டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை

டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட்

அந்தக் க்ளினிக் வாசலில் ரவியை நிற்க வைத்துவிட்டு, ‘இதோ அரை மணியில் வந்துவிடுகிறேன்’ என்று ஆண்டாள் தெரு வரை சென்ற பரசுராமனை இன்னும் காணவில்லை! அவன் சென்று அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான் ரவி. மணி ஆறரை.

நந்தி கோயில் மாலை நேர நெரிசலுடன் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. பச்சைப்பசேல் காய்கறிகளைப் பார்த்து மயங்கிப் பையில் நிரப்பிக் கொண்டாகிவிட்டது.

க்ளினிக் உள்ளே எட்டிப் பார்த்தான் ரவி. டாக்டரின் அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் நோயாளிகள் இருபறமும் அமர்ந்திருந்தனர்.

ஐந்தரைக்கு வர வேண்டிய டாக்டர் இன்னும் வராததால், க்ளினிக் பையன் டாக்டரைக் காண வருபவர்களிடம் டோக்கனைக் கொடுத்துவிட்டு வெளியே வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

வெகுநேரமாக அங்கு நின்று கொண்டிருந்த ரவியிடம் “யாரை எதிர்பார்த்து நிக்கறீங்க சார்? ரொம்ப நேரமாக் காத்துக்கிட்டிருக்கீங்க போலிருக்கு… உள்ளே வந்து உட்காருங்களேன்” என்றான் பையன். பரசுராமன் மீது எரிச்சல் தோன்ற, ரவி அலுத்தவாறே உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டான்.

இரு வரிசைகளிலுமாக மொத்தம் ஆறு நோயாளிகள் கலகலப்பின்றி அமர்ந்திருந்தனர். அறுபதுக்கும், எழுபதுக்கும் இடைப்பட்ட வயதையொட்டிய முதியவர்கள் இருவர். ஆறு மாதக் கைக்குழந்தையுடன் ஒரு பெண்மணி. நடுத்தர வயதையுடைய நோயாளிகள் ஆணும் பெண்ணுமாக மூவர்.

முதியவர்களில் ஒருவர் அடித் தொண்டையிலிருந்து இருமிக் கொண்டிருக்க, மற்றொருவர் நோயின் கடுமையால் முனகிக் கொண்டிருந்தார்.

ஆறு மாதக் குழந்தையின் அழுகையை நிறுத்த வழி தெரியாமல், நிலை கொள்ளாது தவித்துக் கொண்டிருந்தாள் அப்பெண்மணி.

க்ளினிக் வாசலில் ஸ்கூட்டர் வந்து நிற்கும் சப்தம் கேட்க, ரவி திரும்பிப் பார்த்தான்.

டாக்டர் உள்ளே வந்து கொண்டிருந்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து நோயாளிகளும் எழுந்து நின்றனர்.

திரைச்சீலையை விலக்கிக்கொண்டு டாக்டர் உள்ளே சென்றதும், க்ளினிக் பையன், “டோக்கன் நம்பர் ஒண்ணு யாரு?” எனக் கேட்டு அந்த நோயாளியை உள்ளே அனுப்பிவிட்டு திரைச்சீலையை நன்கு இழுத்து விட்டபின், அங்கேயே நின்று கொண்டான்.

“இரண்டாம் நம்பர் டோக்கன் நோயாளி?”

அந்த நோயாளி தடுமாறியவாறே வந்து க்ளினிக் பாய் அருகே நின்று கொண்டார்.

அந்தச் சமயம் பார்த்து ட்ரிம்மாக ஓர் மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் உள்ளே நுழைந்து நேராகப் பையனிடம் வந்து, தனது விசிட்டிங் கார்டை அவன் கையில் திணிக்க, முதலில் சென்ற நோயாளி இஞ்செக்ஷனை வாங்கிக் கொண்ட இடது புஜத்தைத் தேய்த்தவாறே, முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு வெளியே வந்தார்.

உள்ளே நுழையப் போன ‘இரண்டாம் நம்பர் டோக்கன் நோயாளி’யைக் க்ளினிக் பையன் தடுத்து நிறுத்திவிட்டு, விசிட்டிங் கார்டுடன் உள்ளே சென்றான்.

சென்ற வேகத்திலேயே திரும்பி வந்து மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவை உள்ளே அனுப்பினான்.

‘இரண்டாம் நம்பர் டோக்கன் நோயாளி’ மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டு இருமிக் கொண்டிருந்தார்.

ரவி இருப்பு கொள்ளாமல் வெளியே வந்து, ஒரு முறை எட்டிப் பார்த்துப் பரசுராமனைத் தேடினான். பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் உள்ளே வந்து அமர்ந்தபோது, டாக்டரைக் காண உள்ளே சென்ற ரெப்ரசன்டேட்டிவ் இன்னும் வந்தபாடில்லை.

மணி இரவு ஏழரையை நெருங்கிக் கொண்டிருந்தது. ‘மெடிக்கல் ரெப்’ ஒருவழியாய் வெளியே வந்ததும் ‘இரண்டாம் நம்பர் டோக்கன் நோயாளி’ உள்ளே போனார். அவர் உள்ளே சென்ற மறுகணம் டாக்டர் வெளியே வந்தார்.

எடுபிடிப் பையன் ரஹீமை அழைத்து அவன் கையில் பணத்தை கொடுத்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.

எடுபிடிப் பையன் வெளியே கிளம்பத் தயாரானான்.

அப்போது “என்ன டாக்டர் சார்? நேற்றிரவு பதினொரு மணிவரை நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்” என்றவாறே தங்க பிரேம் கண்ணாடி அணிந்த ஜிப்பாக்காரர் ஒருவர் செண்ட் மணம் கமழ டாக்டரை நோக்கி வர, “ஹலோ! மிஸ்டர் ஜனார்த்தனன்! வாங்க… வாங்க… ப்ளீஸ் கம் இன்!” என்றவாறே அவரை அழைத்துக் கொண்டு தனது இருக்கைக்குச் சென்றார் டாக்டர்.

உள்ளே ‘இரண்டாம் நம்பர் டோக்கன் நோயாளி’யின் இருமல் சப்தத்தையும் மீறி டாக்டரின் குரலும், அவரோடு உள்ளே நுழைந்த ஜனார்த்தனனின் குரலும் சுவாரசியமாக ஒலித்துக் கொண்டிருந்தன.

வெளியே அமர்ந்திருந்த மற்ற நோயாளிகள் உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல், பரிதவித்துக் கொண்டிருந்தனர்.

மணி ஏழே முக்கால் ஆயிற்று.

‘இரண்டாம் நம்பர் டோக்கன் நோயாளி’ வெளியே வந்தார்.

ஜனார்த்தனனும், டாக்டரும் இன்னும் உள்ளே பேசிக் கொண்டிருந்தனர்.

வெளியே சென்றிருந்த க்ளினிக் பையன் இன்னும் வராததால், ‘மூன்றாம் நம்பர் டோக்கன் நோயாளி’ உள்ளே செல்லாமல் டாக்டரின் அறை வாசலில் தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தார்.

சில நிமிடங்களுக்குப் பின் க்ளினிக் பையன் கைகளில் ஏதேதோ சாமான்களுடன் வந்து சேர்ந்தான். கூடவே, இரு இளைஞர்களும் அவனுடன் வந்தனர்.

வாங்கி வந்த சாமான்களை டாக்டர் அறைக்குள் வைத்துவிட்டு வெளியே வந்த பையன், இளைஞர்கள் கைகளிலிருந்த சில ஃபாரங்களை வாங்கிக் கொண்டு மறுபடியும் உள்ளே சென்றான்.

‘மூன்றாம் நம்பர் டோக்கன் நோயாளி’ இன்னும் வெளியே நின்று கொண்டிருந்தார்.

பொறுமையிழந்த பெண்மணி கைக்குழந்தையுடன் கிளம்பவே, “என்னம்மா, டாக்டரைப் பார்க்காமல் கிளம்பிட்டீங்க?” என்றான் ரவி.

“என் டோக்கன் நம்பர் அஞ்சுங்க. மூணாம் நம்பர் டோக்கன் ஆளே இன்னும் உள்ளே போகலை. நான் எப்போது உள்ளே போய், டாக்டரைப் பார்த்துட்டு எப்போது கிளம்பறது? மணி எட்டாகப் போகுது. குழந்தை ரொம்ப அழுதுக்கிட்டிருக்கு. ரெண்டு பிள்ளைங்களை வீட்டில தனியா விட்டாந்திருக்கேன். நாளைக்குத் தானுங்க வரணும்” என்று கூறி, அப்பெண்மணி வெளியேறினாள்.

டாக்டரின் கையெழுத்தான ஃபாரங்களுடன் இளைஞர்கள் வெளியே வந்தபோது, ஜனார்த்தனனும் அவர்களோடு பேசியவாறே கூடவே வந்தார்.

இளைஞர்கள் ஃபாரங்களை வாங்கிக் கொண்டு கிளம்ப முற்பட்டபோது, ரவி அவர்களை நோக்கி, “ஹலோ, ரொம்ப அவசரமா கையெழுத்து வாங்கிட்டுப் போறீங்களே! என்ன ஃபாரமோ?” என்று கேட்டான்.

“மெடிக்கல் பில்ஸ் சார். ரீஇம்பர்ஸ்மெண்ட்டுக்காகக் கையெழுத்து வாங்க வந்தோம். நேற்றே வாங்க வேண்டியது” என்றார்கள் இளைஞர்கள்.

இதற்குள் ‘மூன்றாம் நம்பர் டோக்கன் நோயாளி’ டாக்டரைப் பார்த்துவிட்டு வெளியே வர, ‘நான்காம் நம்பர் டோக்கனை’ அழைத்தான் எடுபிடிப் பையன்.

யாரும் வராமல் போகவே, மீண்டும் ஓரிரு முறை ‘டோக்கன் நம்பர் நாலு’ என அழைத்தான். யாரும் வரவில்லை.

ஐந்தாம் நம்பர் டோக்கன்’ வாங்கியிருந்த பெண்மணி டோக்கனைப் பெட்டியில் போட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றதும், நான்காம் நம்பர் நோயாளி’யும் பொறுமை இழந்து சென்றிருக்க வேண்டும்.

‘ஐந்தாம் நம்பர் நோயாளி’யை அழைத்ததும், யாரும் வராமற் போகவே, சுறுசுறுப்பாக ‘டோக்கன் நம்பர் ஆறு’ என்று அழைத்தான்.

நோயாளி உள்ளே சென்றார்.

இப்போது ரவியைத் தவிர, க்ளினிக்கில் வேறு எவருமில்லை.

க்ளினிக் பையன், ரவியிடம் வந்து பேச்சுக் கொடுத்தான். அந்த நேரம் பார்த்து பரசுராமன் வந்து சேர, ரவி அவனை எரித்து விடுவது போலப் பார்த்தான்.

“ஸாரிடா, பெரியப்பா பெண் ஸ்டேட்ஸ்லிருந்து வந்திருந்தாளா, பேசிக் கொண்டிருந்ததில் நேரமாகிவிட்டது. வாடா, போகலாம்” என்றான் நண்பன்.

ரவி எழுந்தான்.

‘ஆறாம் நம்பர் நோயாளி’ திரைச்சீலையை விலக்கிக் கொண்டு வெளியே வந்தார்.

ரவி க்ளினிக் பையனை நோக்கி, “தம்பி! டாக்டரைப் பார்க்கணுமே!” என்றதும்,
“என்னடா, உடம்புக்கு என்ன?” எனக் கேட்டு பதற்றமடைந்தான் பரசுராமன்.

பதிலேதும் கூறாமல், க்ளினிக் பையனைப் பார்த்தான் ரவி.

எடுபிடிப்பையன் ரவியை உள்ளே அனுப்பினான்.

டாக்டர் அவனை அருகிலிருந்த ஸ்டூலில் அமரச் சொன்னார்.

“எஸ்… உடம்புக்கு என்ன?” என்றார் டாக்டர்.

“டாக்டர், எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. உங்களை நேரில் பார்த்துச் சில விஷயங்களை மனம் விட்டுச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்திருக்கேன். கோவிச்சுக்காமக் கொஞ்சம் கேட்பீங்களா?” என்ற பீடிகையோடு ஆரம்பித்தான்.

“சொல்லுங்க, என்ன விஷயம்?”

“டாக்டர்! சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கும், சுயநலத்துக்கும் அப்பாற்பட்டது தானே டாக்டர் தொழில்? புனிதமான இத்தொழிலைத் தேர்ந்தெடுக்கிறவங்க பொதுநலச் சேவை ஒன்றையே தாரக மந்திரமாகக் கொண்டிருக்கணும்; இல்லையா? வெறும் பொழுதுபோக்குக்காகவோ, கௌரவத்திற்காகவோ டாக்டருங்க தங்கள் தொழிலை எவ்வித அக்கறையும், முழு ஈடுபாடுமில்லாமல் நடத்திக்கிட்டிருந்தா, யாருக்கு என்ன லாபம் டாக்டர்?”

“ஆமாம், எதுக்காக இதையெல்லாம் எங்கிட்ட சொல்றீங்க?”

“கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்க டாக்டர். அபார நம்பிக்கையோட டாக்டரைத் தெய்வமா நினைச்சுத் தேடிக்கிட்டு வரும் நோயாளிங்களோட நிலையைச் சற்று யோசிச்சுப் பாருங்க. உயிரைக் கையிலே பிடிச்சுக்கிட்டு, நோயோட கடுமையான பாதிப்போட, உங்கக்கிட்ட வந்து சிகிச்சை பெற வெளியில எத்தனை பேர் பொறுமையோட, தவிப்போடக் காத்துக்கிட்டிருக்காங்க, தெரியுமா?”

ரவியை உற்று நோக்கியவாறு, அவன் கூறுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் டாக்டர்.

ரவி தொடர்ந்தான்.

“அவங்களையெல்லாம் லட்சியம் செய்யாம, அவங்களுக்கு முதலிடம் தராம, யார் யாரையோ, உள்ளே வரவழைச்சு, நேரத்தை வீணாக்கி நோயாளிகளின் உயிரோட விளையாடறது நியாயமா டாக்டர்?சொல்லுங்க..”

டாக்டர் அமைதியாக இருந்தார்.

தொடர்ந்தான் ரவி.

“நோயாளிகளைப் பார்க்கிற நேரத்துல நண்பர்களின் வருகையையும், மெடிக்கல் ரெப் சந்திப்பையும் தவிர்க்கலாமே டாக்டர்? பில்ஸ்ல கையெழுத்துப் போடவும், சொந்த வேலைகளைப் பார்க்கவும் தனியா நேரம் ஒதுக்கி, நோயாளிகளை உடனுக்குடன் பார்த்து, நன்றாகப் பரிசோதித்து நல்ல சிகிச்சை அளிப்பீங்களா டாக்டர்? நாளையிலிருந்து ஒரு புதிய ஆரோக்கியமான சூழ்நிலையை, மாற்றத்தை இங்கே எதிர்பார்க்கலாமா, டாக்டர்?” பேச்சை முடித்தான் ரவி.

மந்திரத்திற்குக் கட்டுண்டது போல் அமர்ந்து ரவி சொன்னவற்றை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் மெதுவாக இருக்கையிலிருந்து எழுந்தார்.

“மிஸ்டர், நீங்க யாருன்னுகூட எனக்குத் தெரியாது. புதுசா க்ளினிக் ஆரம்பிச்சு பிராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்கிற எனக்குத் தெரியாமல் போன சில உண்மைகளை, நியாயங்களை ரொம்பத் தைரியமாக எங்கிட்ட வந்து சொல்லி, என்னோட அறிவுக் கண்ணைத் திறந்திட்டீங்க. நோயாளிகளோட நோயைக் கண்டுபிடிச்சு அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டிய நான், நல்லாவே புரிஞ்சுக்கிறமாதிரி, நீங்க எனக்கு நல்ல ட்ரீட்மெண்ட் தந்து என்னோட அறியாமை நோயைப் போக்கிட்டீங்க. நீங்க எதிர்பார்க்கிற ஆரோக்கியமான புதிய மாற்றம் இந்த நிமிஷமே என்னுள் ஏற்பட்டிருச்சு. திருப்தியோடப் போயிட்டு வாங்க, தம்பி!”

உணர்ச்சி ததும்பக் கூறினார் டாக்டர்.

ஓர் ஆத்மத் திருப்தியுடன் வெளியே வந்த ரவி, நண்பன் பரசுராமனை அழைத்துக்கொண்டு அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.

This image has an empty alt attribute; its file name is RajaGopal.webp

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

Visited 1 times, 1 visit(s) today

Comments

“டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை” மீது ஒரு மறுமொழி

  1. G Panneer Selvam

    டாக்டருக்கு ஒரு ட்ரீட்மென்ட் – சிறுகதை
    அருமையோ அருமை !
    வாழ்த்துக்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.