மூன்றாவது நாள் காலையில் எல்லோரும் வழக்கமாக கடலை எடுக்க காட்டிற்கு வந்தனர்.
தனம் அங்கிருந்தோரிடம் “இன்னும் கடலை காட்டுல கொஞ்ச பகுதியில தான் கடலை எடுக்க வேண்டியிருக்கு. அதனால எல்லோரும் வேலைய முடிச்சிட்டு கடலை செடியில ஒட்டிக்கிட்டு இருக்கிற கடலையை எடுக்கனும்.” என்றாள்.
“சரிம்மா, நீங்க சொல்றபடி செய்யுறோம்.” என்றாள் மங்கம்மாள் பாட்டி. எல்லோரும் பாட்டி கூறியதைக் கேட்டு தலை அசைத்தனர்.
கடலைக் காட்டில் கடலைச்செடியைப் பிடுங்கியதும் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு செடியின் வேர்ப்பகுதி படும்படி கல்லில் அடிப்பர்.
செடியில் உள்ள பெரும்பான்மையான கடலைகள் உதிர்ந்துவிடும். ஓரிரு கடலைகள் வேர்ப்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.
கடைசியில் ஒவ்வொரு கடலைச் செடியாக ஆராய்ந்து வேரில் ஒட்டியிருக்கும் கடலையைப் பிரித்து எடுப்பர்.
அன்றைய தினம் மதியம் உணவுவேளை வரை கடலைச் செடியை பிடுக்கும் வேலையும், அதனை அடித்து பிரிக்கும் வேலையும் முடிவடைந்தது.
மங்கம்மாள் பாட்டியும் அன்றைய தினம் கடலைச்செடி பிடுங்கிய இடத்திலிருந்த தப்புக் கடலையை கண்ணும் கருத்துமாக தோண்டி எடுத்தாள்.
மதிய உணவு உண்ட பின்னர் எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்து கடலைச் செடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கடலையைப் பிரித்து எடுக்கத் தொடங்கினர்.
அப்போது மல்லி “பாட்டி, ஏதோ பாட்டுச் சொல்றேன்னு சொன்னீயே என்னது அது?” என்றாள்.
“அது இரு சொல்றேன்.” என்றபடி பாடத் தொடங்கினாள்.
“கதை கதையாம் காரணமாம்
காரணத்துல ஊரணியாம்
ஊரணியில பச்சப் புல்லாம்
பச்சப் புல்லப் புடுங்கி
அக்கா மாட்டுக்குப் போட்டேன்
அக்கா அரைப்படி பால் கொடுத்தா
பால் எடுக்கச் சட்டிக்குப் போனா
சட்டியெல்லாம் அழுக்கு
அழுக்கு தேய்க்க தண்ணிக்குப் போனா
தண்ணியெல்லாம் மீனு
மீனு அரிக்க வலைக்குப் போனா
வலையெல்லாம் ஓட்ட
ஓட்ட தைக்க ஊசிக்குப் போனா
ஊசியெல்லாம் வெள்ளி
வெள்ளி காம்ப கிள்ளிக்கோ
வெத்தல காம்ப முள்ளிக்கோ” என்று பாடி மல்லியைக் கிள்ளி வைத்தாள்.
பாட்டியின் பாட்டைக் கேட்டதும் எல்லோரும் சிரித்தனர்.
“நிறையப் பேர் கூட்டாக வேலை செய்யும்போது இந்தப் பாட்டைப் பாடியபடி வேலை செய்தால் அலுப்புத் தோணாது. அதே சமயம் ஒருத்தர் கேள்வி கேட்க மற்றவர்கள் சேர்த்து பாடும்போது நல்ல வேடிக்கையாக இருக்கும்.” என்றாள் பாட்டி.
அதன் பின்னர் கேள்வி கேட்கும் தொணியில் முதலில் பாட மற்றவர்கள் பாட்டி பின்னே பாடினர்.
சற்று நேரம் கழித்து மல்லி மங்கம்மாளிடம் “ஏய் கிழவி, டீ தாளிச்ச கதையச் சொல்லுறேன்னியே, என்னது அது?” என்றாள்.
“ஒருநாள் சமையல் செய்யும் போது எங்க வீட்டுக்காரரு என்கிட்ட டீ போட்டு தரச் சொன்னாரு. ” என ஆரம்பித்தாள் பாட்டி.
அவருக்கு டீ சூடாக இருக்கணும். ஆனால் பால் காய்ச்சி ஆறிப் போய் இருந்தது.
ஏற்கனவே எங்க மாமியார், மாமனாருக்கு டீ டிக்காசன் ரெடி பண்ணுறப்ப கூடக் கொஞ்சம் ரெடி பண்ணி வெச்சிருந்தேன்.
எங்க வீட்ல ரெட்ட அடுப்பு. அப்ப ஒரு அடுப்புல சாம்பாரு கொதிச்சுக்கிட்டு இருந்தது. இன்னொரு அடுப்புல ஆறிய பாலை சுட வைச்சேன்.
சாம்பார இறக்கிவிட்டு பொரிச்சு ஊத்துற கரண்டிய அடுப்புல தாளிக்க வைச்சேன்.
பால் சுட்டதும் ஏற்கனவே வட்டையில இருந்த சர்க்கரை கலந்த டீ டிக்காசன்ல பாலை ஊத்தி டீயை ரெண்டு ஆத்து ஆத்தினேன்.
அதுக்குள்ள தாளிப்பு ரெடியாயிடுச்சு. அவசரத்துல தாளிப்ப சாம்பார்ல கொட்டுறதுக்குப் பதிலா டீயில கொட்டிட்டேன்.
எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.
நேரமாகியும் டீயக் கொண்டு வராததால ‘என்னாச்சின்னு தெரியலயேன்னு’ பதட்டத்தோட என் வீட்டுக்காரரு வந்தாரு.
நான் தாளிச்ச டீய வைச்சுக்கிட்டு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.
டீயில கறிவேப்பிலை மிதக்கிறதுப் பார்த்ததும் என் வீட்காரருக்குப் புரிஞ்சு போச்சு நான் என்ன வேல செஞ்சிருக்கிறேன்கிறது.
‘சரி விடு, இன்னைக்கு நீ செஞ்ச கமகமென்னு மணக்கிற தாளித்த டீயக் குடிக்கிறேன்’ன்னு சொல்லி, கறிவேப்பிலையை தூக்கி எறிஞ்சிட்டு டீயை தூக்கிக்கிட்டு வெளியே போனாரு.
கொஞ்சம் நேரம் கழிச்சி வந்து ‘எண்ணெய் மணத்தோட தாளிச்ச டீ நல்லாதான் இருந்துச்சு. ஆனால் இனிமேல் யாருக்கும் தாளிச்ச டீயக் குடுத்துறாத’ன்னு சொல்லிச் சிரிச்சாரு.”
மங்கம்மாள் பாட்டி சொன்னதைக் கேட்டதும் எல்லோரும் சிரித்தனர்.
“பாட்டி நீ பெரிய சாகசக்காரிதான் போ. உன்னோட புருஷனுக்கு பொறுமை அதிகம். நீ செஞ்ச சேட்டைகளையெல்லாம் எப்படிதான் தாங்கிக்கிட்டாரோ போ” என்றாள் மல்லி.
பிடுங்கியிருந்த கடலைச் செடியில் பாதியளவுக்கு செடியில் ஒட்டியிருந்த கடலையை பறித்திருந்தனர்.
மாலையில் கதிரவன் மேற்கே சென்றதும் எல்லோரும் அவரவர் வீட்டிற்குப் புறப்பட்டனர்.
தனம் மாடசாமியிடம் இன்னும் கொஞ்ச வேலை மட்டும் மீதமிருப்பதால் நாளை மங்கம்மாள் பாட்டியுடன் ஒரு பெண்ணை மட்டும் சேர்த்து வேலைக்கு அழைத்து வருமாறு கூறினாள்.
மங்கம்மாள் பாட்டி தனத்திடம் நாளை கடலைக் காட்டிற்கு வேலைக்கு வருவதை உறுதி செய்து கொண்டாள்.
( பாட்டி கதை தொடரும்)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!