டயபர் வசதி அல்ல; எதிரி

டயபர் இன்றைக்கு எல்லா சிறுகுழந்தைகளுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு சிலர் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு டயபரை அணிவித்திருப்பர். 

அவர்களைப் பொறுத்தவரை டயபரினை அணிவிப்பதே சுத்தம் மற்றும் ஆரோக்கியம் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மை அதுவன்று.

டயபரானது குழந்தையின் உடல்நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் பெருத்த கெடுதலை உண்டாக்கக் கூடிய மிகப்பெரிய‌ எதிரி ஆகும்.

குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் முதியவர்களுக்கும் இன்றைக்கு டயபர் பயன்படுத்தப்படுகிறது. டயபர் இன்றைக்கு இவ்வளவு பிரபலமடைய காரணம் ஊடகங்களில் அவற்றிற்கான கவர்ச்சியான விளம்பரம் ஆகும்.

விளம்பரங்களில் கூறப்படுவது போல பன்னிரெண்டு மணி நேரம் ஆகியும் ஈரம் மேற்பரப்புக்கு வராமல் இருக்க டயபரில் என்ன வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன என்பதை யாரும் யோசிப்பதில்லை.

அவ்வேதிப்பொருள்கள் குழந்தையின் உடல்நலத்திற்கு எவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவில்லை.

 

Diaper
டயபர்

 

டயபர் குழந்தைகளின் உடல்நலத்தில் நேரடிப் பாதிப்பினையும், சுற்றுசூழலில் மறைமுகப் பாதிப்பினையும் உண்டாக்குகின்றது.

டயபர் என்னும் எதிரி உண்டாக்கும் தீமைகள் பற்றிப் பார்க்கலாம்.

சுற்றுசூழலில் உண்டாகும் பாதிப்பு

டயபரில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் நச்சுப்பொருட்கள்

டயபரின் மேற்பரப்பானது பாலிஎத்திலீனால் உருவாக்கப்பட்டது. பாலிஎத்தலீன் என்பது பெட்ரோலியப் பொருளிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை பிளாஸ்டிக் ஆகும்.

டயபரின் உள்ளடுக்களில் நீரினை உறிஞ்ச பாலிபுரோப்பிலீன் எனப்படும் தெர்மோபிளாஸ்டிக் பாலிமர் உள்ளது. இது புரோப்பலீன் வாயுவிலிருந்து தயார் செய்யப்படுகிறது.

டயபரின் நடுஅடுக்கு வேதிப்பொருட்கள் மற்றும் மரத்தின் நாரால் உருவான மரக்கூழால் ஆன அதிக உறிஞ்சும் தன்மையைக் கொண்டது.

மேலும் இதில் அதிகமான உறிஞ்சும் தன்மை உடைய சோடியம் பாலி அக்ரிலேட் பொடி வடிவில் உள்ளது. இவ்வேதிச் சேர்மம் தண்ணீரினை தனது எடையைப் போல் 30 மடங்கு உறிஞ்சும் தன்மை உடையது. நச்சுப்பொருளாக அறிவிக்கப்பட்டிருக்கும் இது டயபரில் 5 கிராம் அளவில் உள்ளது.

டயபரில் படங்கள் மற்றும் ஈரத்தன்மையைக் குறிக்கும் குறியீடு ஆகியவை செயற்கை வண்ணமூட்டிகளைக் கொண்டு பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.

இந்த வண்ணமூட்டிகள் சருமத்தில் ஒவ்வாமை மற்றும் அரிப்பினை உண்டாக்குகின்றன. மேலும் இவை சுவாசம் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிக கழிவுபொருளாக மாற்றப்படுதல்

டயபரினை உபயோகித்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இவை அதிக கழிவாக மாற்றப்படுகின்றன.

இவற்றினை மறுஉபயோகம் செய்யவோ, மறுசுழற்சி செய்யவோ முடியாது. அதேபோல் இவை எளிதில் மக்குவதில்லை. இவை மக்க குறைந்தது 200 முதல் 500 வருடங்கள் ஆகும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாளுக்குநாள் டயபரின் பயன்பாடு அதிகரித்து கழிவுப்பொருளாக மாற்றப்படுவது அதிகமாகிக் கொண்டு வருவதாலும், அவை மக்க நீண்ட வருடங்கள் ஆவதாலும், அவற்றின் முறையான கழிவுநீக்கம் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

கழிவுநீக்கத்தால் வேதிப்பொருட்கள் சுற்றுசூழலில் வெளியிடப்படல்

டயபரினை கழிவுநீக்கம் செய்யும்போது அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் நிலம் மற்றும் நீரில் வெளியிடப்பட்டு அவற்றை மாசுபடுத்துகின்றன.

டயபரில் உள்ள டையாக்சின்கள் உயிரினங்களின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சுற்றுசூழலையும் வெகுவாகப் பாதிக்கிறது. இவை மக்காது நிலம், நீர், காற்று ஆகியவற்றில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

டயபரின் வெளிப்பூச்சு மற்றும் ஒட்டும் பசையில் டிரைப்யூட்லின் என்ற வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது. இவை நீர்வாழ் உயிரினங்களைப் பாதிப்படையச் செய்வதோடு, தொடர்ந்து முப்பது ஆண்டுகள்வரை சுற்றுப்புறத்தில் மாசுபடுத்தியாக இருக்கும்.

டயபரில் இருக்கும் மலமானது முறையாக கழிவுப்பொருளாக மாற்றப்படாததால் தீங்குவிளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை நிலத்தடி நீரில் வெளியிடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசுபாடு அடைகிறது.

இயற்கை வளங்களை அழித்தல்

டயபரில் பயன்படுத்தப்படும் மரக்கூழுக்காக ஆண்டுதோறும் சுமார் 2,50,000 மரங்கள் வெட்டப்படுகின்றன. இதில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வற்றும் ஆற்றல் வளமான பெட்ரோலியத்திலிருந்து தயார் செய்யப்படுகிறது.

டயபரில் நீரினை உறிஞ்சப் பயன்படுத்தப்படும் சோடியம் பாலி அக்ரிலேட் வற்றும் ஆற்றல் மூலமான கச்சா எண்ணெயிலிருந்து தயார் செய்யப்படுகிறது.

இவ்வாறு தயாரிப்பது முதல் கழிவுப்பொருளாக மாற்றப்படும் வரை டயபர் இயற்கை வளங்களின் சீர்கேட்டில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

அதிக விலையுடையவை

எல்லாவற்றிற்கும் மேலாக டயபரானது அதிக விலையுள்ளதாகவும் இருக்கிறது. சிறுகுழந்தையை வைத்திருக்கும் பெற்றோர் தங்களின் மாத வருமானத்தில் ஒருபகுதியை டயபர் வாங்க செலவிடுகின்றனர்.

குழந்தைகளின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு

சருமத்தில் ஏற்படும் பாதிப்பு

நாள்முழுவதும் டயபரை அணிவிக்கும்போது டயபரின் வண்ணத்திற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்களால் வெப்பம் அதிகரித்து சரும அரிப்பு, புண், சரும அழற்சி, சருமம் நிறம் மாறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

டயபரை தொடர்ந்து பயன்படுத்தும்போது தேவையான காற்றோட்டம் இல்லாமல், பூஞ்சைகள் வளருவதற்கான சூழல் ஏற்பட்டு நாள்பட்ட சருமப்பிரச்சினைகள் உண்டாகும்.

புற்றுநோய் மற்றும் மலட்டுத்தன்மையை உண்டாக்குதல்

சிறுவயது குழந்தைகளின் நோய்கள் பற்றிய ஆய்வில் டயபரை அணிவிப்பதால் இடும்பு தொடை நரம்பு பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்குழந்தைகளுக்கு நீண்டநாட்கள் தொடர்ந்து டயபரை அணிவிப்பதால் பின்னாளில் அவர்களின் விந்தணு உற்பத்தில் பாதிப்பு உண்டாகி மலட்டுத்தன்மை ஏற்படும்.

மேலும் இனப்பெருக்க உறுப்பில் புற்றுநோயையும் உண்டாக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கழிப்பறையைப் பயன்படுத்துவதில் ஏற்படும் தடுமாற்றம்

நாள்முழுவதும் குழந்தைகளுக்கு டயபரை அணிவிப்பதால் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னும் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதை குழந்தைகளால் உணர்த்த இயலாது.

அக்குழந்தைகள் டயபர் அணிந்திருப்பதாக எண்ணி இருந்த இடத்திலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பார்கள். அவ்வாறு செய்வது தவறு என்ற எண்ணம் வரும்போது கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமல் அவற்றை அடக்கி உடல்நல குறைவுக்கு உள்ளாவார்கள்.

படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கும் டயபரை அணியப் பழக்கியது ஒரு காரணமாகும். தொடர்ந்து டயபரை அணிவித்த குழந்தைகள் கழிப்பறையை பயன்படுத்த பழகுவதில் பெரிய போராட்டத்திற்கு உள்ளாகி பெற்றோர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றனர்.

சிறுநீரக நோய் தொற்று ஏற்படுதல்

டயபரை பயன்படுத்தும்போது குழந்தைகள் அதிலேயே சிறுநீர் மற்றும் மலத்தினைக் கழிக்கின்றனர். நீண்டநேரம் சிறுநீரில் ஊறிய டயபரால் சிறுநீரக நோய் தொற்று ஏற்படும்.

குறிப்பாக பெண் குழந்தைகள் தங்களின் உடற்கூறியல் தனித்துவத்தால் எளிதாக பெரிய அளவில் சிறுநீரக நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர்.

தற்போது இரவில் பிரத்யோகமாக அணிய பன்னிரெண்டு மணி நேரம்வரை ஈரம் தென்படாத டயபர்கள் சந்தையில் கிடைப்பதாக விளம்பரங்கள் வருகின்றன.

இவற்றை அணிவிப்பதால் குழந்தைகள் மற்றும் தங்களின் இரவு நேரத்தூக்கத்தில் பாதிப்பு ஏற்படாது என்று கருதி பெற்றோர்கள் அணிவிக்கின்றனர்.

பன்னிரெண்டு மணி நேரம் சிறுநீரில் ஊறிய டயபராலும், அதில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களாலும் சிறுநீரகத் தொற்று நோய் அதிகரிக்குமே தவிர குறையாது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல்

டயபரில் சேர்க்கப்படும் சில எளிதில் ஆவியாகக்கூடிய கரிமச்சேர்மங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கின்றன.  நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் குழந்தைகளுக்கு தொற்றுநோயும், ஒவ்வாவையும் எளிதில் ஏற்படுகின்றன.

ஆக மொத்தத்தில் பயன்படுத்த எளிதாக உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக அதிக விலையுடைய, உடல்நலத்திற்கும் சுற்றுசூழலுக்கும் பாதிப்பை உண்டாக்கும் டயபர் நமக்கு அவசியமா?

அதனை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டுமா? என்று ஒவ்வொரு பெற்றோரும் எண்ண வேண்டும்.

போலியான கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி டயபர் என்னும் எதிரி வாங்கி உபயோகிப்பதை தவிர்ப்பீர்.

நம்முடைய இன்றைய குழந்தையின் நலத்தையும், வருங்கால சந்ததியினருக்கான வளமான சுற்றுசூழலையும் காப்பீர்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.