ஞானம் பிறந்தது – சிறுகதை

கம்பெனியிலிருந்து டெலிவரிக்காகக் கிளம்பிக் கொண்டிருந்த சமயம் சக ஊழியர் ஒருவர், “சரவணா, உனக்கு போன்” என்றதும், ட்ரை சைக்கிளை அப்படியே நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே ஓடினான் சரவணன்.

சரவணனின் பக்கத்து வீட்டிலிருந்து பேசினார்கள். வள்ளிக்கு வலி எடுத்துவிட்டதாகவும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல உடனே கிளம்பி வரும்படியும் சொன்னார்கள்.

சரவணனுக்கு கையும் காலும் ஓடவில்லை. முகத்தில் திகிலும் பரபரப்பும் ஒருசேரத் தோன்றின.

சூப்பர்வைசர், “என்னப்பா, என்ன விஷயம்?”, எனக் கேட்க,

“சார், மனைவிக்குத் தலைப்பிரசவம். வலி வந்துடுச்சாம். உடனே வரச் சொல்கிறார்கள்.” என்றான் அழாத குறையாக.

“சரி, டெலிவரிக்கு முத்துவை அனுப்பி வைக்கிறேன். நீ சீக்கிரமாய் போய் ஆக வேண்டியதைக் கவனி” என்றார் சூப்பர்வைசர்.

கையிலோ போதுமான பணம் இல்லை. டாக்டர் கொடுத்த கெடுவுக்கு இன்னும் ஒருவாரம் இருக்கு. அதற்கு முன்பே வலி வந்துவிட்டதை எண்ணி தடுமாறினான்.

அடுத்த வாரம் சம்பளப் பணம் கிடைத்து விடும். பிரச்னை ஏதுமிருக்காது என நினைத்தவனுக்கு இப்போது திடீரென இப்படி ஒருநிலை. செய்வதறியாது திகைத்தான்.

அவன் அந்த பிஸ்கட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து நாட்கள்தான் ஆகியிருந்தது. மிகமிகச் சாதாரண குடும்பம். சென்ற வருடம்தான் கோயிலில் வைத்து மிகஎளிமையானத் திருமணம் நடந்தேறியிருந்தது.

‘அரசாங்க ஆஸ்பத்திரி என்றாலும்கூட குறைந்த பட்சம் மூவாயிரமோ, நாலாயிரமோ பணம் தேவை. யாரிடம் போய் கேட்பது?’ மனம் குழம்பியது.

இக்கட்டான நிலையை எடுத்துச் சொல்லி தெரிந்த ஒருசில ஊழியர்களிடமும் தயக்கத்துடன் போய் பேசிப் பார்த்தான். எல்லோருமே கைவிரித்து விட்டார்கள். மாதக்கடைசி வேறு.

ஏமாற்றத்துடன் கம்பெனியைவிட்டு வெளியே வந்தவன், அண்ணனைத் தொடர்பு கொண்டு தனது வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பிவைத்து உதவச் சொல்லலாம் என்ற எண்ணத்துடன் வீட்டுக்குப் போன் செய்ய, எதிர்முனையில் அண்ணி பேசினாள்.

“அடடா! நேற்றே ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? உங்க அண்ணன் இன்று காலைதான் ஆபிஸ் விஷயமாக சென்னை போயிருக்கார். அவரை மொபைலில் கூப்பிட்டுக் கேட்டுப் பாரேன்.”

சரவணனின் அண்ணன் குமார் இவனைவிட கொஞ்சம் கௌரவமான வேலையில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தான்.

அண்ணனை மொபைலில் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சரவணனுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

‘பணம்’ என்ற சொல்லின் முக்கியத்துவம், அருமை எவ்வளவு மகத்தானது என நினைக்க, நினைக்க அவனுக்கே அவன்மீது ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

வள்ளியை நினைத்துக் கொண்டான்.

‘அவள் தலை தலையாய் அடித்துக் கொண்டாளே. பத்து ரூபாய் வருமானம் என்றாலும் இரண்டு ரூபாயாவது மாதா மாதம் சேமிக்கச் சொன்னாளே.

திருமணமான புதிதில் புதுமனைவியை சந்தோஷப்படுத்த எப்படியெல்லாம் செலவு செய்து விட்டேன்?

சமயத்துக்கு உதவ நகை, நட்டாவது உண்டா? அவளிடம் உள்ளது கட்டிய தாலியும், தோடு-மூக்குத்தியும்தான். இந்த நேரத்தில் அவைகளில் கை வைப்பதா? சே.. சே…’ உள்ளம் முழுக்க குழப்பமும் தன்மானமும் நிரம்பி வழிந்தன.

‘அருகிலிருப்பவர்களிடம் கேட்டாலும் எதன் அடிப்படையில் யார் கடன் தருவார்கள்?’

வீடு செல்லும் வழியில் இருந்தவர்களிடம் கௌரவத்தையும் தன்மானத்தையும் மனதிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றிவிட்டுக் கேட்டுப் பார்த்தான். எவ்வித பயனுமில்லை.

‘மனிதாபிமானம், மனித நேயம், பரந்த மனப்பான்மை எல்லாம் எல்லோருக்கும் எங்கே போயிருற்று?

ஒருவன் கஷ்டத்தில், ஆபத்தில் இருக்கும்போதுதான் பிறரை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

‘உதவி’ எனக் கேட்கும் போது எவ்வளவு ‘சால்ஜாப்புகள்?’ எவ்வளவு சுலபமாக உதறித் தள்ளி விடுகிறார்கள்?’

மனம் பாறாங்கல்லாய் கனக்க, ஆசை அருமை மனைவிக்கு, நம்பி வந்தவளுக்கு கை கொடுக்கமுடியாமல் இருக்கும் தன் கையாலாகாத்தனத்தை எண்ணி மனம் புழுங்கினான் சரவணன்.

வீட்டுக்குள் நுழையும் முன், மறுபடியும் மொபைலில் அண்ணனிடம் தஞ்சமடைய நினைத்தபோது, அண்ணனே எங்கேயோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தான்.

பைத்தியம் பிடிக்காத குறையாக வீட்டுக்குள் நுழைந்தவன் அங்கு குழுமியிருந்த பெண்களைக் கண்டதும் திடுக்கிட்டான்.

இவனைக் கண்டதும் பெண்களில் ஒருவர் ஓடோடி வந்து சரவணனின் கைகளைப் பிடித்தபடி,
“சரவணா, நீ அப்பா ஆயிட்டே! உனக்கு மகன் பிறந்திருக்கான். வள்ளிக்கு வீட்டிலேயே சுகப்பிரசவமாயிடுச்சுப்பா. திக்கற்றவங்களுக்கு எப்போதுமே தெய்வம்தான் துணைங்கிறது எவ்வளவு உண்மையாயிருச்சு பாரு.” என்றதும் சரவணன் கண்களிலிருந்து பொல பொலவென கண்ணீர் வழிந்தோடியது.

சந்தோஷத்தில் எவரிடமும் எதுவும் பேச அவனுக்கு நா எழவில்லை.

“வள்ளியையும் குழந்தையையும் போய் பாருப்பா” யாரோ ஓர் வயதான பெண்மணி கூற, சரவணன் வள்ளி இருந்த அந்த சிறிய அறைக்குள் சென்றான்.

அதுவரை நடைப்பிணமாய் செய்வதறியாது கைகளைப் பிசைந்து கொண்டிருந்தவனுக்கு வள்ளியின் முகத்தில் தவழ்ந்த புன்னகையைப் பார்த்ததும்தான் உயிரே வந்தது.

பணம் கிடைக்காமல் தான் பட்ட அவஸ்தைகளை தனிமையில் வள்ளியிடம் கண்களில் நீர் மல்க சரவணன் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான்.

அவனது தலையைக் கோதியவாறே வள்ளி பேசினாள்.

“மனசு உடைஞ்சு போகாதீங்க. ஒன்றை மட்டும் நல்லாப் புரிஞ்சுக்குங்க. இன்றைய உலகத்தில் ஏழையோ, பணக்காரனோ எவராக இருந்தாலும் அவங்கவங்க பிரச்சினைகளுக்கு அவங்களேதான் தீர்வு கண்டாகணும்.

வசதி படைச்சவங்களிடம் பணம் இருப்பதால் எந்த நிலையிலும் சமாளிச்சிடுவாங்க.

உறவு ஆகட்டும், நண்பர்களாகட்டும் யாரையும் எதிர்பார்த்து நம்பி இருப்பதிலோ அவர்களைக் குறை கூறுவதிலோ அர்த்தமே இல்லை.

‘திட்டமிடுதல்’ என்பது நம்மைப் போன்றவங்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு அவசியம் என்பதை இப்போதாவது புரிஞ்சுக்கிட்டா சரி.

என் சூட்கேஸ்ல ஐயாயிரம் ரூபாய் வச்சிருக்கேன். இதற்கு முன் வேலையைப் பார்த்த கம்பெனியிலிருந்து நீங்க கொண்டு வந்து கொடுத்த சம்பளம் பணத்திலிருந்து மாதா மாதம் ஐநூறு சேமித்து வச்ச பணம்தான் அது.

மீதிப் பணத்தில்தான் குடும்பத்தை சமாளித்தேன். இனி உள்ள செலவுகளுக்கு அந்தப் பணத்தை எடுத்துக்குங்க. கவலைப்படாமல் சந்தோசமாயிருங்க.”

சரவணனுக்கு உடல் முழுக்க ஓர் புதுத்தெம்பு மட்டுமின்றி மனதில் ஞானமும் பிறந்தது. தன்னுடைய பொறுப்புணர்ச்சியை அந்த நிமிடத்திலிருந்தே அதிகப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்து குனிந்து வள்ளியின் நெற்றியில் நன்றியுடன் முத்தமிட்டான்.

‘என்னை மறந்திட்டீங்களே?’ எனக் கேட்கும் வகையில் குழந்தை அழுததும் ஆசை மகனுக்கும் கொடுத்தான் ஓர் ‘இச்!’

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

One Reply to “ஞானம் பிறந்தது – சிறுகதை”

  1. “ஞானம் பிறந்தது ” சிறுகதையானது இன்றைய சேமிப்பின் அவசியத்தை நினைவூட்டுகிறது. படைப்பாளருக்கு வாழ்த்துக்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.