டெல்டா என்பது ஆறானது அதனைவிட பெரிய நீர்நிலையில் கலக்கும் இடத்தில், வேகம் குறைந்து, அதனால் கொண்டு வரப்பட்ட வண்டல் உள்ளிட்டவைகளை, படியவைப்பதால் உருவாகும் நிலப்பகுதி ஆகும்.
இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் உள்ள கங்கை பிரம்மபுத்திரா டெல்டாதான் உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும்.
டெல்டா இயற்கையில் அமைந்த வளமான பகுதி ஆகும். எனவே இப்பகுதியில் வேளாண்மை, மீன்பிடித்தல் உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சியடைந்து நாகரீகங்கள் உருவாகின.
ஆதலால்தான் டெல்டாவானது நாகரீகங்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
ஆறானது கடலிலோ, பெரிய ஆற்றிலோ, ஏரிகளிலோ சில நேரங்களில் நிலப்பகுதியிலோ முடிவடையலாம்.
டெல்டா உருவாதல்
ஆறானது மலைகளில் தோன்றி பள்ளமான இடத்தை நோக்கி ஓடி வருகிறது. அவ்வாறு ஆறானது வரும்போது அதனுடைய வேகம் அதிகமாகவும், வண்டல் உள்ளிட்டவைகளை அடித்துக் கொண்டும் வருகிறது.
ஆறானது முடிவடையும் இடத்தில் பரந்து விரிந்து தன்னுடைய வேகத்தைக் குறைத்துக் கொள்ளுவதால் அடித்துக் கொண்டு வரப்பட்ட பொருட்களை படியவைக்கிறது.
படியவைக்கப்பட்ட பொருட்கள் நாளடைவில் நிலப்பரப்பினைத் தோற்றுவிக்கின்றன. இந்நிலப்பகுதியே டெல்டாவாகும்.
டெல்டா உருவாகத் தேவையானவை
ஆறானது முடிவடையும் இடத்தில் ஆற்றினால் படியவைக்கப்படும் பொருளின் அளவானது, முடிவடையும் இடத்தில் உள்ள நீர்நிலையால் அடித்துச்செல்லப்படும் பொருளின் அளவினைவிட அதிகமாக இருக்கும்போது மட்டுமே டெல்டா உருவாகும்.
டெல்டா உருவாக ஆற்றின் வேகம் குறைந்து ஒரே சீராக சென்று டெல்டாவை உருவாக்கும் வண்ணம் வண்டலைக் குவிக்க வேண்டும்.
கடலில் உருவாகும் ஓதங்கள் மற்றும் கடல் அலைகள் ஆற்றினால் குவிக்கப்படும் வண்டலை அடித்துச் செல்லக் கூடாது.
உலகில் உள்ள எல்லா ஆறுகளும் டெல்டாவை உருவாக்குவதில்லை.
கங்கை, காவிரி, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகள் டெல்டாவை உருவாக்குகின்றன. உலகின் பெரிய ஆறான அமேசான் ஆறு டெல்டாவை உருவாக்குவதில்லை.
ஈர்ப்பு விசையால் உண்டாகும் உயரமான அலைகளான ஓதங்கள் (Tides) டெல்டாவைத் தடைசெய்கிறது.
எடுத்துக்காட்டாக அமேசான் ஆறானது பசிபிக் பெருஞ்கடலில் கலக்கிறது. அமேசன் ஆறு கலக்கும் இடத்தில் உள்ள பசிபிக் பெருங்கடலில் உருவாகும் ஓதங்கள் (Tides) டெல்டா உருவாவதைத் தடுக்கின்றது.
காற்றினால் உண்டாகும் வலிமையான அலைகளும் (Waves) டெல்டாவைத் தடைசெய்கிறது.
எடுத்துக்காட்டாக கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் ஓடும் நதியான கொலம்பியா ஆறானது அதிகளவு வண்டலை பசிபிக் பெருங்கடலில் குவிக்கிறது.
ஆனால் இந்நதி கலக்கும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் காற்றினால் உண்டாகும் அலைகள் (Waves) மற்றும் கடல் நீரோட்டத்தால், குவிக்கப்பட்ட வண்டலானது அடித்துச் செல்லப்பட்டு டெல்டாவானது உருவாவதைத் தடைசெய்கிறது.
பாப்பு நியூகெனியாவில் ஓடும் ஓகே டெடி ஆறானது உலகின் வேகமான ஆறுகளில் ஒன்றாகும். இந்நதியானது ப்ளை ஆறு என்னும் ஆற்றிற்கு துணை ஆறாக மாறுகிறது. எனினும் ப்ளை ஆறானது வளமான டெல்டாப்பகுதியை உருவாக்குகிறது.
டெல்டாவின் வகைகள்
டெல்டாவானது இருமுக்கிய வழிகளில் வகைப்படுத்தப்படுகின்றன. அவை டெல்டாவை உருவாக்கும் காரணிகள், டெல்டாவின் வடிவம் ஆகும்.
டெல்டாவை உருவாக்கும் காரணிகள்
அலைகளால் உருவாக்கப்படுபவை, ஓதங்களால் உருவாக்கப்படுபவை, கில்பர்ட், கழிமுகங்கள் ஆகிய நான்கு வகைகளைக் கொண்டுள்ளன.
அலைகளால் உருவாக்கப்படுபவை
இவ்வகையில் அலைகளின் செயல்பாடுகள் டெல்டாவின் அளவு மற்றும் வடிவத்தினைத் தீர்மானிக்கின்றன.
எடுத்துக்காட்டாக நைல் டெல்டாவானது மத்திய தரைக்கடலின் அலைகளால் வடிவமைக்கப்படுகிறது. செனகல் டெல்டாவனது அட்லாண்டிக் கடலின் அலைகளால் வடிமைக்கப்படுகிறது.
ஓதங்களால் உருவாக்கப்படுபவை
இவ்வகையானது பெரிய உயரமான ஓதங்கள் உண்டாகும் பகுதியிலோ, உயரமான தாழ்வான ஓதங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலோ உருவாக்கப்படுகின்றன.
இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் உள்ள கங்கை பிரம்மபுத்திரா டெல்டாவானது வங்களா விரிகுடாவில் உண்டாகும் ஓதங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியால் உருவாக்கப்படுகிறது.
கில்பர்ட்
இவ்வகையானது ஆறானது நன்னீர் ஏரியில் கலக்கும்போது உருவாகிறது. வலிமையான மண் (சிறுகற்கள்) சேகரமாவதால் இவ்வகை உண்டாகிறது.
இவை அலைகள் மற்றும் ஓதங்களால் உருவாக்கப்படுபவைகளை விட ஆழமானவை.
க்ரோவ் கார்ல் கில்பர்ட் என்பவர் இவ்வகையான டெல்டாவைக் கண்டறிந்ததால் இது அவருடைய பெயரால் கில்பர்ட் என்று அழைக்கப்படுகிறது.
உதாரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிறுஓடைகள் ஒகானான் ஏரியில் கலந்து நாரமாட்டா மற்றும் சம்மர்லேண்டில் முக்கிய தீபற்பகங்களை உருவாக்கின்றது.
கழிமுகங்கள்
இவ்வகையில் ஆறுகள் நேரடியாக கடலில் கலப்பதில்லை. இவ்வகையின் ஒருபகுதியானது நன்னீர் மற்றும் கடல்நீரினைக் கொண்டிருக்கும் ஈரநிலப்பகுதியால் சூழப்பட்டிருக்கும்.
வடசீனாவில் மஞ்சள் ஆறு போஹாய் கடலை அடையும்போது இவ்வகை டெல்டாவை உருவாக்குகிறது.
டெல்டாவின் வடிவத்தைப் பொறுத்து வில் அல்லது விசிறி வடிவம், கூரிய உருவம், பறவைக்கால் வடிவம், தலைகீழான வடிவம் என நான்கு வடிவங்களைக் கொண்டது.
வில் அல்லது விசிறி வடிவம்
இதுவே டெல்டாவின் பொதுவான வடிவம் ஆகும். விசிறியின் குவிந்த வடிவம் கடலை நோக்கி உள்ளது. கடல் அலைகளால் இவ்வடிவ டெல்டாக்கள் உருவாகின்றன.
டெல்டாவின் வடிவமானது அங்குள்ள நீரின் அளவு, வேகம் மற்றும் படியும் வண்டலின் அளவு ஆகியவற்றைப் பொறுத்தது.
நைல் நதியானது விசிறி வடிவ டெல்டாவை உருவாக்கிவிட்டு மத்திய தரைக்கடலில் கலக்கிறது.
கூரிய உருவம்
இவ்வகையில் வெளிப்புற விளிம்பானது கூரிய பற்கள் போன்ற அமைப்பினை கொண்டுள்ளது. ஆறானது நிலையான கடல் அல்லது பெருங்கடலில் கலக்கும்போது இவ்வடிவம் உண்டாகிறது.
அலைகளால் வண்டலானது ஆற்றின் இருபுறங்களிலும் கொண்டு வரப்பட்டு இவ்வகை டெல்டா உருவாகிறது. ஸ்பெயினில் உள்ள எப்ரோ டெல்டாவானது இவ்வகையைச் சார்ந்தது.
பறவை கால் வடிவம்
இவ்வகை டெல்டாவானது பறவையின் கால் வடிவம் போன்றது. அதிகமான வண்டலைபடியச்செய்யக் கூடிய ஆற்றால் மட்டுமே இவ்வகையை உருவாக்க முடியும்.
குறைவான அலைகளின் நடவடிக்கையும் இவ்வகை டெல்டாவானது உருவாகக் காரணம் ஆகும்.
மிசிசிப்பி நதியானது பறவை கால் வடிவ டெல்டாவை உருவாக்கிவிட்டு மெக்ஸிகோ வளைகுடாவில் கலக்கிறது.
தலைகீழான வடிவம்
கிளைநதிகளின் தொகுப்பானது இவ்வடிவ டெல்டாவினை உருவாக்கிவிட்டு ஒரே நதியாக கடலில் கலக்கிறது.
வடக்கு கலிபோர்னியாவில் சேக்ரமெண்டோ, சான் ஜோக்வின் ஆற்றின் டெல்டாவானது தலைகீழான வடிவம் ஆகும்.
டெல்டாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
மனிதனின் செயல்பாடுகள் டெல்டாக்களை அதிகளவு பாதிக்கின்றன.
டெல்டாக்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணல் மற்றும் சிறுகற்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கும், நெடுஞ்சாலைகள் அமைக்கவும் எடுக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்படுவதால் வண்டலானது ஆறு முடியும் இடத்தில் குவிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
மேலும் ஆற்றின் மேல்புறத்தில் நீரானது அதிகமாக பயன்படுத்தப்பட்டுவிடுவதால் கடலில் கலக்கும் நன்னீரின் அளவு குறைகிறது. இதனாலும் டெல்டா உருவாக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
டெல்டாவில் மனிதநடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் அங்குள்ள உயிர்சூழலைப் பெரிதும் பாதிக்கின்றன.
டெல்டாப்பகுதியானது குறைந்து வருவதால் வெள்ளப்பாதிப்புகள் அதிகம் உண்டாகும். டெல்டாப்பகுதி குறைவதால் வளமான நிலம் பாதிப்படைந்து வேளாண்மையும் பாதிப்படைகிறது.
இயற்கையின் வளமான பகுதியான டெல்டாவைப் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும்.