தேசிய பூங்கா என்பது காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க அரசால் அறிவிக்கப்பட்ட இயற்கை நிலப் பரப்பு ஆகும். இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா பற்றி இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் டாப் 10 தேசிய பூங்கா ராஜஸ்தான், உத்திரகண்ட்,மத்திய பிரதேசம், கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம்,தமிழ்நாடு, குஜராத், ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது.
இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா
ரன்தம்பூர் தேசியப் பூங்கா
இத்தேசியப்பூங்கா ராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்வை மேட் கோபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் நடுவில் புகழ் பெற்ற ரன்தம்பூர் கோட்டை உள்ளது. இது ஜெய்ப்பூருக்கு தென்கிழக்கில் 130 கி.மீ தொலைவில் உள்ளது.
இப்பூங்கா ஆரவல்லி மற்றும் விந்திய மலைகளின் இணைப்பில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் நிலப்பரப்பு இலை உதிர்க்காடுகளையும், திறந்த வெளிப் புல்வெளிகளையும் மாறி மாறிப் பெற்றுள்ளது.
இப்பூங்கா 1973-ல் புலிகளுக்கான பூங்காகாவாக இந்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 392 சதுர கி.மீ பரப்பளவுக்கு விரிவடைந்துள்ளது. புலிகளை நேரில் காண்பதற்குரிய சிறந்த இடமாக இப்பூங்கா கருதப்படுகிறது.
இப்பூங்காவைப் பார்வையிட மே அல்லது நவம்பர் மாதம் சிறந்த காலம் ஆகும். இப்பூங்காவில் காணப்படும் ஏரிகளில் பதம்தலாவ் குறிப்பிடத்தக்கது. இவ்வேரியின் அருகே இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆலமரம் காணப்படுகிறது.
இப்பூங்காவில் புலிகள், லங்கூர் குரங்குகள், சிறுத்தைகள், கழுதைப்புலிகள், காட்டுப்பூனைகள், கரடிகள், காட்டுப்பன்றிகள், முதலைகள், சாம்பார் மான்கள், பல்வேறு வகையான பறவையினங்கள், 500 மேற்பட்ட தாவர இனங்கள் காணப்படுகின்றன.
ஜிம்கார்பெட் தேசியப் பூங்கா
ஜிம்கார்பெட் தேசியப்பூங்கா உத்திரகண்ட் மாநிலத்தில் நைனிடால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1935-ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பூங்கா இந்தியாவின் பழமையான பூங்காவாகும்.
இது மலைகள், சதுப்பு நிலங்கள், ஆற்றுப்படுகைகள், புல்வெளிகள் மற்றும் பெரிய ஏரிகள் என பலவகையான நிலத்தோற்றங்களைக் கொண்டுள்ளது.
இப்பூங்கா 520 சதுர கி.மீ பரப்பளவினைக் கொண்டு இமயமலை அடிவாரத்தில் மிக ரம்மியமாகக் காட்சியளிக்கிறது.
இப்பூங்கா நவம்பர் முதல் ஜீன் வரை பார்வையிட சிறந்தாகும்.
இப்பூங்காவில் வங்கப்புலிகள், இந்திய யானைகள், புள்ளி மான்கள், குறைக்கும் மான்கள், சாம்பார் மான்கள், பன்றி மான்கள், இமயமலை கருப்புக் கரடிகள், சாம்பல்நிறக் கீரி, முதலைகள், லங்கூர் குரங்குகள், மலர்ந்த பூப் போன்ற தலையை உடைய கிளிகள், ஆந்தைகள், 400-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் காணப்படுகின்றன.
பாந்தவ்கார் தேசியப் பூங்கா
பாந்தவ்கார் தேசியப்பூங்கா மத்தியப்பிரதேச மாநிலம் உம்ரியா மாவட்டத்தில் விந்திய மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இது 1968-ல் 105 சதுர கி.மீ பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 437 சதுர கி.மீ பரப்பளவாக விரிவடைந்துள்ளது.
இப்பூங்காவின் நிலப்பரப்பு செங்குத்தான முகடுகளையும், காடுகளையும், திறந்த புல்வெளிகளையும் கொண்டுள்ளது.
இவ்விடத்தில் இருந்தே லட்சுமணன் இலங்கையை கவனித்தார் என்றும், அதனால் இவ்விடம் பாந்தவ்கார் என்று (சமஸ்கிருதத்தில் பாந்தவ்கார் என்றால் சகோதரர் கோட்டை) அழைக்கப்படுகிறது.
இப்பூங்காவினைப் பார்வையிட 15 அக்டோபர் முதல் 30 வரை ஜீன் வரை ஏற்றதாகும். இப்பூங்காவில் தான் புலிகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
இப்பூங்காவில் வங்கப்புலிகள், சிறுத்தைகள், வெள்ளைப் புலிகள், சாம்பார் மான்கள், குறைக்கும் மான்கள், காட்டுப்பன்றிகள், பெங்கால் நரிகள், வரிகழுதைப்புலிகள் போன்றவைகள் உள்ளன.
மலைப்பாம்புகள், விரியன் பாம்புகள், கழுகுகள், வண்ணத்துப்பூச்சியினங்கள், 300 வகையான தாவர இனங்கள் காணப்படுகின்றன.
பெரியார் தேசியப் பூங்கா
பெரியார் தேசியப்பூங்கா கேரளாவில் தேக்கடியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் அமைந்துள்ளது. இது அழகிய நீர் நிலைகளுடன், இயற்கை எழில் மிகுந்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பூங்காவாகும்.
இப்பூங்கா 1982-ல் 305 சதுர கி.மீ பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 925 சதுர கி.மீ பரப்பினைக் கொண்டுள்ளது.
இப்பூங்கா நீர் வளம் மிகுந்து காணப்படுவதற்குக் காரணம் அப்பகுதியில் ஓடும் பெரியார் மற்றும் பம்பா நதிகளே ஆகும்.
இப்பகுதியில்தான் ராஜநாகங்கள் அதிகளவு இருக்கின்றன.
இப்பூங்காவினைப் பார்வையிட செப்டம்பர் முதல் மே வரை உள்ள காலம் ஏற்றதாகும்.
இப்பூங்காவில் புலிகள், யானைகள், காட்டுப்பன்றிகள், சாம்பார் மான்கள், எலிமுக மான்கள், குரைக்கும் மான்கள், மலபார் பெரிய அணில்கள், சிறுத்தைகள், ராஜநாகங்கள், ஊதா தவளைகள், பறவையினங்கள், வண்ணத்துப்பூச்சியினங்கள், 300-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் காணப்படுகின்றன.
காசிரங்கா தேசியப் பூங்கா
காசிரங்கா தேசியப்பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தில் கோலாகாட், நாகான் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இது உயரமான புற்களை உடைய புல்வெளிகளை அதிகம் கொண்டு கிழக்கு இமயமலைப்பகுதியில் அமைந்துள்ளது.
1905-ல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 429 சதுர கி.மீ பரப்பினைப் பெற்றுள்ளது. பிரம்மபுத்திரா உட்பட நான்கு நதிகள் இப்பூங்காவினை வளப்படுத்துகின்றன.
உலகிலேயே ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் இங்கு தான் அதிகம் காணப்படுகின்றன.
உலகப்புகழ் பெற்ற இப்பூங்கா சிறந்த பறவைகள் சரணாலயமாகவும் திகழ்கிறது. இங்கு இடம் பெயரும் பறவையினங்கள் அதிகம் வாழ்கின்றன.
இப்பூங்காவினைப் பார்வையிட நவம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள காலம் ஏற்றதாகும்.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், புலிகள், யானைகள், காட்டு நீர் எருமைகள், சேற்று மான்கள், காட்டுப்பன்றிகள், பல்வேறு பறவையினங்கள், உயரமான புற்கள் காணப்படுகின்றன.
சுந்தர்பன் தேசியப் பூங்கா
சுந்தர்பன் தேசியப்பூங்கா மேற்கு வங்காளத்தில் கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா நதிகளின் முகத்துவாரப் பகுதிகளில் அமைந்துள்ளது.
இப்பூங்கா சதுப்பு நிலக்காடுகளான மாங்குரோவ் காடுகளை அதிகம் கொண்டுள்ளது.
சதுப்புநிலத் தாவரங்களில் ஒன்றான சுந்தரி என்பதன் பெயரால் இப்பூங்கா சுந்தர்பன் என்றழைக்கப்படுகிறது.
இது 1984-ல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. வங்கப்புலிகளுக்கான அதிகப் பரப்பினைப் பெற்று பெரிய சரணாலயாமாக உள்ளது.
இது இந்தியாவில் மட்டும் 4262 சதுர கி.மீ பரப்பிகைக் கொண்டுள்ளது. இச்சரணாலயத்தை படகுகள், சிற்றோடைகள், சிற்றாறுகள் மூலம் காணலாம்.
இப்பூங்காவினைப் பார்வையிட டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலம் ஏற்றதாகும்.
இப்பூங்காவில் புலிகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள், நரிகள், பறக்கும் நரிகள், மீன் பிடிக்கும் பூனைகள், காட்டுப்பூனைகள், உப்பு நீர் முதலைகள், எறும்புண்ணிகள், பழுப்பு நிறக் கீரிகள், கங்கை டால்பின்கள், மரத்தவளைகள், பல்வேறு பறவையினங்கள், மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன.
கன்ஹா தேசியப் பூங்கா
கன்ஹா தேசியப்பூங்கா மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாண்ட்லா மற்றும் பால்காட் மாவட்டங்களில் அமைந்துள்ளது. 1973-ல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டு தற்போது 940 சதுர கி.மீ பரப்பினைக் கொண்டுள்ளது.
மத்திய இந்தியாவில் அமைந்துள்ள மிகப் பெரிய பூங்காவாகும்.
இப்பூங்காவில் உள்ள மூங்கில் காடுகள், தரைப்புல்வெளிகள், பசுமையான சால்கள் ஆகியவையே ஜங்கிள் புக் என்ற நாவல் எழுத தூண்டுகோலாக அமைந்தன.
இப்பூங்காவினைப் பார்வையிட பிப்ரவரி முதல் ஜீன் வரை உள்ள காலம் ஏற்றதாகும்.
இப்பூங்காவில் வங்கப்புலிகள், சிறுத்தைகள், கழுதைப்புலிகள், காட்டுநாய்கள், காட்டெருமைகள், சாம்பார் மான்கள், குரைக்கும் மான்கள், மலைப்பாம்புகள், ஆமைகள், 1000-க்கும் மேற்பட்ட தாவரயினங்கள் காணப்படுகின்றன.
முதுமலை தேசியப் பூங்கா
முதுமலை தேசியப்பூங்கா தமிழ்நாட்டில் நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. 1940-ல் வனவிலங்குச் சரணாலயமாக 62 சதுர கி.மீ பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 321 சதுர கி.மீ பரப்பளவுப் பகுதி சரணாலயமாக உள்ளது. இதில் 108 சதுர கி.மீ பகுதி தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மலையின் 6000 சதுர கி.மீ பகுதி யுனஸ்கோவினால் உலக பாராம்பரிய தளமாக அறிவிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் இத்தேசியப்பூங்காவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பூங்காவினைப் பார்வையிட பிப்ரவரி முதல் மே வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் உள்ள காலம் ஏற்றதாகும்.
இப்பூங்காவில் வங்கப்புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், லங்கூர் குரங்குகள், சீத்தல் மான்கள், மலபார் அணில்கள், மலைப்பாம்புகள், பறக்கும் ஓணான்கள், காட்டு நாய்கள், சாம்பார் மான்கள், குரைக்கும் மான்கள், 226 வகையான பறவையினங்கள், உயர்ந்த புல்வெளிகள், அடர்ந்த காடுகள், மூங்கில்கள், அழகிய நீரோடைகள் காணப்படுகின்றன.
கிர் தேசியப் பூங்கா
கிர் தேசியப்பூங்கா குஜராத் மாநிலத்தில் ஜூனாகார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசிய சிங்கங்களுக்கான தேசியப்பூங்காவாகும்.
உலகில் ஆப்பிரிக்காவைத் தவிர சிங்கங்கள் காட்டுப்பகுதியில் உலவுவதையும், அவற்றின் செயல்பாடுகளையும் இப்பூங்காப் பகுதியில் மட்டுமே காணமுடியும்.
1965-ல் 1412 சதுர கி.மீ பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்ட இப்பூங்கா தற்போது 1153 சதுர கி.மீ பரப்பளவாக உள்ளது. ஐந்து நதிகள் இப்பூங்காவினை வளப்படுத்துகின்றன. நான்கு அணைக்கட்டுகள் இப்பூங்காவினுள் அமைந்துள்ளன.
இப்பூங்காவினைப் பார்வையிட 16 அக்டோபர் முதல் 15 ஜூன் வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இப்பூங்காவில் ஆசிய சிங்கங்கள், சிறுத்தைகள், சாம்பார்மான்கள், கலைமான்கள், தங்க குள்ள நரிகள், முயல்கள், கீரிகள், காட்டுப்பூனைகள், வரிக்கழுதைப்புலிகள், நான்கு கொம்பு மான்கள், காட்டுப்பன்றிகள், நல்ல பாம்புகள், சதுப்பு முதலைகள், பல்வேறு பறவையினங்கள், 400-க்கும் மேற்பட்ட தாவரயினங்கள் காணப்படுகின்றன.
ஹெம்மிஸ் தேசியப் பூங்கா
ஹெம்மிஸ் தேசியப்பூங்கா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது.
உலகில் பனிச்சிறுத்தைகள் காட்டுப்பகுதியில் உலவுவதையும், அவற்றின் செயல்பாடுகளையும் இப்பூங்காப் பகுதியில் மட்டுமே காணமுடியும்.
வடக்கு இமயமலைப் பகுதியில் அமைந்து இந்தியாவின் மிகப்பெரிய தேசியப் பூங்கா என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது.
இது சிந்து நதியின் வடக்குக் கரையில் மார்க்கா மற்றும் ராம்பேக் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்துள்ளது. இது 1981-ல் 600 சதுர கி.மீ பரப்பில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 4400 சதுர கி.மீ பரப்பளவாக உள்ளது.
இப்பூங்காவினைப் பார்வையிட செப்டம்பர் முதல் ஜூன் வரை உள்ள காலம் ஏற்றதாகும்.
இப்பூங்காவில் பனிச்சிறுத்தைகள், திபெத்திய ஓநாய்கள், ஐரோப்பிய பழுப்புக் கரடிகள், சிவப்பு நரிகள், திபெத்திய ஆடுகள், இமாலயக்கோழிகள், தங்க நிறக் கழுகுகள், பருந்துகள், பைன் காடுகள், அல்பைன் சிறுபுற்கள், புல்வெளிகள் காணப்படுகின்றன.
Comments
“இந்தியாவின் டாப் 10 தேசிய பூங்கா” மீது ஒரு மறுமொழி