ஜோதிர் லிங்கம் என்றால் ஒளிமயமான லிங்கம் என்று பொருள். ஒளி வடிவில் லிங்கத்தில் சிவபெருமான் அருளுவதாகக் நம்பப்படுகிறது. இந்தியாவில் 12 சிவன் கோவில்கள் இத்தகைய சிறப்பைப் பெற்றுள்ளன.
ஜோதிர் லிங்க வழிபாடு என்பது இந்துக்களால் சிவபெருமானை வழிபடும் விதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவ்வகை லிங்கங்களை திருவாதிரை நாட்களில் தரிசிப்பது சிறப்பு வாய்ந்தாகும்.
ஜோதிர் லிங்கங்களில் இரண்டு கடற்கரைகளிலும், மூன்று மலைகளிலும், நான்கு நதிக்கரைகளிலும், மூன்று ஊர் பகுதிகளிலும் அமைந்துள்ளன.
ஜோதிர் லிங்கம் அமையப்பெற்ற 12 சிவன் கோவில்கள் எவை என்று அறிவோம்.
1.சோமநாதர் ஆலயம்
சோமநாதர் ஆலயம் குஜராத் மாநிலம் கிர்சோம்நாத் மாவட்டத்தில் பிரபாசபட்டினம் என்னும் ஊரில் அரபிக்கடற்கரையில் அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்கங்களில் இத்தலம் முதன்மையானதாகப் போற்றப்படுகிறது.
இக்கோயில் கஜினி முகமது உள்ளிட்டோரால் ஆறு முறை இடிக்கப்பட்டது. ஏழாவது முறையாக இக்கோயில் கட்டப்பட்டு 01.01.1995-ல் பொது மக்கள் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இக்கோயில் சாளுக்கியர் கட்டிட முறைப்படி பிரமிடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
2.மல்லிகார்ஜூனர் ஆலயம்
மல்லிகார்ஜூனர் ஆலயம் ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் என்னும் ஊரில் மலையின் மேல் அமைந்துள்ளது. இத்தல இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடியுள்ள பாடல்கள் தேவாரத்தில் இடம்பெற்றுள்ளன.
இத்தலம் புராணத்தில் திருப்பருப்பதம் என்று அழைக்கப்படுகிறது. நந்தியெம்பெருமான் மலை வடிவில் இத்தல இறைவனை சுமப்பதாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் சிவானந்தலகரி என்னும் நூலைப் படைத்தார். இக்கோயில் 18 மகாசக்தி பீடங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
3.மகாகாலேஸ்வரர் ஆலயம்
மகாகாலேஸ்வரர் ஆலயம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜைனியில் சிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது.
முதல் தளமான தரைத் தளத்தில் மூலவர் மகாகாலேஸ்வரர் உள்ளார். இவர் தெற்குபார்த்த படி உள்ள தட்சிணாமூர்த்தி வடிவமாகக் கருதப்படுகிறார். இரண்டாவது தளத்தில் ஓங்காரேஸ்வரர் உள்ளார். மூன்றாவது தளத்தில் நாகசந்திரசேகரர் உள்ளார்.
நாகபஞ்சமி அன்று மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும். 12 ஜோதிர் லிங்கங்களில் மகாகாலேஸ்வரர் மட்டுமே சுயம்பு மூர்த்தி ஆவார். இவருக்கு மனிதச் சாம்பல் கொண்டு அபிசேகிக்கப்படுகிறது.
4.ஓங்காரேஸ்வரர் ஆலயம்
ஓங்காரேங்வரர் ஆலயம் மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் நர்மதை ஆற்றின் கரையில் சிவபுரியில் அமைந்துள்ளது. இவ்வாயலத்தைச் சுற்றிலும் ஓம் என்னும் வடிவில் தீவாகக் காட்சியளிக்கிறது.
பௌர்ணமி, கார்த்திகை, நவராத்திரி போன்றவை இங்கு கோலாகலமாக் கொண்டாடப்படுகின்றன. இக்கோயிலுக்கு அருகில் அமரேஸ்வரர் என்னும் கோயில் அமைந்துள்ளது.
5.கேதாரேஸ்வரர் ஆலயம்
கேதாரேஸ்வரர் ஆலயம் உத்ரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது.
இத்தலம் இமயமலையின் வடக்குப் பகுதியில் பனிமலைகளாலும், பனியாற்றினாலும் சூழப்பட்டுள்ளது. இக்கோயில் கங்கையின் துணை நதியான மந்தாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இக்கோயில் பருவநிலையின் காரணமாக ஏப்ரல் (அட்சய திருதி) முதல் அக்டோபர் (தீபாவளி) வரை பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டிருக்கும்.
இக்கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டு பின் ஆதிசங்கரரால் புணரமைக்கப்பட்டது. இக்கோயிலின் அருகே ஆதிசங்கரர் ஜீவசமாதி உள்ளது. இத்தல இறைவனுக்கு கன்னட மொழியிலே அர்ச்சனை செய்யப்படுகிறது.
இங்கு இறைவன் முக்கோண வடிவில் காட்சியளிக்கிறார். இத்தல இறைவனைப் பற்றி திருநாவுக்கரசர் தேவாரத்தில் பாடியுள்ளார். இக்கோயிலுக்கு கௌரிகுண்ட் என்னும் இடம் வரை சாலையில் பயணித்து பின் அங்கிருந்து 14 கி.மீ தொலைவு மலை ஏறியே செல்ல வேண்டும்.
6.பீமசங்கரர் ஆலயம்
பீமசங்கர் ஆலயம் மகாராஷ்டிர மாநிலம் புனேவிலிருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் போர்கிரி என்னும் ஊரில் சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ளது. இங்கிருந்தே கிருஷ்ணாவின் துணை நதியான பீமா நதி உற்பத்தியாகிறது. இக்கோயில் நாகரா என்னும் கட்டிடக்கலை அமைப்பைச் சார்ந்தது.
நானாபட்னாவிஸ் என்பவர் இக்கோயில் சிகரத்தை அமைத்தார். மராட்டிய மன்னன் சிவாஜி இக்கோயிலுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். இக்கோயில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7.திரியம்பகேஸ்வரர் ஆலயம்
திரியகம்பகேஸ்வரர் ஆலயம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் பிரம்மகிரி என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு அருகில் இருந்து தான் தென்னிந்திய நதிகளில் நீளமான கோதாவரி ஆறு உற்பத்தியாகிறது.
இத்தலமூலவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் முக அமைப்போடு விளங்குவது சிறப்பாகும். இக்கோயில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
8.வைத்திய நாதர் ஆலயம்
வைத்திய நாதர் ஆலயம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேவ்கர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனை வணங்கியே ராவணன் வரங்கள் பல பெற்றான் என்று கூறப்படுகிறது.
இத்தலதிற்கு ஆனி மாதத்தில் லட்சக்கணக்கான யாத்திரீகர்கள் வருகிறார்கள். இவர்கள் சுல்தான்கஞ்ச் என்னுமிடத்தில் இருந்து கங்கை நீரினை எடுத்துக் கொண்டு சுமார் 100 கி.மீ தூரம் நடந்தே வருகிறார்கள். இப்புனிதப் பணயம் மேற்கொள்வோர் தாக்பாம் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் புனிதப்பயணத்தின் போது எங்கும் நிற்பதில்லை என்பது தனிச் சிறப்பு.
9.நாகேஸ்வரர் ஆலயம்
நாகேஸ்வரர் ஆலயம் குஜராத் மாநிலத்தில் துவாரகைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடம் ஆதிகாலத்தில் தாருகா வனம் என்றழைக்கப்பட்டது. இவ்விடத்தை பாம்புகளின் அரசனான தாருகன் என்பவன் ஆட்சி செய்து வந்தான்.
அவன் சுப்பிரியா என்னும் சிவபக்தையை சிறைப் பிடித்து துன்புறுத்தி வந்தான். சிவபக்தையின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் தாருகனைத் தண்டித்தார். இறுதியில் தாருகன் சிவனிடம் நாகேஸ்வரர் என்னும் பெயரில் கோயில் கொண்டு அருளுமாறு வேண்டினான்.
நாமதேவர் என்னும் சிவபக்தர் ஊர் மக்களால் விரட்டப்பட்டு ஊரின் தென்திசையில் சென்று இறைவனைக் குறித்துப் பாடினார். நாமதேவரின் பாடல்களைக் கேட்கும் பொருட்டு மூலவர் தென்திசை நோக்கித் திரும்பினார் என்று கருதப்படுகிறது. இன்றும் இங்கு மூலவர் கருவறை தென்திசை நோக்கியும், கோபுரம் கிழக்கு திசை நோக்கியும் உள்ளன.
10.இராமேஸ்வரர் ஆலயம்
இராமேஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னும் ஊரில் வங்காள விரிகுடா கடற்கரையோரம் அமைந்துள்ளது.
இராமன் இங்கு இராவணனைக் கொன்ற பாவம் நீங்குவதற்காக சிவனை வழிபட்டதாக இக்கோயில் தல வரலாறு குறிப்பிடுகிறது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் போன்றோர்களால் பாடல் பெற்ற தலம் இது.
இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை வகையைச் சார்ந்தது. 1000-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் உலகப் புகழ் பெற்றது.
இக்கோயிலின் அக்னி தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு காசியில் உள்ள விஸ்வநாதருக்கு அபிசேகம் செய்தும், பின் காசியிலிருந்து கங்கைத் தீர்த்தத்தை எடுத்து வந்து இராமநாதருக்கும் அபிசேகம் செய்யப்படுகிறது. இந்நிகழ்வு காசி-இராமேஸ்வரத் தல யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத் தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
11.விஸ்வநாதர் ஆலயம்
விஸ்வநாதர் ஆலயம் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் இந்துக்களின் புனித நகரம் எனப் போற்றப்படும் வாரணாசியில் கங்கை நதியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இத்தலம் புராணகாலத்தில் ஆனந்த வனம், அவிமுக்தம், மகாமயானம் என்னும் பெயர்களால் வழங்கப்பட்டது.
இக்கோயில் மகாராணி அகல்யாபாயினால் கட்டப்பட்டது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, நவராத்திரி, தீபாவளி, நவராத்திரி போன்ற விழாக்கள் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறன. இத்தல இறைவனுக்கு பக்கதர்களே அபிசேகம் செய்வது சிறப்புக் கூறு ஆகும்.
இக்கோயிலில் கங்கை ஆர்த்தி எனும் கங்கை நதியை வழிபடும் நிகழ்வு நடத்தப்படுகிறது.
12.குஸ்மேஸ்வரர் ஆலயம்
குஸ்மேஸ்வரர் ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒளரங்காபாத் அருகில் உள்ளது. எல்லோராவில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் மராட்டிய மன்னன் சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போன்ஸ்லேயால் திருத்தி அமைக்கப்பட்டது.
1000 ஆண்டுகள் பழமையான இவ்வாலயம் சிறப்பு வாய்ந்த சிற்பச் செதுக்கல்களையும், தனிச் சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலையையும் கொண்டுள்ளது. இத்தல இறைவன் சிவபக்தையான குஸ்மா என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறார். 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் இது பன்னிரெண்டாவது ஆகும்.
ஒளி வடிவில் விளங்கும் ஒப்பிலானை நாமும் உள்ளத்தில் வைத்து வாழ்வில் உய்வோம்.
Comments
“ஜோதிர் லிங்கம் – 12 சிவன் கோவில்கள்” மீது ஒரு மறுமொழி
[…] புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் […]