அன்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் எல்லா ஆசிரிய – ஆசிரியைகளும் வீடு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அரைநாள் பள்ளி விடுமுறை.
பள்ளி முதல்வர் கையொப்பமிட்ட சுற்றறிக்கை ஒன்றை அனைவரிடமும் காண்பித்துக் கொண்டிருந்தார் கடைநிலை ஊழியர் ஒருவர்.
அப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்த மேரியம்மா அன்று மதியம் 2 மணியளவில் அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்து அழைத்திருந்த சுற்றிக்கையே அது.
மேரியம்மா நிரந்தர ஊழியர்கூட இல்லை. நான்கைந்து மாதங்களே அப்பள்ளியில் பணியாற்றியிருந்தார். அந்தக் குறுகிய காலத்திற்குள் அனைவரிடமும் ஒன்றிப்போய் பரிச்சயமாகியிருந்ததால் அனைவரையும் தேநீர் விருந்து ஒன்றுக்கு அழைத்திருந்தாள்.
பலருக்கு எதற்காக இந்த தேநீர் விருந்து என்று புரியவில்லை. ஒருசிலருக்கு மட்டுமே மேரியம்மா மறுமணம் செய்து கொண்டிருந்த செய்தி தெரிந்திருந்தது.
மேரியம்மா ஒரு விதவை. தன் 10 வயது மகனுடன் தனியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்தவள். அப்பள்ளியில் துப்புரவு ஊழியராகத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் சுமார் நான்கு அல்லது ஐந்து மாதங்களே பணிபுரிந்து தற்போது மீண்டும் ஏதாவது வேலை எங்கேயாவது கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருப்பவள்.
நாள் ஒன்றுக்கு நானூறு ரூபாய் என்கிற கணக்கில் பள்ளி வேலை நாட்களுக்கு மட்டுமே சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவள்.
சென்ற வாரம் திடீரென மறுமணம் செய்து கொண்டு அதை முன்னிட்டு தான் பணிபுரிந்த பள்ளியிலுள்ள அனைத்து ஆசிரிய ஆசிரியைகளுக்கும், ஊழியர்களுக்கும் தேநீர் விருந்து அளிக்க முன் வந்திருக்கிறாள்.
சுற்றறிக்கையைப் பார்த்து கேள்விக்குறியுடன் வியந்து கொண்டிருந்தவர்களுக்கு விஷயமறிந்தவர்கள் விளக்கினார்கள்.
ஆள் ஆளுக்குப் நூறு ரூபாய், இருநூறு ரூபாய் என ஒரு கணிசமான தொகையை வசூலிக்க ஆரம்பித்தார் ஆசிரிய- ஆசிரியைகள் நலச் சங்கக் காரியதரிசி. தேநீர் விருந்து தரும் மேரியம்மாவுக்கு ஏதாவது அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டுமே?
“நான்கைந்து மாதங்களே பழக்கம். அதற்காக, ஏன் இந்த விருந்து? கணிசமான தொகை கிடைக்கும் என்பதாலா?” ஒருசில ஊழியர்களும், ஆசிரிய ஆசிரியைகளும் இவ்வாறு முணுமுணுத்துக் கொண்டே தங்கள் பங்குத் தொகையைக் கொடுத்தனர்.
மதியம் இரண்டு மணியளவில் அப்பள்ளியின் நூலகத்தில் தேநீர் விருந்து அமர்க்களப்பட்து. மேரியம்மா தனது புதுக்கணவர் விக்டருடன் அமர்ந்திருக்க விருந்து முடிந்ததும் பள்ளி முதல்வர் மேரியம்மாவையும், விக்டரையும் வாழ்த்திப் பேசினார்.
“மேரியம்மா இப்பள்ளியில் தற்காலிகமாகப் பணிபுரிந்தவர்தான். விதவையாகத் தன் ஒரே மகனுடன் வாழ்ந்து வந்த அவருக்கு வாழ்வளித்திருக்கும் விக்டர் அவர்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்.
விக்டர் இப்பள்ளியின் காவலாளிகளில் ஒருவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்பள்ளிக்கு மட்டும் இல்லாமல் மேரியம்மாவுக்கும், அவரது மகனுக்கும் வாழ்நாள் முழுக்க காவலராக இருப்பதற்காக மேரியம்மாவை மணம் புரிந்திருக்கிறார். முற்போக்குச் சிந்தனையும், சமூக சீர்திருத்தத்தையும் செயலில் காட்டியிருப்பவர்.
பலருக்கு இந்த தேநீர் விருந்தின் அவசியம் பற்றிப் புரியவில்லை. கணிசமான ஓர்தொகை கிடைக்கும் என்பதற்காக மேரியம்மா இந்தத் தேநீர் விருந்தை ஏற்பாடு செய்யவில்லை. இதன் உள்நோக்கமே வேறு!
மேரியம்மாவின் மறுமணம் அதிக செலவின்றி மிக எளிமையாக தேவாலயத்தில் வைத்து நடந்திருக்கிறது. பலருக்கு அவர் மறுமணம் செய்து கொண்டது தெரியாது. இந்த விருந்து மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்.
காவலராகப் பணிபுரியும் விக்டரைப் பார்க்க மேரியம்மா வரலாம். அவருக்கு உணவு கொண்டு வரலாம்.
விஷயம் அறியாதவர்கள் அவர்களின் சந்திப்பைத் தவறாக நினைத்து விடலாம். அதைத் தவிர்க்கவே இந்த தேநீர் விருந்து! இது அவரது மறுமணத்தை அனைவருக்கும் பகிங்கரமாகத் தெரிவித்து விட்டது.
இந்தப் புதுமணத் தம்பதிகள் எல்லாச் சிறப்பும் பெற்று மகிழ்ச்சியுடன் நீடுழிவாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”
மேரியம்மாவின் திடீர் தேநீர் விருந்து குறித்து கேள்விக்குறியுடன் குழம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது தெளிவான விடை கிடைத்தது!
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998