“அரச மரத்தடியிலோர்
ஆண்டியிருக்கிறார்
எல்லார் குறைக்கும்
ஏதோ வழி பகிர்கிறார்”
வேறொருவர் சொல்லக்கேட்டு
வேகமாய்ச் சென்றிட்டேன்
மந்தகாசப் புன்னகையோடு
மௌன முகமொன்று
மலர்ந்ததெனைக் கண்டு
அண்மையில் சென்று நன்மை நாடினேன்
“காதலுக்கான அறிகுறி இல்லை
காமம் நாடும் கண்கள் இல்லை
படிப்பும் பண்ணும் பயின்ற ஒளிர்முகம்
உனக்கெது குறை உரைப்பாய்” என்றார்
சொந்தக்குறை ஒன்றுமில்லை
சொந்தங்களின் குறை தானென்றேன்
“ஓ, சமூக அவலம் போக்க சடாலெனப் புறப்பட்டவனோ?”
அப்படியேச் சொன்னீரே
எப்படித் தெரியுமென்றேன்
“நானும் இப்படித்தான் நாளொன்றில் கிளம்பினேனடா
போராளி என்றொரு கூட்டம் போற்றியது
கற்படி மங்கலாய்ப் போன சமூகப் பழக்கங்களை
சாதிப்பாகுபாட்டை மதவெறியை
கோட்பாடற்ற கொடுங்கோன்மையை
எரித்துவிடுதல் எளிதென எண்ணி
புரட்சியாளனென புறப்பட்டேன்
பூமியைப் புரட்டிப் போட்டிட
கோஷங்கள் கோரிக்கை மனுக்கள்
உண்ணா விரதங்கள் உறங்கா இரவுகள்
சாலை மறியல்கள் வேலைப் புறக்கணிப்பு
எத்தைச் செய்தும் என்னே பயன்?
போதுமடா சாமியென்று
மரத்தடியில் மௌனித்திருந்தேன்
ஞானியென்றென்னை
சூழ்ந்தன சூன்யங்கள்
பாம்பறியும் பாம்பின்கால்
நானுனையறிந்தேன்”
தனித்துப் போராடித்
தள்ளாடிப் போனவரின்
தவிப்பினையறிந்த நிமிடம்
தரையமர்ந்தேன்
தள்ளி நானும்
பத்மினி
மறுமொழி இடவும்