிப்பும், மிரட்டலும், அதட்டலும் எல்லா நேரத்திலும் பயன் தராதுப்பா. எல்லாமே ஒரு அளவோட இருந்தாதான் நல்லது. நீ குழந்தைகிட்ட காட்டற கண்டிப்பு ரொம்ப ஓவர். எங்களுக்கும் பேத்தியோட கொஞ்சிப் பேசி விளையாடி சந்தோஷமாயிருக்கணுங்கிற ஆசை இருக்காதா?”

கோபிநாத்தால் எதுவும் பேச முடியவில்லை.

“சரிப்பா, உங்க இஷ்டம் போல செய்யுங்க. உங்களோட ஷீலாவையும், சியாமளாவையும் அழைச்சிட்டுப் போங்க” என்றதும் யாரும் பேசவில்லை.

சியாமளா அனைவரையும் சாப்பிட அழைத்தாள். ஹாலிலேயே அமர்ந்து எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

“ஏண்டி, இவனுக்குப் பிடிக்கும்னு நம்ம வீட்டுத் தோட்டத்து நெல்லிக்காய் ஊறுகாய் கொண்டு வந்தியே மறந்திட்டியா? கோபிக்குப் போடு” என்றார் அப்பா.

“எடுத்த எடுப்பிலேயே ஊறுகாயா? அவனுக்குப் பிடிக்குமேன்னு போளி செஞ்சு கொண்டு வந்திருக்கேன். முதல்ல அதை எடுத்து கொடுக்கிறேன்” என்றாள் கோபியின் அம்மா.

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் டி.வி. முன் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.

கோபிநாத்தின் அம்மா ஹாலில் தரையிலேயே அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டு சுவற்றில் சாய்ந்தவாறே டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கோபிநாத் அம்மா மடியில் தலை வைத்து கால் நீட்டியவாறே டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான்.

பெட்ரூமில் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துப் படித்துக் கொண்டிருந்த ஷீலா மெதுவாக ஹாலை எட்டிப் பார்த்தாள். அவளுக்கும் டி.வி.யில் சீரியல் பார்க்க ஆசை. கோபிநாத் ஹாலில் இருந்ததால் பயம்.

அவன் மட்டும் இல்லாமல் இருந்தால் குட்டிக் கைகளை மாலையாகப் போட்டுக்கொண்டு பாட்டியை அணைத்தபடி அவளும் சீரியலைப் பார்த்து ரசிப்பாள். ஹால் ஒரே அமர்க்களமாக இருக்கும். என்ன செய்ய?

“தாத்தாவும் பாட்டியும் அப்பா மீது எவ்வளவு பிரியமாய் இருக்காங்க. ஆசை ஆசையாய் அப்பாவுக்குப் பிடித்ததை செஞ்சுக் கொண்டு வந்திருக்காங்க. பாட்டி மடிமீது தலை வைத்து அப்பா எவ்வளவு சுதந்திரமா படுத்திருக்கிறார்” அந்த பிஞ்சு உள்ளம் ஏங்கியது.

தன்னோடு கூடபடிக்கும் லதா, கேத்தரின், ஆயிஷா எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாய், சுதந்திரமாய் அவரவர் அப்பா அம்மாவுடன் இருக்காங்க. அவரவர்களின் அப்பாதான் காரிலோ, ஸ்கூட்டரிலோ கொண்டு வந்து விட்டுக் கூட்டிக் கொண்டு போவார்கள்.

ஆபீஸ் கிளம்பிக்கிட்டிருந்த அப்பாவிடம் ஒருநாள் தன்னையும் ஸ்கூட்டரில் டிராப் செய்யச் சொன்னதுக்கு எப்படிக் கத்திவிட்டார்? சொகுசு கூடாதாம். தனியாய் பஸ்ஸில் போய்வர பழகிக்கணுமாம்.

அனைத்து வசதிகளும் இருந்தும், எல்லோரும் இருந்தும், ஒருவித வெறுமையின் பிடியில் சிக்கியிருப்பதாகவே, தங்கக் கூண்டிற்குள் சிறைபட்ட பறவையாகவே தன்னை நினைத்தாள் ஷீலா.

சிந்தனையிலேயே வெகுநேரம் மூழ்கிப் போயிருந்த அந்தப் பிஞ்சு மனம் தன்னையுமறியாமல் உறங்கிப் போனது.

பொழுது விடிந்தது. வழக்கம் போல் கோபிநாத், ஷீலாவிடம் கெடுபிடியைக் காட்ட ஆரம்பித்தான்.

சாவி கொண்டு முடக்கிவிடப்பட்ட யந்திரமாய் ஷீலா அரக்கப் பரக்க டியூசன் கிளாஸ் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு, குளித்து முடித்து டிரெஸ் செய்து எதையோ சாப்பிட்டு, ஷூக்களை மாட்டிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே வர, வீதியில் இறங்கி டியூசன் சென்டர் நோக்கி வேக வேகமாகய் நடக்க ஆரம்பித்தாள்.

சுதந்திரமாகப் பறந்து திரியும் கிளிகளிலிருந்து ஒன்றைப் பிடித்து பறந்துவிட முடியாதபடி இறக்கையைப் பிய்த்து, கூண்டுக்குள் அடைத்து அதற்கு வேண்டிய பால், பழம், தானியங்களைத் தாராளமாக வழங்கி தன் இஷ்டத்திற்கு அதை ஆட்டிப் படைக்கும் கிளி ஜோசியக்காரனுக்கும் கோபிநாத்திற்கும் என்ன வித்தியாசம்?

தாத்தா பாட்டியுடன் இன்னும் ஓரிரு நாட்களில் கிளம்பிச் சென்றாலும் ஷீலாக் குட்டியைப் பொறுத்தமட்டில் அப்பயணம் ஓர் தற்காலிக சந்தோஷமே. சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு சியாமளாவுடன் திரும்பிவந்து ஜோஸியக் கிளியாய் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு தானே ஆக வேண்டும்?

This image has an empty alt attribute; its file name is RajaGopal.webp

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.