டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்

மடகாஸ்கர் தீவு உலகின் 5வது பெரிய தீவாகும். இது தனித்துவமான உயிரினங்களைக் கொண்டுள்ளது. அதனால் இது எட்டாவது கண்டம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

இங்கு காணப்படும் உயிரினங்களில் பல உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. அவ்வகையில் டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அய்யே-அய் (Aye-aye)

அய்யே அய்அய்யே அய்

 

இது மடகாஸ்கரில் காணப்படும் லெமூர் வகைகளில் ஒன்று. இது இரவு நேர விலங்காக செயல்படுகிறது. இது பெரும்பாலும் மரங்களிலேயே வசிக்கிறது.

இதனுடைய பெரிய பாதங்கள் மற்றும் நீளமான வால் மரங்களில் தொங்குவதற்கு உதவுகின்றது. இது தன்னுடைய கூர்மையான பார்வை மற்றும் கேட்கும் திறனைப் பயன்படுத்தி உணவின் இருப்பிடத்தை அறிந்து கொள்கிறது.

அய்யே அய் உணவினைத் தேடி இரவில் 4கிமீ தூரம் பயணிக்கிறது. இதனுடைய அடர் பழுப்புநிற விநோதமான உருவ அமைப்பு கெட்ட சகுனமாக கருதப்படுவதால் அதிகளவு அழிக்கப்பட்டு அரிய விலங்கின‌த்தினுள் ஒன்றாக இதனை மாற்றியுள்ளது.

 

ஃபோசா (Fossa)

ஃபோசா
ஃபோசா

 

ஃபோசா மடகாஸ்கர் காடுகளில் காணப்படும் மிகப்பெரிய வேட்டைக்கார விலங்காகும். இது ஆறடி நீளமும் 10 கிலோ எடையளவும் கொண்டிருக்கும்.

 

ஃபோசா

 

இது பார்ப்பதற்கு முங்கூஸ் மற்றும் பூனை போல் இருக்கும். இது உறுதியான தசைகள் கொண்ட சிவப்பு பழுப்பு கலந்த பளபளப்பான தோலினைக் கொண்டுள்ளது. இது தன்னுடைய உடலில் பாதியளவு கொண்ட நீளமான வாலினைக் கொண்டுள்ளது.

இது சுறுசுறுப்பாக மரங்களில் ஏறுகிறது. உள்ளிழுக்கும் நகங்கள், நெகிழ்வான கணுக்கால் மூட்டுகள், நீளமான வால் ஆகியவை இது எளிதாக, சமநிலையுடன் மரக்கிளைகளில் நடக்கவும், தாவவும் உதவுகிறது.

இதனுடைய கூர்மையான நகங்கள் மற்றும் பற்கள் உணவினை எளிதாக வேட்டையாட உதவுகின்றன. லெமூர்கள் இதனுடைய முக்கிய உணவாகும்.

இதனுடைய வசிப்பிடம் அழிக்கப்படுவதால் இது அரிய விலங்கினமாக மாறியுள்ளது.

 

இந்த்ரி (Indri)

இந்த்ரி
இந்த்ரி

 

இந்த்ரி மடகாஸ்கரில் காணப்படும் மிகப்பெரிய லெமூர் வகையைச் சார்ந்த விலங்காகும். இது 22-28 இன்ஞ் நீளத்திலும், 10 கிலோ எடையையும் கொண்டுள்ளது.

இது மடகாஸ்கரின் கிழக்கு பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் காணப்படுகிறது. இவ்விலங்கானது 4-8 எண்ணிக்கை கொண்ட சிறுகுழுக்களாகக் காணப்படுகிறது.

இவை உரத்த சத்தத்தில் குரல் எழுப்பி ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. இவை எழுப்பும் சத்தம் பல மைல்களுக்கு அப்பாலும் கேட்கும் திறனுடையது.

மரங்களில் வாழும் இது வலிமையான கால்கள் மற்றும் அகன்ற பாதங்களைக் கொண்டுள்ளன. இதனால் இவ்விலங்கால் மரங்களைப் பிடித்து எளிதாக ஏறவும் தாவவும் முடியும். இது ஒரே தாவலில் 10மீ வரை தாண்டும் இயல்புடையது.

 

சிஃபாகா (Sifaka)

சிஃபாகா
சிஃபாகா

 

இது மடகாஸ்கர் தீவில் காணப்படும் நடுத்தர உடலமைப்பினை கொண்ட விலங்கு. இதனுடைய உடல் 16-22 இன்ஞ் நீளத்திலும், 6 கிலோ எடையளவிலும் இருக்கிறது.

நீண்ட மென்மையான பளபளக்கும் ரோமங்கள் சிஃபாக்களின் தனித்துவமாகும். கருப்பு, வெள்ளை, சாம்பல் மற்றும் தங்க மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் இதனுடைய ரோமம் காணப்படுகிறது.

மரங்களில் வாழும் இது எளிதாக மரம் விட்டு மரம் தாவும். இவ்விலங்கானது 6-10 எண்ணிகையில் சிறுகுழுக்களாகக் காணப்படுகிறது.

இது இலைகள், பழங்கள், மொட்டுகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது. இது காட்டின் தேவதை என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.

 

தாழ்நில ஸ்ட்ரீக் டென்ரெக் (Lowland Streaked Tenrec)

தாழ்நில ஸ்ட்ரீக் டென்ரெக்தாழ்நில ஸ்ட்ரீக் டென்ரெக்

 

தாழ்நில ஸ்ட்ரீக் டென்ரெக் மடகாஸ்கரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணப்படுகிறது. ஆறு அங்குல அளவுள்ள இப்பிராணி மண்புழக்கள் மற்றும் பூச்சிகளை உணவாக்குகிறது.

இது தன்னுடைய ரோமங்களுடன் வளரும் கூர்மையான முள்ளினைக் கொண்டு எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறது.

 

வரிவால் லெமூர் (Ring tailed Lemur)

வரிவால் லெமூர்வரிவால் லெமூர்

 

இது நீண்ட வெள்ளை கறுப்பு வரிகளைக் கொண்ட வாலினைக் கொண்டுள்ளதால் லெமூர்களில் நன்கு அறியப்பட்டதாக இருக்கிறது. இது மடகாஸ்கரின் தென்பகுதியில் காணப்படுகிறது.

இது பகலில் இரை தேடும் அனைத்துண்ணியாகும். இவ்விலங்கானது 30 உறுப்பினர்களைக் கொண்டு சமூக விலங்காக வாழ்கிறது.

 

மலகாசி புனுகு பூனை (Fanaloka)

மலகாசி புனுகு பூனைமலகாசி புனுகு பூனை

 

இது மடகாஸ்கரின் மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்ட பாலூட்டியாகும். இது 27 இன்ஞ் நீளத்தில் 2 கிலோ எடையளவில் இருக்கும்.

இரவில் இரைத் தேடும் இது சிறிய முதுகெலும்புள்ளவை, பறவைகளின் முட்டைகள், பூச்சிகள், நீர்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றை உணவாக்குகிறது.

இது ஃபோசாவிற்கு அடுத்து மடகாஸ்கரில் காணப்படும் பெரிய வேட்டையாடும் பிராணி ஆகும். திருட்டுத்தனமாக வேட்டையாடுதல், வாழிட இழப்பு ஆகியவற்றால் இது எண்ணிக்கையில் குறைந்து வருகிறது.

 

வரிவால் வொன்சிரா (Ring tailed Vontsira)

வரிவால் வொன்சிராவரிவால் வொன்சிரா

 

மடகாஸ்கரின் வேட்டைப்பிராணிகளில் ஒன்றான இது 12 முதல் 15 இன்ஞ் நீளத்திலும், 700-900 கிராம் எடையிலும் இருக்கிறது. இது அடர்சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது.

இதனுடைய வாலானாது சிவப்பு வண்ணத்தில் கறுப்புநிற வளையம் சுற்றியது போல் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

இது சிறிய பாலூட்டிகள், மீன்கள், ஊர்வனவற்றின் முட்டைகள், பூச்சிகள், பழங்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன.

 

மலகாசி பெரிய எலி (Malakasy Gaint Rat)

மலகாசி பெரிய எலிமலகாசி பெரிய எலி

 

இது மடகாஸ்கரின் மேற்கு பகுதியில் மட்டும் காணப்படுகிறது. இது பார்ப்பதற்கு முயல் போல் இருந்தாலும் இதனுடைய முகமானது எலியைப் போல இருக்கிறது.

இது 13 இன்ஞ் நீளத்தில் 1.2 கிலோ எடையைக் கொண்டிருக்கிறது. இது சாம்பல், பழுப்பு, சிவப்பு வண்ணங்களில் காணப்படுகிறது.

இவற்றின் கூர்மையான கேட்கும் திறன், தசைகள் அதிகம் கொண்ட கால்கள் ஆகியவை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவுகின்றன.

இது தன்னை பாதுகாத்துக் கொள்ள 3அடி உயரம்வரை தாவிக் குதிக்கின்றன. ஆதனால் இது தாவும் எலி என்று அழைக்கப்படுகிறது.

 

மௌஸ் லெமூர் (Mouse Lemur)

மௌஸ் லெமூர்
மௌஸ் லெமூர்

 

இது மடகாஸ்கரில் காணப்படும் மிகச்சிறிய லெமூர் ஆகும். இதனுடைய உடலின் மொத்த நீளம் 11 இன்ஞ் அளவே ஆகும்.

இதுவரை அறியப்பட்ட விலங்குகளில் மிகவும் சிறிய எடையளவு (2 கிராம்) மூளையைக் கொண்ட விலங்கு இதுவே ஆகும்.

அனைத்துண்ணியான இது சிறிய பாலூட்டிகள், பூக்கள், பழங்கள் ஆகியவற்றை உணவாக் கொள்கிறது.

மடகாஸ்கரில் ஏனைய இடங்களில் உள்ள புலி, கரடி, சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் காணப்படுவதில்லை.

இங்குள்ள உயிரினங்கள் உருவத்திலும் அளவிலும், தனித்துவம் கொண்டவைகளாக உள்ளன. இதனை டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள் என்ற இக்கட்டுரை மூலம் அறிந்து கொண்டோம்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.