டாப் 10 உலகின் வியப்பூட்டும் விலங்குகள்

டாப் 10 உலகின் வியப்பூட்டும் விலங்குகள்

உலகில் உள்ள விலங்குகளில் சில வியப்பூட்டும் உடலமைப்பு மற்றும் நடவடிக்கைகளைக் கொண்டிருக்கின்றன. டாப் 10 உலகின் வியப்பூட்டும் விலங்குகள் பற்றிப் பார்ப்போம்.

ஓகாப்பி (Okapi)

ஓகாப்பி
ஓகாப்பி

 

காங்கோவின் வடகிழக்குப் பகுதியான இட்ரு மழைக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட ஓகாப்பி ஒட்டகச்சிவிங்கி இனத்தைச் சார்ந்தது.

இதனுடைய உடலில் வரிக்குதிரைக்கு இருப்பது போல் கோடுகள் உள்ளன. இது ஒட்டகசிவிங்கி போல் கருப்புநிற நாக்கினையும், நீண்ட கழுத்தினையும் கொண்டுள்ளது.

இதனுடைய நாக்கு நீளமாக இருப்பதால் கண்களை தன்னுடைய நாக்கினால் நக்கும்.

உலகில் தன்னுடைய நாக்கால் தன்னுடைய கண்களை நக்கும் ஒரே விலங்கு ஓக்காப்பி மட்டுமே.

டஃப்ட் மான் (Tufted Deer)

டஃப்ட் மான்
டஃப்ட் மான்

 

இது சீனா மற்றும் மியான்மாரில் காணப்படுகிறது. இது நாய் போல குரைக்கும். பூனை போல் குதிக்கும்.

இவ்வகை ஆண்மானின் நெற்றியில் குதிரை குளம்பு வடிவில் கருப்புநிற‌ முடிக்கொத்து, சிறிய தந்தம் போன்ற கோரை பற்கள், சிறிய கொம்புகள் ஆகியவை இவற்றின் முக்கிய அடையாளங்களாகக் கருதப்படுகிறது.

அய்யே அய் (Aye-aye)

அய்யே அய்
அய்யே அய்

 

இது மடகாஸ்கர் தீவில் வசிக்கும் லெமூர் வகைகளில் ஒன்று. இது மரக்கொத்தியைப் போல் மரத்தினுள் இருக்கும் பூச்சிகளை உணவாக்கிக் கொள்கிறது.

அடர்ந்த காடுகளில் உள்ள மரங்களில் புதைந்து கொண்டிருக்கும் பூச்சிகளைக் கண்டறிய மரத்தில் ஏறி அமர்ந்து அதனை தட்டுகிறது.

பூச்சிகளைக் கண்டறிந்ததும் அய்யே அய் தன்னுடைய முன்பற்களால் துளையிடுகிறது. பின்னர் நீண்ட மெல்லிய விரல்களை துளையினுள் செலுத்தி பூச்சிகளை பிடித்து உண்ணுகிறது.

 

கோப்ளின் சுறா (Goblin Shark)

கோப்ளின் சுறா
கோப்ளின் சுறா

 

இது கடலின் ஆழ்பரப்பில் காணப்படும் சுறா வகையைச் சார்ந்தது. 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சுறாக்களில் சிறிது சிறிதாக மாறிவிட்ட சுறாவாக இது கருதப்படுகிறது.

 

கோப்ளின் சுறா தாடை
கோப்ளின் சுறா தாடை

 

13 அடி நீளம் வளரும் இது ஆழ்கடலின் தரைப்பரப்பில் உணவினைத் தேடுவதற்காக அதிக நேரத்தை செலவிடுகிறது.

சைகா மான் (Saiga Antelope)

சைகா மான்
சைகா மான்

 

இவ்வகை மான் யுரேசியாவின் ஸ்டெப்பி புல்வெளியை வாழிடமாகக் கொண்டது. அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இது தற்போது ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் பகுதிகளில் காணப்படுகிறது.

இதனுடைய மூக்கு பெரிதாகவும், மூக்கு துவாரங்கள் கீழ்நோக்கியும் காணப்படுகின்றன.

வறண்ட கோடையில் புழுதி கலந்த காற்றினை வடிகட்டவும், குளிர்காலத்தில் உறைபனி குளிர்காற்றை சூடேற்றவும் சைகா மான்  மூக்கு உதவுகிறது.

கெரெனுக் மான் (Gerenuk)

கெரெனுக்
கெரெனுக்

 

ஆப்பிரிக்காவில் காணப்படும் கெரெனுக் ஒட்டகசிவிங்கி கழுத்து மான் என்று அழைக்கப்படுகிறது. இது தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் உள்ள மரக்கிளைகளிலிருந்து தனக்கு தேவையான உணவினைப் பெறுகிறது.

 

கெரெனுக் மேய்தல்
கெரெனுக் மேய்தல்

 

உயரமான மரத்தில் உள்ள உணவிற்காக இது நிமிர்ந்து நின்று நீண்ட கழுத்தினை நீட்டி உணவினை உண்ணுகிறது. மேலும் தண்ணீரை தினசரி அருந்துவதில்லை.

தாழ்நில ஸ்ட்ரீக் டென்ரெக் (Lowland Streaked Tenrec)

தாழ்நில ஸ்ட்ரீக் டென்ரெக்
தாழ்நில ஸ்ட்ரீக் டென்ரெக்

 

தாழ்நில ஸ்ட்ரீக் டென்ரெக் மடகாஸ்கரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணப்படுகிறது. ஆறு அங்குல அளவு உள்ள இப்பிராணி மண்புழுக்கள் மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்ளும்.

இது தன்னுடைய ரோமங்களுடன் வளரும் கூர்மையான முள்ளிளைக் கொண்டு எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறது.

கிளாக்கஸ் அட்லாண்டிகஸ் (Glaucus Atlanticus)

கிளாக்கஸ் அட்லாண்டிகஸ்
கிளாக்கஸ் அட்லாண்டிகஸ்

 

அழகாக இருக்கும் கிளாக்கஸ் அட்லாண்டிகஸ் கடலில் வாழும் மெல்லுடலி வகையைச் சார்ந்த உயிரினம் ஆகும்.

இது பகலில் இரையினைத் தேடி கடலில் தலைகீழாக மிதக்கும். இது பார்ப்பதற்கு டிராகன் பறப்பது போல் இருக்கும்.

இது தன்னுடைய இரையான போர்த்துக்கீசிய மே ஓ வார் என்ற ஹைட்ரோசோவாவின் சைபோனோஃபோரிலிருந்து விஷ நெமடோசைஸ்ட்களை விழுங்குகிறது.

பின் விசத்தை அதன் விரல் போன்ற கிரெட்டாவின் முனைகளில் சேமித்து வைக்கிறது. தேவைப்படும்போது கிளாக்கஸ் அட்லாண்டிகஸ் இவ்விசத்தை எதிரிகளிடம் உபயோகிக்கிறது.

பெரிய ஆசிய மென்னோடு ஆமை (Asian Gaint SoftShelled Turtle)

பெரிய ஆசிய மென்னோடு ஆமை
பெரிய ஆசிய மென்னோடு ஆமை

 

தெற்கு ஆசியப் பகுதியில் நன்னீர் வாழிடத்தில் காணப்படும் இவ்வாமை உலகின் மிகப்பெரிய நன்னீர் ஆமை ஆகும். இது ஆறு அடி நீளம் வளரும்.

இது தன்னுடைய வாழ்வின் 95 சதவீதத்தை மணலில் புதையுண்டு அசைவில்லாமல் கழிக்கிறது. மணலில் புதையுண்டு இருக்கும்போது அதனுடைய கண்கள் மற்றும் வாய் மட்டும் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும்.

இந்த‌ ஆமை சுவாசிப்பதற்காக மட்டும் மணலின் மேற்பரப்பிற்கு ஒருநாளைக்கு இருமுறை மட்டும் வெளியே வரும்.

கேழல் மூக்கன் தவளை (Purple Frog)

கேழல் மூக்கன்
கேழல் மூக்கன்

 

இது கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் அரியவகைத் தவளை ஆகும்.

இதனுடைய தலை மிகச் சிறியதாகவும், வாய் மற்றும் மூக்குப்பகுதி கூர்மையாகவும் இருக்கும். இதனுடைய மூக்கு பன்றி போலுள்ளதால் கேழல் மூக்கன் என்றழைக்கப்படுகிறது.

இத்தவளை வருடத்திற்கு இருவாரங்களுக்கு மட்டும் இனப்பெருக்கத்திற்காக பூமியின் மேற்பரப்பிற்கு வரும். மீதிநாட்களை பூமியினுள் இருந்து பூமிக்குள் இருக்கும் கரையான் பூச்சிகளை உணவாகக் கொள்ளும்.

 

டாப் 10 உலகின் வியப்பூட்டும் விலங்குகள் பற்றி அறிந்து கொண்டீர்களா? இவ்விலங்குகளைப் பற்றிய‌ ஆச்சர்யமூட்டும் செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

வ.முனீஸ்வரன்