டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்

டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

ஆப்பிரிக்கா சவானா புல்வெளி தனக்கே உரித்தான உயிரினங்களைக் கொண்டுள்ளது.

ஆப்பிரிக்கா சவானா வறண்ட குளிர்காலத்தையும், மழையுடன் கூடிய கோடை காலத்தையும் கொண்டுள்ளது.

ஆகையால் இங்குள்ள தாவர உண்ணிகள் உணவினையும் தண்ணீரையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன.

இடம்பெயர்வதற்கு ஏற்றாற் போல் இவற்றின் கால்கள் நீளமாகவும் உறுதியாகவும் இருக்கின்றன. இங்குள்ள வேட்டை விலங்குகள் இடம்பெயரும் இவற்றை உணவாக்கிக் கொள்கின்றன.

இனி டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள் பற்றிப் பார்ப்போம்.

ஆப்பிரிக்க சிங்கம்

ஆப்பிரிக்க சிங்கம்

 

சிங்கம் ஆப்பிரிக்கா சவானாவின் மிகப்பெரிய வேட்டை விலங்கு. பூனைக் குடும்பத்தில் புலியை அடுத்த இரண்டாவது பெரிய விலங்கு இது.

சிங்கம் 2 முதல் 40 எண்ணிக்கை கொண்ட குழுவாக வாழும் இயல்புடையது. சிங்கக்குழுவில் 3 அல்லது 4 ஆண் சிங்கங்கள், 12 மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் சிங்கங்கள், அதனுடைய குட்டிகள் காணப்படுகின்றன.

 

சிங்கக்குடும்பம்
சிங்கக் குடும்பம்

 

ஆண் சிங்கத்தின் கர்ஜனையானது 8 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் வரை கேட்கும் தன்மையுடையது.

இவை குழுவாக செயல்பட்டு வேட்டையாடுகின்றன.

வரிக்குதிரை, ஒட்டகசிவிங்கி, காட்டெருமை உள்ளிட்ட தாவரஉண்ணிகளை சிங்கம் உணவாக் கொள்கிறது.

 

ஆப்பிரிக்க புதர் யானை

ஆப்பிரிக்க புதர் யானை

 

ஆப்பிரிக்க புதர் யானை நிலத்தில் வாழும் பாலூட்டிகளில் மிகவும் பெரியதாகும்.

இவ்வகை யானையில் ஆண், பெண் இரண்டிற்கும் தந்தங்கள் உண்டு.

இந்த தந்தங்கள் யானை இறக்கும் வரையிலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.

இதனுடைய மிகப்பெரிய காதுகள் அதிகமான உடல் வெப்பத்தை குறைக்கவும், நீண்ட தும்பிக்கை விரல் போன்றும் செயல்படுகின்றன.

யானை பன்னிரெண்டு அடி உயரமும், 4.5 ட‌ன் எடையையும் கொண்டுள்ளது.

 

யானைக்கூட்டம்
யானைக் கூட்டம்

 

இது 10 – 15 நபர்கள் கொண்ட கூட்டமாக வாழ்கின்றது.

பெண் யானை இக்கூட்டத்திற்கு தலைமையேற்கும். சுமார் 70 ஆண்டுகள் வரை இது உயிர் வாழ்கிறது.

ஆப்பிரிக்க காட்டு நாய்

ஆப்பிரிக்க காட்டு நாய்

 

ஆப்பிரிக்க காட்டு நாய் வண்ணமூட்டப்பட்ட ஓநாய், கேப் வேட்டை நாய் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இது ஒரு சமூக விலங்காகும்.

 

ஆப்பிரிக்க காட்டுநாய் குழு
ஆப்பிரிக்க காட்டுநாய் குழு

 

இது வறட்சி காலத்தில் இடம்பெயரும் விலங்குகளை குழுவாக இணைந்து வேட்டையாடுகின்றது.

இதனுடைய நீண்ட கால்கள் மற்றும் லேசான உடல் ஆகியவை இரையினை துரத்தி பிடிக்க இதற்கு உதவுகிறது.

இதனுடைய முன்னங்காலின் கீழ்ப்பகுதியில் உள்ள எலும்பானது ஓடும்போது கால் திருகி கீழே விழாமல் பாதுகாக்கிறது.

இதனுடைய பெரிய காதுகள் உடலின் வெப்பத்தை வெளியேற்ற உதவுகின்றன.

இதனுடைய வாய் மற்றும் தாடைப்பகுதியில் காணப்படும் வலிமையான தசைகள் இரையினைப் அழுத்திப் பிடிக்க உதவுகின்றன.

ஒட்டகசிவிங்கி

ஒட்டகசிவிங்கி

 

ஒட்டகசிவிங்கி உயர்ந்த கால்கள் மற்றும் நீண்ட கழுத்து ஆகியவற்றைக் கொண்டு உலகின் உயர்ந்த விலங்காக உள்ளது.

இதனுடைய கால்கள் மட்டும் 6 அடி உயரத்திற்கும் மேல் இருக்கின்றன.

இது பொதுவாக 6 நபர்கள் கொண்ட சிறுகுழுக்களாக வாழ்கின்றது. இதனுடைய நாக்கு 21 அங்குலம் நீளமுடையது.

இது தன்னுடைய உயரமான கழுத்து மற்றும் நீளமான நாக்கினைக் கொண்டு மரத்தின் உச்சியிலுள்ள இலைகளையும், மொட்டுகளையும் உண்ணுகின்றது.

 

உணவு உண்ணும் ஒட்டகசிவிங்கி
உணவு உண்ணும் ஒட்டகசிவிங்கி

 

இது ஒருவாரத்தில் நூற்றுக்கணக்கான பவுண்ட் இலைகளை உண்ணுகிறது; மேலும் உணவிற்காக பல மைல் தொலைவு பயணத்தையும் மேற்கொள்கிறது.

இது பலநாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீரை அருந்துகிறது. ஏனெனில் அதற்கு தேவையான தண்ணீர் அது உண்ணும் உணவிலிருந்தே கிடைக்கிறது.

ஒட்டகசிவிங்கி குட்டியானது பிறந்து அரைமணி நேரத்தில் எழுந்து நிற்கவும், பத்துமணி நேரத்தில் தாயுடன் ஓடவும் செய்கின்றன.

வரிக்குதிரை (Zebra)

வரிக்குதிரை

 

வரிக்குதிரை ஒரு சமூக விலங்காகும். இவை ஒரு ஆண், சில பெண்கள் மற்றும் குட்டிகள் கொண்ட சிறு குடும்பமாக வாழ்கின்றன.

புதிதான புற்கள் மற்றும் தண்ணீரைத் தேடி இவை இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றன.

சிலநேரங்களில் ஒரு வரிக்குதிரைக் குடும்பமானது மற்ற பல வரிக்குதிரைக் குடும்பங்களுடன் இணைந்து உணவு மற்றும் தண்ணீரைத் தேடி ஒன்றாகச் செல்கின்றன.

ஒரு சில சமயங்களில் மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட மற்ற மேய்ச்சல் விலங்குகளின் கூட்டத்தோடு சேர்ந்தும் உணவிற்காக இடம் பெயருகின்றன.

 

மற்ற விலங்குக்கூட்டங்களோடு வரிக்குதிரைக்கூட்டம்

 

ஒவ்வொரு வரிக்குதிரையும் தன்னுடைய தோலில் தனித்துவமான வரிகளைக் கொண்டுள்ளது. அதாவது ஒரு வரிக்குதிரைக்கு இருக்கும் வரிகளைப்போல் மற்றொரு வரிக்குதிரைக்கு இருப்பதில்லை.

புள்ளி கழுதைப்புலி

புள்ளி கழுதைப்புலி

 

இது இறந்து அழுகிய விலங்குகளை உண்டு தன்னுடைய வாழிடத்தில் சிறந்த துப்புறவாளனாகச் செயல்படுகிறது.

இது கழுதைப்புலி இனங்களில் அளவில் பெரியது. இது பார்ப்பதற்கு நாய் போல் இருந்தாலும் பூனையுடன் நெருக்கமான தொடர்பு உடையது.

இவ்விலங்கானது குழுக்களாக வாழும் இயல்புடையது. ஓருகுழுவில் 80 நபர்கள் வரை இடம் பெறலாம்.

இரவில் இதனுடைய பார்வைத்திறன் மற்றும் கேட்கும்திறன் அதிகம்.

இவ்விலங்கால் நீண்ட தூரம் வேகமாகவும் களைப்பில்லாமலும் ஓடமுடியும்.

இது சிரிப்பது போன்ற பலவிதமான ஒலிகளை உண்டாக்குகிறது. அதனால் சிரிக்கும் கழுதைப்புலி என்று அழைக்கப்படுகிறது.

சிவிங்கி புலி

சிவிங்கி புலி

 

சிவிங்கி புலி (cheetah) நிலத்தில் வேகமாக ஓடக்கூடிய பாலூட்டி விலங்காகும்.

இது இரையினைப் பிடிக்க குறைவான தொலைவிற்கு ஒரு மணிக்கு 97 முதல் 113 கிமீ வேகத்தில் ஓடக்கூடியது.

 

வேகமாக ஓடும் சிவிங்கி புலி
வேகமாக ஓடும் சிவிங்கி புலி

 

இரையை பிடிக்க வேகமாக ஓடும்போது இதனால் எளிதாக திரும்பி வளைந்து ஓடமுடியும்.

இது இரையை கொன்று மரத்தில் வைத்து பின்பு நிதானமாக உணவினை உண்ணும். இது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் அருந்தும்.

ஆர்ட்வாக்

ஆர்ட்வாக்

 

ஆர்ட்வாக் என்ற இதனுடைய பெயரானது ஆப்பிரிக்க மொழியில் இருந்து தோன்றியது. ஆர்ட்வாக் என்றால் நிலப்பன்றி என்று அர்த்தம்.

நீண்ட மூக்கினைக் கொண்ட இது பார்ப்பதற்கு பன்றி போல் இருந்தாலும், இதனுடைய காதுகள் முயலினையும், வால் கங்காருவையும் நினைவூட்டுகிறது.

இதனுடைய வாலினைப் பயன்படுத்தி இது மனிதர்களையும் கீழே விழச்செய்து விடுமாம்.

இது இரவில் தனது உணவான கரையான்களைத் தேடி பல மைல்கள் தூரம் பயணிக்கிறது. பகலில் குழி தோண்டி அதனுள் சென்று ஓய்வெடுக்கிறது.

 

குழிக்குள் இருந்து வெளியேறும் ஆர்ட்வாக்
குழிக்குள் இருந்து வெளியேறும் ஆர்ட்வாக்

 

பெரிய கரையான் புற்றினை காலால் உடைத்து தன்னுடைய நீளமான நாக்கினைப் பயன்படுத்தி கரையான்களை உண்ணுகிறது.

எதிரிகளிடமிருந்து தப்பிக்க அவை நெருங்கி வரும்போது குழி பறித்து அதனுள் பதுங்கிக் கொள்ளும்.

 

கறகால் பூனை

கறகால் பூனை

 

கறகால் என்ற இவ்விலங்கின் பெயரானது துருக்கி மொழியிலிருந்து தோன்றியது. கறகால் என்பதற்கு கருப்புக்காது என்பது பொருளாகும்.

சுமார் 4.5 செமீ நீளமுள்ள முக்கோண வடிவ நீண்ட காதுகளே இதனுடைய சிறப்பு அம்சமாகும். இதனுடைய காதுகளின் நுனியில் கொத்தான கருப்புநிற முடிகள் காணப்படும்.

 

கறகால் பூனையின் நீண்ட காது
கறகால் பூனையின் நீண்ட காது

 

ஊன் உண்ணியான இவ்விலங்கு பறவைகள், கொறியுண்ணிகள், சிறுபாலூட்டிகளை உணவாக் கொள்கிறது.

பறந்து கொண்டிருக்கும் பறவைகளை இது 3மீ உயரம் வரை தாவிப் பிடிக்க வல்லது.

பண்டைய எகிப்தில் இது மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்டு வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டது.

சக்மா பபூன்

சக்மா பாபூன்

 

சக்மா பபூன் குரங்குகளில் அளவில் பெரியது. இதனுடைய முகம் பார்ப்பதற்கு நாய் போன்று நீண்டிருக்கும். இது ஒரு சமூக விலங்காகும்.

இதனுடைய கூட்டத்தில் 4 முதல் 200 உறுப்பினர்கள் உள்ளனர்.

அனைத்துண்ணியான இது பழங்கள், விதைகள், கொட்டைகள், பூச்சிகள், தேள்கள், சிறுபறவைகள் ஆகியவற்றை உணவாக்குகின்றது.

இது மிகவும் ஆக்ரோசமான விலங்கு ஆகும். வேட்டைப்பிராணிகள் இதனை அச்சுறத்தும்போது அதனை மிகவும் ஆக்ரோசமாக எதிர்க்கவும் செய்யும்.

சிவிங்கி புலி, சிறுத்தை போன்றவை இதனை உணவாக்குகின்றன.

 

டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள் பற்றி தெரிந்து கொண்டீர்களா?

ஆப்பிரிக்கா சவானா விலங்குகள் பொதுவாக கூட்டமாகவே வாழ்கின்றன.

இவற்றுள் பெரும்பாலானவை இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றன.

புல்வெளிகள் அழிக்கப்படுவதால் இவற்றுள் பல அருகி வருகின்றன.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.