டிஜிட்டல் காலகட்டத்தில் உள்வட்ட இதழ்கள்

டிஜிட்டல் காலகட்டத்தில் உள்வட்ட இதழ்கள்

உள்வட்ட இதழ் அல்லது ஊழியர்களின் இதழ் (Inhouse magazine or employees magazine) என்பது பெரு நிறுவனங்களால் தங்கள் ஊழியர்கள் இடையே தனிச்சுற்றுக்காக நடத்தப்படும் இதழாகும்.

இந்த இதழ்களில் தலைவரின் மடல், நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள், படங்கள் மட்டும் அல்லாமல் எழுத்தார்வம் மிக்க பணியாளர்களின் படைப்புகளும் வெளியிடப்படும்.

அண்மைக் காலம் வரை பெரு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் இவ்வாறான உள்வட்ட இதழ்கள் மாதாமாதம் வண்ண இதழாக ‘வழுவழு’ தாளில் அச்சிடப்பட்டு வெளிவந்தன.

அவை அதிகாரிகள், பணியாளர்கள் இடையே பகிரப்பட்டு வந்தன. அதனால் அச்சகங்களுக்கும் வர்த்தகப்பயன் கிட்டி வந்தது.

செய்தி மடலில் (Newsletter) நிறுவனத்தின் தலைவரின் கடிதம், நிறுவனத்தின் நிகழ்ச்சிகள், சாதனைகள், வாங்கிய விருதுகள் பற்றிய படத்துடன் கூடிய செய்திகளும் நிறுவனம் மேற்கொள்ளும் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் (CSR) குறித்த செய்திக் குறிப்புகளும் இடம்பெறும்.

மாறி வரும் சூழலில் இத்தகைய உள்வட்ட இதழ்கள், முன்பு போல் வடிவமைக்கப்பட்டு அச்சிடப்படாமல் மின்னிதழாக உரியவர்கள் இடையே பகிரப்படுகின்றன.

இதனால், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் காகிதப் பயன்பாடு குறைவதுடன் கார்பன் புட்பிரின்ட் என்கிற கரியமில அடிச்சுவடு வெகுவாக குறையும்.

மேலும், டிஜிட்டல் வழிமுறையில் ஊழியர்களுக்கான உள்வட்ட இதழையும் செய்தி மடலையும் பகிர்வதால் அச்சிடுதல் மற்றும் விநியோக செலவினம் என்கிற இனம் மிச்சம் ஆகிறது.

டிஜிட்டல் வழியாக, பி.டி.எப் வடிவிலான இதழ் மட்டும் அல்ல டெக்ஸ்ட், இமேஜ், ஒலி கோப்பு, வீடியோ மற்றும் பாட்காஸ்ட் ஒலிபரப்பு ஆகிய ‘மல்ட்டி மீடியா ஸ்டோரி டெல்லிங்’ என்பதாகவும் இணைய இணைப்பு (லிங்க்) உடனும் உள்வட்ட இதழை வழங்க இயலும்.

அவ்வாறு உருவாக்கப்பட்டதை நிறுவனத்தின் மின் அஞ்சல், இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யலாம். சில நிறுவனங்கள், உள்வட்ட இதழுக்கான செயலியை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இன்ட்ராநெட் (Intranet) என்பது என்ன?

ஒரு பெரு நிறுவனத்தின் உள்வட்ட இணைய வழி தொடர்பே ‘இன்ட்ராநெட்’ என்று அழைக்கப்படுகிறது. அதன் ஊழியர்கள் மட்டுமே அதனைப் பயன்படுத்த இயலும்.

இன்ட்ராநெட் வாயிலாகவே அனைத்து சுற்றிக்கைகள், தகவல்கள், உள்வட்ட இதழ்கள் மற்றும் செய்தி மடல்கள் பகிரப்பட்டு வரும்.

எஸ். மதுரகவி
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com