ஞானபீட விருது இந்தியாவில் இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். அறிவின் மேடை என்ற பொருளில் இவ்விருதுக்கு ஞானம்பீடம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இவ்விருதினை பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகம் வழங்கி வருகிறது.
இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பினை ஆற்றியவர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அங்கரீக்கப்பட்ட 22 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அமரர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதில்லை.
இவ்விருது 1965 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2016 வரை மொத்தம் 57 நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருது தங்கமும் செம்பும் கலந்த பட்டயம், பாராட்டுப் பத்திரம், ஞான கடவுளான கலைமகளின் பித்தளை சிலை மற்றும் ரூபாய் 11 இலட்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
பாரதிய ஞானபீடம் ஆனது டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்திரிக்கையை வெளியிடும் சாகு ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.
இவ்விருது பெற்ற முதல் எழுத்தாளர் சங்கர குருப் ஆவார். அவர் தான் மலையாளத்தில் எழுதிய ஓடக்குழல் என்ற படைப்பிற்காக இவ்விருதினைப் பெற்றார்.
இவ்விருதினைப் பெற்ற முதல் பெண்மணி ஆஷாபூர்ணா தேவி ஆவார். இவர் இவ்விருதினை 1976-ல் ப்ரதம் ப்ரதிஸ்ருதி என்ற வங்காள மொழி படைப்பிற்காகப் பெற்றார்.
இதுவரை தமிழ் மொழிக்காக இருவர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.
1975-ல் அகிலன் தனது சித்திரப்பாவை படைப்பிற்காகவும், 2002-ல் ஜெயகாந்தன் தமிழ் இலக்கியத்திற்கு தனது வாழ்நாள் பங்களிப்பிற்காகவும் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.
விருது வழங்கக் காரணம்
பாரதிய ஞானபீடம் என்ற ஆராய்ச்சி மற்றும் கலாச்சார நிறுவனம் 1944-ல் சாகு சாந்தி பிரசாத் ஜெயின் என்பவரால் நிறுவப்பட்டது. 1961-ல் இந்நிறுவனம் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று விரும்பியது.
இதனால் சிறந்த படைப்பினை விருதுக்கு தேர்வு செய்யும் முறையானது பல்வேறு எழுத்தாளர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வுக்குழுவினை இந்நிறுவனம் அமைத்தது.
இவ்விருதிற்கு சிறந்த படைப்பினை தேர்வு செய்யும் அமைப்புகள்
இவ்விருதிற்கு எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக் கழகங்கள், மொழி மற்றும் இலக்கிய கழகங்கள் ஆகியோர்களிடமிருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு மொழிக்கும் ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அந்தந்த மொழிகளில் வரும் படைப்புகளை பற்றி ஆராய்ந்து சிறந்ததை தேர்வுக்குழுவிற்கு பரிந்துரை செய்யும்.
ஆலோசனைக் குழுவில் அந்தந்த மொழியினைச் சார்ந்த இலக்கிய விமர்சகர்கள் மற்றும் அறிஞர்கள் மொத்தம் மூன்று பேர் இடம் பெறுவர். ஆலோசனைக் குழுவானது ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் மாற்றி அமைக்கப்படும்.
ஆலோசனைக் குழு பரிந்துரை செய்த படைப்புகளை தேர்வு குழு ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் மொழி பெயர்த்து ஆராய்ந்து சிறந்ததைத் தேர்வு செய்யும்.
தேர்வுக்குழுவில் ஏழு முதல் பதினொன்று நபர்கள் இடம் பெறுவர். தேர்வு குழுவில் இடம் பெறும் நபர்கள் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் மாற்றி அமைக்கப்படுவர்.
தேர்வுக் குழு நபர்கள் சில நேரங்களில் அடுத்த ஆறு ஆண்டுகள் வரையிலும் தேர்வுக் குழுவில் நீட்டிக்கப்படுவர். ஒவ்வொரு ஆண்டும் விருதினைப் பெறும் படைப்பாளியை தேர்வுக்குழுவே இறுதி செய்யும்.
இவ்விருதிற்கு தேர்வு செய்யப்படும் முறை
1982 ஆம் ஆண்டுவரை ஓர் படைப்பாளியின் ஒரு குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் படைப்பாளியின் வாழ்நாளில் (அதாவது விருது வழங்குவதற்கு முந்தைய இருபது ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்படும்) இலக்கியத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது 1965 முதல் 1981 வரை பாராட்டுப் பத்திரம், ஞான கடவுளான கலைமகளின் பித்தளை சிலை மற்றும் ரூபாய் 1 இலட்சம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. அதன்பின் பணமதிப்பு ரூபாய் 1.5 இலட்சங்களாக மாற்றப்பட்டது. 2015-ல் பண மதிப்பு ரூபாய் 11 இலட்சங்களாக உயர்த்தப்பட்டது.
இதுவரையிலும்
பத்து விருதுகள் இந்தி மொழிக்காவும்,
எட்டு விருதுகள் கன்னட மொழிக்காகவும்,
ஆறு விருதுகள் பெங்காலி மொழிக்காகவும்,
ஐந்து விருதுகள் மலையாள மொழிக்காகவும்,
குஜராத்தி, மராத்தி, ஒடியா, உருது போன்ற மொழிகளுக்காக முறையே நான்கு விருதுகளும்,
மூன்று விருதுகள் தெலுங்கு மொழிக்காகவும்,
அஸ்ஸாமி, பஞ்சாபி, தமிழ் போன்ற மொழிகளுக்காக முறையே இரண்டு விருதுகளும்,
காஷ்மிரி, கொங்கணி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுக்காக முறையே ஒரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
– வ.முனீஸ்வரன்