டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள்

டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

உலகில் எல்லா உயிரினங்களும் பிறந்து வாழ்ந்து இறக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட வாழ்நாளைப் பெற்றுள்ளது.

சில உயிரிகள் நோய், மோசமான காலநிலை, உணவு பற்றாக்குறை, வாழிடமிழப்பு ஆகியவற்றால் அவற்றின் சராசரி வாழ்நாளைவிட  விரைவாக இறக்கின்றன.

சிலமனிதர்கள்  100 வயது வரை வாழ்கின்றனர்.

உலகில் பல உயிரினங்கள் 100 வயதினையும் தாண்டி வாழ்கின்றன. இனி நீண்ட காலம் உயிரினங்கள் பற்றிப் பார்ப்போம்.

 

டூரிடோப்சிஸ் நியூட்ரிகுலா ஜெல்லி மீன்( Turritopsis nutricula Jellyfish)

டூரிடோப்சிஸ் நியூட்ரிகுலா ஜெல்லி மீன்
டூரிடோப்சிஸ் நியூட்ரிகுலா ஜெல்லி மீன்

 

அழிவில்லாத உயிரினம் என்று டூரிடோப்சிஸ் நியூட்ரிகுலா ஜெல்லி மீன் சிறப்பாக அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது வயது முதிர்ந்த நிலையில் தன்னை இளம் உயிரியாக மாற்றிக் கொள்கிறது.

அதாவது முதிர்ந்த செல்லை இளம் செல்லாக மாற்றும் தன்மையை இது பெற்றுள்ளது. எனவே இதனுடைய வாழ்நாட்களைக் குறிப்பிட இயலாது.

இம்மீன் இளம்நிலையில் பாலிப் என்று அழைக்கப்படுகிறது. பாலிப் நிலையில் இது வேட்டை விலங்குகளாலும், நோயினாலும் பாதிப்புக்குள்ளாகிறது.

 

ஆர்க்டிகா ஐலண்டிகா கிளிஞ்சல்( Ocean quahog)

ஆர்க்டிகா ஐலண்டிகா கிளிஞ்சல்
ஆர்க்டிகா ஐலண்டிகா கிளிஞ்சல்

 

ஆர்க்டிகா ஐலண்டிகா என்னும் வடக்கு அட்லாண்டிக் கடலினை தாயகமாகக் கொண்ட கிளிஞ்சல் சுமார் 400 வருடங்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நீண்ட காலம் வாழும் கடலுயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மிங் என்ற பெயரினையுடைய இவ்வகை கிளிஞ்சல் 405 வருடங்கள் வாழ்ந்துள்ளது. மிங் சீன வம்சத்தின் போது வாழ்ந்ததால் இக்கிளிஞ்சல் மிங் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனுடைய வயதானது, அதன்மீது இருந்த ஆண்டுதோறும் தோன்றும் வளையங்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்பட்டது. 2006-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் இதனை ஆய்வு செய்வதற்காக திறந்தபோது இது இறந்து விட்டது.

 

அல்தாப்ரா ஆமை(Aldabra Tortoise)

அல்தாப்ரா ஆமை
அல்தாப்ரா ஆமை

 

அத்வைதா எனப்படும் அல்தாப்ரா ஆமை 255 வயது வரை வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கொல்கத்தாவின் அலிபூர் உயிரியல் பூங்காவில் வாழ்ந்த இந்த ஆமை 2006-ல் இறந்தது.

இதனுடைய வயது உறுதி செய்யப்பட்டால் இது உலகின் மிகப்பழமையான பூமிக்குரிய விலங்காக இருக்கும்.

 

கொய் மீன் (Koi Fish)

கொய் மீன்
கொய் மீன்

 

இம்மீன் உப்புநீர் நிலைகளில் அதிகமாக காணப்படுகிறது. இவை கடலில் வாழ்ந்தாலும் இனப்பெருக்க காலத்தில் நன்னீர் வாழிடங்களுக்கு செல்லும்.

பொய் கெண்டை என்றழைக்கப்படும் கொய் மீன் காவிரி ஆற்றில் காணப்பட்டதாக அப்பரின் தேவாரம் குறிப்பிடுகிறது.

இது வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, நீலம், சிவப்பு, கருப்பு, கிரீம் வண்ணங்களில் அழகாக இருக்கும். ஹனகோ எனப்படும் இவ்வகை மீன் 1977-ல் 226 வயதில் ஜப்பானில் இறந்ததாக பதிவிடப்பட்டுள்ளது.

பௌஹெட் திமிலங்கம் (Bowhead Whale)

பௌஹெட் திமிலங்கம்
பௌஹெட் திமிலங்கம்

 

ஆர்டிக் கடலினை வசிப்பிடமாகக் கொண்ட பௌஹெட் திமிங்கலம் நீண்ட நாட்கள் உயிர் வாழும் பாலூட்டி இனமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றின் சராசரி ஆயுட்காலம் 200 ஆண்டுகள் ஆகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடுபவர்கள் உண்டாக்கிய வடுகள் தாங்கிய இவ்வகை திமிங்கலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 211 வயதுடைய இவ்வகை திமிலங்கத்தை கண்டறிந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

கிரீன்லாந்து சுறா (Greenland Shark)

கிரீன்லாந்து சுறா
கிரீன்லாந்து சுறா

 

முதுகெலும்பு உள்ளவைகளில் நீண்ட நாட்கள் வாழ்பவை என்ற பெரும கிரீன்லாந்து சுறாவினைச் சாரும்.

நீண்டநாட்கள் வாழும் இதனுடைய ரகசியம் மெதுவாக வளர்தல் ஆகும். வருடத்திற்கு ஒருசெமீ நீளம் மட்டும் வளரும் இயல்புடைய இவை 100 ஆண்டுகளில் முழுவளர்ச்சி அடைகின்றன.

இவற்றின் சராசரி ஆயுட்காலம் 200 வருடங்கள் ஆகும். இவ்வகையில் ஒருமீனானது 400 வருடங்கள் வாழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வடஅட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் கடல்களில்தான் இவை வசிக்கின்றன.

 

லாமெல்லிப்ராச்சியா குழாய்புழுக்கள் (Lamellibrachia tube worms)

லாமெல்லிப்ராச்சியா குழாய்புழுக்கள்
லாமெல்லிப்ராச்சியா குழாய்புழுக்கள்

 

இந்த வண்ணமயமான ஆழ்கடல் உயிரினங்கள் குழாய் புழுக்கள் கடல் தளத்தில் ஹைட்ரோகார்பன் துவாரங்களுடன் வாழ்கின்றன. இவைகள் 170 வருடங்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. ஆனால் பல விஞ்ஞானிகள் இவைகளில் சில 250 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன என்று நம்புகிறார்கள்.

 

கடலின் சிவப்பு அர்ச்சின்கள் (Red sea urchins)

சிவப்பு அர்ச்சின்கள்
சிவப்பு அர்ச்சின்கள்

 

செங்கடல் அர்ச்சின் அல்லது ஸ்ட்ராங்கிலோசென்ட்ரோடஸ் ஃபிரான்சிஸ்கனஸ் பசிபிக் பெருங்கடலில் வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் மட்டுமே காணப்படுகிறது.

இது ஆழமற்ற, அலைகள் குறைவான பகுதிகளில், சிலநேரங்களில் 90மீட்டர் ஆழமுள்ள நீரில் வாழ்கிறது. இவ்வினங்களில் சில 200 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றன.

 

பிடரிக்கோடன் (Tuatara)

பிடரிக்கோடன்
பிடரிக்கோடன்

 

200 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜூராசிக் காலத்தை சார்ந்த இவை தன்னுடைய குணநலன்களை சிறிதும் மாற்றிக் கொள்ளாமல் இருக்கின்றன.

இவற்றின் வாழ்நாட்களில் முதல் 35 வருடங்கள் மிகவும் மெதுவாக வளர்கின்றன. நியூசிலாந்தில் காணப்படும் இவை 100 முதல் 200 ஆண்டுகள் வாழ்கின்றன.

 

கரடுமுரடான கண்ணுடைய பாறை மீன் (Rough eye Rock Fish)

சிவப்பு பாறை மீன்
சிவப்பு பாறை மீன்

 

வடக்கு பசிபிக் கடலில் காணப்படும் இவ்வகை மீன் ஆழ்நீரில் காணப்படும். கடற்கரையினை ஒட்டிய குகைகள், பாறைகள் ஆகியவை இவற்றின் வாழிடம் ஆகும்.

இவ்வகை பெரிய மீன்கள் 97செமீ நீளத்தில், 6.7கிலோ எடையில் இருக்கின்றன. இவை 200 ஆண்டுகளுக்கு மேலே வாழும் தன்மையைக் கொண்டுள்ளன.

 

டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள் பற்றி தெரிந்து கொண்டீர்களா?

பொதுவாக நிலத்தில் வாழும் நிலவாழிட உயிரினங்களைவிட, நீர்வாழ் உயிரினங்கள் நீண்ட காலம் வாழும் தன்மையைக் கொண்டுள்ளன.

இயற்கையாக நீண்ட காலம் வாழும் உயிரினங்களை, மனிதர்களாகிய நாம் தான் காற்றை, நீரை மாசுபடுத்திக் கொல்கிறோம் என்பதைக் கொஞ்சம் நினைவு கூர்வோம்.அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் நினைத்துப் பார்ப்போம்.

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.