டிபன் பாக்ஸ் குறும்படம் விமர்சனம்

டிபன் பாக்ஸ் குறும்படம் வறுமையின் வலியை, இயலாமையின் ரணத்தை உணர வைக்கிறது.

இளமையில் கிடைக்க வேண்டியவை கிடைக்காமல் எட்டாத் தூரத்தில் இருக்கும்போது, மனம் அடையும் வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அது உடல் ரணத்தை விட அதிகமாக வலி தரக்கூடியது. அதன் ஆழமான வடுக்கள் எல்லாவற்றிலும் விரக்தியை உண்டு செய்யும்.

சமூகம் மேடு பள்ளங்களையுடையது. ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் இன்னொன்றைப் போலில்லை. எங்கும் எதுவும் ஒன்றாகவே இருந்து விடாது.

எல்லாம் ஒரு இடத்தில் கூடும்போது, இந்த ஏற்ற தாழ்வுகள், உயரம்-குட்டை, பெரிது-சிறிது, குண்டு-ஒல்லி, வெள்ளை-கருப்பு, சுத்தம்-அசுத்தம், மேல்-கீழ் என வகை-வகையாய் பாடாய் படுத்தும். அது மனதில் சொல்லவொனாத நெருடலை உண்டு பண்ணிப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வறுமை மோசமானது. விசாலாமான எண்ணங்களை, திறமைகளைச் சுருக்கிச் சிறுபெட்டிக்குள் அடக்கி ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.

சமூகம் வறுமையில் வாடுபவர்களை மனிதர்களாகவே கருதுவதில்லை. அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே இல்லை. அவர்களைத் தீண்டித் தீண்டி ஒடுக்கியே ஒடுங்க வைக்கின்றனர்.

இக்குறும்படம் போல் இன்னும் ஆயிரம் வேதனைகளைப் படம்பிடித்துக் காட்டினாலும், இச்சமூகம் வறுமையை ஒழிக்க எந்த முயற்சியும் எடுக்கப் போவதில்லை. அவை கனவுகளோடு நின்று போய்விடும் என்பதை இப்படம் மிகத் தெளிவாக விளக்குகிறது.

அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகள் இளம் சமூகத்தை எப்படியெலாம் பாதிக்கும் என்பதை இக்குறும்படம் தீவிரத் தன்மையோடு விளக்குகிறது.

இளம்சிறார்களை அறிவாளிகளாக உருவாக்க வேண்டிய பள்ளிகள், எவ்விதத்திலும் அதைச் செய்வதற்கு எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை என்பதையும் நறுக்கென்று கூறுகிறது இக்குறும்படம்.

கதைச் சுருக்கம்

அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் வகுப்பில் ஏதும் சொல்லித் தருவதில்லை. செல்போனில் விளையாடிக் கொண்டு, மாதம் ரூபாய் 60,000 வரைச் சம்பளம் பெற்று விடுகிறார்.

ஆனால் தன் மகன் ஆங்கிலத்தில் நன்கு படிக்க, வீட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே பேசி அவனை உருவாக்குகிறார்.

இதைப் போல் எல்லா மாணவர்களையும் ஏன் அவர் உருவாக்குவது இல்லை என்பதை இக்குறும்படம் கேள்வி கேட்கிறது.

அரசு பள்ளி ஆசிரியரின் மகன் தனியார் பள்ளியில் படிக்கின்றான். முதல் மதிப்பெண் பெறுகிறான். ஆனால் அரசு பள்ளி மாணவன்?

தனியார் பள்ளி ஆசிரியை, மாணவர்களைப் படிக்க வைக்கத் தன் செலவில் பரிசுப் பொருட்களை வாங்கித் தருகிறார். தேர்ச்சி விகிதம் அதிகமாக இல்லையென்றால், தனியார் பள்ளி ஆசிரியர் வேலையை விட்டு நீக்கப்படுவார்.

எனவே, இதற்குப் பயந்து வாழ வேண்டிய சூழ்நிலை. குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியை தன் செலவில் பரிசுகள் கொடுத்து, மாணவர்களைப் படிக்கத் தூண்டுகிறார்.

தினமும், வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுக் காலதாமதமாக வரும் மாணவனின் நிலையைப் புரிந்து கொள்ள முடியாத, தமிழாசிரியர் முத்துச்சாமி தினமும் வெயிலில் முட்டி போட வைக்கிறார்.

நல்ல டிபன்பாக்ஸீக்காக ஆசைப்படும் மாணவன், கடைசிவரை வாங்கமுடியாத சூழ்நிலை, அதற்காக அவன் ஓடும் ஓட்டம், ஆசை, முதல் மதிப்பெண் பெற்று எப்படியும் டிபன் பாக்ஸ் பரிசைப் பெற்று விடத் துடிக்கும் துடிப்பு. அப்பப்பா- கண்களில் கண்ணீர் வருகின்றது. என்ன உணர்வு வெளிப்பாடு.

இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் தந்தை கதாபாத்திரம். மகனின் தேவையைப் பூர்த்தி செய்யச் செருப்பில்லாமல் முள் காட்டில் கூலிவேலை செய்கிறார்.

“செருப்பு வாங்கும் காசிற்குப் பையனுக்குப் படிப்புக்கு ஏதாச்சும் செய்யலாம்” என்று அவர் கூறும் வசனம் பாசத்தின் உச்சத்தைக் காட்டுகிறது.

அப்பாவின் காலில் செருப்பு கூட இல்லை. நமக்காகக் கஷ்டப்படுகிறார். இப்போது நாம் போய் டிபன்பாக்ஸ் கேட்கக் கூடாது என ஆசையை அடக்கி, ஓட்டமாய் ஓடி ஓடிக் கஷ்டப்படும் மாணவனின் கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கிறது.

இதுபோல் குழந்தைகள் குடும்பச் சூழ்நிலை உணர்ந்து வாழ்ந்தால், இவ்வுலகம் எப்போதோ முன்னேறி இருக்கும். பாசமும், சோகமும் மாறி மாறிப் படம் பார்ப்பவரை நெஞ்சுருக வைக்கின்றன.

வாழ்க்கை, கனவாகவே போய்விடுகிறது என்பதாகக் கடைசிக் காட்சியில், ‘என் கனவு’ கட்டுரை எழுதும் காட்சி அமைகிறது. நடக்கவே நடக்காது என்றாலும் அதற்காக முயற்சிப்பேன். அதுவே என் கனவு என்பதாக படம் முடிகிறது.

அப்பாவிற்குச் செருப்பு, புத்தாடை வாங்கித் தருவேன்.

என் மேல் பாசம் இருந்தாலும் காட்டிக் கொள்ளாத அம்மா எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும். அவர்களுக்குக் கவரிங் வளையல் வாங்கித் தருவேன்.

முத்துச்சாமி வாத்தியார் அன்போடு பாராட்ட வேண்டும் என்பதெலாம் அவனின் நனவாக வேண்டிய கனவாக எழுதுகிறான்.

அதைவிடச் சாட்டையடி போல் ஒன்றை அந்த மாணவன் எழுதுகிறான்.

அது என்னவென்றால். “நான் வாங்கும் டிபன் பாக்ஸ், என் அப்பா போட வேண்டிய செருப்புக்குச் சமம். அம்மாவின் மகிழ்ச்சிக்குச் சமம். அப்பா, அம்மாவின் வியர்வைக்குச் சமம். எனவே டிபன்பாக்ஸை விட எனக்கு அதுவே முக்கியம்” என்பான்.

இந்த எழுத்துக்கு ஆயிரம் கோடி கொடுக்கலாம் வசனம் எழுதிய ‘கலிப் கோகுலுக்கு’ உண்மையில் கோடி கோடி சல்யூட்.

காட்சிகள் கிட்டத்தட்ட 15-க்கு மேல் உள்ளன. இதைக் குறைத்துத் திரைக்கதை அமைத்து இருக்கலாம். சோகமும், விரக்தியும், வேதனையும் வெளிப்படவே இத்தனை காட்சிகள் என்றாலும், திரைக்கதை வடிவம் மாறி இருக்கலாம்.

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு நாய்க்குக் கிடைத்த அந்த டிபன்பாக்ஸ், கடைசி வரை வறுமைப் பையனுக்குக் கிடைக்கவேயில்லை என்று முடிந்த காட்சியமைப்பு அருமை.

கேமரா திறமையோடுக் காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறது. இசையும் நிறைவாக உள்ளது. மாணவனாக நடித்த மாஸ்டர் நடிப்பு சிறப்பு.

படம் குறித்த விமர்சனம் ஒன்று

அருமையான குறும்படம்… அழகிய படைப்பு… கடைசி நிமிடம் கண்கள் கசிந்த‌து உண்மையே…

இளமையில் வறுமை கொடுமையே.

படக்குழு

எழுத்து & இயக்கம் – கார்த்திக் கோபால்

திரைக்கதை – கலிப் கோகுல்

படக்கலவை- விக்னேஷ் & ஸ்ரீகாந்த்

இசை – சரண் சூர்யா

டிபன் பாக்ஸ் குறும்படம் பாருங்கள்

குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.

(குறும்படம் விரியும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.