டாப் 10 ஆர்டிக் நில பாலூட்டி விலங்குகள்

உலகின் எல்லா இடங்களிலும் உயிரினங்கள் உள்ளன. உறைபனியை நிரந்தரமாகக் கொண்டுள்ள இடமான ஆர்டிக் கடினமான, விசித்திரமான, மிக அழகான உயிரினங்களுக்கு சொந்தமானது. இக்கட்டுரையில் டாப் 10 ஆர்டிக் நில பாலூட்டி விலங்குகள் பற்றிப் பார்ப்போம்.

ஆர்டிக் பூமியின் வடதுருவத்தினைச் சுற்றிலும் அமைந்துள்ளது. உறைபனி மற்றும் குளிர் காற்றின் காரணமாக இங்கு மரங்கள் காணப்படுவதில்லை. லிச்சென்கள், பாசிகள், சிறிய குற்றுச்செடிகள் ஆகியவை மட்டுமே இங்கு காணப்படுகின்றன.

நிலத்தில் வாழும் பெரிய வேட்டை விலங்கான துருவக்கரடி முதல் மிகச்சிறிய எலி வகையைச் சார்ந்த லெம்மிங் வரையிலானவை, டாப் 10 ஆர்டிக் நில பாலூட்டி விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 

துருவக்கரடி

துருவக்கரடி
துருவக்கரடி

 

ஆர்டிக்கின் அரசனான துருவக்கரடி நிலத்திலும், நீரிலும் வேட்டையாட வல்லது. இவ்விலங்கின் பாதங்கள் உட்பட உடல் முழுவதும் அடர்த்தியான வெண்ணிற ரோமங்கள் காணப்படுகின்றன.

சீல்களையே முதன்மையான உணவாகக் கொண்டுள்ள இது, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உணவினைத் தேடி பனிக்கட்டியில் அலைந்து கொண்டே இருக்கிறது.

அபார மோப்பசக்தி கொண்ட இவ்விலங்கு பனி மற்றும் தண்ணீருக்கு அடியில் அரை மைல் ஆழத்தில் உள்ள இரையையும் கண்டுபிடிக்கும் திறனுடையது.

சிறந்த நீச்சல் வீரனான இது ஒரே நேரத்தில் 48 கிமீ-க்கு மேல் நீந்தக் கூடியது. நீந்தும்போது முன்னங்கால்கள் துடுப்புகளாகவும், பின்னங்கால்கள் திசை திருப்பவும் உதவுகின்றன.

கனடா, அலகாஸ்கா, ருஷ்யா, கிரீன்லாந்து, நார்வே நாடுகளின் ஆர்டிக் பகுதிகளில் இது காணப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் பனி உருகுவதால் இதற்கு உணவு தட்டுப்பாடு நிலவுகிறது.

ஆர்டிக் நரி

ஆர்டிக் நரி
ஆர்டிக் நரி

 

இது ஆர்டிக்கை தாயகமாகக் கொண்டு நிலத்தில் வாழும் ஒரே பாலூட்டி ஆகும். இதனுடைய குட்டையான கால் மற்றும் காது, தனிப்பட்ட கோட் போன்ற தோல், அடர்ந்த முடிகள் கொண்ட நீளமான வால் ஆகியவை பனி நிறைந்த ஆர்ட்டிக் பகுதியில் வசிப்பதற்கு இதனை ஏற்றதாக மாற்றியுள்ளது.

இதனுடைய உடலின் முடிகள் குளிர் காலத்தில் வெண்ணிறமாகவும், கோடை காலத்தில் பிரவுன் நிறத்திலும் மாறுகின்றன.
பாதங்களில் ரோமங்களைக் கொண்டுள்ள ஒரே நாயினம் இது.

பனிப்புயலின் போது பனியினைத் தோண்டி குழி அமைத்து உள்ளே இருந்து கொள்ளும். இது 50 செமீ நீள உடலையும், 20 செமீ நீள வாலினையும் கொண்டுள்ளது. இது அதிக குளிரின்போது வாலினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளும்.

ஊன உண்ணியான இது லெம்மிங்ஸை அதிகமாக உட்கொள்ளும். சிறிய பறவைகள், முட்டைகள், பூச்சிகள், மீன்கள், இறந்த உடல்கள் ஆகியவற்றையும் சிலநேரங்களில் கடற்பாசிகள், பழங்கள் ஆகியவற்றையும் உட்கொள்ளும்.

 

துருவமான்

துருவமான்
துருவமான்

 

பெரும் கூட்டமாக வாழும் இது, ஆண்டுதோறும் புலம் பெயர்கின்றது. இவ்வின ஆண் மற்றும் பெண் மான்கள் கொம்புகளைக் கொண்டுள்ளன.

இக்கொம்புகள் ஆண்டுதோறும் விழுந்து மீண்டும் புதிதாக முளைக்கின்றன. நன்கு ஓடவும், நீந்தவும் தெரிந்த இது, புற்களை கால்களால் தோண்டி உண்ணுகிறது.

வெள்ளைப் பனியில் பட்டு எதிரொளிக்கும் புறஊதாக்கதிர்களை காணக்கூடிய ஒரே உயிரினமான இது, இதனைப் பயன்படுத்தி எதிரியையும், உணவினையும் எளிதில் அடையாளம் கண்டு கொள்கின்றது.

பருவநிலைக்கு ஏற்ப இதனுடைய கண்கள் தங்கமஞ்சள் நிறம் முதல் நீலநிறம் வைர மாற்றம் அடைகின்றன. இதனால் இவ்விலங்கால் நாள்முழுவதும் பகலாக உள்ள கோடையிலும், முழுஇரவாக உள்ள குளிரிலும் துருவ ஓநாய்களை எளிதில் அடையாளம் காணமுடிகிறது.

 

கத்தூரி எருது

கத்தூரி எருது
கத்தூரி எருது

 

மேய்ச்சல் விலங்கான இது லத்தீன் மொழியில் செம்மறி-எருது என்று அழைக்கப்படுகிறது. பெரிய விலங்கான இது நீண்டு தொங்கும் அடர்த்தியான கம்பளி ரோமங்களையும், வளைந்த கொம்புகளையும் கொண்டு கடினமான ஆர்டிக் பிரதேசத்தில் வசிக்கின்றன.

இது கனடா, அலகாஸ்கா, கிரீன்லாந்து, நார்வே, சைபீரியா ஆகிய இடங்களின் ஆர்டிக் பகுதிகளில் காணப்படுகின்றன.

இதனுடைய அடர்த்தியான கம்பளி ரோமங்கள் ஆடுகளின் கம்பளியைவிட நன்கு குளிரினைத் தாங்குகின்றன. மேலும் இதனுடைய கம்பளியே உலகின் சிறந்த கம்பளியாகக் கருதப்படுகிறது.

கூட்டமாக வாழும் இது லிச்சன், புற்கள், வேர்கள், இலை நுனிகள் ஆகியவற்றை உண்ணுகின்றன. இது தன்னுடைய கூர்மையான பாதங்களைப் பயன்படுத்தி பனியைத் தோண்டி உள்ளிருக்கும் தாவரங்களை உண்ணுகின்றது.

ஆர்டிக் ஓநாய்கள் இதனை அதிகளவு வேட்டையாடுகின்றன. இவ்விலங்கினக் கூட்டமானது அச்சுறுத்தப்படும்போது பெண் மற்றும் ஆண் விலங்குகள் தங்களின் குட்டிகளை நடுவில் விட்டு வட்டமாக நின்று கொண்டு வளைந்த கொம்பினைப் பயன்படுத்தி தாக்குகின்றன.

 

துருவ முயல்

துருவ முயல்
துருவ முயல்

 

துருவப்பகுதியில் வாழ்வதற்கு ஏற்ப இவ்விலங்கு அடர்ந்த மயிற்கற்றைகள் கொண்ட கம்பளி போன்ற தோலினைக் கொண்டுள்ளன. இதனுடைய நீண்ட பின்னங்கால்கள் பனியில் தாவிக் குதித்துச் செல்வதற்கு பயன்படுகிறது.

சுற்றுசூழலில் நிகழும் காலநிலைக்கு ஏற்ப குளிர்காலத்தில் இவ்விலங்கின் ரோமமானது வெண்ணிறமாகவும், கோடை காலத்தில் பழுப்பு நிறமாகவும் மாறி சூழலில் கண்டுபிடிக்க இயலாத வண்ணம் வாழும் தகவமைப்பினைப் பெற்றுள்ளது.

இது குளிர்காலத்தில் பனித்தரையில் துளையிட்டு சுரங்கம் அமைத்து, தன்னை குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றது. இவ்விலங்கால் மணிக்கு 40 மைல் தொலைவு வரை ஓட இயலும்.

இது லைகன்கள், பாசிகள், மொட்டுகள், பழங்கள், இலைகள், வேர்கள், சிறுசெடிகள் என பருவகாலத்திற்கு ஏற்ப கிடைக்கும் தாவர வகை உணவுகளை உண்ணுகிறது.

 

ஆர்டிக் ஓநாய்

ஆர்டிக் ஓநாய்
ஆர்டிக் ஓநாய்

 

இது வெள்ளை ஓநாய், துருவ ஓநாய் என்றும் அழைக்கப்படுகிறது. இதனுடைய குட்டையான கால்கள், காதுகள், கோட் போன்ற தோல் போன்றவை குளிரான ஆர்டிக் பகுதியில் நிலைத்து வாழ உதவுகின்றன.

6-7 நபர்கள் கொண்ட கூட்டமாக வாழும் இயல்புடைய இவ்விலங்கு கனடா, கிரீன்லாந்து, அலகாஸ்கா, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆர்டிக் பகுதிகளில் காணப்படுகின்றன.

இது மற்ற ஓநாய்களைப் போன்று வளை தோண்டி வாழாமல் இயற்கையாக உள்ள குகைகளில் வசிக்கின்றன.

ஊன்உண்ணியான இது கூட்டமாக வேட்டையாடும் இயல்புடையது. இது துருவமான், கத்தூரி எருது, துருவ முயல், மீன்கள், பறவைகள் உள்ளிட்டவைகளை உண்ணுகிறது.

ஆர்டிக் பகுதியில் நிலத்தில் வாழும் தாவர விலங்குகளான துருவமான், கத்தூரி எருது, துருவ முயல் ஆகியவற்றின் எண்ணிக்கையை இது கட்டுப்படுத்தி உயிர்ச்சூழலை சமநிலைப்படுத்துகிறது.

இவ்விலங்கால் தொடர்ந்து ஐந்து மாதங்கள் வரையிலும் கூட உண்ணாமல், இருட்டான குளிர்ந்த ஆர்டிக் பகுதியில் வசிக்க முடியும்.

 

டால் ஷீப்

டால் ஷீப்
டால் ஷீப்

 

இது ஆர்டிகின் பனி அதிகம் இல்லாத காற்று வீசும் உயரமான மலைப் பகுதியையே விரும்புகிறது. இது கனடா மற்றும் அலகாஸ்கா பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது.

இதனுடைய வெளித்தோற்றம் வெள்ளை மற்றும் பழுப்பு நிறம் கலந்த ரோமங்களால் மூடப்பட்டும், வளைந்த பழுப்பு நிற கொம்புகளைக் கொண்டும் உள்ளது.

சுமார் 3 அடி உயரமும், 58 கிலோ எடையையும் கொண்ட இவ்விலங்கு குளிர் காலத்தில் இரண்டு அங்குல தடிமனுடைய கம்பளியைக் கொண்டுள்ளது. இது 12-16 ஆண்டுகள் வாழ்கிறது.

குளிர்காலத்தில் இது தன்னுடைய உடல் எடையில் 16 சதவீதத்தை இழக்கிறது. இது புற்கள், குற்றுச்செடிகள், லிச்சென்கள், பாசிகள் உள்ளிட்டவற்றை உட்கொள்கிறது.

கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்களைத் தேடி இது மலைப்பகுதியிலிருந்து கீழே வருகின்றது.

வால்வரின்கள், கரடிகள், கழுகுகள் ஆகியவை இவற்றை தங்களின் இரையாகக் கொள்கின்றன.

 

வால்வரின்

வால்வரின்
வால்வரின்

 

இது நாயின் அளவில் கரடி உருவத்தைக் கொண்டிருக்கும் விலங்காகும். அளவிலும் உருவத்திலும் தன்னைவிட பெரிய விலங்குகளை கொல்லுவதால் இது வலிமைக்கும், கடினத்தன்மைக்கும் பெயர் போனது.

இதனுடைய பாதமானது ஐந்து விரல்களுடன் அகன்று விரிந்து காணப்படுகிறது. இதனால் இவ்விலங்கால் எளிதாக பனியில் ஓடவும், விலங்குகளை வேட்டையாடவும் முடிகிறது.

இவ்விலங்கின் குட்டையான கால்கள், கழுத்து மற்றும் காதுகள் உடலின் வெப்பத்தை அதிகம் வெளியேற்றாது, உறைபனியில் இவற்றைப் பாதுகாக்கின்றன.

இவ்விலங்கின் மேல்தாடையில் உள்ள அரைக்கும் பல்லானது 90 டிகிரி சுழலும் தன்மை உடையது. இப்பற்களைப் பயன்படுத்தி இவ்விலங்கானது பனியில் உறைந்த நிலையில் இருக்கும் விலங்கின் இறைச்சியை கிழித்து உண்கிறது.

ஆழ்ந்த முகரும் திறன் உடைய இவ்விலங்கு, பல மீட்டர் ஆழத்தில் உறைந்த பனியில் இருக்கும் இறந்த விலங்குகளின் உடலினைக் கண்டறிந்து உணவாக்கிக் கொள்ளும் திறனுடையது.

 

குறுவால் மரநாய்

குறுவால் மரநாய்
குறுவால் மரநாய்

 

இது குளிர்காலத்தில் பளபளக்கும் வெள்ளைநிற உடல் ரோமத்தினையும், வாலின் நுனிப்பகுதியின் கருப்பு நிறத்தினையும் கொண்டுள்ளது.

கோடைகாலத்தில் பழுப்புநிற உடல் ரோமத்தினையும் கொண்டு இது தன்னை சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் தகவமைத்துக் கொள்கிறது.

இது குறுகிய கால்கள், நீண்ட கழுத்து, நீளமான வட்ட காதுகள்,பிரகாசமான கருப்புக் கண்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது யூரேசியா மற்றும் வடஅமெரிக்காவில் ஆர்டிக் பகுதியில் காணப்படுகிறது.

இரவில் வேட்டையாடும் இவ்விலங்கு உணவினைத் தேடி ஒரு நாளில் 15 கிமீ தொலைவுக்கு பயணம் செய்யும். இவ்விலங்கு கேட்கும் திறன், முகரும் திறன், பார்க்கும் திறன் மிக்கது.

முயல்கள், லெம்மிங்கள், மீன்கள், பறவைகள், தவளைகள், பூச்சிகள் ஆகியவற்றை வேட்டையாடும்.

 

லெம்மிங்

லெம்மிங்
லெம்மிங்

 

உருவத்தில் மிகவும் சிறிய இது உருண்டையான தலை, கருமணி போன்ற கண்கள், வட்டமான சிறிய காது, தோண்டுவதற்கேற்ற சிறிய கால்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வாலுடன் சேர்த்தே இதனுடைய மொத்த நீளம் 15 செமீ ஆகும்.

இது ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவின் ஆர்டிக் பகுதிகளில் வசிக்கின்றது. எலி வகையைச் சேர்ந்த உயிரினமான இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப குளிர்காலத்தில் வெள்ளை நிறத்திலும், கோடைகாலத்தில் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

புல், பூண்டு, தாவர வேர்கள், இளந்தளிர்கள் ஆகியவற்றை உண்ணும் இதனை பனி ஆந்தை, குறுவால் மரநாய், வால்வரின் உள்ளிட்ட பெரிய வேட்டை விலங்குகள் உணவாக்குகின்றன.

டாப் 10 ஆர்டிக் நில பாலூட்டி விலங்குகள் சிறந்த தகவமைப்புகளைக் கொண்டு, உறைந்த பனியிலும் வாழும் திறன் பெற்றவை.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் காணப்படும் பருவகால மாற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இவற்றின் உணவு மற்றும் வாழிடத்திற்கு அச்சுறுதல்களை உண்டாக்கி டாப் 10 ஆர்டிக் நில பாலூட்டி விலங்குகள் வாழ்வினை கேள்விக் குறியாக்கி உள்ளன.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.