டாக்டர் S.S. பிள்ளை

சுமார் பத்து வருடங்களுக்கு முன் பிரபல ஆங்கில பத்திரிக்கையான இந்துவில் ஞாயிறன்று வெளிவரும் துணைப் பத்திரிக்கையில், உலகப் புகழ் பெற்ற கணித மேதை டாக்டர் S.S. பிள்ளை பற்றி விரிவாக ஒரு கட்டுரை இருந்தது.

அதனைப் படித்த நான், இவ்வளவு நாள்களும் அவரைப் பற்றித் தெரியாமலிருந்து விட்டதே என்ற எனது அறியாமையை நினைத்து வெட்கப்பட்டேன்.

மறுநாள் எனக்குத் தெரிந்த கணிதத் துறையைச் சார்ந்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் அக்கட்டுரையைபப் பற்றியும் டாக்டர் S.S. பிள்ளையைப் பற்றியும் விசாரித்தேன். அவரோ தனக்கு அதுபற்றித் தெரியாது; விசாரித்துச் சொல்கிறேன் என்று கூறி, நழுவி விட்டார்.

S.S. பிள்ளையின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகிலுள்ள செங்கோட்டை என அறிந்திருந்தேன். என்னுடைய நண்பரும் கணித ஆசிரியருமான திரு.கருப்பசாமி, அப்பொழுது பாவூர் சத்திரத்தில் பணிபுரிந்து வந்தார். ஆவரை உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, டாக்டர் S.S. பிள்ளை தொடர்பான புத்தகங்கள் தேவை என்றேன்; சில தினங்களில் புத்தகங்கள் வந்தன.

 

தமது முப்பத்தி ஐந்தாவது வயதிலேயே கணிதத்தில் ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்று, நமது நாட்டைக் கணிதமேதை இராமானுஜத்திற்குப்பின் உலகிற்கே அடையாளம் காட்டியவர் டாக்டர் சிவசங்கர நாராயண பிள்ளை என்று அழைக்கப் பெற்ற டாக்டர். S.S. பிள்ளை அவர்கள்.

 

அவரைப் பற்றி இன்று கணித ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; அறிவியல் துறையில் உயர்நிலையில் இருப்பவர்களுக்குக் கூடத் தெரியவில்லை. மறைக்கப்பட்ட அம்மாமேதை டாக்டர் S.S. பிள்ளை அவர்களைப் பற்றி அனைவரும் அறிவது அவசியமாகும்.

நெல்லை சு. முத்து அவர்கள், ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டோ விண்வெளி ஆய்வு நிலையத்தில் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களுடன் பணியாற்றியவர். அவர் அடிக்கடி தினமணிப் பத்திரிக்கையில் அறிவியல் கட்டுரைகளை நகைச்சுவையுடன் எழுதுபவர்.

ஓருமுறை கட்டுரை ஒன்றில் இன்றைய இளைஞர்களுக்குத் திரைப்பட நடிகர்களையும், நடிகைகளையும் அவர்களின் பிறந்த நாள்களையும் தான் தெரியும். அறிவியல் அறிஞர்களைப் பற்றித் தெரியாது என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அதுபற்றி அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.

அதில் இளைஞர்களுக்கு மட்டுமல்ல கல்விகற்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்;குக் கூட நம்மூர் கணித மேதை டாக்டர் S.S. பிள்ளையைப் பற்றித் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன்.

எனது கடிதம் கிடைத்த மறுநாளே அவர் என்னைத் தொடர்பு கொண்டு, தானும் டாக்டர். S.S. பிள்ளையைப் பற்றி அறியாமல் இருக்கிறேன்; அவர் பற்றிய புத்தகங்களை உடனே அனுப்பி வைக்கவும் என்று எழுதியிருந்தார். நானும் உடன் அனுப்பி வைத்தேன்.

இந்த நிகழ்வுகளைப் பற்றிக் கூறக் காரணம் டாக்டர். S.S. பிள்ளையைப் பற்றி உலகக் கணித அறிஞர்கள் தெரிந்து வைத்திருக்கும் அளவு கூட நம் தமிழ் நாட்டு மக்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை.

கல்வித் துறையில் எந்த ஒரு பல்கலைக் கழகத்திலும், எந்த ஒரு புத்தகத்திலும் அவரைப் பற்றிப் பாடம் இல்லை; இது எதனால்? யார் குற்றம்? என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

 

கற்ற கல்வி

டாக்டர் S.S. பிள்ளை அவர்கள் செங்கோட்டையில் 5-4-1901இல் பிறந்தவர்; தொடக்கக்; கல்வியை இலத்தூரில் கற்றிருக்கிறார். அப்போது அவருடைய ஆசிரியர் சாஸ்தியார், அவருடைய கணிதத் திறமையைப் பார்த்து, அதிசயத்திருக்கிறார்; திடீரென அவருடைய தந்தை இறந்ததும் அவர் பள்ளிக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.

ஆனால், ஆசிரியர் சாஸ்திரியார் அவரை அணுகித் தொடர்ந்து படிக்க வற்புறுத்தியது மட்டுமல்லாமல், வறுமையிலிருந்த சாஸ்திரியாரே தனது சொற்ப வருமானத்திலிருந்து ஒரு தொகையை அவரின் கல்விக்காகச் செலவழித்து வந்தார்.

சாஸ்திரியாரின் கனவு வீண் போகாமல் தொடர்ந்து செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் பிள்ளை வெற்றியடைந்தார்.

நாகர் கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில், இன்டர் மீடியட் முடித்து, பின் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் கணிதத்தில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார்; சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார்.

1929ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் ஆனார். இவ்வேளையில், எண் கணித ஆராய்ச்சியில் (Number Theory) டாக்டர் பட்டம் பெற்றார்.

இந்தியாவிலேயே முதன் முதலில் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர், டாக்டர் S.S. பிள்ளை அவர்களே! என்ற தனிப்பெருமையும் இவருக்குண்டு.

 

 

கணித ஆராய்ச்சி

S.S. பிள்ளை அவர்களுக்கு Theroy of Numbers’ என்னும் எண் கணித ஆராய்ச்சி உலக அளவில் பெரும் புகழைத் தந்தது.

இந்த எண் கணிதக் கோட்பாட்டை 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டபாஃபேன்டைன் (Dephantine) என்னும் கணித மேதை முதலில் ஆராயத் தொடங்கினார். பின்னர் பலநூற்றாண்டுகளாக இக்கோட்பாடு படிப்படியாக விளக்கம் பெற்று வந்தது.

வாரிங்ஸ் (Prof. Warings) இது சம்பந்தமாக ஒரு கணிதப் புதிரையும் வழங்கி விடையையும் கண்டார். ஆனால், விடையைத் தெரியும் அவருக்கு அதனை அடையும் வழி முறையைத் தெரியவில்லை. அதற்கான விடையைக் காண 300 ஆண்டுகள் கணித மேதைகள் தனியாகவும், கூட்டாகவும் ஆராய்ச்சி செய்தும் வெற்றியடைய முடியாது போய்விட்டது.

10-2-1936 அன்று 29 வயதான டாக்டர். S.S. பிள்ளை ஐந்து ஆண்டுகள் தன்னந் தனியாக உழைத்து, Warings பிரச்சனைக்கு விடை கண்டார். அன்று, தாம் சீனிவாச ராமானுஜத்தின் வாரிசு என்பதை உறுதி செய்தார்.

இது தொடர்பாக Dr. Pillai’s Theory of Numbers என்ற ஒரு கோட்பாட்டுக் கணித நூலை வெளியிட்டு, கணித உலகில் நிரந்தரமான இடத்தைப் பெற்றார்.

இது போன்று, கணித மேதைகளைக் கடந்த 400 ஆண்டுகளாக மிரட்டிக் கொண்டு இருந்த Fourier Series என்ற கடினமான புதிரை விடுவித்து, மீண்டும் புகழின் உச்சிக்குச் சென்றார்.

இதனால், உலகப்புகழ் பெற்ற டாக்டர். ஐன்ஸ்டீனும், டாக்டர். ஓபன் ஹைமரும்
(Opper heimer) தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட அழைப்பு விடுத்தனர். ஆனால், டாக்டர் S.S. பிள்ளை அவர்கள் இந்தியாவிலேயே இருந்து தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார்.

1950இல் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற உலகக் கணித மகாநாட்டிற்குத் தலைமை ஏற்கவும் அதன்பின், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்திலிருந்து டாக்டர். ஐன்ஸ்டீனுடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்ய முடிவு செய்து, 30-8-1950இல் ‘Star of Mary Land’ என்ற விமானத்தில் புறப்பட்டார்.

செல்லும் வழியில் கெய்ரோவில் விமானம் இறங்கியது; எரிபொருள் நிரப்பிய பின், மீண்டும் புறப்பட்டது. 31-08-1950அன்று அதிகாலை 3 மணிக்கு விமானம் சகாரா பாலைவனத்தின் மீது பறந்த போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலானது. சான்பிரான்சிஸ்கோ மகாநாட்டில் பங்கு கொண்ட கணித மேதைகள் டாக்டர் பிள்ளைக்குப் புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர்.

 

மறந்தது ஏன்?

உலகத்திலுள்ள தலைசிறந்த கணித மேதைகளைப் பற்றி Men and Mathematics என்று E.D. Bell என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவைப் பற்றிக் கூறும்பொழுது, சீனிவாச ராமானுஜன் மற்றும் டாக்டர் S.S. பி;ள்ளை என இருவரை மட்டுமே  குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா சந்தித்த கணித மேதைகளின் பரம்பரையைப் பற்றிக் கூறும்பொழுது, அந்நூலில் ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கர், சீனிவாசராமானுஜம், டாக்டர் S.S. பிள்ளை என்று அம்மேதைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டாக்டர். S.S. பிள்ளையின் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து 40 கட்டுரைகளை ஒரு நூலாகத் தொகுத்து, Collected Reprints of Dr. S.S. Pillai என்ற பெயரிட்டு தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளது என்பது கணித ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் செய்தியாகும்.

இத்தகு புகழை உலகளவில் பெற்ற ஓர் ஏழையின் வரலாற்றை, செயற்கரிய செயல்களை, இன்றைய இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை.

இதற்கு யார் காரணம்? அரசா? பல்கலைக் கழகங்களா? நமது பாடத்திட்ட முறையா? நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் விழாவெடுக்கும் நம் தமிழ்மக்கள், அவரை மறந்தது ஏன்?; மறைத்தது ஏன்?

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்