டாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்

டாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மிகப்பெரிய ஈமு முதல் மிகச்சிறிய வானவில் கூம்பலகுச் சில்லை வரை வித விதமான‌ பறவைகள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.

டாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்

வானவில் கூம்பலகுச் சில்லை

வானவில் கூம்பலகுச் சில்லை
வானவில் கூம்பலகுச் சில்லை

வானவில் போன்று பலவண்ணங்களால் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் இப்பறவை ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டது.

‌வானவில் கூம்பலகுச் சில்லை ஆண் மற்றும் பெண் பறவைகள் பச்சை, மஞ்சள், சிவப்பு, மஞ்சள் என பலவண்ணங்கள் கலந்ததாக இருக்கும். ஆண் பறவையானது பெண் பறவையினைவிட அடர் நிறங்களைக் கொண்டிருக்கும்.

இப்பறவை புல்வெளி சமவெளியில் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு அருகில் வசிகின்றது. ஏனெனில் இதனுடைய முக்கிய உணவு புற்களின் விதைகளாகும்.

இப்பறவையானது சமூகமாக வாழ்கின்றது. இனப்பெருக்க காலத்தை தவிர்த்து மற்ற காலங்களில் மற்ற பறவைகளின் கூட்டங்களோடு சேர்ந்து கூட்டமாக பறந்து திரிகின்றன. ஒரு கூட்டத்தில் 1000-2000 பறவைகள் காணப்படலாம்.

வறட்சி காலங்களில் இப்பறவையானது தண்ணீர் மற்றும் உணவினைத் தேடி அலைகின்றது. இப்பறவை பகலில் சுறுசுறுப்பாக இயங்குகின்றது.

மரப்பொந்துகளில் ‌வானவில் கூம்பலகுச் சில்லை 4-8 எண்ணிக்கையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றது. குஞ்சுகள் பொரித்து 40 நாட்களில் தனியாக சென்று வாழ்கின்றன.

ஈமு

ஈமு
ஈமு

ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட ஈமு நெருப்புக் கோழிக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய பறவையாகும்.

உதைக்கும் தன்மையுடைய இதனால் பறக்க இயலாது. இப்பறவையால் மணிக்கு 50கி.மீ வேகத்தில் ஓடமுடியும்.

பொதுவாக இது உணவினைத் தேடி இடம் விட்டு இடம் பெயர்ந்து நாடோடியாக வாழ்கிறது. அடிக்கடி நீர் அருந்தாத இது உணவின்றி பலவாரங்களுக்கு உயிர் வாழும் தன்மையுடையது.

நன்கு நீந்த தெரிந்த இப்பறவையானது தண்ணீரில் அமர்ந்திருக்கும் திறனுடையது. சுமார் 2மீட்டர் உயரமும், 45கிலோ எடையையும் உடைய இப்பறவை சாம்பல் நிற உடலினைக் கொண்டுள்ளது.

இப்பறவையானது இரண்டு ஜோடி கண் இமைகளைக் கொண்டுள்ளது. ஒன்றை கண்ணை இமைப்பதற்கும், மற்றொன்றை தூசியை தடைசெய்வதற்கும் பயன்படுத்துகிறது.

பெரும்பாலான நேரங்களில் இவ்வின ஆண் பறவையே அடைகாத்து குஞ்சு பொரிக்கிறது. அடைகாத்தலின்போது தன்னுடைய உடலில் மூன்றில் ஒருபங்கு எடையை ஆண் பறவை இழக்கிறது.

மேலும் இவ்வின ஆண் பறவையானது இளம் குஞ்சுகளை ஆறுமாத காலங்கள் பாதுகாத்து வளர்க்கிறது. இப்பறவை ஆஸ்திரேலியாவின் முக்கிய பண்பாட்டு சின்னமாக விளங்குகிறது.

காசோவரி

காசோவரி
காசோவரி

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பறக்காத பறவை காசோவரி ஆகும்.

இதனால் தரையிலிருந்து 2மீட்டர் உயரத்திற்கு குதிக்க முடியும். மேலும் இப்பறவையால் மணிக்கு 50 கிமீ வேகத்தில் ஓட இயலும்.

உலகின் ஆபத்தான பறவை என்று இது கூறப்படுகிறது. இதனால் மனிதனைக்கூட கொல்ல முடியும். சராசரியாக வருடத்திற்கு 200 மனிதர்கள் இப்பறவையால் தாக்கப்படுகின்றனர்.

உணவளிப்பதற்காக இப்பறவையினை மனிதர்கள் நெருங்கும்போது, அச்சுறுத்தப்படுவதாக எண்ணி இப்பறவை மனிதர்களை தாக்குகிறது.

1.5-2 மீட்டர் உயரமும், 50-75 கிலோ கிராம் எடையினைக் கொண்ட இப்பறவை ஆஸ்திரேலியாவின் மிகவும் கனமான பறவையாகும்.

இவ்வின பெண் பறவைகள் அளவில் பெரியதாகவும் ஆக்ரோசமானதாகவும் உள்ளது.

இப்பறவையின் தலையில் மகுடம் போன்ற கெராடினால் ஆன 15செமீ நீளமும், 17செமீ அகலமும் கொண்ட சதைப்பகுதி உள்ளது. இது தாக்குதலின்போது இப்பறவையை பாதுகாக்கிறது.

இப்பறவையானது தலைப்பகுதியால் முட்டியும், கூரிய அலகலால் கொத்தியும், கால்விரலில் உள்ள நகத்தால் கீறியும், கால்களால் உதைத்தும் எதிரியை நிலைகுலையச் செய்கிறது.

இவ்வின ஆண்பறவைகள் முட்டைகளை அடைகாத்து பொரித்து குஞ்சுகளை 8 மாதங்கள் வரை பாதுகாத்து வளர்க்கிறது.

ரெயின்போ லோரிகீட்

ரெயின்போ லோரிகீட்
ரெயின்போ லோரிகீட்

இது ஆஸ்திரேலியாவின் கடற்கரை புதர்காடுகள், மழைக்காடுகள் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

இது பொதுவாக 12-24 எண்ணிக்கை கொண்ட குழுவாகக் காணப்படும். இக்குழு வானில் பறக்கும்போது பார்ப்பதற்கு வானவில் போன்று அழகாக இருக்கும்.

இப்பறவை அடர் சிவப்பு அலகினையும், ஊதாநிற தலையினையும் கொண்டுள்ளது. இதனுடைய இறக்கைகள், முதுகு மற்றும் வால்பகுதி அடர் பச்சை நிறத்தினையும், நெஞ்சுப்பகுதி ஆரஞ்சு மஞ்சள் நிறத்தினையும் கொண்டுள்ளது.

இவை பொதுவாக யூகலிப்படஸ் மரத்தின் பொந்துகளில் தங்களின் கூட்டினை அமைக்கின்றன. இது 1-3 முட்டைகளை இட்டு 25 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கிறது.

இப்பறவையானது மற்ற கிளிகளைப் போல விதைகள் மற்றும் கொட்டைகளை உண்ணபதில்லை. இது பழங்கள், விதைகள் ஆகியவற்றை உண்டாலும் பெரும்பாலும் பூக்களின் தேன் மற்றும் மகரந்தத்தினையே உண்ணுகிறது.

பூக்களின் தேனினை உண்பதற்காக இதனுடைய நாக்கானது சிறிய முடி போன்ற சதைப்பகுதியைக் கொண்டுள்ளது. இந்நாக்கின் உதவியால் இப்பறவையால் எளிதாக தேனை உறிஞ்சு கொள்ள முடியும்.

இதனால் இது தேனினை உண்ணும் பூச்சிகளைப் போன்று பூக்களின் அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.

ஸ்பினிஃபெக்ஸ் கொண்டை புறா

ஸ்பினிஃபெக்ஸ் கொண்டை புறா
ஸ்பினிஃபெக்ஸ் கொண்டை புறா

ஸ்பினிஃபெக்ஸ் எனப்படும் புற்கள் நிறைந்த இடத்தினை வசிப்பிடமாகவும், தலையில் கொண்டையையும் கொண்டுள்ளதால் இது ஸ்பினிஃபெக்ஸ் கொண்டை புறா என்று அழைக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட இது நீண்ட தூரம் நடக்கவும் பறக்கவும் செய்யும்.

இது நீரினைக் கொண்டுள்ள ஸ்பினிஃபெக்ஸ் புல்வெளிகள், கற்பாறைகள் ஆகியவற்றை தன்னுடைய வசிப்பிடமாகக் கொண்டுள்ளது.

அடிக்கடி தண்ணீர் அருந்தும் இப்பறவை மிகவும் சிறியது. இதனுடைய செம்பழுப்பு நிறமானது இதன் வசிப்பிடத்தின் சிவப்பு மண்ணை ஒத்துள்ளதால் இதனை எளிதில் இனம் கண்டு கொள்ள இயலாது.

இவ்வின ஆண் பறவையானது பெண் பறவையைவிட உயரமான கொண்டையைக் கொண்டுள்ளது. காலையிலும், மாலையிலும் சுறுசுறுப்பாகச் செயல்படும் இப்பறவை இணையாகவோ, சிறு குழுவாகவோ காணப்படும்.

இப்பறவையானது அடிக்கடி நீண்ட நேரத்திற்கு அசைவில்லாமல் அப்படியே இருக்கிறது. புற்களின் விதைகளே இதனுடைய முக்கிய உணவாகும்.

ஸ்பிளன்டிட் ஃபேரி விரன்

ஸ்பிளன்டிட் ஃபேரி விரன்
ஸ்பிளன்டிட் ஃபேரி விரன்

இப்பறவை 2-8 பேர் கொண்ட குழுக்களாகவே வாழும். இப்பறவையின் வால் பகுதி சுமார் 14 செமீ நீளத்தில் இருக்கும்.

இனப்பெருக்க காலத்தில் இவ்வின ஆண் பறவை அடர்ந்த நீலவண்ணத்தில் கறுப்பு நிறம் கலந்து மிகவும் ரம்மியமாக இருக்கும்.

இது அடர்ந்த புதர்களைக் கொண்ட காடுகள், புல்வெளிகள் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

இப்பறவையானது சிறுப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள், எறும்புகள் ஆகியவற்றோடு சிறு பழங்கள், விதைகள், பூக்கள் ஆகியவற்றை உணவாக்குகிறது.

இவ்வினப் பெண்பறவை அடர்ந்த புற்களுக்கு இடையே சிறிய உயரத்தில் கூட்டினைக் கட்டுகிறது.

இவ்வினத்தில் ஆண் பறவைகள் ஒன்று சேர்ந்து தங்கள் கூட்டத்தின் இளம்குஞ்சுகளை பராமரித்து வளர்க்கின்றன.

சூப்பர் லைர்பேர்ட்

சூப்பர் லைர்பேர்ட்
சூப்பர் லைர்பேர்ட்

ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இப்பறவை உலகில் உள்ள பாடும் பெரிய பறவைகளில் ஒன்று. இப்பறவை அதனுடைய இறக்கைகள் மற்றும் மிமிக்ரி செய்தல் ஆகியவற்றிற்காக புகழப்படுகிறது.

இப்பறவை இதனுடைய சுற்றுப்புறத்தில் நிகழும் நாய் குரைத்தல் உட்பட எல்லா ஒலிகளையும் மிமிக்ரி செய்ய வல்லது.

லைர்பேர்ட் என்ற இதனுடைய பெயரானது லைர் என்ற கிரேக்க இசைக் கருவியிலிருந்து பெறப்பட்டது. ஏனெனில் இதனுடைய இறக்கை லைர் இசைக் கருவியைப் போன்ற தோற்றத்தில் இருக்கிறது.

இப்பறவையின் உடலின் அளவானது இதனுடைய வால்பகுதியையும் சேர்த்து 80-100 செமீ அளவு இருக்கிறது. இது ஈரப்பதம் மிகுந்த காடுகளில் வாழ்கிறது.

இப்பறவை தன்னுடைய உறுதியான கால்களால் உதிர்ந்து கிடக்கும் இலைகளைக் கிளறி உணவினைத் தேடுகிறது.

இப்பறவைக் கிளறும் போது காய்ந்த இலைகள் ஈரப்பதமான அடிப்பரப்பிற்கு சென்று காட்டுதீயால் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இப்பறவையானது விதைகள், பூச்சிகள், சிலந்திகள், புழுக்கள், தவளைகள் ஆகியவற்றை உணவாக்குகிறது. இப்பறவையானது தன்னுடைய வசிப்பிடத்திலிருந்து 10கிமீ சுற்றளவிற்கு மட்டுமே பயணிக்கிறது.

ரெயின்போ ஈ பிடிப்பான்

ரெயின்போ ஈ பிடிப்பான்
ரெயின்போ ஈ பிடிப்பான்

ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஒரே வகை ஈ பிடிப்பான் ரெயின்போ ஈ பிடிப்பான் ஆகும். இது மரத்தில் வாழும் பறவையினமாகும்.

இது பொதுவாக நீர்நிலைகளைக் கொண்ட புதர்காடுகள், சதுப்புநிலங்கள், காடுகள், விளைநிலங்கள் ஆகிய இடங்களில் காணப்படுகிறது.

இது தங்க மஞ்சள் நிற தலைப்பகுதி, நீல வெளிப்புறங்களுடன் கருப்பு கண் வரி, ஆரஞ்சு மஞ்சள் தொண்டைப்பகுதி, பச்சைநிற முதுகு, இறக்கை, மார்பு, கருஊதா வால் ஆகியவற்றைக் கொண்டு வானவில் போல் அழகாக இருக்கிறது.

மெலிந்த தேகம், சிவப்பு கண்கள், மெல்லிய வளைந்த அலகு, நீண்ட வால் ஆகியவை இப்பறவையின் அடையாளங்களாகும்.

இப்பறவையானது சிறுபூச்சிகள், குளவிகள், தேனீக்கள் உள்ளிட்டவைகளை உணவாக்குகிறது.

இது மரத்தில் அமர்ந்திருக்கும்போது பூச்சிகளை பார்த்துவிட்டால் மின்னல் வேகத்தில் பாய்ந்து பூச்சிகளை பிடித்து, மீண்டும் மரத்திற்கு வந்து அவற்றின் விசக்கொடுக்குகளை மரத்தில் வைத்து தேய்த்து பின் உணவாக்குகிறது.

ஒருநாளைக்கு இப்பறவை 300க்கும் அதிகமான பூச்சிகளை உணவாக்குகிறது.

ஃபேரி பென்குயின்

ஃபேரி பென்குயின்
ஃபேரி பென்குயின்

இப்பறவை ஆஸ்திரேலியாவின் மணல் அல்லது பாறைத் தீவுகளில் காணப்படுகிறது.

உலகில் உள்ள பென்குயின்களில் இது மிகவும் சிறியது.

இது லிட்டில் பென்குயின் லிட்டில் ப்ளு பென்குயின் என்றும் அழைக்கப்படுகிறது. இது 33 செமீ உயரமும், 1.5 கிலோகிராம் எடையையும் கொண்டுள்ளது.

இது பகல் முழுவதும் கடலில் உணவைத் தேடிக் கொண்டு இரவில் வசிப்பிடம் திரும்புகிறது. இப்பறவை பெரும்பாலும் ஆழம் குறைவான கடல்பகுதிகளில் உணவைத் தேடிய போதும் சிலநேரங்களில் சுமார் 250 அடி ஆழம் வரை செல்லக்கூடும்.

இப்பறவையால் 2நிமிடங்களுக்கு மேல் தண்ணீரினுள் மூழ்கி இருக்க இயலாது. இது காலனிகளாகவே வசிக்கிறது.

இப்பறவையின் வால்பகுதியில் இருக்கும் சுரப்பில் சுரக்கும் திரவத்தினை உடலில் உள்ள இறக்கைகளில் தடவிக்கொள்வதால் இறக்கைகளில் நீர் ஒட்டுவதில்லை. இதனால் இப்பறவையால் கடலில் நீண்ட நேரம் இருக்க முடிகிறது.

ஆப்பு வால் கழுகு

ஆப்பு வால் கழுகு
ஆப்பு வால் கழுகு

இப்பறவை ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட மிகப்பெரிய வேட்டைப் பறவையாகும். இதனுடைய வால் பகுதி ஆப்பு போல் தோற்றமளிப்பதால் இது ஆப்பு வால் கழுகு என்றழைக்கப்படுகிறது.

இது உலகில் உள்ள மிகப்பெரிய கழுகு இனங்களில் ஒன்று. இதனுடைய இறக்கை விரியும்போது 2.3மீ முதல் 2.8மீ வரை இருக்கும்.

இப்பறவையில் ஆண் பறவையைவிட பெண் பறவையே அளவிலும், எடையிலும் பெரிதாக இருக்கும்.

இப்பறவையானது மிகஉயரமான மரத்திலேயே தன்னுடைய கூட்டினை அமைக்கிறது. இதனுடைய கூடு 2மீ சுற்றளவும், 4மீ ஆழமும் சுமார் 400 கிலோவரை எடையளவும் கொண்டதாக இருக்கிறது.

இப்பறவையானது தனது கூட்டினை பலஆண்டுகளுக்கு பயன்படுத்துகிறது. இளம் வயதில் அடர்பழுப்பு நிறத்தில் இருக்கும் இதனுடைய இறகுகள் வயது ஏற ஏற கருப்பாக மாறுகிறது.

இதனுடைய உணவுப்பட்டியலில் முயல் முதல் கங்காரு வரை இடம் பெறுகிறது.

இப்பறவையானது 2-3 முட்டைகளை இரண்டு நாட்கள் இடைவெளியில் இடுகிறது. ஆனால் முதல் முட்டை இட்டவுடன் முட்டையை அடைக்காக்கத் தொடங்குவதால் முதல் முட்டையானது முதலில் பொரிக்கப்படுகிறது.

இதனால் முதல் குஞ்சு வலிமையானதாக விளங்குகிறது. பின்னர் பொரிக்கும் வலிமையற்ற குஞ்சுகளை முதலில் பொரித்த குஞ்சு கொன்றுவிடுகிறது. வலிமையானவைகளே பிழைத்திருக்கும் என்பது இப்பறவைக்கு முற்றிலும் பொருந்தும்.

ஆஸ்திரேலியாவில் அளவில் பெரியது முதல் சிறியது வரையிலானதும் பலவண்ணங்கள் முதல் கருப்புநிறம் வரையிலும், அழகானது முதல் பயமுறுத்தும் வரையிலான பறவைகள் காணப்படுகின்றன. இவ்வகையிலான பறவைகளையே டாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.