வெற்றிலை போல் புகையிலை போல்
பொடி டப்பி போல்
கொஞ்சம் சில்லறைகள் போட்டு வைக்கும்
சுருக்குப் பை போல்
என்
ஞாபகப் பைக்குள்
நண்பனின் சிரிப்பு தொனித்தது…
அவசியமென்று கருதிய
சில முகங்கள்
நிகாரிக்க முடியாத ரகசிய வன்மங்கள்
ஆசைகள்…
யாருமினி
ஏசிப் பேசிவிடக் கூடாதென்ற
வைராக்கியம்…
சில பார்வைகளின் எதிர்பார்ப்புகள்
வெறுப்புமிழும் அர்த்தங்கள்
கைக் குலுக்கியதில் இருக்கும்
சில்மிஷங்கள்…
வாங்க வேண்டுமெனக்
குறித்து வைத்த
புத்தங்களின் பட்டியல்கள்
இரவல் வாங்கி சென்றதை
நினைவுபடுத்தியது…
திருப்பித் தர வேண்டிய
கடன்களின் பட்டியிலிட்ட குறிப்புகள்
அம்மாவுக்குத் தேவையான பொடி வெற்றிலைப்பாக்கு
அப்பா புகைக்கும் பிராண்டின்
சுருட்டு…
விரும்பிக் கேட்ட
மனைவியின் அந்தரங்க
பொருட்கள்…
பிள்ளைகளுக்கான
இனிப்பு கார தின்பண்டங்கள்
பள்ளிக் கட்டணங்கள் கட்டும்
கடைசீ தேதி…
பெண் பிள்ளையின்
வளர்ச்சிக் குறித்து ஆகும்
செலவுகளுக்காக சேமிப்பின் திட்டம்…
நிரந்தர வேலையிலிருந்து
வெளியேற்றி விடப்பட்ட பின்பு
குடும்பத்திற்கான தினக்கூலிக்கேனும்
தேடுதல் குறித்து…
என
பல்வேறு ஞாபகக் குறிப்பேட்டின்
சுருக்குப் பையில் வைத்திருந்தும்
சாராயக் கடை கடக்க முடியாமல் உள்நுழைந்து வெளிவந்ததும்…
சமயத்திற்கு
நினைவுக்கு வராமல் தவிப்பின் அவஸ்தையென
அறிந்தும் வெளியேற முடியாத உபாதைகள்
கொஞ்ச நஞ்சமல்ல…
தரிசித்த சாமியே சரணமென்று
சாராயக் கடையை இடமோ வலமோ முன்னும் பின்னும் சுற்றி வருவதில்
சுருக்கு மாட்டிக்கொண்டு தொங்குகிறது ஞாபகப் பை ….
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!