பறக்காத பறவைகள்

பறக்காத பறவைகள்

பறக்காத பறவைகள் என்ற தலைப்பு உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். பறவைகளின் தனித்தன்மையே பறப்பதுதான். ஆனால் பறக்காத பறவைகளும் உலகில் இருக்கின்றன.

பறக்காத பறவைகள் ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளிகள், தென் துருவப்பகுதி, தென் அமெரிக்காவின் பாம்பஸ் புல்வெளி, ஆஸ்திரேலியாவின் காடுகள் மற்றும் நியூசிலாந்து தீவுகளில் காணப்படுகின்றன.

பொதுவாக பறவைகள் வேட்டையாடும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உணவினைத் தேடவும், தங்கள் சந்ததிகளைப் பாதுகாப்பாக வளர்க்கவும் பறக்கின்றன.

வேட்டை விலங்குகள் தாக்க நேரும் போது பறவைகள் எளிதாகப் பறந்து தப்பித்துக் கொள்கின்றன. அதேபோல் தரையில் நடந்து உணவினைத் தேடுவதைவிட பறந்து சென்று உணவு தேடுதல் என்பது பறவைகளுக்கு எளிதானது.

மேலும் பறந்து சென்று பாதுகாப்பான இடங்களில் கூடு அமைத்து இனத்தைப் பெருக்குவதற்கும் பறவைகளுக்கு பறத்தல் மிகவும் அவசியமான ஒன்றாகிறது.

ஆனால் சிலவகையான பறவைகள் பறக்காமல் இருக்கின்றன. அதற்குப் பதிலாக திறமையாக ஓடவும் சிறப்பாக நீந்தவும் செய்கின்றன.

ஆனால் இப்பறவைகளின் முன்னோர்கள் திறமை மிகுந்த பறக்கும் திறனைக் கொண்டிருந்தன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இவ்வகைப் பறவைகள் ஏன் பறக்கும் திறனை இழந்தன? என்பது அதிசயான ஆச்சர்யமான கேள்விதான்.

இப்பறவைகளால் பறக்க இயலாததற்குக் காரணம் இவர்கள் இருந்த வாழிடங்களில் வேட்டை எதிரிகள் இல்லாமல் போனது, போட்டியின்றி அளவுக்கதிகமான உணவு கிடைத்தது, சந்ததிகளை வளர்ப்பதில் எதிரிகளின் பிரச்சினை இல்லாமல் இருந்ததே.

ஆனால் இவ்வகைப் பறவைகள் மறத்த பறத்தல் நிகழ்வினால் இன்றைக்கு அவற்றுள் பல உலகில் இல்லாமலும், சில அருகி வருவனவையாகவும் உள்ளன. டோடோ, பெரிய ஓக், யானை பறவை போன்றவை முற்றிலும் அழிந்த பறக்காத பறவைகள் ஆகும்.

பறக்காத பறவைகள் இறக்கைகளைக் கொண்டிருந்தாலும் அவை பறப்பவற்றைவிட சிறியவையாகவும், வலிமை குறைந்தும் காணப்படுகின்றன. சில பறக்காத பறவைகள் தங்களின் இறக்கைகளை வலிமையான துடுப்புகளாக பயன்படுத்துகின்றன.

உலகில் தற்பொழுது சுமார் 40 பறக்காத பறவையினங்கள் உள்ளன. நியூசிலாந்தில் பறக்காத பறவைகள் அதிகம் காணப்படுகின்றன. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு மனிதன் குடியேறவில்லை. ஆதலால் பறக்காத பறவைகளுக்கு பிரதான வேட்டை எதிரிகள் ஏதும் இங்கு காணப்படவில்லை.

மனிதன் நியூசிலாந்தில் குடியேறிய பின்பு மனிதனின் செயல்பாடுகளினாலும், அவனுடைய செல்ல பிராணிகளாலும் இவ்விடத்தினை பூர்வீகமாகக் கொண்ட பறக்காத பறவைகள் சில அழிந்தும் பல அருகியும் உள்ளன.

இனி டாப் 10 பறக்காத பறவைகள் பற்றி பார்ப்போம்.

நெருப்புக்கோழி

உலகின் மிகப்பெரிய பறவையினமான நெருப்புக்கோழி ஆப்பிரிக்காவின் சவானா புல்வெளிகளில் காணப்படுகிறது. சுமார் 9அடி உயரமும், 300பவுண்டுகள் எடையும் கொண்ட இப்பறவை, மணிக்கு 72 கிமீ வேகத்தில் ஓடும் திறமையான ஓட்டப்பந்தய வீரர். இது திறந்த ஆப்பிரிக்க புல்வெளியில் வலிமையான கால்களால் எதிரிகளை உதைத்து வீழ்த்தும்.

காசோவரி

காசோவரி உலகின் மூன்றாவது பெரிய பறவை. இது ஆஸ்திரேலியா மற்றும் நியூகினியா பகுதிகளின் காடுகளில் காணப்படுகின்றன. இப்பறவை மணிக்கு 50 கிமீ வேகத்தில் ஓடும். இப்பறவையால் 2 மீட்டர் உயரத்திற்கு குதிக்க முடியும். 50-80 கிலோ எடையைக் கொண்ட காசோவரி பறவையின் கால்களில் மூன்று விரல்கள் காணப்படுகின்றன.

ஈமு

ஈமு
ஈமு

ஆஸ்திரேலியாவைத் தாயகமாக கொண்ட ஈமு உலகின் இரண்டாவது பெரிய பறவை ஆகும். இதனுடைய கால்கள் வலிமையானவை. இது எதிரிகளை உதைத்து தன்னை தற்காத்துக் கொள்ளும். இப்பறவையால் மணி 50கிமீ வேகத்தில் ஓட இயலும்.

கிவி

நியூசிலாந்தின் தேசியப் பறவையான கிவி சாதாரண கோழி அளவினை உடையது. இது சுமார் 8 அங்குல நீளமுள்ள அலகினைக் கொண்டுள்ளது. இந்த அலகின் நுனியில் நாசித்துவாரங்கள் காணப்படுகின்றன.

இரவில் இரை தேடும் இப்பறவையின் பார்வைத்திறன் குறைவு. தன்னுடைய கூர்மையான மோப்ப சக்தியால் புழுக்கள் மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்கிறது. இப்பறவையின் எலும்புகள் பாலூட்டிகளைப் போல மஞ்சைகளைக் கொண்டுள்ளன.

காகோபோ கிளி

ஆந்தைக்கிளி என்று அழைக்கப்படும் காகோபோ கிளி நியூலாந்தில் காணப்படுகிறது. உலகில் உள்ள கிளிகளில் இது மிகப்பெரியது. பறக்காத கிளியான இப்பறவை இரவில் தன்னுடைய உணவினைத் தேடுகிறது.

இது முழு இறக்கைகளைக் கொண்டிருந்த போதிலும் இதனுடைய பலவீனமான தசைகள் மற்றும் காற்றுக்குழிகள் இல்லாத கனமான எலும்புகளால் இவற்றால் பறக்க இயலவில்லை.

ரியா

தென்அமெரிக்காவின் அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே மற்றும் பொலிவியா நாடுகளின் திறந்த வெளிகள் மற்றும் பம்பாஸ் புல்வெளிகளில் ரியா காணப்படுகிறது. 20-25 கிலோ எடையைக் கொண்ட இப்பறவை மணிக்கு அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் ஓடும். ஜாகுவார், காட்டுநாய்கள் மற்றும் அர்மாடில்லோஸ் ஆகியவற்றால் இவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

பென்குயின்

பேரரச பென்குயின்கள்

பென்குயின்களில் பெரும்பான்மையானவை புவியின் தென்அரைக்கோளத்தில் உள்ள அன்டார்டிகாவில் காணப்படுகின்றன. சில வகைகள் வெப்பமண்டல, மிதவெப்பமண்டலப் பகுதிகளின் கடலை ஒட்டிய பகுதிகளில் வாழ்கின்றன. இவை சிறந்த நீச்சல் வீரர்கள். இவை தங்களின் இறகுகளை நீந்துவதற்கு துடுப்புகளாகப் பயன்படுத்துகின்றன.

வேகா

நியூசிலாந்தை தாயகமாகக் கொண்ட வேகா பழுப்பு நிறத்தில் கோழியின் அளவில் காணப்படும். இது நன்றாக நீந்தக் கூடியது. இது பழங்கள், விதைகள், தாவரங்கள், புழுக்கள், நத்தைகள், இருவாழ்விகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சிறுபழங்களின் விதைகளை உட்கொண்டு அவற்றை பரப்புவதால் சூழலில் இவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.

தகாஹே

நியூசிலாந்தைச் சேர்ந்த தகாஹே மறைந்து வாழும் இயல்புடையது. 1800-ன் இறுதியில் இப்பறவை அழிந்து விட்டதாகக் கருதப்பட்டது. 1948-ல் மீண்டும் இது கண்டுபிடிக்கப்பட்டது. சிவப்புநிற அலகினையும், பச்சை கலந்த கருநீல இறகுகளையும் கொண்டுள்ள இப்பறவை சிறிய வான்கோழி அளவுடையது. இதனுடைய ஆயுட்காலம் சுமார் 20 ஆண்டுகள்.

அணுக முடியாத தீவு ரயில்

உலகில் உள்ள மிகச்சிறிய பறக்க இயலாத பறவையாகும். இது அட்லாண்டிக் பெருங்கடலின் நடுப்பகுதியில் உள்ள டிரிஸ்டன் டா குன்ஹா குழுவில் உள்ள அணுக முடியாத தீவுகளில் காணப்படுகிறது. எளிதில் யாரும் அணுக முடியாத இடத்தில் இருப்பதால் இப்பறவை பாதுகாப்பாக உள்ளது.

பறக்க இயலாத பறவைகளின் வாழிடங்களில் தற்போது மனிதன் மற்றும் செல்லப்பிராணிகளும் நுழைந்து அவற்றிற்கு அச்சுறுத்தலை தந்து கொண்டிருக்கின்றனர். இவை பறக்க இயலாததால் எளிதில் பிடிபடுகின்றன.

இப்பறவைகளின் வாழிடங்களில் நுழைந்த வேட்டையாடிகள் அவற்றை வேட்டையாடுவதோடு தரையில் இடப்படும் அவற்றின் முட்டைகளையும் அழிக்கின்றன.

இதனால் பறக்காத பறவைகளில் பல அருகியும், சில அழிந்தும் போயும் உள்ளன. இப்பறவைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மனிதர்களின் கடமை ஆகும்.

வ.முனீஸ்வரன்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.